Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 52

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.

52 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
    நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
    உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
    நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
    உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.

நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
    அவர் உன்னை உனது வீட்டிலிருந்து[a] இழுத்து எறிவார்.
    அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.

நல்லோர் இதனைக் காண்பார்கள்.
    தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
    “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
    அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.

ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
    தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
    நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
    ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.

யோசுவா 24:1-2

யோசுவா விடை பெறுதல்

24 இஸ்ரவேல் கோத்திரத்தினர் எல்லோரையும் சீகேமில் கூடுமாறு யோசுவா அழைத்தான். பின் யோசுவா மூத்த தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும் இஸ்ரவேலின் ஆட்சியாளரையும் அழைத்தான். இவர்கள் தேவனுக்கு முன்னே நின்றார்கள்.

பின்பு யோசுவா எல்லா ஜனங்களையும் பார்த்துப் பேசினான். அவன், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குக் கூறுவதை நான் சொல்லுகிறேன்:

‘பலகாலத்திற்கு முன், உங்கள் முற்பிதாக்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் வாழ்ந்தனர். ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தையாகிய தேராகு, போன்றோரைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது, அம்மனிதர்கள் வேறு தெய்வங்களை வணங்கி வந்தனர்.

யோசுவா 24:11-28

11 ‘பின் நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டினீர்கள். எரிகோவிற்குச் சென்றீர்கள். எரிகோ நகர ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும் உங்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் எல்லோரையும் நீங்கள் வெல்லுமாறு செய்தேன். 12 உங்கள் படை முன்னோக்கிச் சென்றபோது, நான் காட்டுக் குளவிகளை அவர்களுக்கு முன்பாக அனுப்பினேன். காட்டுக் குளவிகள் அந்த ஜனங்களையும் இரண்டு எமோரிய ராஜாக்களையும் பயமுறுத்தி ஓடச் செய்தன. வாளையும், வில்லுகளையும் பயன்படுத்தாமலே தேசத்தைக் கைப்பற்றினீர்கள்.

13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

14 பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும். உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த பொய்த் தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.

15 “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான்.

16 அப்போது ஜனங்கள் பதிலாக, “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தமாட்டோம். அந்நிய தெய்வங்களுக்கு ஒருபோதும் சேவை செய்யமாட்டோம்! 17 தேவனாகிய கர்த்தர் தான் எகிப்திலிருந்து வெளியேற்றி நம் ஜனங்களை அழைத்து வந்தார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தேசத்தில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் அங்கு பெரிய காரியங்களை கர்த்தர் எங்களுக்காகச் செய்தார். அவர் எங்களை அத்தேசத்திலிருந்து அழைத்து வந்து, பிற தேசங்கள் வழியாக நாங்கள் பிரயாணம் செய்யும்போது எங்களைப் பாதுகாத்து வந்தார். 18 அத்தேசங்களில் வசித்த ஜனங்களைத் தோற்கடிக்க கர்த்தர் எங்களுக்கு உதவினார். நாங்கள் இப்போதிருக்கிற தேசத்தில் வாழ்ந்த எமோரிய ஜனங்களை வெல்லவும் கர்த்தர் எங்களுக்கு உதவினார். கர்த்தருக்குத் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். ஏனெனில் அவரே எங்கள் தேவன்” என்றார்கள்.

19 அப்போது யோசுவா, “அது உண்மையல்ல. நீங்கள் கர்த்தருக்குத் தொடர்ந்து சேவை செய்வதென்பது இயலாதது. தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அந்நிய தெய்வங்களை ஆராதிக்கும் ஜனங்களை தேவன் வெறுக்கிறார். தனக்கெதிராக அவ்வாறு திரும்பினால் உங்களை தேவன் மன்னிக்கமாட்டார். 20 ஆனால் நீங்கள் கர்த்தரை விட்டு நீங்கிப் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்வீர்கள். உங்களுக்குக் கொடிய காரியங்கள் நிகழும்படி கர்த்தர் செய்வார். கர்த்தர் உங்களை அழிப்பார். தேவனாகிய கர்த்தர் உங்களிடம் நல்லவராக இருந்தார், ஆனால் நீங்கள் அவருக்கெதிராக திரும்பினால் அவர் உங்களை அழிப்பார்” என்றான்.

21 அதற்கு ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “இல்லை! நாங்கள் கர்த்தருக்கே சேவை செய்வோம்” என்றார்கள்.

