M’Cheyne Bible Reading Plan
யூதாவின் அரசனான யோசபாத்
17 யூதாவின் புதிய அரசனாக ஆசாவின் இடத்திலே அவனது மகனான யோசபாத் ஆனான். இவன் யூதாவை பலமுள்ளதாக ஆக்கினான். இஸ்ரவேலை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு அவன் யூதாவை பலப்படுத்தினான். 2 அவன் யூதாவின் அனைத்து நகரங்களிலும் படை வீரர்கள் அடங்கிய குழுக்களை நிறுத்தினான். அந்நகரங்கள் எல்லாம் யூதாவிலும், அவன் தந்தையால் கைப்பற்றப்பட்ட எப்பிராயீம் நகரங்களிலும் யோசபாத் கோட்டைகளைக் கட்டினான்.
3 கர்த்தர் யோசாபாத்தோடு இருந்தார். ஏனென்றால் இவனது சிறுவயதில் இவன் தன் முற்பிதாவான தாவீதைப்போன்று நற்செயல்களைச் செய்தான். இவன் பாகால் விக்கிரகங்களைப் பின்பற்றவில்லை. 4 யோசபாத் தன் முற்பிதாக்களைப்போன்றே தேவனைப் பின்பற்றினான். அவன் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான். இவன் இஸ்ரவேல் ஜனங்களைப்போன்று வாழ்க்கை நடத்தவில்லை. 5 யோசபாத்தை யூதாவின் பலம் பொருந்திய அரசனாக கர்த்தர் ஆக்கினார். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொண்டு வந்தனர். இதனால் யோசபாத் பெருஞ் செல்வமும் பெருமையும் அடைந்தான். 6 யோசபாத்தின் மனம் கர்த்தருடைய வழியில் மகிழ்ச்சியைக் கண்டது. அவன் யூதா நாட்டில் மேடைகளை அகற்றினான். விக்கிரகங்களையும் அழித்தான்.
7 யோசபாத் தன் தலைவர்களை யூத நகரங்களில் கற்பிக்கச் செய்தான். இவை இவனது மூன்றாவது ஆட்சியாண்டில் நடந்தது. பென்னாயில், ஒபதியா, சகரியா, நெதனெயேல், மிகாயா, ஆகியோர் இவனால் அனுப்பப்பட்ட தலைவர்கள். 8 இவர்களோடு லேவியர்களையும் அனுப்பினான். லேவியர்களில் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா ஆகியோர் இருந்தனர். இவர்களோடு ஆசாரியர்களில் எலிஷாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பினான். 9 இவர்கள் யூதாவிலுள்ள ஜனங்களுக்குப் போதித்தனர். அவர்களிடம் 'கர்த்தருடைய சட்டபுத்தகம்' இருந்தது. அவர்கள் யூதாவின் அனைத்து நகரங்களுக்கும் சென்று அதனைப் போதித்தனர்.
10 யூதாவின் அருகிலுள்ள மற்ற நாட்டினரும் கர்த்தருக்குப் பயந்தனர். எனவே அவர்கள் யோசபாத்துக்கு எதிராகப் போரைத் தொடங்காமல் இருந்தனர். 11 சில பெலிஸ்திய ஜனங்களும் யோசபாத்துக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் யோசபாத்துக்கு வெள்ளியையும் கொண்டுவந்தார்கள். ஏனென்றால், அவன் ஒரு வலிமைமிக்க அரசனென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சில அரபியர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். அவர்கள் 7,700 ஆட்டுக் கடாக்களையும், 7,700 வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுத்தனர்.
12 யோசபாத் மிக பலமுள்ளவனாக ஆனான். அவன் கோட்டைகளையும், பொருட்கள் வைப்பதற்கான கருவூலங்களையும் யூதாவில் கட்டினான். 13 யூதா நகரங்களில் பொருட்களை விநியோகம் செய்தான். எருசலேமில் யோசபாத் பயிற்சி மிக்க படைவீரர்களை வைத்திருந்தான். 14 இவ்வீரர்கள் தம் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இதுதான் அவர்கள் விபரம்:
யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைவனாக இருந்தான். 3,00,000 வீரர்களுக்கு அவன் தளபதியாக இருந்தான்.
