மாற்கு 15:33-41
Tamil Bible: Easy-to-Read Version
இயேசு இறத்தல்
(மத்தேயு 27:45-56; லூக்கா 23:44-49; யோவான் 19:28-30)
33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?”(A) என்று பொருள்.
35 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர். 36 ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான்.
37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.
38 இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது. 39 இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார்.
40 சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய குமாரன்.) 41 இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
Read full chapter2008 by Bible League International