Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 135-136

135 கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
    கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
தேவனுடைய ஆலய முற்றத்தில்,
    கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.

கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
    இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
    நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
    சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
    தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
    தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.
எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
    எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
    பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
    தேவன் வல்லமையுடைய அரசர்களைக் கொன்றார்.
11 எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
    பாஷானின் அரசனாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
    கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.

13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
    கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
    ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.
15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
    அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
    சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
    சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
    ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.

19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
    அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.

கர்த்தரைத் துதியுங்கள்!

136 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவாதி தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
17 தேவன் வல்லமையுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
18 தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
19 தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
20 தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

1 கொரி 12

பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்

12 சகோதர சகோதரிகளே, இப்போது நீங்கள் ஆவியின் வரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். நீங்கள் விசுவாசம் உடையவராக மாறும் முன்னர், நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். பிறர் உங்கள்மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் உயிரற்ற விக்கிரகங்களை வணங்குவதற்கும் உங்களை நீங்கள் அனுமதித்தீர்கள். தேவனுடைய ஆவியானவரின் உதவியால் பேசுகிற எவனும் “இயேசு சபிக்கப்படட்டும்” என்று கூறுவதில்லை என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி ஒருவனும் “இயேசுவே கர்த்தர்” என்பதைக் கூற முடியாது.

ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை. ஊழியம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் கர்த்தரிடமிருந்தே வருபவை. மனிதரிடம் தேவன் செயல்படும் வழிகள் பல உண்டு. ஆனால் அவை அனைத்தும் நமக்குள் செயல்படுகிற தேவனிடமிருந்து வருபவை. நாம் ஒவ்வொன்றையும் செய்ய தேவன் நம்மில் செயல்படுகிறார்.

ஆவியானவரின் வரங்களில் சில ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும். பிறருக்கு உதவும்படியாய் ஆவியானவர் இதை ஒவ்வொருவருக்கும் அளிப்பார். ஒருவனுக்கு ஞானத்துடன் பேசும் ஆற்றலைப் பரிசுத்த ஆவியானவர் வழங்குகிறார். அதே பரிசுத்த ஆவியானவர் அறிவோடு பேசும் ஆற்றலை இன்னொருவனுக்குக் கொடுக்கிறார். அதே பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தை ஒருவனுக்கு அளிக்கிறார். குணப்படுத்தும் வல்லமையை மற்றொருவனுக்கு அதே பரிசுத்த ஆவியானவர் தருகிறார். 10 அதிசயங்களைச் செய்யும் சக்தியை இன்னொரு மனிதனுக்கு ஆவியானவர் கொடுக்கிறார். இன்னொருவனுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறனையும், மற்றொருவனுக்கு நல்ல, தீய ஆவிகளின் வேறுபாட்டைக் காணும் திறனையும் அளிக்கிறார். பல்வேறு மொழிகளிலும் பேசும் ஆற்றலை ஒருவனுக்கும், அம்மொழிகளை விளக்கியுரைக்கும் திறமையை மற்றொருவனுக்கும் அளிக்கிறார். 11 ஒரே ஆவியானவரே இவற்றையெல்லாம் செய்கிறார். ஒவ்வொருவனுக்கும் எதனைக் கொடுக்க வேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானிக்கிறார்!

கிறிஸ்துவின் சரீரம்

12 ஒருவனின் சரீரம் முழுமையான ஒன்றாக இருந்தாலும், அதில் பல உறுப்புகள் உண்டு. ஆம், சரீரம் பல உறுப்புகளால் ஆனது. ஆனால், அத்தனை உறுப்புகளும் ஒரே சரீரத்துக்குரியவை. கிறிஸ்துவும் அதைப் போன்றவர். 13 நம்மில் சிலர் யூதர்கள். மற்றும் சிலர் கிரேக்கர்கள். சிலர் அடிமைகள். சிலர் சுதந்திரமானவர்கள். ஆனால் நாம் எல்லாரும் ஒரே சரீரமாக ஒரே ஆவியானவர் மூலம் ஞானஸ்நானம் பெற்றோம். நாம் எல்லாரும் ஒரே ஆவியைப் பெற்றோம்.

14 ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது. 15 பாதம் சொல்லக்கூடும், “நான் கையல்ல, எனவே நான் சரீரத்துக்குச் சொந்தமானதல்ல.” இப்படிச் சொல்வதால் பாதம் சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 16 காது சொல்லக்கூடும், “நான் கண்ணல்ல. எனவே இந்த சரீரத்தைச் சார்ந்தவன் அல்ல.” இப்படிச் சொல்வதால் காது சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 17 சரீரம் முழுவதும் கண்ணாகச் செயல்படுமேயானால், அது கேட்கமுடியாது. சரீரம் முழுவதும் காதாகச் செயல்படுமேயானால், சரீரத்தால் எதையும் முகர்ந்து பார்க்க முடியாது. 18-19 சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒரேவகை உறுப்புகளாக இருந்தால் அப்போது சரீரம் இருப்பதில்லை. தேவன் உண்மையாகவே தாம் விரும்பியபடி சரீரத்தின் உறுப்புகளை சரீரத்தில் அமைத்தார். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் இடத்தை அமைத்தார். 20 எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன.

21 கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது. 22 பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை. 23 சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம். 24 சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார். 25 நம்முடைய சரீரம் பிரிக்கப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்தார். வெவ்வேறு உறுப்புகளும் பிறவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று தேவன் இதைச் செய்தார். 26 சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும்.

27 நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள். 28 முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். 29 எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. 30 குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது. 31 ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center