Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 105-106

105 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
    அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்.
    அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.
    அவருக்குத் துதிகளைப் பாடுங்கள்.
    அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.
    ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள்.
    உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.
    அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.
    நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.
கர்த்தரே நமது தேவன்.
    கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.
தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள்.
    ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதியைச் செய்தார்.
10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார்.
    தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    அது என்றென்றும் தொடரும்!
11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.
    அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.
12 ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார்.
    அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர்.
13 அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும்,
    ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள்.
14 ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை.
    அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் அரசர்களை எச்சரித்தார்.
15 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள்.
    எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.
16 தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார்.
    ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.
17 ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார்.
    யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
18 யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள்.
    அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.
19 அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான்.
    யோசேப்பு நேர்மையானவன் என்பதை கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.
20 எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான்.
    தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.
21 அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார்.
    அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.
22 பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான்.
    யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.
23 பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்.
    யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.
24 யாக்கோபின் குடும்பம் பெருகிற்று.
    அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள்.
25 எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள்.
    அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.
26 எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார்.
    தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான்.
27 காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு
    தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.
28 தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார்.
    ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.
29 எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார்.
    எல்லா மீன்களும் மடிந்தன.
30 அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று.
    அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.
31 தேவன் கட்டளையிட்டார்.
    ஈக்களும் பேன்களும் வந்தன.
    அவை எங்கும் நிரம்பின.
32 தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
    நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது.
33 தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்.
    அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார்.
34 தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன.
    அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!
35 வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும்,
    வயலின் எல்லா பயிர்களையும் தின்றன.
36 பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார்.
    தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார்.
37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
    அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர்.
    தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.
38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது.
    ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.
39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார்.
    தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணை தேவன் பயன்படுத்தினார்.
40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார்.
    தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.
41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று.
    பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.

42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
    தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார்.
    மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!
44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்.
    பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.
45 ஏன் தேவன் இதைச் செய்தார்?
    அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும்.
அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.

கர்த்தரைத் துதியுங்கள்!

106 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
    ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.

தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
    எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.
கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
    என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
    நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
    உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.

எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
    நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.
கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.
    செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.

ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.
    அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.
    ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.
10 தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.
    அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.
11 தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.
    அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.

12 அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.
    அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள்.
13 ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.
    அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.
14 பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.
    மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.
15 ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.
    கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.
16 ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.
    அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
17 எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.
    தரை பிளந்து தாத்தானை விழுங்கியது.
    தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.
18 பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.
    அத்தீயோரை நெருப்பு எரித்தது.
19 ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.
    அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.
20 அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக
    மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
21 தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.
    ஆனால் அவர்கள் அவரை முற்றிலும் மறந்துபோனார்கள்.
    எகிப்தில் அதிசயங்கள் செய்த தேவனை அவர்கள் மறந்துபோனார்கள்.
22 காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.
    செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.

23 தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.
    ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான்.
மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள்.
    தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.

24 ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள்.
    தேவன் அத்தேசத்தில் வாழும் ஜனங்களை முறியடிப்பதில் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர்கள் நம்பவில்லை.
25 அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி
    தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
26 எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள்
    என்று தேவன் சபதமிட்டார்.
27 அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார்.
    தேசங்களிலெல்லாம் நம் முற்பிதாக்களைச் சிதறடிப்பதாக தேவன் ஆணையிட்டார்.

28 பின்பு பாகால்பேயோரில், தேவனுடைய ஜனங்கள் பாகாலைத் தொழுதுகொள்ள கூடினார்கள்.
    தேவனுடைய ஜனங்கள் தீய விருந்துகளில் கலந்து மரித்தோரைப் பெருமைப்படுத்தும் பலிகளை உண்டார்கள்.
29 தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார்.
    தேவன் அவர்களை மிகவும் நோயுறச் செய்தார்.
30 ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான்.
    தேவன் அந்நோயைத் தடுத்தார்.
31 பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார்.
    தேவன் நோயைத் தடுத்தார்.
    தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.

32 மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர்.
    மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.
33 மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர்.
    எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.

