M’Cheyne Bible Reading Plan
யூதாவின் அரசனான மனாசே
33 மனாசே யூதாவின் அரசனானபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். 2 கர்த்தர் தவறென்று சொன்னவற்றையே மனாசே செய்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னதாக கர்த்தர் கட்டாயமாக வெளியேற்றிய மற்ற தேசத்தவர்களின் பயங்கரமானதும், பாவமானதுமான வழிகளையே அவன் பின்பற்றினான். 3 மனாசே மீண்டும் தன் தந்தை உடைத்தெறிந்த மேடைகளைக் கட்டினான். பாகால் தெய்வத்துக்கு பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் அவன் கட்டினான். வானத்தின் சேனைகளையும், நட்சத்திரக் கூட்டங்களை அவன் தொழுது கொண்டான். 4 மனாசே கர்த்தருடைய ஆலயத்தில் பொய் தெய்வங்களுக்கும் பலிபீடங்களைக் கட்டினான். கர்த்தர், ஆலயத்தைப்பற்றி, “என் நாமம் எருசலேமில் எப்பொழுதும் இருக்கும்” என்றார். 5 மனாசே, கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள இரண்டு பிரகாரங்களிலும் வானத்து நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடத்தைக் கட்டினான். 6 மனாசே பென்இன்னோம் பள்ளதாக்கிலே தன் பிள்ளைகளையே நெருப்பில் எரித்து பலி கொடுத்தான். இவன் நிமித்தம், குறிபார்ப்பது, பில்லிசூனியங்களை அனுசரித்து மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவர்களையும் அணுகினான். அவன் கர்த்தர் தவறு என்று சொன்ன பலவற்றைச் செய்தான். மனாசேயின் பாவங்கள் கர்த்தருக்குக் கோபத்தைத் தந்தது. 7 அவன் ஒரு விக்கிரகத்தின் உருவச் சிலையைச் செய்து அதனை தேவனுடைய ஆலயத்திற்குள் வைத்தான். தேவன் ஆலயத்தைப் பற்றி தாவீதிடமும் அவனது மகன் சாலொமோனிடமும் பேசியிருக்கிறார். அவர், “நான் எனது பெயரை இவ்வாலயத்திலும் எருசலேமிலும் என்றென்றைக்கும் வைத்திருப்பேன். இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களிலிருந்தும் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். 8 நான் இஸ்ரவேலர்களிடமிருந்து மீண்டும் அவர்களின் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டை எடுத்துக்கொள்ளமாட்டேன். ஆனால் அவர்கள் எனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்து சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். இவற்றை நான் மோசேக்குக் கொடுத்துள்ளேன்.” என்றார்.
9 யூதா ஜனங்களையும், எருசலேமில் வாழ்ந்த ஜனங்களையும் மனாசே தவறு செய்ய ஊக்குவித்தான். இஸ்ரவேலர்களுக்கு முன்னதாக அந்த நிலத்தில் வாழ்ந்து கர்த்தரால் அழிக்கப்பட்ட தேசத்தவர்களைவிட அவர்கள் மோசமானவர்களாக இருந்தார்கள். பாவங்களைச் செய்தனர்.
10 மனாசே மற்றும் அவனது ஜனங்களிடமும் கர்த்தர் பேசினார். ஆனால் அவர்கள் அதைக் கவனிக்க மறுத்துவிட்டனர். 11 எனவே கர்த்தர் அசீரியா நாட்டு தளபதிகளை அழைத்து வந்து யூதாவைத் தாக்கினார். அந்தத் தளபதிகள் மனாசேயைப் பிடித்து அவனது உடலில் கொக்கிகளை மாட்டினார்கள். அவனது கைகளில் வெண்கலச் சங்கிலிகளைப் போட்டார்கள். அவனைக் கைதியாக பாபிலோனுக்கு கொண்டு போனார்கள்.
12 மனாசே கஷ்டப்பட்டான். அப்போது அவன் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான். தன் முற்பிதாக்களின் தேவனிடம் மிகப்பணிவாக நடந்துக்கொண்டான். 13 மனாசே கர்த்தரிடம் கெஞ்சி தன்னைக் காப்பாற்றும்படி ஜெபித்தான். கர்த்தர் அவனது வேண்டுகோளை கேட்டார். அவனுக்காக வருத்தப்பட்டார். பிறகு கர்த்தர் அவனை எருசலேமிற்குத் திரும்பி தனது சிங்காசனத்தில் அமரும்படிச்செய்தார். பின்னர் கர்த்தர்தான் உண்மையான தேவன் என்பதை மனாசே தெரிந்துகொண்டான்.
