M’Cheyne Bible Reading Plan
யோசியா பஸ்காவைக் கொண்டாடுகிறான்
35 எருசலேமில் கர்த்தருக்கு யோசியா அரசன் பஸ்காவைக் கொண்டாடினான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதல் மாதத்தில் 14வது நாளன்று கொல்லப்பட்டது. 2 யோசியா ஆசாரியர்களை அவர் தம் கடமைகளைச் செய்யத் தேர்ந்தெடுத்தான். அவன் ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது உற்சாகப்படுத்தினான். 3 யோசியா லேவியர்களோடு பேசினார். அந்த லேவியர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கற்பிக்கிறவர்கள். கர்த்தருக்குச் செய்யும் சேவைகளால் பரிசத்தமானவர்களாக ஆக்கப்பட்டவர்கள். அவன் அவர்களிடம், “சாலொமோன் கட்டிய ஆலயத்தில் பரிசுத்தப் பெட்டியை வையுங்கள். சாலொமோன் தாவீதின் மகன். தாவீது இஸ்ரவேலின் அரசனாக இருந்தான். மீண்டும் நீங்கள் பரிசுத்தப் பெட்டியை உங்கள் தோளில் சுமந்து இடம்விட்டு இடம் அலையாதீர்கள். இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். தேவனுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்குச் சேவை செய்யுங்கள். 4 ஆலயத்தில் உங்கள் கோத்திரத்தின் சார்பாகச் சேவைசெய்ய தயாராகுங்கள். தாவீது அரசனும், சாலொமோன் அரசனும் உங்களுக்கு ஒதுக்கிய வேலைகளைச் செய்யுங்கள். 5 லேவியர்கள் குழுவுடன் பரிசுத்தமான இடத்தில் நில்லுங்கள். நீங்கள் இதனை வெவ்வேறு கோத்திரங்களினால் செய்யுங்கள். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும். 6 பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். கர்த்தருக்கு முன்பு பரிசத்தமாக இருங்கள். இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்கள் சகோதரர்களுக்கு ஆட்டுக் குட்டிகளைத் தயார் செய்யுங்கள். கர்த்தர் நமக்கு கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்யுங்கள். கர்த்தர் நமக்கு மோசே மூலம் பல கட்டளைகளை கொடுத்திருக்கிறார்” என்றான்.
7 யோசியா 30,000 செம்மறியாடுகளையும், ஆட்டுக் கடாக்களையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பஸ்காவில் பலியாகக் கொல்வதற்குக் கொடுத்தான். அவன் ஜனங்களுக்கு 3,000 கால்நடைகளையும் கொடுத்தான். இந்த விலங்குகள் அனைத்தும் யோசியா அரசனின் சொந்த விலங்குகள். 8 யோசியாவின் அதிகாரிகளும் இலவசமாக ஆடுகளையும் பொருட்களையும் ஜனங்களுக்கும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் பஸ்கா காணிக்கைக்காக கொடுத்தனர். தலைமை ஆசாரியனான இல்க்கியா, சகரியா மற்றும் யெசியேல் ஆகியோர் ஆலயத்தின் பொறுப்பான அதிகாரிகள். அவர்கள் ஆசாரியர்களுக்கு 2,600 ஆட்டுக்குட்டிகளையும், 300 காளைகளையும் பஸ்கா பலியாகக் கொடுத்தார்கள். 9 மேலும், தனது சகோதரர்களான செமாயா மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் அசாபியா, ஏயேல் மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் இனணந்து கொனானியா, 500 செம்மறி ஆடுகளையும், காளைகளையும் பஸ்கா பலியாக லேவியர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் லேவியர்களின் தலைவர்கள்.
