Old/New Testament
இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்புவார்கள்
30 “நான் சொல்லியிருக்கிற அனைத்தும் உங்களுக்கு நிகழும். நீங்கள் ஆசீர்வாதங்களிலிருந்து நன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் சாபங்களிலிருந்து தீமைகளைப் பெறுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவார். பிறகு நீங்கள் இவற்றைப் பற்றி நினைப்பீர்கள். 2 அந்த நேரத்தில் நீங்களும் உங்கள் சந்ததிகளும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வருவீர்கள். நீங்கள் முழுமனதோடு அவரைப் பின்பற்றுவீர்கள். நான் இன்று உங்களுக்குக் கொடுத்திருக்கிற அவரது அனைத்து கட்டளைகளுக்கும் முழுமையாக அடிபணிவீர்கள். 3 பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் இரக்கம்கொள்வார். கர்த்தர் உங்களை மீண்டும் விடுதலை செய்து உங்களை அனுப்பிய தேசங்களிலிருந்து திரும்பக் கூட்டிச் சேர்ப்பார். 4 அவர் உங்களை பூமியின் ஒரு பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சேகரித்துக் திரும்ப அங்கிருந்து உங்களைக் கொண்டு வருவார். 5 உங்கள் முற்பிதாக்களுக்குரிய நாட்டிற்கு கர்த்தர் உங்களைக் கொண்டுவருவார். அந்நாடு உங்களுக்கு உரியதாகும். கர்த்தர் உங்களுக்கு நன்மையைச் செய்வார். உங்கள் முற்பிதாக்களுக்குரியதைவிட நீங்கள் அதிகம் பெறுவீர்கள். அவர்களிடம் இருந்த ஜனங்களைவிட உங்கள் நாட்டில் மிகுதியான ஜனங்கள் இருப்பார்கள். 6 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கீழ்ப்படிய விரும்பும்படிச் செய்வார். பிறகு நீ உன் முழு இருதயத்தோடு கர்த்தரை நேசிப்பாய். நீ வாழ்வாய்!
7 “பிறகு உனது தேவனாகிய கர்த்தர் உங்கள் பகைவர்களுக்கு அத்தீமைகளை எல்லாம் ஏற்படும்படிச் செய்வார். ஏனென்றால், அந்த ஜனங்கள் உன்னை வெறுத்து உனக்குத் தீமையைச் செய்தார்கள். 8 நீ மீண்டும் கர்த்தருக்குக் கீழ்ப்படிவாய். நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற அவரது அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிவாய். 9 உனது தேவனாகிய கர்த்தர் நீ செய்கிற அனைத்திலும் வெற்றி அடையும்படிச் செய்வார். அவர் உன்னை அதிகக் குழுந்தைகள் பெறும்படி ஆசீர்வதிப்பார். அவர் உனது பசுக்களை ஆசீர்வதிப்பார். அவை மிகுதியான கன்றுகளைப் பெறும். அவர் உனது வயல்களை ஆசீர்வதிப்பார். அவை நல்ல விளைச்சல் அடையும். கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பார். கர்த்தர் உனக்கு நன்மை செய்வதில் உங்கள் முற்பிதாக்களுக்கு நன்மை செய்யும் போது மகிழ்ந்ததைப்போன்று மீண்டும் மகிழ்வார். 10 ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்ய வேண்டும். நீ அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும். உனது தேவனாகிய கர்த்தருக்கு நீ உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் கீழ்ப்படிய வேண்டும். அப்போது உனக்கு இந்த நன்மைகள் ஏற்படும்.
ஜீவன் அல்லது மரணம்
11 “இன்று நான் உனக்கு கொடுக்கிற இந்த கட்டளைகள் கடினமானவை அல்ல, உங்களுக்குத் தூரமானதும் அல்ல. 12 ‘பரலோகத்துக்குச் சென்று, எங்களுக்காக அதனைக் கொண்டுவருவது யார்? அப்பொழுதுதான் எங்களால் அதைக் கேட்கவும் அதன்படி நடக்கவும் முடியும்’ என்று நீ சொல்லாதபடிக்கு அது பரலோகத்தில் உள்ளதும் அல்ல. 13 ‘கடல் கடந்துபோய் நாங்கள் கேட்கவும், செய்யவும் யார் கொண்டு வருவார்கள்?’ என்று நீ சொல்லாதபடிக்கு அது கடலுக்கு அக்கரையிலும் இல்லை. 14 இந்த வார்த்தை உனக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது. எனவே நீ அதற்குக் கீழ்ப்படிய முடியும்.