14 இது நடந்தப்பிறகு, மனாசே தாவீதின் நகரத்திற்கு ஒரு வெளிச்சுவரைக் கட்டினான். இந்த வெளிச்சுவர் கிதரான் பள்ளத்தாக்கில் கியோன் நீரூற்றுக்கு மேற்கிலிருந்து மீன் வாசல் வரை இருந்தது. ஒபேலைச் சுற்றிலும் அதனை வளைத்துக் கட்டினான். அதனை மிக உயரமாகக் கட்டினான். பிறகு அவன் யூதாவிலுள்ள அனைத்து கோட்டைகளுக்கும் அதிகாரிகளை நியமித்தான். 15 மனாசே அந்நிய தெய்வங்களையும், விக்கிரகங்களையும் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்தான். அவன் எருசலேமிலும், மலை நகரங்களிலும் அமைத்த பலிபீடங்களையும் நீக்கினான். அவன் இவை அனைத்தையும் எருசலேம் நகருக்கு வெளியே தூக்கி எறிந்தான். 16 பிறகு அவன் கர்த்தருக்காக பலிபீடத்தை அமைத்தான். அதில் அவன் சமாதானப் பலியையும், நன்றிக்குரிய பலியையும் செலுத்தினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுமாறு யூதாவிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் கட்டளையிட்டான். 17 ஜனங்கள் தொடர்ந்து மேடைகளிலும் பலிகள் கொடுத்துவந்தனர். ஆனாலும் அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே செய்தனர்.
18 மனாசே செய்த மற்ற செயல்களும், அவன் தேவனிடம் செய்த ஜெபங்களும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அவனோடு ஞானதிருஷ்டிக்காரர்கள் பேசிய பேச்சும் 'இஸ்ரவேல் அரசர்களின் புத்தகத்தில்' எழுதப்பட்டுள்ளன. 19 மனாசேயின் வேண்டுதல்களும், அதனைக் கேட்டு தேவன் எப்படி வருத்தப்பட்டார் என்பதும் 'தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில்' எழுதப்பட்டுள்ளது. இதில் பணிவதற்கு முன் அவன் செய்த தவறுகளும், பாவங்களும், அவன் கட்டிய மேடைகளும், விக்கிரக தோப்புகளைபற்றியும் எழுதப்பட்டுள்ளன. 20 அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எனவே அவனை ஜனங்கள் அவனது சொந்த அரண்மனையிலேயே அடக்கம் செய்தனர். மனாசேயின் இடத்தில் ஆமோன் புதிய அரசன் ஆனான். அவன் மனாசேயின் மகன் ஆவான்.
யூதாவின் அரசனான ஆமோன்
21 ஆமோன் அரசனாகும்போது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் 2 ஆண்டுகள் அரசனாக இருந்தான். 22 ஆமோன் கர்த்தருக்கு முன்பாக எல்லா வகையான தீயச் செயல்களையும் செய்தான். அவனது தந்தை மனாசே செய்தது போன்று நல்ல காரியங்களை ஆமோன் செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். ஆனால் ஆமோன், மனாசே வைத்த விக்கிரகங்களுக்கு பலிகளை கொடுத்தான். இவ்விக்கிரகங்களை ஆமோன் வழிபட்டான். 23 அவனது தந்தையாகிய மனாசே கர்த்தருக்கு முன்னால் பணிவாக இருந்ததுபோல கர்த்தருக்கு முன்னால் ஆமோன் தன்னைத்தானே பணிவுடையவனாக்கிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் மேலும் மேலும் பாவங்களைச் செய்துக்கொண்டிருந்தான். 24 ஆமோனின் வேலைக்காரர்கள் அவனுக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டினார்கள். அவர்கள் அவனை அவனது சொந்த வீட்டிலேயே கொன்றனர். 25 ஆனால் யூதா ஜனங்கள் அவ்வேலைக்காரர்கள் அனைவரையும் கொன்றனர். பிறகு ஜனங்கள் யோசியாவைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். யோசியா ஆமோனின் மகன்.
பரலோகத்தில் தேவனைப் புகழ்தல்
19 இதற்குப்பிறகு பரலோகத்தில் உள்ள ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன், அவர்கள்,
“அல்லேலூயா!
தேவனைத் துதியுங்கள், வெற்றியும், மகிமையும், வல்லமையும் நம் தேவனுக்கு உரியது.
2 அவரது நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நேர்மையுமானவை.
நமது தேவன் மாபெரும் வேசியைத் தண்டித்துவிட்டார்.
இந்த உலகத்தை தன் வேசித்தனத்தால் கெடுத்தவள் அவளே.
அவள் கொன்ற தமது ஊழியர்களின் இரத்தத்துக்கு தேவன் பழிவாங்கினார்”
என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
3 பரலோகத்திலுள்ள மக்கள்,
“அல்லேலூயா!
அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள்.
4 பிறகு இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பணிந்து வணங்கி, சிம்மாசனத்தில் வீற்றிருந்த தேவனை வழிபட்டனர்.
