Add parallel Print Page Options

பிலாத்துவும் மக்களும்

(மத்தேயு 27:15-26; மாற்கு 15:6-15; யோவான் 18:39–19:16)

13 தலைமை ஆசாரியரையும் யூத அதிகாரிகளையும் மக்களோடு கூட பிலாத்து அழைத்தான். 14 பிலாத்து அவர்களை நோக்கி, “நீங்கள் இந்த மனிதனை (இயேசு) என்னிடம் அழைத்து வந்தீர்கள். மக்களின் நடுவில் அமைதியின்மையை விளைவிக்கிறான் என்று சொன்னீர்கள். ஆனால் உங்களுக்கு முன்பாக நான் நியாயம் தீர்த்தேன். அவன் செய்ததாக நான் எந்தக் குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் புகார் சொல்கிற காரியங்களில் இயேசு குற்றவாளியாக்கப்படவில்லை. 15 மேலும் ஏரோதுவும் அவரிடம் தவறேதும் காணவில்லை. மீண்டும் இயேசுவை நம்மிடமே திருப்பி அனுப்பினான் ஏரோது. அவருக்கு மரணதண்டனை தரத் தேவையில்லை. 16 எனவே நான் அவரைச் சிறிய தண்டனை ஏதேனும் கொடுத்து விடுவித்து விடுவேன்” என்றான். 17 [a]

18 ஆனால் மக்கள் அனைவரும், “அவனைக் கொல்லுங்கள். பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டனர். 19 (நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான்.)

20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பினான். எனவே பிலாத்து மீண்டும் அவர்களை நோக்கி, இயேசுவை விடுவிப்பதாகக் கூறினான். 21 ஆனால் அவர்கள் மீண்டும் உரத்த குரலில், “அவனைக் கொல்லுங்கள். அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்றார்கள்.

22 மூன்றாம் முறை பிலாத்து மக்களை நோக்கி, “ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? அவன் குற்றவாளி அல்ல. அவனைக் கொல்வதற்கேற்ற காரணம் எதையும் நான் காணவில்லை. எனவே அவனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அவனை விடுதலை செய்வேன்” என்றான்.

23 ஆனால் தொடர்ந்து மக்கள் சத்தமிட்டார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டுமென வேண்டினார்கள். அவர்கள் மிகவும் உரத்த குரலில் சத்தமிட்டதைக் கேட்டதும் 24 அவர்களின் விருப்பத்தின்படியே செய்ய முடிவெடுத்தான் பிலாத்து. 25 மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர்.

Read full chapter

Footnotes

  1. லூக்கா 23:17 சில கிரேக்கப் பிரதிகளில் லூக்காவில் 17வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது யாரேனும் ஒரு சிறைக் கைதியை விடுவிப்பது பிலாத்துவின் வழக்கம்.”