15 “இன்று நான் வாழ்வையும், மரணத்தையும், நன்மையையும், தீமையையும் உனக்கு முன்பாகத் தெரிந்துகொள்ளும்படியாகக் கொடுக்கிறேன். 16 உனது தேவனாகிய கர்த்தரை நேசிக்கும்படி இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அவரைப் பின்பற்றும்படியும் அவரது சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறு நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிறகு நீ வாழ்வாய், உனது ஜனம் பெரிதாக வளரும். உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைகின்ற இந்த நாட்டில் உன்னை, உனது தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார். 17 ஆனால் கர்த்தரிடமிருந்து விலகி நீ அவருக்குச் செவிசாய்க்க மறுத்து நீ அவரை தொழுதுகொள்வதிலிருந்து விலகி பிற பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்தால். 18 நீ அழிக்கப்படுவாய். நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ கர்த்தரிடமிருந்து விலகினால், உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைந்து கொண்டிருக்கிற யோர்தானைக் கடந்து போகிற நாட்டில் நீண்டகாலம் வாழமாட்டாய்.
19 “இன்று நான் உனக்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தேன். உனது தேர்வுக்கு பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்தேன். நீ வாழ்வு அல்லது மரணத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீ வாழ்வைத் தெரிந்தெடுத்தால் அது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். நீ மரணத்தைத் தெரிந்தெடுத்தால் அது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். எனவே வாழ்வைத் தேர்ந்தெடு. பிறகு நீயும் உனது பிள்ளைகளும் வாழலாம். 20 நீ உனது தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைவிட்டு விலகக்கூடாது. ஏனென்றால், கர்த்தரே உனது வாழ்வு. உனது முற் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு கர்த்தர் வாக்களித்த நாட்டில் நீண்ட காலம் வாழும்படி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.”
யோசுவா புதிய தலைவனாக இருப்பான்
31 பிறகு மோசே போய் இஸ்ரவேலின் அனைத்து
ஜனங்களிடம் இவற்றைப் பேசினான். 2 மோசே அவர்களிடம், “நான் இன்று 120 வயதுள்ளவன். இனிமேல் என்னால் உங்களை வழிநடத்த முடியாது. கர்த்தர் என்னிடம்: ‘நீ யோர்தானைக் கடந்து போகமாட்டாய்’ என்று சொன்னார். 3 ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அந்த நாட்டிற்குள் வழிநடத்திச் செல்வார். உனக்காக கர்த்தர் இந்த ஜாதிகளை அழிப்பார். நீ அவர்களது நாட்டை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வாய், ஆனால், யோசுவா உங்களை வழி நடத்த வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.
4 “கர்த்தர் சீகோனையும், ஓகையும் அழித்தார். கர்த்தர் அந்த எமோரிய அரசர்களையும் அழித்தார். கர்த்தர் உனக்காக மீண்டும் அதனைச் செய்வார். 5 அந்த ஜாதிகளைத் தோற்கடிக்க கர்த்தர் உதவி செய்வார். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னபடி எல்லாவற்றையும் நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும். 6 பலமுள்ளவர்களாகவும் தைரியம் உள்ளவர்களாகவும் இருங்கள். அந்த ஜனங்களுக்குப் பயப்பட வேண்டாம். ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றான்.
7 பின்பு மோசே யோசுவாவை அழைத்தான். மோசே யோசுவாவிடம் சொல்வதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். அவன் “பலமாகவும் தைரியமாகவும் இரு. அவர்களது முற்பிதாக்களுக்கு தருவதாக கர்த்தர் வாக்களித்த நாட்டிற்கு நீதான் இவர்களை வழி நடத்தவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ உதவ வேண்டும். 8 கர்த்தர் உன்னை வழிநடத்துவார். அவர் தாமே உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னைக் கைவிடமாட்டார். உன்னை விட்டு விலகமாட்டார். கவலைப்படாதே. பயப்படாதே” என்றான்.
