Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 21

21 யோசபாத் மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீதின் நகரிலே அடக்கம் செய்யப்பட்டான். யோராம் யோசபாத்தின் இடத்தில் புதிய அரசன் ஆனான். யோராம் யோசபாத்தின் மகன். அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா எனும் சகோதரர்கள் யோராமிற்கு இருந்தனர். இவர்கள் யோசபாத்தின் மகன்கள். யோசபாத் யூதாவின் அரசன் ஆவான். யோசபாத் தன் மகன்களுக்கு வெள்ளி, பொன், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்தான். பலமான கோட்டைகளையும் அவர்களின் பொறுப்பில் விட்டான். ஆனால் அவன் தனது ஆட்சியை யோராமிடம் கொடுத்தான். ஏனென்றால் அவன்தான் மூத்த மகன்.

யூதா அரசனான யோராம்

யோராம் தனது தந்தையின் அரசை ஏற்றுக் கொண்டதும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். பிறகு வாளால் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்றான். இஸ்ரவேல் தலைவர்கள் சிலரையும் இவன் கொன்றான். யோராம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 32 வயது. அவன் எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். இஸ்ரவேல் அரசர்களின் வழியிலேயே அவனும் ஆண்டான். ஆகாபின் குடும்பத்தைப் போன்றே அவனும் வாழ்ந்தான். ஏனென்றால் அவன் ஆகாபின் மகளை மணந்திருந்தான். கர்த்தருடைய பார்வையில் யோராம் தீயவற்றைச் செய்தான். ஆனால் கர்த்தர் தாவீதின் வம்சத்தை அழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் கர்த்தர் தாவீதோடு ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருந்தார். தாவீதிற்கும் அவனது குடும்பத்திற்கும் என்றென்றைக்கும் விளக்கேற்றி வைப்பதாகக் கர்த்தர் வாக்களித்திருந்தார்.

யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்த ஏதோம் தனியாகப் பிரிந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு அரசனையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். எனவே யோராம் தனது அனைத்து தளபதிகளோடும் இரதங்களோடும் ஏதோமிற்குச் சென்றான். ஏதோமியப் படை யோராமையும், அவனது இரதப்படையையும் சூழ்ந்துக்கொண்டனர். ஆனால் இரவில் யோராம் அவர்களை முறியடித்தான். 10 அந்த நேரத்திலிருந்து இன்றுவரை ஏதோம் நாடு யூதாவிற்கு எதிராகக் கலகம் செய்தவாறு உள்ளது. லீப்னா ஊரினைச் சேர்ந்தவர்களும் யோராமுக்கு எதிராகத் திரும்பினார்கள். யோராம் தேவனாகிய கர்த்தரைவிட்டு நீங்கியதால் இது நடந்தது. யோராமின் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவன் அவரே. 11 யோராமும் யூதாவின் மலைப்பகுதிகளில் மேடைகளை அமைத்தான். எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புவதை செய்யாதவாறு யோராம் ஆண்டான். அவன் யூதாவின் ஜனங்களைக் கர்த்தரைவிட்டு விலக்கி வழிநடத்திச் சென்றான்.

12 எலியா தீர்க்கதரிசியிடமிருந்து யோராம் ஒரு செய்தியைப் பெற்றான். அந்தச் செய்தி சொன்னதாவது:

“தேவனாகிய கர்த்தர் சொன்னது இது தான். உனது தந்தையான தாவீது பின்பற்றிய தேவன் இவர்தான். ‘யோராம்! நீ உனது தந்தை யோசபாத் வாழ்ந்த வழியில் வாழவில்லை. யூதாவின் அரசனான ஆசா வாழ்ந்த வழியிலும் நீ வாழவில்லை. 13 நீயோ இஸ்ரவேலின் அரசர்கள் வாழ்ந்ததுபோன்று வாழ்ந்து வருகிறாய். யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புகிறதைச் செய்யாதிருக்க செய்துள்ளாய். ஆகாபும் அவன் குடும்பத்தினரும் செய்தது இதுவே. அவர்கள் தேவனுக்கு நன்றியுடையவர்களாக இல்லை. நீ உன்னுடைய சகோதரர்களைக் கொன்றிருக்கிறாய். உனது சகோதரர்கள் உன்னைவிட நல்லவர்கள். 14 எனவே, இப்போது கர்த்தர் விரைவில் உனது ஜனங்களை அதிக தண்டனை கொடுத்துத் தண்டிப்பார். உனது குழந்தைகள், மனைவிகள், உனக்குரிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் கர்த்தர் தண்டிப்பார். 15 நீ கொடிய குடல் நோயால் அவதிப்படுவாய். இது நாளுக்கு நாள் மிகுதியாகும். பிறகு உனது கொடூரமான நோயால் உனது குடல் வெளியில் வரும்’ என்று கர்த்தர் கூறுகிறார்.”