10 பஸ்கா சேவைத் தொடங்குவதற்கு அனைத்தும் தயாராக இருந்தபொழுது ஆசாரியர்களும், லேவியர்களும் அவர்களின் இடத்திற்குச் சென்றனர். இதுவே அரசனின் கட்டளையாகும். 11 பஸ்கா ஆடுகள் கொல்லப்பட்டன. பிறகு லேவியர்கள் தோலை உரித்தனர். இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 12 பிறகு அவர்கள் தகன பலிகளுக்காக வெவ்வேறு கோத்திரங்களுக்கு மிருகங்களைக் கொடுத்தனர். மோசேயின் சட்டம் தகனபலிகள் எவ்வாறு அளிக்கப்பட வேண்டும் என்று போதித்ததோ அவ்வாறே இது செய்யப்பட்டது. 13 லேவியர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே பஸ்கா பலிகளை தீயில் வறுத்தார்கள். அவர்கள் பரிசுத்தமான பலிகளைப் பானைகளிலும், கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்தனர். உடனடியாக அவர்கள் அவற்றை ஜனங்களுக்குக் கொடுத்தனர். 14 இவை முடிந்த பிறகு, லேவியர்கள் தங்களுக்கென்று இறைச்சியைப் பெற்றுக்கொண்டனர். ஆரோனின் சந்ததிகளான ஆசாரியர்களும் பெற்றுக்கொண்டனர். ஆசாரியர்கள் இருட்டுகிறவரை கடினமான வேலையை செய்தார்கள். அவர்கள் தகனபலிகளை எரிப்பதும், கொழுப்பை எரிப்பதுமாக இருந்தார்கள். 15 ஆசாப் குடும்பத்தைச் சேர்ந்த லேவியப் பாடகர்கள் அரசன் தாவீது தங்களுக்கு ஒதுக்கிய இடத்தை அடைந்தார்கள். அவர்கள் ஆசாப், ஏமான், அரசனின் தீர்க்கதரிசியான எதுத்தானும் சொன்னபடியே தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டிருந்தார்கள். வாசல் காவலர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள். அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகாமல் இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்காக அவர்களின் சகோதரரான லேவியர்கள் பஸ்காவில் அனைத்தையும் தயார் செய்துவிட்டனர்.
16 எனவே, யோசியா அரசனின் கட்டளைப்படி அன்று நடைபெற வேண்டிய வேலைகள் அனைத்தும் நடந்தேறின. கர்த்தருடைய பலிபீடத்தில் தகனபலிகள் கொடுக்கப்பட்டு பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. 17 அங்கிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவையும், புளிப்பில்லா அப்பப் பண்டிகையையும் ஏழு நாட்களாகக் கொண்டாடினார்கள். 18 தீர்க்கதரிசி சாமுவேல் காலத்திலிருந்து இன்றுவரை பஸ்கா பண்டிகை இதுபோல் எப்போதும் கொண்டாடப்படவில்லை. எந்தவொரு அரசனும் இஸ்ரவேலில் இதுபோல் பஸ்காவைக் கொண்டாடவில்லை. யோசியா அரசன், ஆசாரியர்கள் லேவியர்கள், யூதா ஜனங்கள். எருசலேமில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பஸ்காவைச் சிறப்பான முறையில் கொண்டாடினார்கள். 19 அவர்கள் யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற 18வது ஆண்டில் இந்தப் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
யோசியாவின் மரணம்
20 யோசியா ஆலயத்திற்கு அனைத்து நல்ல செயல்களையும் செய்து முடித்தான். பிறகு எகிப்து அரசனான நேகோ தன் படைகளோடு ஐபிராத்து ஆற்றின் கரையிலுள்ள கர்கேமிஸ் நகரத்தின் மீது போர் செய்ய சென்றான். உடனே யோசியா அரசனும் அவனோடு போரிடச் சென்றான். 21 ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள்,
“யோசியா அரசனே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!” என்றனர்.
22 ஆனால் யோசியா அங்கிருந்து விலகவில்லை. அவன் நேகோவோடு போரிட முடிவுசெய்தான். எனவே அவன் உருவத்தை மாற்றிக்கொண்டு போரிட களத்துக்குச் சென்றான். தேவனுடைய கட்டளையைப் பற்றி நேகோ சொன்னதை யோசியா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். யோசியா போரிட மெகிதோ பள்ளத்தாக்குக்குச் சென்றான். 23 போர்க்களத்தில் அரசன் யோசியாவின்மேல் அம்புகள் பாய்ந்தன. அவன் தன் வேலைக்காரர்களிடம், “நான் பலமாகக் காயப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!” என்றான்.
24 எனவே, வேலைக்காரர்கள் யோசியாவை அவனது இரதத்திலிருந்து இறக்கி, வேறொரு இரதத்தில் ஏற்றினார்கள். இரண்டாவது இரதமும் அவனால் போர்க்களத்துக்குக் கொண்டுவரப்பட்டதுதான். பின் யோசியாவை எருசலேமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் மரித்தான். அவன் முற்பிதாக்களின் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்கள் அனைவரும் யோசியாவின் மரணத்திற்காகப் பெரிதும் துக்கப்பட்டார்கள். 25 யோசியாவிற்காக எரேமியா புலம்பல் பாடல்களை எழுதிப் பாடினான். இன்றும் ஆண் பெண் பாடகர்கள் அப்பாடல்களைப் பாடி வருகிறார்கள். அவை இன்றுவரை இஸ்ரவேலில் வழங்கிவருகிறது. புலம்பல் பாடல்கள் என்ற புத்தகத்தில் அவை எழுதப்பட்டுள்ளன.
