Old/New Testament
32 “வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன்.
பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள்.
2 எனது போதனைகள் மழையைப் போன்று வரும்,
பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும்,
மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும்,
பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும்.
3 நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்!
4 “அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை!
ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை!
தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர்.
அவர் நீதியும் செம்மையுமானவர்.
5 நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.
உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது.
நீங்கள் கோணலான பொய்யர்கள்.
6 உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை!
நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள்.
கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார்.
அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார்.
7 “நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப்பாருங்கள்.
பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள்.
உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான்.
உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள்.
8 உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து
ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார்.
அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார்.
இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார்.
9 கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு,
யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம்.
10 “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார்.
அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம்.
கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார்.
அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார்.
11 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார்.
ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும்.
பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும்.
அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும்,
அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும்.
கர்த்தர் இதனைப் போன்றவர்.
12 கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார்.
அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை.
13 கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார்.
யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான்.
கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார்.
கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார்.
14 கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார்.
அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும்,
சிறந்த கோதுமையையும் கொடுத்தார்.
இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.
15 “ஆனால் யெஷுரன் கொழுத்துப்போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான்
(ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.)
அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான்.
தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான்.
16 கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர்.
கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.
17 அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர்.
அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும்.
அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும்.
18 நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய்.
உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.
19 “கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார்.
ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்!
20 அதனால் கர்த்தர் கூறினார்,
‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன்.
அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்!
அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர்.
அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள்.
21 அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர்.
இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர்.
எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன்.
22 எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது.
அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது.
அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது.
அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது!
23 “‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன்.
நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன்.
24 அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள்.
பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும்.
நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன்.
விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும்.
25 வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள்.
அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள்.
படைவீரர்கள் இளைஞர்களையும்,
இளம் பெண்களையும் கொல்வார்கள்.
அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள்.
26 “‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன்.
எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்!
27 அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன்.
பகைவருக்கு அது புரியாது,
அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள்:
“கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!”’
28 “இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாதிருக்கிறார்கள்.
அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை.
29 அவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்திருக்கக்கூடும்.
என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்!
30 ஒருவனால் 1,000 பேரைத் துரத்த முடியுமா?
இரண்டு பேரால் 10,000 பேரை ஓடவைக்க முடியுமா?
கர்த்தர் அவர்களை எதிரிகளுக்குக் கொடுத்திருந்தால் மட்டுமே அது நிகழும்!
அவர்களின் பாறையானவர் (தேவன்) அடிமைகளைப்போன்று விற்றிருந்தால் மட்டுமே அது நிகழும்!
31 எதிரிகளின் ‘பாறையானவன்’ நமது பாறையானவரைப் (கர்த்தர்) போன்று பலமுள்ளவன் அல்ல.
நமது பகைவர்கள் கூட இதனைத் தெரிந்திருக்கின்றார்கள்!
32 பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும்.
அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும்.
33 அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும்.
34 “கர்த்தர் கூறுகிறார்,
‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்!
35 அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது
நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன்.
அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது.
அவர்களது தண்டனை விரைவில் வரும்.’
36 “கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார்.
அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார்.
அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார்.
அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார்.
37 பின்னர் கர்த்தர் கூறுவார்,
‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்?
பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே?
38 அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன.
அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன.
எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும்.
அவை உங்களைக் காக்கட்டும்!
39 “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்!
வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன்.
நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன்.
நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும்.
நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும்.
எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது.
40 நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்.
நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்!
41 நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன்.
எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன்.
அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன்.
42 எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள்.
கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள்.
எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும்.
அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’
43 “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார்.
அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார்.
அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார்.
அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.”
மோசே அவனது பாடலை ஜனங்களுக்குக் கற்றுத்தருகிறான்
44 மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான். 45 மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது 46 அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும். 47 இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான்.