16 கர்த்தர் பெலிஸ்திய ஜனங்களையும், எத்தியோப்பியர்களுக்கு அருகில் வசித்த ஆராப் ஜனங்களையும் யோராமின் மீது கோபங்கொள்ளுமாறு விளைவித்தார். 17 அவர்கள் யூதா நாட்டைத் தாக்கினார்கள். அரசனது வீட்டிற்குச் சொந்தமான அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். யோராமின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கைப்பற்றினர். யோராமின் இளைய மகன் மட்டும் விடப்பட்டான். அவனது பெயர் யோவாகாஸ்.

18 இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. 19 பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை. 20 யோராம் அரசனானபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் அரசர்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.

வெளி 9

ஐந்தாம் எக்காளம் முதலாவது ஆபத்தை ஆரம்பித்து வைக்கிறது

ஐந்தாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது ஒரு நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்ததைக் கண்டேன். அதற்குப் பாதாள உலகத்துக்குச் செல்லும் வழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. அந்த நட்சத்திரம் பாதாள உலகத்தின் வழியைத் திறந்தது. பெரிய சூளையில் இருந்து புகை வருவது போன்று பாதாளத்தில் இருந்து புகை வந்தது. அப்புகையால் சூரியனும் ஆகாயமும் இருண்டது.

அப்புகையில் இருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் பறந்து வந்தன. அவற்றுக்குத் தேளுக்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. பூமியில் உள்ள புல்லையோ செடி கொடிகளையோ, மரத்தையோ சேதமாக்கக்கூடாது என்று வெட்டுக்கிளிகளுக்கு ஆணை இருந்தது. தேவனுடைய முத்திரையைத் தம் நெற்றியில் தாங்காத மனிதர்களை மாத்திரம் சேதப்படுத்த அவ்வெட்டுக் கிளிகளுக்கு உத்தரவு இருந்தது. மக்களுக்கு ஐந்து மாதங்கள் தொந்தரவு தருமாறு வெட்டுக்கிளிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு மனிதரைக் கொல்லும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்பட்ட வலியானது தேளால் கொட்டப்பட்ட மக்கள் பெறும் வலிபோன்றிருந்தது. அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப்போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும்.

வெட்டுக்கிளிகள், போருக்குத் தயார் செய்யப்பட்ட குதிரைகளைப்போல இருந்தன. அவற்றின் தலைகளின் மேல் பொன்மயமான கிரீடங்கள் போன்றவை இருந்தன. அவை மனித முகங்களையும், பெண்களின் கூந்தலைப்போல நீண்ட தலை மயிரையும், சிங்கத்தினுடையதைப் போன்ற பற்களையும் கொண்டிருந்தன. அவற்றின் மார்புகள் இரும்புக் கவசங்களைப்போல் இருந்தன. அவற்றின் சிறகுகளிலிருந்து புறப்படும் ஓசையானது யுத்தகளத்தில் நுழையும் குதிரைகள் பூட்டிய ரதங்களின் இரைச்சலைப்போல இருந்தது. 10 அந்த வெட்டுக்கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது. 11 பாதாளத்தின் தூதனை அவை அரசனாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன் [a] என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது.

12 முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று. ஆனாலும் எச்சரிக்கையாயிருங்கள். இன்னும் இரண்டு ஆபத்துக்கள் வர இருக்கின்றன.