34 கானானில் வாழும் பிற தேசத்தினரைத் தோற்கடிக்குமாறு கர்த்தர் ஜனங்களுக்குக் கூறினார்.
    ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
35 அவர்கள் பிற ஜனங்களோடு கலந்தார்கள்.
    அந்த ஜனங்கள் செய்தவற்றையெல்லாம் செய்தார்கள்.
36 தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள்.
    பிறஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களை அவர்களும் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
37 தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று
    பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.
38 தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள்.
    அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையேக் கொன்று அவர்களைப் பொய் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
39 எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள்.
    தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேவனிடம் அவநம்பிக்கை கொண்டு, பிறர் செய்த காரியங்களையேச் செய்தார்கள்.
40 தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார்.
    தேவன் அவர்களிடம் வெறுப்படைந்தார்.
41 தேவன் அவரது ஜனங்களைப் பிற தேசத்தாரிடம் கொடுத்தார்.
    தேவன் அவர்களது பகைவர்கள் அவர்களை ஆளுமாறு செய்தார்.
42 தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு
    அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
43 தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார்.
    ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.
44 ஆனால் தேவனுடைய ஜனங்கள் துன்பத்திலிருந்தபோதெல்லாம் தேவனிடம் உதவிக்காக ஜெபித்தனர்.
    ஒவ்வொரு முறையும் தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்தார்.
45 தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து
    தமது மிகுந்த அன்பினால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
46 பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள்.
    ஆனால் தம் ஜனங்களிடம் அவர்கள் இரக்கம் காட்டும்படி தேவன் செய்தார்.
47 நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
    தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார்.
எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்,
    எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும், தேவன் எப்போதும் வாழ்கிறவர்.
    அவர் என்றென்றும் வாழ்வார்.
எல்லா ஜனங்களும், “ஆமென்!
    கர்த்தரைத் துதியுங்கள்” என்று சொல்லக்கடவர்கள்.

1 கொரி 3

மனிதனைப் பின்பற்றுவது தவறு

சகோதர சகோதரிகளே, கடந்த காலத்தில்ஆன்மீகமானவர்களிடம் பேசுவதைப் போல நான் உங்களிடம் பேச முடியாமல் போயிற்று. கிறிஸ்துவில் குழந்தைகளைப் போன்று, உலகின் சாதாரண மக்களிடம் பேசுவதைப் போன்று உங்களிடம் பேச வேண்டியதாயிற்று. நான் உங்களுக்குக் கற்பித்தவை பாலைப் போன்றது, திட உணவைப் போன்றவை அல்ல. ஏனெனில் திட உணவை உட்கொள்ளுமளவிற்கு நீங்கள் பக்குவம் பெறவில்லை. இப்போதும்கூட திட உணவை ஏற்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை. நீங்கள் இன்னும் ஆன்மீகமான மக்கள் அல்ல. உங்களுக்குப் பொறாமையும், வாதாடுகிற குணமும் உண்டு. இது நீங்கள் ஆன்மீகமானவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது. உலகின் சாதாரண மக்களைப் போலவே நீங்களும் நடந்துகொள்கின்றீர்கள். உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்”எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்.

அப்பொல்லோ முக்கியமானவனா? இல்லை. பவுல் முக்கியமானவனா? இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு உதவிய தேவனுடைய பணியாட்களே நாங்கள். தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம். நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார். எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர். விதையை விதைப்பவனுக்கும், நீரூற்றிப் பேணுபவனுக்கும் குறிக்கோள் ஒன்றே. தன் வேலைக்குரிய வெகுமதியை ஒவ்வொருவனும் பெறுவான். நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள்.

நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள். 10 சிறந்த வீட்டைக் கட்டும் வேலையாளைப் போன்று நான் வீட்டின் அஸ்திபாரத்தைக் கட்டினேன். தேவன் எனக்கு அளித்த வரத்தை நான் அதற்குப் பயன்படுத்தினேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் அதனை எவ்வாறு கட்டுகிறான் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். 11 அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும். 12 பொன், வெள்ளி, மணிகள், மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மீது கட்டமுடியும். 13 ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும். 14 அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான். 15 ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்.

16 நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார். 17 தேவனுடைய ஆலயத்தை அழிக்கும் ஒருவனை தேவன் அழிப்பார். ஏன்? தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. நீங்கள் தேவனுடைய ஆலயமாவீர்கள்.

18 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான். 19 ஏன்? ஏனெனில் இந்த உலகத்து ஞானத்தை தேவன் மடமையானதாகவே கருதுகிறார். அது வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. “அவர் ஞானிகள் தங்கள் தந்திர வழிகளைப் பயன்படுத்துகையில் அவர்களை மடக்கிப் பிடிக்கிறார்” [a] என்று எழுதப்பட்டிருக்கிறது. 20 தேவன் ஞானிகளின் எண்ணத்தை அறிவார். அவர்களுடைய எண்ணங்கள் பயனற்றவை என்பதை தேவன் அறிவார். [b] 21 எனவே, நீங்கள் மனிதரைப்பற்றி பெருமைப் பாராட்டாதீர்கள். எல்லாப் பொருள்களும் உங்களுக்கு உரியனவே. 22 பவுல், அப்பொல்லோ, கேபா, உலகம், வாழ்வு, மரணம், நிகழ்காலம், எதிர்காலம் இவை எல்லாம் உங்களுடையவையே. 23 நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து தேவனுக்கு உரியவர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center