நேபோ மலையின்மேல் மோசே
48 கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர், 49 “அபாரீம் எனும் மலைகளுக்குப் போ, எரிகோவிற்கு எதிர்ப்புறமாக இருக்கிற மோவாப் நாட்டிலுள்ள நேபோ மலையின்மேல் ஏறு. பிறகு நீ, இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்வதற்காக நான் கொடுக்கிற, கானான் நாட்டினைப் பார்க்க முடியும். 50 நீ அந்த மலைமீது மரணமடைவாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் மலைமீது மரித்து முற்பிதாக்களிடம் சேர்ந்ததுபோல் நீயும் உன் முற்பிதாக்களிடம் சேருவாய். 51 ஏனென்றால், நீங்கள் இருவரும் எனக்கு எதிராக பாவம் செய்தீர்கள். நீங்கள் காதேசிலே மேரிபாவின் தண்ணீர் அருகில் இருந்தீர்கள். அது சீன் வனாந்தரத்திலே இருந்தது. அங்கே, இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக, நான் பரிசுத்தமானவர் என்று நீ கனப்படுத்தவில்லை. 52 எனவே, இப்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தை நீ பார்க்கலாம். ஆனால், நீ அந்த தேசத்திற்குள் செல்லமுடியாது” என்று கூறினார்.
மோசே ஜனங்களை ஆசீர்வதிக்கிறான்
33 மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய மனுஷனான அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் இதுதான்.
2 மோசே சொன்னான்:
“சீனாயிலிருந்து கர்த்தர் வந்தார்.
கர்த்தர் சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமாகும் ஒளிபோன்று தோன்றினார்.
அவர் பாரான் மலையிலிருந்து ஒளி வீசும் வெளிச்சத்தைப் போன்று இருந்தார்.
கர்த்தர் 10,000 பரிசுத்தரோடு வந்தார்.
தேவனின் பலமிக்க படை வீரர்கள் அவரது பக்கத்திலேயே இருந்தார்கள்.
3 ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார்.
அவரது பரிசுத்தமான ஜனங்கள் அனைவரும் அவரது கைக்குள் இருக்கிறார்கள்.
அவர்கள் அவரது காலடியில் இருந்து, அவரது போதனையைக் கற்கிறார்கள்!
4 மோசே சட்டத்தை கொடுத்தான்.
அந்தப் போதனைகள் எல்லாம் யாக்கோபின் ஜனங்களுக்குரியது.
5 அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள்.
கர்த்தர் யெஷுரனுக்கு அரசரானார்!
ரூபனுக்கான ஆசீர்வாதம்
6 “ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்!
ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!”
யூதாவுக்கான ஆசீர்வாதம்
7 மோசே யூதாவைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
“கர்த்தாவே, யூதாவிலிருந்து தலைவன் உதவிக்காக அழைக்கும்போது கேளும்.
அவனை அவனது ஜனங்களிடம் கொண்டு வாரும்.
அவனைப் பலப்படுத்தும், அவனது பகைவர்களை தோற்கடிக்கும்படி உதவும்.”
லேவிக்கான ஆசீர்வாதம்
8 மோசே லேவியைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
“லேவி உமது உண்மையான சீடன்.
அவன் ஊரீம் மற்றும் தும்மீமை வைத்திருக்கிறான்.
நீர் மாசாவிலே லேவியின் ஜனங்களைச் சோதித்தீர்.
மேரிபாவின் தண்ணீரிடத்திலே அவர்கள் உமது ஜனங்களாக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தீர்.
9 கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள்.
அவர்களது தந்தை மற்றும் தாயைப் பற்றியும் கவலைப்படவில்லை.
அவர்கள் தமது சகோதரர்களையும் அடையாளம் காணவில்லை.
அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகள் மேலும் அக்கறை செலுத்தவில்லை.
ஆனால், அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அவர்கள் உமது உடன்படிக்கையைக் காத்தார்கள்.
10 அவர்கள் உமது விதிகளை யாக்கோபிற்குப் போதிப்பார்கள்.
அவர்கள் உமது சட்டத்தை இஸ்ரவேலுக்குப் போதிப்பார்கள்.
அவர்கள் உமக்கு முன்னால் நறுமண பொருட்களை எரிப்பார்கள்.
அவர்கள் உமது பலிபீடத்தில் தகன பலிகளைச் செலுத்துவார்கள்.
11 “கர்த்தாவே, லேவியின் உடமைகளை ஆசீர்வதியும்.
அவன் செய்கின்றவற்றை ஏற்றுக்கொள்ளும்.
அவனைத் தாக்குகிறவர்களை அழித்துப்போடும்!
அவனது பகைவர்களைத் தோற்கடியும் அப்போது அவர்கள் மீண்டும் அவனை தாக்கமாட்டார்கள்.”
பென்யமீனுக்கான ஆசீர்வாதம்
12 மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்:
“கர்த்தர் பென்யமீனை நேசிக்கிறார்.
பென்யமீன் அவர் அருகில் பாதுகாப்பாக வாழ்வான்.
கர்த்தர் எல்லா நேரத்திலும் அவனைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தர் அவனது நாட்டில் வாழ்வார்.”