ஆறாவது எக்காள தொனி

13 ஆறாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன். 14 பிறகு அச்சத்தம் அந்த ஆறாம் தூதனிடம் “ஐபிராத் என்னும் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொல்லக் கேட்டேன். 15 எனவே, அந்த ஆண்டுக்கும், அந்த மாதத்துக்கும், நாளுக்கும், மணிக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் விடுவிக்கப்பட்டார்கள். உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 16 அவர்களது படையில் குதிரைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் கேள்விப்பட்டேன். அவை இருபது கோடி ஆகும்.

17 குதிரைகளையும் அதன்மேல் வீற்றிருந்தவர்களையும் நான் எனது தரிசனத்தில் கண்டேன். அவர்கள் நெருப்பைப்போல சிவந்த நிறமும், நீல நிறமும், கந்தகம் போன்ற மஞ்சள் நிறமுமான மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். அக்குதிரைகளின் தலைகள் சிங்கத்தின் தலைகளைப் போன்று விளங்கின. அக்குதிரைகளின் வாயில் இருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளி வந்தன. 18 குதிரையின் வாயில் இருந்து வெளி வந்த புகையாலும் நெருப்பாலும், கந்தகத்தாலும் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டார்கள். 19 அக்குதிரைகளின் பலமானது அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புகளைப் போன்று இருந்தது. அவற்றில் மனிதரைக் கடிக்கும் தலைகளும் இருந்தன.

20 பிறகு எஞ்சிய மனிதர்கள் கைகளால் அவர்கள் செய்த விக்கிரகங்கள் பற்றி தம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. பொன் வெள்ளி, செம்பு, கல், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ செய்யாத பேய்களையும் விக்கிரகங்களையும் வழிபடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. (அவ்வுருவங்கள் பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாதவைகள்). 21 இம்மக்கள் தம் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொள்ளவில்லை. இவர்கள் மற்றவர்களைக் கொல்லும் வழக்கத்தையும் விடவில்லை. தம் தீயமந்திரங்கள், பாலியல் பாவங்கள், திருட்டு வேலைகள் போன்றவற்றையும் விடவில்லை.

சகரியா 5

பறக்கும் ஓலைச்சுருள்

நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன். தூதன் என்னிடம், “என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான்.

“நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்க்கிறேன். அந்த புத்தகச்சுருள் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது” என்று நான் சொன்னேன்.

பின்னர் தூதன் என்னிடம் சொன்னான்: “அந்த புத்தகச்சுருளில் சாபம் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகச்சுருளின் ஒரு பக்கத்தில் திருடிய ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. புத்தகச்சுருளின் இன்னொரு பக்கத்தில் வாக்குறுதி அளிக்கும்போது பொய் சொன்ன ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: நான் இந்தப் புத்தகச்சுருளை திருடர்களின் வீடுகளுக்கும் கர்த்தருடைய நாமத்தால் பொய் சத்தியம் செய்தவர்களின் வீடுகளுக்கும் அனுப்புவேன். அந்தப் புத்தகச்சுருள் அங்கே தங்கி அது அவ்வீடுகளை அழிக்கும். அவ்வீட்டிலுள்ள கற்களும் மரத்தூண்களும் அழிக்கப்படும்.”

பெண்ணும் வாளியும்

பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் வெளியே போனான். அவன் என்னிடம், “பார்! என்ன வருகிறதென்று காண்கிறாய்?” என்று கேட்டான்.

நான் “இது என்னவென்று அறியேன்” என சொன்னேன்.

அவன், “இது ஒரு அளவு பார்க்கும் வாளி” என்று சொன்னான். அதோடு அவன், “அந்த வாளி இந்த நாட்டிலுள்ள ஜனங்களின் பாவங்களை அளக்கும் வாளி” என்று சொன்னான்.

வாளியை மூடியிருந்த ஈயத்தினாலான மூடி அகற்றப்பட்டது. வாளிக்குள் ஒரு பெண் உட்கார்ந்துகொண்டிருந்தாள். தூதன், “இப்பெண் பாவத்தின் பிரதிநிதியாய் இருக்கிறாள்” என்றான். பின்னர் தூதன் அப்பெண்ணை வாளிக்குள் தள்ளி, கனத்த மூடியினால் அதை மூடிப்போட்டான். இது பாவங்கள் மிகக் கனமானவை என்பதைக் காட்டும். பின்னர் நான் ஏறிட்டுப்பார்த்தேன். நான் இரண்டு பெண்கள் நாரையைப் போன்ற சிறகுகளுடன் இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் பறந்து போனார்கள். சிறகுகளிலுள்ள காற்றால் வாளியை தூக்கிப் போயினர். அவர்கள் வாளியை தூக்கிக் கொண்டு காற்றில் பறந்தனர். 10 பின்னர் நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “அவர்கள் வாளியைத் தூக்கிக் கொண்டு எங்கே போகிறார்கள்?” என்றேன்.

