மத்தேயு 27:32-44
Tamil Bible: Easy-to-Read Version
இயேசு சிலுவையில் கொல்லப்படுதல்
(மாற்கு 15:21-32; லூக்கா 23:26-39; யோவான் 19:17-19)
32 போர்வீரர்கள் இயேசுவுடன் நகரை விட்டு வெளியில் சென்று கொண்டிருந்தார்கள். சிரேனே என்னுமிடத்திலிருந்து வந்த சீமோன் என்பவனை இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்துவர போர்வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள். 33 மண்டை ஓட்டின் இடம் என்னும் பொருள்படும் கொல்கொதா என்று அழைக்கப்படுமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். 34 அங்கு வலியை மறக்கச்செய்யும் மருந்து கலந்த பானத்தை இயேசுவுக்குக் கொடுத்தார்கள். அதைச் சுவைத்த இயேசு அதைக் குடிக்க மறுத்தார்.
35 போர் வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளை வைத்து அறைந்தார்கள். யார் இயேசுவின் ஆடைகளைப் பெறுவது என்பதை சீட்டுப் போட்டு முடிவு செய்தார்கள். 36 போர்வீரர்கள் அங்கு உட்கார்ந்து இயேசுவை கவனித்துக்கொண்டிருந்தார்கள். 37 இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் “இவர் இயேசு, யூதர்களின் ராஜா” என்று எழுதியிருந்தது.
38 இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கொள்ளைக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். 39 மக்கள் இயேசுவின் அருகில் நடந்துச்சென்று அவரைத் திட்டினார்கள். தலையைக் குலுக்கியபடி மக்கள் கூறினார்கள், 40 “தேவாலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட முடியும் எனக் கூறினாயே! உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ தேவனின் குமாரன் என்பது உண்மையானால், சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்றனர்.
41 தலைமை ஆசாரியர், வேதபாரகர் மற்றும் மூத்த யூதத்தலைவர்கள் ஆகிய அனைவரும் அங்கிருந்தனர். மக்கள் செய்தது போலவே அவர்களும் இயேசுவைக் கேலி செய்தார்கள். 42 அவர்கள், “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான்! ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் ராஜா என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43 இவன் தேவனை நம்பினான். எனவே தேவன் விரும்பினால் இவனைக் காப்பாற்றட்டும் ‘நான் தேவ குமாரன்’ என இவன் கூறினான்” என்றார்கள். 44 அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர்.
Read full chapter2008 by Bible League International