யோசேப்புக்கான ஆசீர்வாதம்
13 மோசே யோசேப்பைப் பற்றி இதனைச் சொன்னான்:
“கர்த்தர் யோசேப்பின் நாட்டை ஆசீர்வதிக்கட்டும்.
கர்த்தாவே, வானத்தின் மேலிருந்து மழையையும் பூமிக்குக் கீழிருந்து நீரூற்றுகளையும் அனுப்பும்.
14 அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
15 குன்றுகளும், பழைமையான மலைகளும்
அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும்.
16 பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும்.
யோசேப்பு தனது சகோதரர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டான்.
எனவே, எரியும் முட்செடிகளில் இருந்து கர்த்தர் தன்னிடமுள்ள சிறந்தவற்றை யோசேப்பிற்குக் கொடுக்கட்டும்.
17 யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான்.
அவனது இரு மகன்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர்.
அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப்
பூமியின் கடைசிவரை தள்ளுவர்!
ஆமாம், மனாசே ஆயிரக்கணக்கான ஜனங்களையும்,
எப்பிராயீம் பத்தாயிரக்கணக்கான ஜனங்களையும் தள்ளியிருக்கிறார்கள்.”
செபுலோன் மற்றும் இசக்காருக்கான ஆசீர்வாதம்
18 மோசே இதனை செபுலோனுக்குச் சொன்னான்:
“செபுலோன், நீ வெளியே போகும்போது மகிழ்ச்சியாய் இரு.
இசக்கார், நீ உன் கூடாரங்களாகிய தாபரத்தில் மகிழ்ச்சியாய் இரு.
19 அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள்.
அவர்கள் அங்கே நல்ல பலிகளை செலுத்துவார்கள்.
அவர்கள் கடலிலிருந்து செல்வங்களையும்
கடற்கரையிலிருந்து பொக்கிஷங்களையும் எடுப்பார்கள்.”
காத்துக்குரிய ஆசீர்வாதம்
20 மோசே இதனைச் சொன்னார்.
“தேவனைப் போற்றுங்கள்.அவர் காத்திற்கு மிகுதியான நாட்டைக் கொடுத்தவர்!
காத் ஒரு சிங்கத்தைப் போன்றவன். அவன் படுத்துக் காத்திருக்கிறான். பிறகு, அவன் தாக்கி மிருகத்தைத் துண்டுகளாகக் கிழிப்பான்.
21 அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான்.
அவன் அரசனின் பாகத்தை எடுக்கிறான்.
ஜனங்களின் தலைவர்கள் அவனிடம் வருகிறார்கள்.
கர்த்தர் சொன்ன நல்லவற்றை அவன் செய்கிறான்.
இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சரியானதை அவன் செய்கிறான்.”
தாணுக்குரிய ஆசீர்வாதம்
22 மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்:
“தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான்.
அது பாசானிலிருந்து வெளியே குதித்தது.”
நப்தலிக்கான ஆசீர்வாதம்
23 மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்:
“நப்தலி, ஏராளமான நல்லவற்றைப் பெறுவாய்.
கர்த்தர் உன்னை உண்மையாக ஆசீர்வதிப்பார்.
நீ கலிலேயா ஏரி உள்ள நாட்டைப் பெறுவாய்.”
ஆசேருக்கான ஆசீர்வாதம்
24 மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்:
“மகன்கள் அனைவரிலும், ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆசேர் இருக்கிறான்.
அவன் தனது சகோதரர்களுக்கு பிரியமானவனாக இருக்கட்டும். அவன் தனது கால்களை எண்ணெயில் கழுவட்டும்.
25 உனது வாசல்கள் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பூட்டுகளைப் பெறட்டும்.
உனது வாழ்நாள் முழுவதும் நீ பலத்தோடு இருப்பாய்.”
மோசே தேவனைப் புகழுகிறான்
26 “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை!
தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார்.
27 தேவன் என்றென்றும் வாழ்கிறார்.
அவர் உனது பாதுகாப்பான இடம்.
தேவனின் வல்லமை என்றென்றும் தொடரும்!
அவர் உன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்.
உனது பகைவர்கள் உன் நாட்டை விட்டு விலகும்படி தேவன் துரத்துவார்.
அவர், ‘பகைவரை அழித்துப்போடு’ என்று சொல்லுவார்.
28 எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும்.
யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும்.
அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள்.
அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும்.
29 இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.
வேறு எந்த நாடும் உன்னைப் போன்றில்லை.
கர்த்தர் உன்னைக் காப்பாற்றினார்.
கர்த்தர் உனக்குப் பாதுகாப்பான கேடயத்தைப் போன்றிருக்கிறார்!
கர்த்தர் பலமுள்ள வாளைப் போன்றும் இருக்கிறார்.
