Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.
40 கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார்.
அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார்.
2 அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார்.
சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார்.
என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார்.
என் பாதங்களை உறுதியாக்கினார்.
3 தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலை கர்த்தர் என் வாயில் வைத்தார்.
எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள்.
அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள்.
4 ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
5 எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்!
எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்!
கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை!
நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும், மீண்டும் கூறுவேன்.
அவை எண்ணிலடங்காதவை.
6 கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்!
உமக்குப் பலிகளோ, தானியக் காணிக்கைகளோ தேவையில்லை.
உமக்குத் தகன பலிகளோ, பாவப்பரிகார பலிகளோ தேவையில்லை.
7 எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும்.
நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது.
8 என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன்.
உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன்.”
கர்த்தரிடம் திரும்பு
14 இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா. 2 நீ சொல்லப் போவதைப் பற்றி நினைத்துப் பார். கர்த்தரிடம் திரும்பி வா. அவரிடம்,
“எங்கள் பாவங்களை எடுத்துவிடும்.
நாங்கள் செய்யும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும்.
நாங்கள் எங்கள் உதடுகளிலிருந்து துதிகளை செலுத்துகிறோம்.
3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.
நாங்கள் போர்க் குதிரைகளில் சவாரி செய்யமாட்டோம்.
நாங்கள் மீண்டும் ஒருபோதும்
‘எங்கள் தேவன்’
என்று எங்கள் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களைக் கூறமாட்டோம்.
ஏனென்றால் நீர் ஒருவர் தான் அனாதைகள் மீது இரக்கங்காட்டுகிறவர்.”
கர்த்தர் இஸ்ரவேலை மன்னிப்பார்
4 கர்த்தர் கூறுகிறார்:
“என்னைவிட்டு அவர்கள் விலகியதை நான் மன்னிப்பேன்.
நான் அவர்களைத் தடையின்றி நேசிப்பேன்.
ஏனெனில் அவர்களுடன் கோபங்கொண்டதை நிறுத்திவிட்டேன்.
5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்.
இஸ்ரவேல் லீலிப் புஷ்பத்தைப் போன்று மலருவான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களைப்போன்று வளருவான்.
6 அவனது கிளைகள் வளரும்.
அவன் அழகான ஒலிவ மரத்தைப் போன்றிருப்பான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களிலிருந்து வரும்
இனிய மணத்தைப் போன்று இருப்பான்.
7 இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் எனது பாதுகாப்பின் கீழ் வாழ்வார்கள்.
அவர்கள் தானியத்தைப் போன்று வளருவார்கள்.
அவர்கள் திராட்சைக் கொடியைப் போன்று மலருவார்கள்.
அவர்கள் லீபனோனின் திராட்சைரசம் போல் இருப்பார்கள்.”
கர்த்தர் விக்கிரகங்களைப் பற்றி இஸ்ரவேலை எச்சரிக்கிறார்
8 “எப்பிராயீமே, நான் (கர்த்தர்) இனி விக்கிரகங்களோடு எந்தத் தொடர்பும் கொள்ளமாட்டேன்.
நான் ஒருவனே உங்களது ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறவர்.
நான் ஒருவனே உன்னைக் கவனித்து வருபவர். நான் எப்பொழுதும் பசுமையாக இருக்கும் தேவதாரு மரத்தைப் போன்றவர்.
உன் கனி என்னிடமிருந்து வருகிறது.”
இறுதி அறிவுரை
9 அறிவுள்ள ஒருவன் இவற்றைப் புரிந்துக்கொள்கிறான்.
விழிப்புள்ள ஒருவன் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய வழிகள் சரியாக இருக்கின்றன.
அவற்றில் நல்லவர்கள் நடப்பார்கள். பாவிகளோ அவற்றில் இடறிவிழுந்து மரிப்பார்கள்.
இயேசுவைக்குறித்த விமர்சனம்
(மாற்கு 2:23-28; லூக்கா 6:1-5)
12 அப்போது இயேசு, யூதர்களுக்கு முக்கியமான வாரத்தின் ஓய்வு நாளன்று வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார். இயேசுவின் சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்கள் பசியுடனிருந்தனர். எனவே, சீடர்கள் கதிர்களைப் பிடுங்கி உண்டனர். 2 இதைப் பரிசேயர்கள் பார்த்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “பாருங்கள். யூதச்சட்டத்துக்கு எதிராக ஓய்வு நாளில் செய்யக் கூடாததை உங்கள் சீடர்கள் செய்கிறார்கள்” என்றனர்.
3 இயேசு அவர்களிடம், “தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? 4 தேவனுடைய வீட்டிற்குச் சென்றான். தேவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அப்பத்தைத் தாவீதும் மற்றவர்களும் உண்டார்கள். அந்த அப்பத்தை உண்டது குற்றமா? ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தை உண்ணலாம். 5 நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் படித்திருக்கிறீர்கள். அதாவது ஓய்வு நாளில் ஆலயங்களில் ஆசாரியர்கள் ஓய்வு கொள்ளாமல் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று. ஆனால், அவ்வாறு செய்யும் ஆசாரியர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல. 6 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆலயத்தைக் காட்டிலும் மேலானவர் இங்கே இருக்கிறார். 7 வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’(A) அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள்.
8 “மனித குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என்று பதிலுரைத்தார்.
2008 by World Bible Translation Center