11 தூதன் என்னிடம், “அவர்கள் சிநெயாரிலே அதற்கு ஒரு வீட்டைக்கட்டப் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டைக் கட்டிய பிறகு அந்த வாளியை அங்கே வைப்பார்கள்” என்றான்.

யோவான் 8

இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார். மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார்.

வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள். மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். 10 இயேசு அவளை ஏறிட்டுப்பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார்.

11 அதற்கு அவள், “ஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள்.

பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதே” என்றார்.

இயேசுவே உலகத்தின் ஒளி

12 மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்றார்.

13 ஆனால் பரிசேயர்கள் இயேசுவிடம், “உன்னைக்குறித்து நீ பேசும்போது நீ சொல்வதை உண்மையென்று நீ மாத்திரமே கூறுகிறாய். ஆகையால் நீ சொல்லுகின்றவற்றை நாங்கள் ஒத்துக் கொள்ளமுடியாது” என்றனர்.

14 அதற்கு இயேசு, “ஆம், என்னைப்பற்றி நானே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. 15 சாதாரணமாக ஒருவனைப் பார்த்து கணிக்கிற விதத்திலேயே நீங்கள் என்னைப்பற்றி கணிக்கிறீர்கள். நான் எவரைப்பற்றியும் கணிப்பதில்லை. 16 ஆனால் நான் கணிக்கும்போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார். 17 இரண்டு சாட்சிகள் ஒரே உண்மையைச் சொன்னால் உங்கள் சட்டம் உண்மைதான் என்று ஏற்றுக்கொள்கிறது. 18 நானும் என்னைப்பற்றி சொல்லுகிற ஒரு சாட்சி, அத்துடன் என்னை அனுப்பிய என் பிதாவும் எனது இன்னுமொரு சாட்சி” என்றார்.

19 மக்கள் அவரிடம் “உன் பிதா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். “நீங்கள் என்னைப் பற்றியும் என் பிதாவைப்பற்றியும் அறியமாட்டீர்கள். ஆனால் நீங்கள் என்னை அறிந்துகொண்டால் என் பிதாவையும் அறிந்துகொள்வீர்கள்” என்று பதிலுரைத்தார். 20 இயேசு தேவாலயத்தில் உபதேசம் செய்யும்பொழுது இவற்றைச் சொன்னார். எல்லோரும் பணம் செலுத்துகிற இடத்தில் இயேசு இருந்தார். ஆனால் எவரும் அவரைக் கைதுசெய்யவில்லை. இயேசுவிற்கு அந்த வேளை இன்னும் வரவில்லை.

யூதர்களின் அறியாமை

21 மீண்டும் இயேசு மக்களிடம், “நான் உங்களை விட்டுப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களோடு சாவீர்கள். நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது” என்றார்.

22 எனவே யூதர்கள் தங்களுக்குள், “இயேசு தன்னைத்தானே கொன்றுகொள்வாரா? அதனால்தான் நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது என்று கூறினாரா?” என்று கேட்டுக்கொண்டனர்.

23 அந்த யூதர்களைப் பார்த்து இயேசு, “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். ஆனால் நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்துக்கு உரியவர்கள். ஆனால் நான் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன். 24 நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரிப்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆம். நானே [a] அவர் என்பதை நம்பாவிட்டால் உங்கள் பாவங்களோடேயே நீங்கள் மரணமடைவீர்கள்.”

25 அதற்கு யூதர்கள், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள்.