26-27 யோசியாவின் தொடக்க காலமுதல் முடிவுவரை அவன் செய்த அனைத்து செயல்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடம் அவன் எவ்வளவு உண்மையானவனாக இருந்தான் என்பதையும், கர்த்தருடைய சட்டங்களுக்கு எவ்வாறு அடிபணிந்தான் என்பதையும் அப்புத்தகம் விளக்குகிறது.
புதிய எருசலேம்
21 பிறகு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முதலாவது வானமும், பூமியும் மறைந்து போயிற்று. இப்போது கடல் இல்லை. 2 தேவனிடமிருந்து பரலோகத்தை விட்டுக் கீழே இறங்கிவரும் பரிசுத்த நகரைக் கண்டேன். தேவன் அனுப்பிய அந்நகரமே புதிய எருசலேம். [a] அது, தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல தயார்படுத்தப்பட்டது.
3 சிம்மாசனத்திலிருந்து ஓர் உரத்தகுரல் கேட்டது: “இப்போது தேவனுடைய வீடு அவரது மக்களோடு உள்ளது. அவர் அவர்களோடு வாழ்வார். அவர்களே அவரது மக்களாக இருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருந்து அவர்களுடைய தேவனாய் இருப்பார். 4 அவர்களின் கண்களில் வடியும் கண்ணீரை தேவன் துடைப்பார். இனிமேல் அங்கே மரணம் இருக்காது. துக்கமும், அழுகையும், வேதனையும் இல்லாமல் போகும். பழைய முறைகள் எல்லாம் போய்விட்டன” என்றது.
5 சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.
6 சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், “இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன். 7 எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு மகனாகவும் இருப்பான். 8 ஆனால் கோழைகளாக இருப்பவர்களும், நம்ப மறுப்பவர்களும், பயங்கரமான காரியங்களைச் செய்பவர்களும், கொலைகாரர்களும், பாலியல் குற்றங்கள் செய்பவர்களும், மந்திர சூன்ய வேலை செய்பவர்களும், உருவ வழிபாடு செய்பவர்களும், பொய்யர்களும் கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம்” என்றார்.
9 ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், “என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன்” என்றான். 10 அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது.
11 அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. 12 அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 13 கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. 14 நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
15 என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது. 16 அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி [b] நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது. 17 அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. 18 அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
19 நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம். 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி. 21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.
22 அந்நகரத்தில் ஆலயம் எதையும் நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதன் ஆலயமாக இருக்கின்றனர். 23 அந்நகரத்துக்கு ஒளி தர சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமை அங்கு ஒளி வீசுகிறது. ஆட்டுக்குட்டியானவரே அங்கு ஒளியாக இருக்கிறார்.
24 இரட்சிக்கப்படுகிற மக்கள் அனைவரும் அதின் ஒளியில் நடப்பார்கள். உலகில் உள்ள அரசர்கள் தம் மகிமையை அந்நகருக்குள் கொண்டு வருவார்கள். 25 எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந்நகரில் இரவு என்பதே இல்லை. 26 அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும். 27 சுத்தமற்ற எதுவும் அந்நகருக்குள் நுழைவதில்லை. வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்பவர்களும் பொய் சொல்பவர்களும் அந்நகருக்குள் பிரவேசிப்பதில்லை. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எவருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவோ அவர்கள் மட்டுமே அங்கு போகமுடியும்.
