Add parallel Print Page Options

இயேசுவின் மரணம்

(மாற்கு 15:33-41; லூக்கா 23:44-49; யோவான் 19:28-30)

45 நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. 46 சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் “ஏலி, ஏலி, லாமா சபக்தானி” என்று கதறினார். இதன் பொருள், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?”(A) என்பதாகும்.

47 அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள், “அவன் எலியாவை அழைக்கிறான்” என்றார்கள்.

48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். 49 ஆனால் மற்றவர்கள், “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள்.

50 மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது.

51 இயேசு இறந்தபொழுது, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கிழிசல் திரைச்சீலையின் மேலிருந்துத் துவங்கி கீழே வரைக்கும் வந்தது. மேலும், நிலம் நடுங்கியது. பாறைகள் நொறுங்கின. 52 கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். 53 கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள்.

54 இயேசுவுக்குக் காவலிருந்த படைத் தலைவனும் போர்வீரர்களும் நில நடுக்கம் ஏற்பட்டதையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கண்டார்கள். மிகவும் பயந்துபோன அவர்கள், “இவர் உண்மையிலேயே தேவகுமாரன்தான்” என்றார்கள்.

55 பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள். 56 மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.

Read full chapter