இயேசுவோ அவர்களிடம், “நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லியவர்தான். 26 உங்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் நிறைய செய்திகள் உள்ளன. நான் உங்களை நியாயம் தீர்க்கவும் முடியும். என்னை அனுப்பினவரிடமிருந்து கேட்டவற்றையே நான் மக்களுக்குச் சொல்கிறேன். அவர் உண்மையைப் பேசுகிறவர்” என்றார்.

27 இயேசு யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று யூதர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இயேசு அவர்களிடம் பிதாவைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். 28 எனவே இயேசு மக்களிடம், “நீங்கள் மனித குமாரனைக் கொல்லும்போது நான்தான் என்று அறிந்துகொள்வீர்கள். அத்துடன் நான் இதுவரை செய்த செயல்களை என் சொந்த அதிகாரத்தில் செய்யவில்லை என்பதையும் அறிவீர்கள். பிதா எனக்குச் சொன்னவற்றையே நான் உங்களுக்குச் சொன்னேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். 29 என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானவற்றையே நான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்றார். 30 இவ்வாறு இயேசு சொல்லிக்கொண்டிருந்தபோது ஏராளமான மக்கள் அவரிடம் விசுவாசம் வைத்தனர்.

பாவத்திலிருந்து விடுதலை

31 இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள். 32 பின்னர் நீங்கள் உண்மையை அறிந்துகொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்” என்றார்.

33 “நாங்கள் ஆபிரகாமின் மக்கள். நாங்கள் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. ஆகவே நாங்கள் விடுதலை பெறுவோம் என்று ஏன் சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.

34 அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன். 35 ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார். 36 எனவே குமாரன் உங்களை விடுதலை செய்தால் நீங்கள் உண்மையான விடுதலையைப் பெறுவீர்கள். 37 நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் என் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 38 என் பிதா எனக்குக் காட்டியவற்றையே நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் பிதா உங்களுக்குச் சொன்னபடியே செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

39 “எங்கள் பிதா ஆபிரகாம்தான்” என்றனர் யூதர்கள். இயேசு அவர்களுக்கு விடையாக “நீங்கள் உண்மையிலேயே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால் அவர் செய்தவற்றையே நீங்களும் செய்ய வேண்டும். 40 நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இதுபோல் எதுவும் செய்யவில்லை. 41 ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்” என்றார்.

ஆனால் யூதர்கள், “எங்கள் பிதா யாரென்று தெரிந்துகொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே” என்றனர்.

42 இயேசு அவர்களிடம், “தேவன்தான் உங்களது உண்மையான பிதா என்றால் நீங்கள் என்மீது அன்பு செலுத்தியிருப்பீர்கள். நான் தேவனிடமிருந்து வந்தேன். இப்பொழுது இங்கே இருக்கிறேன். நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. தேவன் என்னை அனுப்பினார். 43 நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 44 பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்யவிரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.

45 “நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை. 46 உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்? 47 தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றார்.

இயேசுவும்-ஆபிரகாமும்

48 யூதர்கள் இயேசுவிடம், “நாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே?” என்று கேட்டனர்.

49 “என்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை. 50 நான் எனக்கு மகிமையைச் சேர்த்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கவில்லை. இந்த மகிமைக்குரியவர் ஒருவர் இருக்கிறார். அவரே நீதிபதி. 51 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவனொருவன் என் உபதேசத்துக்கு கீழ்ப்படிகிறானோ அவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை” என்றார் இயேசு.

52 யூதர்களோ இயேசுவிடம், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்பது இப்பொழுது உறுதியாயிற்று. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும்கூட இறந்துபோய்விட்டார்கள். ஆனால் நீயோ, ‘என் உபதேசத்துக்குக் கீழ்ப்படிகிறவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை’ என்று கூறுகிறாய். 53 எங்கள் பிதா ஆபிரகாமைவிடப் பெரியவன் என்று நீ உன்னை நினைத்துக்கொள்கிறாயா? ஆபிரகாம் இறந்துபோனார். தீர்க்கதரிசிகளும் இறந்துபோயினர். உன்னை நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டனர்.

54 இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். 55 ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். 56 உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்” என்றார்.

57 யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே!” என்று கேட்டனர்.

58 “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. 59 இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர் மீதுக் கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து அந்த தேவாலயத்தை விட்டு விலகிப்போனார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center