15 யோகனான் எனும் தளபதியிடம் 2,80,000 வீரர்கள் இருந்தனர்.
16 அமசியா எனும் தளபதியிடம் 2,00,000 வீரர்கள் இருந்தனர். அமசியா சிக்ரியின் மகன். அமசியா, தன்னை கர்த்தருடைய சேவையில் ஈடுபடுத்துவதில் மகிழ்ச்சியடைந்தான்.
17 பென்யமீனின் கோத்திரத்தில் இருந்து பின்வரும் சேனாதிபதிகள் இருந்தனர். எலியாதாவிடம் 2,00,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் வில், அம்பு, கேடயம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். எலியாதா மிகப் பலம் பொருந்திய வீரன்.
18 யோசபாத்திடம் 1,80,000 வீரர்கள் போருக்குத் தயாரானவர்களாக இருந்தனர்.
19 அனைவரும் யோசபாத் அரசனுக்குச் சேவைச் செய்துவந்தனர். அரசனுக்கு யூத நாட்டு கோட்டைகளில் பணிசெய்ய வேறு வீரர்களும் இருந்தனர்.
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைக்கிறார்
6 பின்பு ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைப்பதைக் கண்டேன். அப்போது நான்கு உயிருள்ள ஜீவன்களுள் ஒன்று இடிபோன்ற குரலில் பேசத்தொடங்குவதைக் கண்டேன். “வா!” என்று சொன்னது அக்குரல். 2 நான் பார்த்தபோது எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை இருப்பதைப் பார்த்தேன். அக்குதிரையில் சவாரி செய்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் பகைவர்களை வீழ்த்துவதற்காகச் சென்றான். வெல்வதற்காகவே புறப்பட்டுப் போனான்.
3 ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையை உடைத்தார். அப்போது இரண்டாவது உயிருள்ள ஜீவன் “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். 4 பிறகு இன்னொரு குதிரை வெளியே வந்தது. அது தீ போன்ற சிவப்பு வண்ணம் கொண்டது. அதன்மேல் இருந்தவனுக்கு உலகத்தில் உள்ள சமாதானத்தை எடுத்துவிடவும், பூமியில் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்குமான அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவனுக்கு ஒரு பெரிய வாளும் தரப்பட்டது.
5 ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையை உடைத்தார். அப்போது மூன்றாவது உயிருள்ள ஜீவன், “வா!” என்று என்னிடம் கூறியதைக் கேட்டேன். நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரை வெளியே வந்தது. அதன்மேல் இருந்தவன் தராசு ஒன்றைக் கையில் வைத்திருந்தான். 6 அப்பொழுது ஒருவகை சப்தத்தைக் கேட்டேன். அச்சப்தம் நான்கு உயிருள்ள ஜீவன்களின் மத்தியிலிருந்தே வந்தது. “ஒரு நாள் கூலியாக ஒரு படி கோதுமை. ஒரு நாள் கூலியாக மூன்று படி வாற்கோதுமை, எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் வீணாக்காதே” என்று கூறிற்று.
7 ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது. 8 நான் பார்த்தபோது மங்கிய நிறமுள்ள ஒரு குதிரை வந்தது. இக்குதிரையை ஓட்டி வந்தவனுக்கு “மரணம்” என்று பெயர். மேலும் அவனுக்குப் பின்னால் “பாதாளம்” நெருக்கமாய் வந்துகொண்டிருந்தது. உலகில் உள்ள கால் பங்கு மக்களின்மேல் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. வாளாலும், பஞ்சத்தாலும் நோயாலும் காட்டு மிருகங்களாலும் மக்களைக் கொல்லும் அதிகாரத்தை அவன் பெற்றான்.
