Old/New Testament
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
70 தேவனே, என்னை மீட்டருளும்!
தேவனே விரைந்து எனக்கு உதவும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்!
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்.
மிகவும் தாமதியாதேயும்!
71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
2 உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
3 பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
4 என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
5 என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
6 நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.
7 நீரே என் பெலத்தின் இருப்பிடம்.
எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
8 நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
9 நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.
என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.
அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!
தேவன் அவனைக் கைவிட்டார்.
அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.
12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!
தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
13 என் பகைவர்களைத் தோற்கடியும்!
அவர்களை முழுமையாக அழித்துவிடும்.
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள்.
அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.
நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.
உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.
17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.
இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.
ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன்.
உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.
19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.
தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை.
நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.
ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர்.
எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.
தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.
22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.
என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன்.
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக,
என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.
என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.
என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.
22 ஒரு பெண், குழந்தை பெறுவதற்கான நேரத்தை வலியோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. 23 உலகம் மட்டுமல்ல. நாமும் உள்ளுக்குள் வேதனையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய வாக்குறுதியினுடைய முதல் பாகம் போல் நாம் ஆவியின் முதல் பலனைப் பெற்றிருக்கிறோம். நம்மை தேவன் தமது பிள்ளைகளாக்குவார் என்று நாமும் எதிர்பார்க்கிறோம். அதாவது நாம் நமது சரீரத்தின் விடுதலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 24 அந்த நம்பிக்கையால்தான் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம். கண்ணால் காண முடிவதை நம்புவது என்பது உண்மையில் நம்பிக்கையன்று, நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை மக்கள் நம்பவேண்டியதில்லை. 25 இதுவரை நாம் பெறாததைப் பெறுவதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
26 அதோடு ஆவியானவர் நமக்கு உதவுகிறார். நாம் பலவீனமானவர்கள். ஆவியானவர் நமது பல வீனங்களில் உதவுகிறார். நாம் எவ்வாறு வேண்டிக்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எனினும் ஆவியானவர் நமக்காக தேவனிடம் வேண்டுகிறார். அவரது வேண்டுதல்களை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாது. 27 மக்களின் மனதில் உள்ளதை தேவன் ஆராய்கிறார். ஆவியானவரின் மனதில் உள்ளதும் தேவனுக்குத் தெரியும். ஏனென்றால் தேவனுடைய விருப்பப்படியே ஆவியானவரின் வேண்டுதல்கள் மக்களுக்காக அமைந்திருக்கும்.
28 தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை நாம் அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார். 29 தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அம்மக்களைத் தம் குமாரனைப் போலவே இருக்கும்படி முடிவு செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற் பேறானவராய் இருக்க வேண்டும் என விரும்பினார். 30 எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமையும்படுத்தினார்.
தேவனின் அன்பு
31 எனவே, இதைப் பற்றி என்ன சொல்லலாம்? தேவன் நம்மோடு இருந்தால் எவராலும் நாம் தோற்கடிக்கப்பட முடியாது. 32 தேவன் நமக்காகத் தனது சொந்தக் குமாரனையும் துன்பத்துக்குட்படுத்தினார். நமக்காகவே தன் குமாரனை தேவன் அர்ப்பணித்தார். எனவே இயேசு கிறிஸ்து இப்போது நம்மோடு இருப்பதால், தேவன் எல்லாவற்றையும் தருவார். 33 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை யாரால் குறை சொல்ல முடியும்? எவராலும் முடியாது, ஏனென்றால் தேவன்தான் தமது மக்களை நீதிமான்களாக்குகிறார். 34 தேவனுடைய மக்கள் தவறுடையவர்கள் என்று யாரால் குற்றம்சாட்ட முடியும்? எவராலும் முடியாது. கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் இருந்துகொண்டு நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். 35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து எவற்றாலும் நம்மைப் பிரிக்க இயலுமா? இயலாது. தொல்லைகளால் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்க இயலுமா? பிரச்சனைகளும், தண்டனைகளும் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்குமா? இயலாது. உணவும் உடையும் இல்லாத வறுமை கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆபத்தும் மரணமும் கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது.
36 “எப்பொழுதும் உமக்காக நாங்கள் மரண ஆபத்தில் இருக்கிறோம்.
வெட்டப்படும் ஆடுகளைவிடவும் நாம் பயனற்றவர்கள் என மக்கள் நினைக்கின்றனர்” (A)
என எழுதப்பட்டுள்ளது.
37 தேவன் நம்மீது அன்புகொண்டவர். அவரால் நாம் அனைத்திலும் பெரும் வெற்றி பெறுகிறோம். 38-39 தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவ தூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ள சக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரித்துவிட முடியாது.
2008 by World Bible Translation Center