உனது பகைவர்கள் உனக்குப் பயப்படுவார்கள்.
நீ அவர்களது பரிசுத்த இடங்களை மிதிப்பாய்!”
மோசே மரணமடைதல்
34 மோசே நேபோ மலைமீது ஏறினான். மோசே மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியிலிருந்து பிஸ்காவின் உச்சிக்குச் சென்றான். இது எரிகோவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு எதிர்புறத்தில் உள்ளது. கர்த்தர் மோசேக்கு கீலேயாத் முதல் தாண்வரையுள்ள அனைத்து நாடுகளையும் காட்டினார். 2 கர்த்தர் அவனுக்கு நப்தலி, எப்பிராயீம், மற்றும் மனாசேயின் நாடுகள் எல்லாவற்றையும் காட்டினார். அவர் அவனுக்கு மத்தியதரைக் கடல் வரையுள்ள யூதா நாடு முழுவதையும் காட்டினார். 3 கர்த்தர் மோசேக்கு பாலைவனத்தையும், பேரீச்ச மரங்களின் நகரம் என்னும் சோவார் முதல் எரிகோவரையுள்ள பள்ளத்தாக்கையும் காட்டினார். 4 கர்த்தர் மோசேயிடம், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்த நாடு இதுதான். நான் அவர்களிடம் சொன்னேன் ‘நான் இந்த நாட்டை உங்கள் சந்ததிகளுக்குத் தருவேன். அந்த நாட்டை நீ பார்க்கும்படி செய்வேன். ஆனால் அங்கே உன்னால் போகமுடியாது’” என்று கூறினார்.
5 பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார். 6 கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. 7 மோசே மரணமடையும்போது 120 வயதுடையவனாக இருந்தான். அவன் எப்பொழுதும்போல் பலமுள்ளவனாக இருந்தான். அவனது கண்கள் அப்பொழுதும் நன்றாக இருந்தது. 8 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்காக 30 நாட்கள் அழுதனர். அவர்கள் துக்ககாலம் முடியும்வரை மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியில் தங்கினார்கள்.
யோசுவா புதிய தலைவனாகுதல்
9 யோசுவாவின்மேல் மோசே தனது கைகளை வைத்து அவனைப் புதிய தலைவனாக நியமித்திருந்தான். பிறகு நூனின் மகனான யோசுவா ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவிற்குக் கீழ்ப்படியத் தொடங்கினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தவற்றை எல்லாம் அவர்கள் செய்தனர்.
10 இஸ்ரவேல் மோசேயைப் போன்று இன்னொரு தீர்க்கதரிசியைப் பெறவில்லை. கர்த்தர் மோசேயை நேருக்கு நேர் தெரிந்து வைத்திருந்தார். 11 எகிப்து நாட்டில் அற்புதங்களைச் செய்வதற்கு கர்த்தர் மோசேயை அனுப்பினார். பார்வோன், அவனது அதிகாரிகள் மற்றும் எகிப்திலுள்ள அனைத்து ஜனங்களும் அந்த அற்புதங்களைப் பார்த்தனர். 12 மோசே செய்ததுபோன்று வேறு எந்த தீர்க்கதரிசியும் சகல வல்லமையும், பயங்கரமும் கொண்ட செயல்களைச் செய்யவில்லை. அவன் செய்ததை இஸ்ரவேலில் உள்ள எல்லா ஜனங்களும் பார்த்தனர்.
26 அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். 27 அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர். 28 [a]
29 அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே. 30 ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர்.
31 வேதபாரகர்களும் தலைமை ஆசாரியர்களும் அங்கே அவர்களோடு இருந்தனர். அவர்களும் இயேசுவை மற்ற மக்கள் செய்த விதத்திலேயே கேலி செய்தனர். “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான். ஆனால் தன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை. 32 இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே” என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசுவைப்பற்றி அவதூறாகப் பேசினர்.
இயேசு இறத்தல்(A)
33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” [b] என்று பொருள்.
35 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர். 36 ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான்.
37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.
38 இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது. 39 இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார்.
40 சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய மகன்.) 41 இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
இயேசுவின் அடக்கம்(B)
42 இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளுக்கு முந்தின நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் 43 மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காகக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவிடம் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
44 ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான். 45 அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான்.
46 யோசேப்பு மெல்லிய துணியை வாங்கி வந்தான். சிலுவையில் இருந்து இயேசுவின் சரீரத்தை இறக்கி அதனைத் துணியால் சுற்றினான். பிறகு அச்சரீரத்தைக் கொண்டு போய் பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறை வாசலை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டான். 47 இயேசு வைக்கப்பட்ட கல்லறையை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயான மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
2008 by World Bible Translation Center