Old/New Testament
நன்றி கூறும் பாடல்
100 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார்.
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர்.
அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
தாவீதின் ஒரு சங்கீதம்
101 நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன்.
கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்.
2 நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
3 என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன்.
ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன்.
நான் அதைச் செய்யமாட்டேன்!
4 நான் நேர்மையாக இருப்பேன்.
நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன்.
5 யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன்.
நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன்.
6 நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன்.
அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன்.
பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும்.
7 பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன்.
என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.
8 இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன்.
கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.
துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளை கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது.
102 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
2 கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.
3 என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
4 என் வலிமை போயிற்று.
நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன்.
நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
5 என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
6 பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
7 என்னால் தூங்க இயலவில்லை.
கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
8 என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
9 என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
10 ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.
11 பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
12 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
13 நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
14 உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
15 ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
16 கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
17 தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
18 வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
19 மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
20 சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
21 அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
22 தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
23 என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
என் ஆயுள் குறைந்தது.
24 எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
25 பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
26 உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
அவையெல்லாம் மாறிப்போகும்.
27 ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
நீர் என்றென்றும் வாழ்வீர்!
28 நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.
1 கிறிஸ்து இயேசுவின் ஒரு அப்போஸ்தலனாக இருக்கும்பொருட்டு பவுலாகிய நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் ஒரு அப்போஸ்தலனாக வேண்டுமென தேவன் விரும்பினார். என்னிடமிருந்தும், நம் சகோதரர் சொஸ்தெனேயிடமிருந்தும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது.
2 கொரிந்து பட்டணத்தின் சபைக்கும் கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்கும் இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. தேவனுடைய பரிசுத்த மக்களாக நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். அவர்களுக்கும் நமக்கும் கர்த்தராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கை வைத்து எங்கெங்கும் இருக்கிற மக்களுடன் இணைந்து நீங்களும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
3 நம் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
பவுல் தேவனுக்கு நன்றி கூறுதல்
4 கிறிஸ்து இயேசு மூலமாக தேவன் உங்களுக்கு அளித்த கிருபைக்காக நான் எப்போதும் என் தேவனுக்கு உங்களுக்காக நன்றி சொல்வேன். 5 இயேசுவில் எல்லா வகையிலும் நீங்கள் ஆசி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் எல்லா பேச்சிலும், எல்லாவகை அறிவிலும் நீங்கள் ஆசி பெற்றுள்ளீர்கள். 6 கிறிஸ்துவைப் பற்றிய உண்மை உங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 7 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மறு வருகைக்காக நீங்கள் காத்திருக்கையில் தேவனிடமிருந்து பெற வேண்டிய வெகுமதி யாவும் பெற்றுள்ளீர்கள். 8 இயேசு இறுதி வரைக்கும் உங்களை பலமுடையவர்களாக ஆக்குவார். அவர் உங்களை பலசாலிகளாக மாற்றுவதால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருகை தரும் அந்நாளில் உங்களிடம் எந்தத் தவறும் காணப்படாது. 9 தேவன் நம்பிக்கைக்குரியவர். தேவனாகிய ஒருவரே உங்களைத் தம் குமாரானாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்படியாக அழைத்தார்.
கொரிந்து சபையில் பிரச்சனைகள்
10 சகோதர சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினால் உங்களை ஒன்று வேண்டுகிறேன். நீங்கள் ஒருவரோடு ஒருவர் கருத்தொற்றுமையுடன் வாழ வேண்டுகிறேன். அப்போது உங்களுக்குள் பிரிவினைகள் ஏற்படாது. ஒரே விதமான சிந்தனையும், ஒரே நோக்கமும் கொண்டு முழுக்க இணைந்தவர்களாய் நீங்கள் வாழ வேண்டுமென வேண்டுகிறேன்.
11 எனது சகோதர சகோதரிகளே! குலோவேயாளின் குடும்பத்தினர் சிலர் உங்களைப்பற்றி என்னிடம் கூறினர். உங்களுக்கிடையில் வாக்குவாதங்கள் இருக்கின்றன என நான் கேள்விப்பட்டேன். 12 நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். 13 கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை. பவுலின் பெயரால் நீங்கள் ஞானஸ்நானம் அடைந்தவர்களா? இல்லை. 14 கிறிஸ்பு மற்றும் காயு தவிர வேறு எவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை என்பதில் தேவனுக்கு நன்றியுடைவனாயிருக்கிறேன். 15 எனது பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள் என எவரும் இப்போது கூற முடியாது என்பதால் நான் தேவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். 16 ஸ்தேவான் குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் வேறெவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. 17 மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வேலையைக் கிறிஸ்து எனக்குத் தரவில்லை. நற்செய்தியை மக்களுக்குக் கூறும் வேலையையே கிறிஸ்து எனக்கு அளித்தார். ஆனால் உலகத்து ஞானத்தைக் காட்டும் சொற்களைப் பயன்படுத்தாமல் நற்செய்தியை மட்டும் சொல்லவே இயேசு கிறிஸ்து என்னை அனுப்பினார். நற்செய்தியைக் கூற உலக ஞானத்தை நான் பயன்படுத்தினால், அப்போது கிறிஸ்துவின் சிலுவை அர்த்தமற்றதாகிவிடும்.
கிறிஸ்துவில் காணப்படும் ஞானம்
18 கெட்டுப்போகிற மக்களுக்குச் சிலுவை பற்றிய போதனை முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ, அது தேவனுடைய வல்லமையாகும்.
19 “நான் ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன்.
நான் மேதைகளின் அறிவைப் பயனற்றதாக்குவேன்.” (A)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டு இருக்கிறது.
20 தற்காலத்தின் ஞானி எங்கே? கல்வியில் தேர்ந்தவன் எங்கே? இன்றைய தத்துவஞானி எங்கே? உலகத்து ஞானத்தை தேவனே மடமையாக மாற்றினார். 21 தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்.
22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 24 ஆனால், தேவன் தேர்ந்துள்ள யூதருக்கும், கிரேக்கருக்கும் கிறிஸ்துவே தேவனின் வல்லமையும், தேவஞானமும் ஆவார். 25 தேவனுடைய மடமை கூட மனிதரின் ஞானத்திலும் சிறந்தது. தேவனுடைய சோர்வும் கூட மனிதரின் பலத்தைக் காட்டிலும் வலிமை உடையது.
26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 27 ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். 28 உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். 29 எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார். 30 உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார். பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், தேவனோடு இணக்கமாக இருக்கவும் கிறிஸ்துவே காரணமாவார். நாம் பரிசுத்தமாய் இருப்பதற்கும் கிறிஸ்துவே காரணமாவார். 31 எனவே எழுதப்பட்டுள்ளபடி “ஒருவர் பெருமைப்படுவதாக இருந்தால், தேவனில் மட்டுமே பெருமைப்பட வேண்டும்.” [a]
2008 by World Bible Translation Center