3 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் என் தூதனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்காகப் பாதையை ஆயத்தம் செய்வார். திடீரென்று அவர் தமது ஆலயத்துக்கு வருவார். அவரே நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஆண்டவர். அவரே நீங்கள் விரும்பும் புதிய உடன்படிக்கைக்கான தூதர். உண்மையில் அவர் வந்துக்கொண்டிருக்கிறார்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
2 “எவனொருவனும் அந்த நேரத்திற்காக தயார் செய்யமுடியாது. அவர் வரும்போது எவரொருவரும் அவருக்கு எதிரே நிற்க முடியாது. அவர் எரியும் நெருப்பைப் போன்றவர். அவர் ஜனங்கள் பொருட்களைச் சுத்தப்படுத்திட பயன்படுத்தும் சவுக்காரம் போன்றவர். 3 அவர் லேவியர்களைச் சுத்தமாக்குவார். அவர் நெருப்பினால் வெள்ளியைச் சுத்தமாக்குவதுபோன்று அவர்களைச் சுத்தமாக்குவார். அவர் அவர்களை சுத்தமான பொன்னையும், வெள்ளியையும் போன்று செய்வார். பிறகு அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சரியான வழியில் செய்வார்கள். 4 பிறகு கர்த்தர் யூதாவிலும் எருசலேமிலும் இருந்து வருகிற அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வர். இது கடந்த காலத்தில் உள்ளது போல் இருக்கும். இது வெகு காலத்திற்கு முன்னால் உள்ளதைப் போன்றிருக்கும். 5 பிறகு நான் உங்களிடம் வருவேன். நான் சரியானவற்றைச் செய்வேன். நான் ஜனங்கள் செய்த தீமைகளை குறித்து சொல்லுகிறவர் போன்று இருப்பேன். சிலர் தீய மந்திரங்களைச் செய்கிறார்கள். சிலர் விபச்சாரப் பாவத்தைச் செய்கிறார்கள். சிலர் பொய்யான வாக்குறுதிகளைச் செய்கின்றனர். சிலர் தமது வேலைக்காரர்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் தாம் வாக்குறுதியளித்ததுபோன்று பணம் கொடுப்பதில்லை. ஜனங்கள் விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் உதவுவதில்லை. ஜனங்கள் பரதேசிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்கள் என்னை மதிப்பதில்லை!” சர்வவல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
தேவனிடமிருந்து திருடுவது
6 “நானே கர்த்தர். நான் மாறமாட்டேன். நீங்கள் யாக்கோபுவின் குழந்தைகள். நீங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை. 7 ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. உங்கள் முற்பிதாக்களும் கூட என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். என்னிடம் திரும்பி வாருங்கள். நானும் உங்களிடம் திரும்பி வருவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றை சொன்னார்.
நீங்கள், “நாங்கள் எவ்வாறு திரும்பி வருவது?” என்று கேட்கிறீர்கள்.
8 “தேவனிடமிருந்து திருடுவதை நிறுத்துங்கள். ஜனங்கள் தேவனிடமிருந்து திருடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னிடமிருந்து திருடினீர்கள்!”
நீங்கள், “நாங்கள் உம்மிடமிருந்து எதைத் திருடினோம்?” என்று கேட்கிறீர்கள்.
“நீங்கள் உங்களது பொருட்களில் பத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சிறப்பான காணிக்கைகளையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை. 9 இந்த வழியில் உங்கள் நாடு முழுவதும் என்னிடமிருந்து திருடினீர்கள். எனவே உங்களுக்குத் தீயவை ஏற்படுகிறது.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “இந்தச் சோதனையை முயற்சிச் செய்து பார். உன்னிடமுள்ளவற்றில் பத்தில் ஒரு பங்கை என்னிடம் கொண்டு வா. அவற்றைக் கருவூலத்தில் போடு. என் வீட்டிற்கு உணவு கொண்டு வா. என்னைச் சோதனை செய். நீ அவற்றைச் செய்தால் பின்னர் நான் உண்மையாக உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்திலிருந்து மழை பெய்வது போன்று நல்லவை உன்னிடம் வரும். உனக்கு தேவைக்கு அதிகமாகவே பொருள் வரும். 11 நான் உங்கள் விளைச்சலை அழிக்கும் பூச்சிகளை அனுமதிக்கமாட்டேன். உங்கள் திராட்சைக்கொடிகள் எல்லாம் திராட்சைகளை விளையச்செய்யும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
12 “பிற நாடுகளிலுள்ள ஜனங்கள் உங்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். நீங்கள் உண்மையில் ஓர் அற்புதமான நாட்டைப் பெறுவீர்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
நியாயத்தீர்ப்புக்கான சிறப்பு நேரம்
13 கர்த்தர் “நீங்கள் என்னிடம் அற்பமானவற்றைப் பேசினீர்கள்” என்றார்.
ஆனால் நீங்கள், “நாங்கள் உம்மைப்பற்றி என்ன பேசினோம்?” என்று கேட்டீர்கள்.