மோசே போதனைகளை எழுதுகிறான்
9 பிறகு மோசே போதனைகளை எழுதி ஆசாரியர்களிடம் கொடுத்தான். அந்த ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் கோத்திரத்தினர். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் வேலையை உடையவர்கள். மோசே போதனைகளை இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அனைவருக்கும் கொடுத்தான். 10 பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள். 11 அப்பொழுது, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் கூடி வருவார்கள். அவர்கள் உன் தேவனாகிய கர்த்தர் குறிப்பிடும் சிறப்பான இடத்தில் அவரைச் சந்திக்க வருவார்கள். பிறகு நீ ஜனங்களுக்கு போதனைகளை வாசிக்க வேண்டும். அப்பொழுது அவற்றை அவர்கள் கேட்க முடியும். 12 அனைத்து ஜனங்களையும் ஒன்று கூட்டு. ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், உங்கள் நகரங்களில் வாழும் அயல்நாட்டுக்குடிகள் என அனைவரையும் கூட்டு. போதனைகளை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். போதனைகளில் உள்ளவற்றுக்குக் கீழ்ப்படிவார்கள். 13 அவர்களது சந்ததிகள் போதனைகளை அறிந்திராவிட்டால், பிறகு அவர்கள் அவற்றைக் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நீ உனது நாட்டில் வாழும் காலம்வரை அவர்கள் அவரை மதிப்பார்கள். நீ விரைவில் யோர்தானை கடந்துபோய் அந்த நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வாய்” என்றான்.
கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் அழைக்கிறார்
14 கர்த்தர் மோசேயிடம், “இப்பொழுது நீ மரணமடைவதற்குரிய நேரம் நெருங்கியுள்ளது. பரிசுத்தக் கூடாரத்திற்குள் வரும்படி யோசுவாவிடம் சொல். அவன் செய்ய வேண்டியவற்றை நான் யோசுவாவிடம் கூறுவேன்” என்றார். எனவே மோசேயும் யோசுவாவும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சென்றார்கள்.
15 கர்த்தர் கூடாரத்திலே உயரமான மேகத் தூணில் தோன்றினார். உயரமான அந்த மேகத்தூண் கூடாரத்தின் வாசலுக்கு மேல் நின்றது! 16 கர்த்தர் மோசேயிடம், “நீ விரைவில் மரணமடைவாய். நீ உனது முற்பிதாக்களோடு போய்ச் சேர்ந்தபிறகு இந்த ஜனங்கள் என் மீதுள்ள நம்பிக்கையில் தொடரமாட்டார்கள். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் முறிப்பார்கள். அவர்கள் என்னைவிட்டு விலகி வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் போகிற நாட்டில் உள்ள பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். 17 அந்த நேரத்தில் நான் அவர்கள் மேல் மிகவும் கோபங்கொள்வேன். நான் அவர்களை விட்டு விலகுவேன். அவர்களுக்கு உதவ நான் மறுப்பேன். அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். பிறகு அவர்கள், ‘இத்தீமைகள் எல்லாம் எங்களுக்கு ஏற்படுகின்றன. ஏனென்றால், தேவன் எங்களோடு இல்லை’ என்பார்கள். 18 நான் அவர்களுக்கு உதவ மறுப்பேன். ஏனென்றால், அவர்கள் தீமை செய்திருக்கின்றனர். மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்.
19 “எனவே, இப்பாடலை எழுது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதனைக் கற்றுக்கொடு. இப்பாடலைப் பாட அவர்களுக்குக் கற்றுக்கொடு. பிறகு இப்பாடல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக எனக்குச் சாட்சியாக இருக்கும். 20 நான் அவர்களது முற்பிதாக்களுக்கு கொடுப்பதாக வாக்களித்த பல நன்மைகள் நிறைந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அவர்கள் உண்ண விரும்புகின்றவற்றை எல்லாம் பெறுவார்கள். அவர்கள் வளமான வாழ்வைப் பெறுவார்கள். ஆனால், பின்னர் அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பி அவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலகி எனது உடன்படிக்கையை உடைப்பார்கள். 21 பிறகு பல பயங்கரமானவை அவர்களுக்கு நிகழும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். அப்போது, அவர்களின் ஜனங்கள் இப்பாடலை நினைவு வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவு தவறியுள்ளனர் என்பதை இப்பாடல் காட்டும். நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அதுவரை அழைத்துப் போயிருக்கமாட்டேன். ஆனால் ஏற்கெனவே அவர்கள் அங்கே என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.
22 எனவே அதே நாளில் மோசே அப்பாடலை எழுதினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்தப் பாட்டைக் கற்றுத்தந்தான்.