9 ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையையும் உடைத்தார். அப்பொழுது பலிபீடத்தின் கீழே தம் விசுவாசத்திற்காகவும், சாட்சி சொன்னதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களை நான் பார்த்தேன். 10 அந்த ஆன்மாக்கள் உரத்த குரலில் சத்தமிட்டன. “பரிசுத்தமும் உண்மையும் உள்ள தேவனே! எங்களைக் கொன்றதற்காக உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களை நியாயம் தீர்த்துத் தண்டிக்க எவ்வளவு காலம் ஆகும்?” என்றன. 11 பிறகு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன. பிறகு சிறிது நேரத்திற்குக் காத்திருக்கும்படி அவற்றிற்குச் சொல்லப்பட்டது. கொல்லப்படப்போகிற அவர்களைப்போன்ற கிறிஸ்துவின் சேவையிலுள்ள எல்லா சக ஊழியர்களும் உண்மையில் கொல்லப்படுவதுவரை அவை காத்திருக்க வேண்டும்.
12 ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையை உடைப்பதைக் கவனித்தேன். அப்போது பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. சூரியன் இருண்டது. துக்கம் கொண்டாடுகிறவன் அணிகிற ஆடைகள்போல அது கறுத்தது. நிலவு இரத்தம்போல சிவப்பானது. 13 வானத்து நட்சத்திரங்கள், புயல் காலத்தில் அத்திமரத்திலிருந்து அத்திப் பழங்கள் உதிருவது போன்று பூமியில் உதிர்ந்தன. 14 வானம் இரண்டாகப் பிளந்தது. அது தோல் சுருளைப்போல சுருண்டுகொண்டது! மலைகளும், தீவுகளும் தங்களது இடத்தை விட்டு நகர்ந்தன.
15 மக்கள் குகைகளிலும், மலைப்புறங்களிலும் ஒளிந்துகொண்டனர். அவர்களுடன் அரசர்களும், ஆள்வோர்களும், அதிகாரிகளும், செல்வந்தர்களும் இருந்தனர். அடிமைகளும் சுதந்தரமானவர்களும் அவர்களோடு ஒளிந்துகொண்டனர். 16 மக்கள் மலைகளையும் பாறைகளையும் பார்த்து “எங்கள் மேல் விழுங்கள். சிம்மாசனத்தில் இருப்பவரின் பார்வையில் இருந்தும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் எங்களை மறைத்துவிடுங்கள். 17 அவர்கள் தம் கோபத்தைக் காட்டுகிற தருணமாகிய மாபெரும் நாள் வந்துவிட்டது. அதனை எதிர்த்து ஒருவராலும் நிற்கமுடியாது.” என்று கூறினார்கள்.
எருசலேமின் அளவுகள்
2 பிறகு நான் பார்த்தேன், நான் ஒரு மனிதன், அளவு கயிற்றினை எடுத்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன். 2 நான் அவனிடம், “எங்கே போய்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். அவன் என்னிடம், “நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப் பார்க்கப் போகிறேன்” என்றான்.
3 பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் விலகினான். இன்னொரு தூதன் அவனோடு பேசப் போனான். 4 அவன் அவனிடம், “ஓடிப்போய் அந்த இளைஞனிடம் எருசலேமானது அளக்க முடியாத வகையில் பெரிதாக உள்ளது என்று சொல். அவனிடம் இவற்றைச் சொல்!
“‘எருசலேம் சுவர்களில்லாத நகரமாகும்.
ஏனென்றால் அங்கே ஏராளமான ஜனங்களும் மிருகங்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன.’
5 கர்த்தர் கூறுகிறார்:
‘நான் அவளைக் காப்பாற்றுவதற்கு அவளைச் சுற்றி நெருப்புச் சுவராக இருப்பேன்.
அந்நகரத்திற்கு மகிமையைக் கொண்டுவர நான் அங்கே குடியிருப்பேன்’” என்றான்.
தேவன் தமது ஜனங்களை வீட்டிற்கு அழைக்கின்றார்
கர்த்தர் கூறுகிறார்:
6 “சீக்கிரம்! வடக்கே உள்ள நிலத்திலிருந்து ஓடு.
ஆம், நான் உங்கள் ஜனங்களை எல்லாத் திசைகளுக்கும் சிதறடித்தேன் என்பது உண்மை.
7 சீயோனிலிருந்து உனது ஜனங்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது தப்பி, அந்த நகரத்திலிருந்து வெளியே ஓடுங்கள்!”
8 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
உன்னிடமிருந்து திருடிய ஜனங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்.
