மத்தேயு 27:15-31
Tamil Bible: Easy-to-Read Version
இயேசுவை விடுவிக்கப் பிலாத்துவின் முயற்சி
(மாற்கு 15:6-15; லூக்கா 23:13-25; யோவான் 18:39–19:16)
15 ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம். 16 அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ்.
17 பிலாத்துவின் வீட்டிற்கு முன் மக்கள் கூடினார்கள். பிலாத்து மக்களைப் பார்த்து, “உங்களுக்காக ஒருவனை விடுதலை செய்கிறேன். நீங்கள் யாரை விடுவிக்க விரும்புகிறீர்கள். பரபாஸையா அல்லது கிறிஸ்து எனப்படும் இயேசுவையா?” என்றான். 18 பொறாமை கொண்டே மக்கள் தன்னிடம் இயேசுவை ஒப்படைத்துள்ளார்கள் என்பதை பிலாத்து அறிந்தான்.
19 நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து பிலாத்து இவற்றைக் கூறினான். அப்பொழுது அவனது மனைவி ஒரு செய்தி அனுப்பினாள். அதில், “இயேசுவை எதுவும் செய்யாதீர்கள். அவர் குற்றமற்றவர். இன்று நான் அவரைப்பற்றி ஒரு கனவு கண்டேன். அது என்னை மிகவும் கலங்க வைத்தது” என்றிருந்தது.
20 ஆனால், தலைமை ஆசாரியர்களும் மூத்த யூதத் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யவும் இயேசுவைக் கொல்ல வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க மக்களைத் தூண்டினார்கள்.
21 பிலாத்து, “என்னிடம் பரபாசும், இயேசுவும் உள்ளார்கள். யாரை விடுவிக்க நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு மக்கள், “பரபாஸ்” என்று சொன்னார்கள்.
22 “அப்படியானால் கிறிஸ்து எனப்படும் இயேசுவை என்ன செய்வது?” என்று பிலாத்து கேட்டான்.
“அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று மக்கள் சொன்னார்கள்.
23 “அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?” என்று பிலாத்து மக்களைக் கேட்டான்.
ஆனால் மக்கள் அனைவரும், “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
24 மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதைப் பிலாத்து கண்டான். மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் பிலாத்து கவனித்தான். ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும் காணுமாறு தன் கைகளைக் கழுவினான். பின்பு, “இவரது மரணத்திற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான்.
25 “அவரது மரணத்திற்கு நாங்களே பொறுப்பு. அவரது மரணத்திற்கான தண்டனையை எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்குமாக நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று மக்கள் அனைவரும் கூறினார்கள்.
26 பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவைச் சாட்டையால் அடிக்குமாறு பிலாத்து சில வீரர்களிடம் கூறினான். பிறகு சிலுவையில் அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான்.
இயேசுவைக் கேலி செய்தல்
(மாற்கு 15:16-20; யோவான் 19:2-3)
27 பின்னர் பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்குள் கொண்டு வந்தார்கள். 28 எல்லா வீரர்களும் இயேசுவைச் சுற்றிக்கொண்டு அவரது ஆடைகளைக் கழற்றி ஒரு சிவப்பு மேலங்கியை அணிவித்தார்கள். 29 வீரர்கள் முட்களால் ஒரு கிரீடம் செய்து அதை இயேசுவின் தலையில் சூட்டினார்கள். அவரது வலது கையில் ஒரு தடியைக் கொடுத்தார்கள். பின்னர் அவ்வீரர்கள் இயேசுவின் முன்னால் குனிந்து கேலி செய்தார்கள், “வணக்கம் யூதர்களின் ராஜாவே” என்றார்கள். 30 அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள். 31 இயேசுவை அவர்கள் கேலி செய்து முடித்ததும், சிவப்பு மேலங்கியை நீக்கியபின் அவரது ஆடைகளை அணிவித்தார்கள். பின்னர் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றார்கள்.
Read full chapter2008 by Bible League International