22 அப்போது யோசுவா, “உங்களையும், உங்களோடிருக்கிற ஜனங்களையும் சுற்றி நோக்குங்கள். நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகளா?” என்றான்.

ஜனங்கள் பதிலாக, “ஆம், அது உண்மை! நாங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்துள்ளோம் என்பதைக் காண்கிறோம்” என்றார்கள்.

23 அப்போது யோசுவா, “உங்களிடமிருக்கிற பொய்த் தெய்வங்களை எடுத்து வீசிவிடுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உங்கள் முழுமனதோடும் நேசியுங்கள்” என்றான்.

24 பின் ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்வோம். நாங்கள் அவருக்குக் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.

25 அந்த நாளில் யோசுவா ஜனங்களுக்காக ஒரு ஒப்பந்தத்தைச் செய்தான். சீகேம் எனப்பட்ட ஊரில் இந்த ஒப்பந்தத்தைச் செய்தான். அது அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாயிற்று. 26 தேவனுடைய சட்ட புத்தகத்தில் யோசுவா இவற்றை எழுதினான். பின் யோசுவா ஒரு பெரிய கல்லை எடுத்தான். அக்கல்லே அந்த ஒப்பந்தத்திற்கு அடையாளமாயிற்று. கர்த்தருடைய பரிசுத்த கூடாரத்தின் அருகே இருந்த கர்வாலி மரத்திற்கு அடியில் அவன் அக்கல்லை வைத்தான்.

27 பிறகு யோசுவா அனைவரையும் நோக்கி, “நாம் இன்று கூறிய காரியங்களை நினைவு கூருவதற்கு இந்தக் கல் உதவும். கர்த்தர் நம்மோடு பேசிக் கொண்டிருந்த இந்த நாளில், இந்த கல் இங்கு இருந்தது. இன்று நடந்தவற்றை நினைவுகூருவதற்கு உதவும் ஒன்றாக இந்த கல் இருக்கும். உங்களுக்கு எதிரான சாட்சியாகவும் இந்த கல் அமையும். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் திரும்புவதை அது தடுக்கும்” என்றான்.

28 பின்பு யோசுவா அனைவரிடமும் தம் வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு கூறினான். எனவே ஒவ்வொருவனும் அவனவன் இருப்பிடத்திற்குச் சென்றான்.

ரோமர் 3:9-22

அனைவரும் குற்றவாளிகளே

யூதர்களாகிய நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு மிக்கவர்களா? இல்லை. யூதர்களும், யூதரல்லாதவர்களும் சமமானவர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர்கள் எல்லாம் குற்றம் உடையவர்களே. 10 எழுதப்பட்டபடி,

“சரியானவன் ஒருவன் கூட இல்லை.
11 புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை.
    உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை.
12 எல்லோரும் வழிதப்பியவர்கள்.
    எல்லோருமே பயனற்றுப்போனவர்கள்.
நல்லவை செய்பவன் ஒருவனாகிலும் இல்லை.”(A)

13 “அவர்களின் வாய்கள் திறந்த சவக் குழிகள் போன்றவை;
    தங்கள் நாக்குகளை பொய் சொல்லவே பயன்படுத்துகிறார்கள்.”(B)

“அவர்கள் சொல்லும் காரியங்கள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது.”(C)

14 “அவர்களது வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்துள்ளது.”(D)

15 “அவர்கள் எப்போதும் தாக்கவும் கொலை செய்யவும் தயாராக உள்ளனர்.
16     அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன.
17 அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.”(E)

18 “அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.”(F)

19 நியாயப்பிரமாணம் சொல்லுவதெல்லாம் அதற்கு உட்பட்டவர்களுக்கே. இது யூதர்களின் வாய்களை அடைத்துவிட்டது. இது உலகத்தார் அனைவரையும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழ்ப்படியும்படி செய்தது. 20 ஏனென்றால் எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் பாவம் பற்றிய உணர்வைக் கொண்டு வருவதுதான்.

நீதி செய்யும் தேவன்

21 சட்டவிதிகளின் உதவி இல்லாமலேயே தேவன் மக்களைச் சரியான வழியில் நடத்துகிறார். தேவன் இப்போது நமக்குப் புதிய வழியைக் காட்டியுள்ளார். சட்டங்களும், தீர்க்கதரிசிகளும் இப்புதிய வழியைப்பற்றிப் பேசியுள்ளனர். 22 இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center