உங்களைக் கனப்படுத்தும்படி என்னை அனுப்பினார். ஏனென்றால், யார் உன்னைக் காயப்படுத்தினாலும், அது தேவனுடைய கண்மணியைக் காயப்படுத்துவது போன்றதாகும்.
9 பாபிலோனியர், என் ஜனங்களை அடிமைப்படுத்தினார்கள்.
ஆனால் நான் அவர்களைப் பலமாக அடிப்பேன்,
அவர்கள் என் ஜனங்களின் அடிமைகளாவார்கள்,
பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை அறிவார்கள்.
10 கர்த்தர் கூறுகிறார்:
“சீயோனே, மகிழ்ச்சியோடு இரு.
ஏனென்றால், நான் வந்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்கள் நகரத்தில் வாழ்வேன்.
11 அந்த நேரத்தில், பல நாடுகளிலிருந்து ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அவர்கள் எனது ஜனங்களாவார்கள்.
நான் உங்கள் நகரில் வாழ்வேன்”
பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
12 கர்த்தர் எருசலேமைத் தனது சிறப்புக்குரிய நகரமாகத் தேர்ந்தெடுப்பார்.
யூதா பரிசுத்தமான நாடாக, அவரது பங்காகச் சேரும்.
13 ஒவ்வொருவரும் அமைதியாக இருப்பார்கள்.
கர்த்தர் அவரது பரிசுத்தமான வீட்டை விட்டு வெளியே வருவார்.
38 வருட நோயாளி குணமடைதல்
5 பிறகு, இயேசு எருசலேமுக்கு யூதர்களின் ஒரு பண்டிகையின்போது சென்றார். 2 அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா [a] என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது. 3 குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நோயாளிகள் பலர் படுத்துக்கிடந்தனர். [b] 4 அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள். 5 அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். 6 இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
7 “ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான்.
8 பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். 9 உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். 10 ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர்.
11 ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.
12 “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர்.
13 ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.
14 பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார்.
15 பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான்.
16 இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். 17 ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.
18 இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர்.
தேவ அதிகாரம் பெற்ற இயேசு
19 ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். 20 பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். 21 பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார்.
22 “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். 23 தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்.
24 “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான். 25 உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். 26 பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். 27 அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார்.
28 “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். 29 அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.
30 “நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன்.
யூதர்களிடம் இயேசு பேசுதல்
31 “நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 32 ஆனால் என்னைக்குறித்து மக்களிடம் சொல்லுகிற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச் சொல்வது உண்மையென்று எனக்கும் தெரியும்.
33 “நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான். 34 மக்களுக்கு என்னைப்பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன். 35 யோவான் எரிந்து ஒளியைக் கொடுக்கிற ஒரு விளக்கைப்போன்றிருந்தான். நீங்கள் அவனது ஒளியைப் பெற்று சில காலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.
36 “ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன. 37 என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை. 38 பிதாவின் அறிவுரை உங்களில் வாழ்வதுமில்லை. ஏனென்றால் பிதா அனுப்பிய ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 39 நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. 40 ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.
41 “நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை. 42 ஆனால் நான் உங்களை அறிவேன். தேவனுடைய அன்பு உங்களில் இல்லை என்பதையும் அறிவேன். 43 நான் என் பிதாவிடமிருந்து வந்திருக்கிறேன். நான் அவருக்காகப் பேசுகிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். வேறொருவன் வந்து அவன் தனக்காகவே பேசினால் அவனை ஏற்றுக்கொள்கிறீர்கள். 44 நீங்கள் உங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் விருப்பம்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பாராட்டைப் பெற முயற்சி செய்வதில்லை. ஆகையால் நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? 45 நான் பிதாவின் முன்னால் நின்று உங்களைக் குற்றம் சொல்வேன் என்று நினைக்கவேண்டாம். மோசேதான் உங்கள் குறைகளைச் சொல்கிறவன். மோசே மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். 46 நீங்கள் உண்மையிலேயே மோசேயை நம்பினீர்களானால் என்னிலும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான். 47 ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.
2008 by World Bible Translation Center