23 பின்னர், கர்த்தர் நூனின் மகனான யோசுவாவிடம் பேசி, “பலமுள்ளவனாகவும், தைரியமுள்ளவனாகவும் இரு. நான் வாக்களித்த நாட்டிற்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்வாய். நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினார்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை எச்சரிக்கிறான்
24 மோசே கவனமாக இப்போதனைகள் எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தபோது, 25 அவன் லேவியர்களுக்கு ஒரு ஆணை கொடுத்தான். (இவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லுகிறவர்கள்.) மோசே, 26 “இந்த போதனைகளின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இதனை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு எதிரான சாட்சியாக அங்கே இருக்கும். 27 நீங்கள் கடினமானவர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். பாருங்கள், நான் உங்களோடு இருக்கும்போதே நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நான் மரித்தபிறகும் நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுப்பீர்கள். 28 எல்லா அதிகாரிகளையும், கோத்திரங்களின் தலைவர்களையும் ஒன்று கூட்டுங்கள். நான் அவர்களிடம் இவற்றைச் சொல்வேன். நான் பரலோகத்தையும், பூமியையும் அவர்களுக்கு எதிராக சாட்சியாக அழைப்பேன். 29 எனது மரணத்திற்குப் பிறகு நீங்கள் கெட்டவர்களாவீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் பின்பற்றுவதற்காக நான் கட்டளையிட்ட வழிகளை விட்டு விலகுவீர்கள். ஆகையால், எதிர்காலத்தில் உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால், கர்த்தர் தீங்கு என்று சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் செய்த தீமைகளினால் அவரைக் கோபமடையச் செய்கிறீர்கள்” என்று சொன்னான்.
மோசேயின் பாடல்
30 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டனர். மோசே அவர்களுக்காக இந்தப் பாடலைப் பாடினான். மோசே முழுப்பாடலையும் பாடினான்:
பிலாத்துவின் விசாரணை(A)
15 அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள், யூதத் தலைவர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்தனர்.
2 “நீ யூதர்களின் மன்னனா?” என்று பிலாத்து கேட்டான்.
அதற்கு இயேசு, “ஆமாம். நீர் சொல்வது சரிதான்” என்றார்.
3 தலைமை ஆசாரியர் இயேசுவின்மீது பல குற்றங்களைச் சுமத்தினர். 4 பிலாத்து இயேசுவிடம், “இம்மக்கள் உனக்கு எதிராகக் குற்றங்களை சுமத்துவதை நீ அறிவாய். எனினும் நீ ஏன் எந்தப் பதிலும் சொல்லவில்லை?” என்று மீண்டும் கேட்டான்.
5 ஆனால் இயேசு இதுவரை எந்தப் பதிலையும் கூற வில்லை. இதைப்பற்றி பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான்.
இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயன்று தோற்பது(B)
6 ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது சிறையில் இருந்து ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். மக்கள் விரும்புகின்றவனையே அவர் விடுதலை செய்ய முடியும். 7 அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
8 வழக்கத்தின்படி ஒருவனை விடுதலை செய்யும்படி மக்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர். 9 மக்களிடம் பிலாத்து, “யூதர்களின் மன்னனை விடுதலைசெய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 10 பொறாமை காரணமாகத்தான் தலைமை ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்பதைப் பிலாத்து அறிந்திருந்தான். 11 தலைமை ஆசாரியர்கள் இயேசுவை விடுதலை செய்யவேண்டாம் என்றும் பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்க மக்களைத் தூண்டிவிட்டனர்.
12 “அப்படியானால் யூதர்களின் மன்னனாகிய இந்த மனிதனை நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று பிலாத்து மக்களிடம் கேட்டான்.
13 “அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று அவர்கள் மீண்டும் சத்தமிட்டனர்.
14 “ஏன்? இவன் என்ன பாவம் செய்தான்” என்று பிலாத்து கேட்டான். ஆனால் மக்கள் மேலும் மேலும் சப்தமிட்டனர். “அவனைச் சிலுவையில் கொல்லுங்கள்” என்றனர்.
15 மக்களைப் பிரியப்படுத்த, பிலாத்து விரும்பினான். எனவே பரபாசை விடுதலை செய்தான். இயேசுவைச் சவுக்கால் அடிக்கும்படி வீரர்களிடம் சொன்னான். பின்னர் அவரைச் சிலுவையில் அறையும்படி வீரர்களிடம் ஒப்படைத்தான்.
16 பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். 17 அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். 18 பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். 19 கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள். 20 எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.
இயேசு சிலுவையில் அறையப்படுதல்(C)
21 சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். 22 “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) 23 அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார். 24 வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.
25 அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.
2008 by World Bible Translation Center