14 நீங்கள், “கர்த்தரை தொழுதுகொள்வது பயனற்றது. கர்த்தர் எங்களிடம் சொன்னவற்றை நாங்கள் செய்தோம். ஆனால் நாங்கள் எந்த நன்மையும் பெறவில்லை. நாங்கள் எங்கள் பாவங்களுக்காக மரித்துப்போனவர்கள் வீட்டில் ஜனங்கள் அழுவது போல் கதறினோம். ஆனால் அது எங்களுக்கு உதவவில்லை என்று கூறினாய். 15 தற்பெருமையுடைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். தீயவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தேவனுடைய பொறுமையைச் சோதிக்க அவர்கள் தீயவற்றைச் செய்கிறார்கள். தேவன் அவர்களைத் தண்டிக்கிறதில்லை.”
16 தேவனை பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்கொருவர் பேசினார்கள். கர்த்தர் அவர்கள் பேசுவதைக் கேட்டார். அவருக்கு முன்பாக ஒரு புத்தகம் இருக்கிறது. அப்புத்தகத்தில் தேவனை பின்பற்றுகிறவர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் கர்த்தருடைய நாமத்தை மதிக்கின்றவர்கள்.
17 கர்த்தர், “அந்த ஜனங்கள் எனக்குரியவர்கள். நான் அவர்களிடம் கருணையோடு இருப்பேன். ஒருவன் தனக்குக் கீழ்ப்படிகிற குழந்தைகளிடம் கருணையோடு இருப்பான். அதே முறையில் நான், என்னைப் பின்பற்றுகிறவர்களுடன் கருணையோடு இருப்பேன். 18 நீங்கள் என்னிடம் திரும்ப வாருங்கள். நீங்கள் நல்லதுக்கும் தீயவற்றிற்கும் உள்ள வேறுபாட்டைக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் தேவனை பின்பற்றுகிறவனுக்கும், தேவனை பின்பற்றாதவனுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துக்கொள்வீர்கள்.
இயேசுவின் உயிர்ப்பு(A)
20 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் மகதலேனா மரியாள், இயேசுவின் சரீரம் இருந்த கல்லறைக்குச் சென்றாள். அது அப்பொழுதும் இருளாக இருந்தது. கல்லறை வாசலை மூடியிருந்த பெரிய கல் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள். 2 எனவே மரியாள் சீமோன் பேதுருவிடமும் இன்னொரு சீஷனிடமும் (இயேசு நேசித்தவன்) ஓடிச் சென்று “அவர்கள் கர்த்தரது சரீரத்தைக் கல்லறையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டனர். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள்.
3 உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள். 4 இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான். 5 அவன் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தான். துண்டுத்துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். ஆனால் உள்ளே அவன் போகவில்லை.
6 பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான். 7 அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8 பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான். 9 (இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்)
மகதலேனா மரியாளுக்குக் காட்சி(B)
10 பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள். 11 ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள். 12 வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள்.
13 அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.
“சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள். 14 அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.
15 இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.
மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.
16 இயேசு “மரியாளே” என்று அழைத்தார்.
மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ரபூனீ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்)
17 இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
18 மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.
சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி(C)
19 அன்று வாரத்தின் முதல்நாள். அன்று மாலையில் சீஷர்கள் கூடினர். கதவுகள் அடைக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் யூதர்களுக்குப் பயந்தனர். அப்பொழுது இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 20 அவர் இதனைச் சொன்ன பிறகு, தனது சீஷர்களிடம் தனது கைகளையும் விலாவையும் காட்டினார். அவர்கள் கர்த்தரைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தனர்.
21 பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22 இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 நீங்கள் மக்களது பாவங்களை மன்னித்தால் அவை மன்னிக்கப்படும். நீங்கள் மக்களது பாவங்களை மன்னிக்காவிட்டால் அவை மன்னிக்கப்படாது” என்று கூறினார்.
தோமாவுக்கு காட்சி
24 இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன். 25 ஏனைய சீஷர்கள் “நாங்கள் ஆண்டவரைப் பார்த்தோம்” என்று தோமாவிடம் சொன்னார்கள். அதற்கு தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான்.
26 ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 27 பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார்.
28 அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான்.
29 இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.
இப்புத்தகத்தை எழுதினதின் நோக்கம்
30 இயேசு அவரது சீஷர்களுக்கு முன்பு அநேக வேறு அற்புதங்களைச் செய்து காட்டினார். அவை இந்நூலில் எழுதப்படவில்லை. 31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்றும் நீங்கள் நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
2008 by World Bible Translation Center