Old/New Testament
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம்
132 கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
2 தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான்.
யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான்.
3 தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன்,
நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன்,
4 நான் தூங்கமாட்டேன்,
என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,
5 கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும்,
யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான்.
6 எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம்.
கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.
7 நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம்.
தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
8 கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும்.
கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும்.
9 கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள்.
உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
10 உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக,
நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும்.
11 கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார்.
தாவீதிடம் நேர்மையோடிருப்பதாக கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசர்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.
12 கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால்,
உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார்.
13 அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்.
அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.
14 கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும்.
நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்.
15 நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன்.
ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும்.
16 மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன்.
என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.
17 இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன்.
நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.
18 தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன்.
ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று
133 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது
மிகவும் நல்லதும் இன்பமுமானது.
2 அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு,
கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும்
வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
3 எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
134 கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்!
இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
2 ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி
கர்த்தரைப் போற்றுங்கள்.
3 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக.
கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தரின் திருவிருந்து
17 இப்போது உங்களுக்குச் சொல்பவற்றில் நான் உங்களைப் புகழமாட்டேன். நீங்கள் ஒன்று சேர்வது உங்களுக்குத் தொல்லை உருவாகுவதில் முடிகிறது. 18 முதலில், ஒரு சபையாக நீங்கள் சேரும்போது உங்களுக்குள் பிரிவினைகள் உண்டு என்று நான் கேள்விப்பட்டேன். அதில் சிலவற்றை நான் நம்புகிறேன். 19 பிரிவினைகள் இருப்பது தேவைதான். உங்களில் யார் சரியான காரியத்தைச் செய்கிறவர் என்பதைத் தெளிவுபடுத்த அது உதவும்.
20 நீங்கள் ஒன்று கூடுகையில் கர்த்தரின் திருவிருந்தை [a] உண்மையாகப் புசிப்பதில்லை. 21 ஏன்? ஏனெனில் நீங்கள் சாப்பிடும்போது இன்னொருவருக்காகக் காத்திராது உண்ணுகிறீர்கள். சிலருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைப்பதில்லை. ஆனால் மற்றும் சிலர் போதைக்கு ஆளாகும் அளவுக்கு உட்கொள்கிறார்கள். 22 உங்கள் வீடுகளில் நீங்கள் சாப்பிடவும், குடிக்கவும் செய்யலாம். தேவனுடைய சபையினர் முக்கியமற்றவரென நீங்கள் நினைப்பதாக எனக்குப் படுகிறது. நீங்கள் ஏழைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். நான் என்ன கூறமுடியும்? உங்களை இதற்காகப் புகழ்வதா? நான் உங்களைப் புகழேன்.
23 நான் உங்களுக்குச் சொன்ன போதனை உண்மையில் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். இயேசு கொலை செய்யப்படுவதற்காக ஒப்புவிக்கப்பட்ட இரவில் அவர் அப்பத்தை எடுத்து நன்றி கூறினார். 24 அந்த அப்பத்தைப் பகிர்ந்து அவர் “இதை புசியுங்கள். இது எனது சரீரமாகும். இது உங்களுக்குரியது. என்னை நினைவுகூருவதற்காக இதைச் செய்யுங்கள்” என்றார். 25 அவர்கள் அதைச் சாப்பிட்டபின், இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து பகிர்ந்தளித்தார். “தேவனிடமிருந்து அவரது மக்களுக்கு அளிக்கப்பட்ட புது உடன்படிக்கையை இந்த இரசக் கோப்பை காட்டுகிறது! எனது இரத்தத்தில் இந்த உடன்படிக்கை ஆரம்பமாகிறது. நீங்கள் இதைப் பருகும்போது, என்னை நினைப்பதற்காக அவ்வாறு செய்யுங்கள்” என்றார். 26 ஒவ்வொரு முறையும் அப்பத்தைச் சாப்பிடும்போதும் இந்த பானத்தைப் பருகும்போதும், கர்த்தர் வரும்வரையில் கர்த்தருடைய மரணத்தைப் பிறருக்கு அறிவிக்கிறீர்கள்.
27 எனவே தகுதியற்ற வகையில் இந்த அப்பத்தை உண்டாலோ, அல்லது கர்த்தரின் இந்தப் பாத்திரத்தில் பருகினாலோ, அப்போது அந்த மனிதன் கர்த்தரின் சரீரத்துக்கும், இரத்தத்துக்கும் எதிராகப் பாவம் செய்தவனாகிறான். 28 இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். 29 கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான். 30 எனவே தான், உங்களில் பலர் நோயுற்றவராகவும் பலவீனராகவும் காணப்படுகிறீர்கள். பலர் இறந்தும் போய்விட்டார்கள். 31 நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார். 32 ஆனால், தேவன் நம்மை நியாயம் தீர்க்கும்போது, நமக்குச் சரியான வழியைக் காட்டும்படி நமக்குத் தண்டனை அளிக்கிறார். நாம் இந்த உலகத்திலுள்ள பிற மனிதரோடு குற்றம் சாட்டப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்கிறார்.
33 சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள். 34 ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.
2008 by World Bible Translation Center