“ஆமென் அல்லேலூயா”
என அவர்கள் சொன்னார்கள்.
5 பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது,
“நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள்.
நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!”
என்று கூறியது.
6 அதற்குப் பிறகு ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன். அது பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியோசை போலவும் கேட்டது. அவர்கள் சொன்னார்கள்:
“அல்லேலூயா!
நமது தேவனாகிய கர்த்தர் ஆளுகிறார்.
அவரே சர்வ வல்லமையுள்ளவர்.
7 நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம்.
தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது.
ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள்.
8 மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன.
அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.”
(மெல்லிய ஆடை என்பது தேவனுடைய பரிசுத்தமான மக்களின் நற்செயலைக் குறிக்கும்.)
9 பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.
10 பிறகு நான் அந்தத் தூதனை வணங்குவதற்காகக் குனிந்தேன். ஆனால் அந்தத் தூதன் என்னிடம், “என்னை வணங்கவேண்டாம். இயேசுவின் உண்மையைக் கைக்கொண்டுள்ள உன்னைப்போலவும் உன் சகோதரர்களைப் போலவும் நான் ஒரு ஊழியக்காரன். தேவனை வணங்கு. ஏனென்றால் இயேசுவின் உண்மை தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது” என்றான்.
வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்பவர்
11 பிறகு, நான் பரலோகம் திறப்பதைக் கண்டேன். எனக்கு முன்னால் ஒரு வெள்ளைக் குதிரை நின்றது. அதன்மீது இருந்தவர் நம்பிக்கை என்றும் உண்மையென்றும் அழைக்கப்படுகிறார். அவர் நியாயம் தீர்ப்பதிலும் போர் செய்வதிலும் மிகச் சரியாக இருக்கிறார். 12 அவரது கண்கள் எரிகிற நெருப்புபோல ஜொலித்தது. அவரது தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரது பெயர் அவருக்கு மேல் எழுதப்பட்டிருந்தது. அப்பெயர் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வேறு எவருக்கும் அப்பெயர் தெரியாது. 13 அவர் இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்த அங்கியை அணிந்திருந்தார். அவர் பெயரே தேவனுடைய வார்த்தை ஆகும். 14 பரலோகத்தின் படைகள் அவரைப் பின்தொடர்ந்தன. அவர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் வந்தனர். அவர்கள் வெள்ளையும் சுத்தமுமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். 15 அவரது வாயிலிருந்து கூர்மையான வாள் வெளியே வருகிறது. அவர் பிற நாடுகளை வெல்ல அதனைப் பயன்படுத்துவார். அவர் இரும்புக் கோலால் அத்தேசங்களை ஆள்வார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கோபமாகிய ஆலையிலுள்ள திராட்சையை மிதிப்பார். 16 அவரது ஆடையின் மேலும் தொடையின் மேலும்
“இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்”
என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது.
17 பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்கக் கண்டேன். வானத்தில் பறந்துகொண்டிருந்த அனைத்துப் பறவைகளிடமும் அவன் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். “தேவனுடைய சிறந்த விருந்துக்கு அனைவரும் சேர்ந்து வாருங்கள். 18 அரசர்கள், சேனைத் தலைவர்கள், புகழ்பெற்ற மனிதர்கள் ஆகியோரின் சரீரங்களை உண்ணமுடியும் வண்ணம் ஒருங்கிணைந்து வாருங்கள். குதிரைகள் மற்றும், குதிரைகளின் மேல் சவாரி செய்தவர்களின் உடல்களைத் தின்னவும், சுதந்தரமானவர்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய மக்கள் அனைவரின் சரீரங்களைத் தின்னவும் வாருங்கள்” என்றான்.
19 பிறகு நான் அந்தக் குதிரையின் மேல் ஏறி இருக்கிறவரையும் அவரது படையையும் எதிர்த்துப் போரிட அந்த மிருகமும் தன் படைகளுடன் பூமியின் அரசர்களும் ஒருங்கிணைந்ததைக் கண்டேன். 20 ஆனால், அந்த மிருகம் பிடிபட்டது. போலித் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இவனே அந்த மிருகத்திற்காக அற்புதங்களை செய்தவன். மிருகத்தின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்களையும் மிருக விக்கிரகத்தை வழிபட்டவர்களையும் இவ்வற்புதங்களால் அவன் வஞ்சித்தான். போலித் தீர்க்கதரிசியும் மிருகமும் கந்தகம் எரிகிற நெருப்புக் கடலில் உயிரோடு போடப்பட்டார்கள். 21 குதிரையின் மேல் வந்தவரின் வாயிலிருந்து வெளிவந்த வாளால் அவர்களுடைய படைகள் கொல்லப்பட்டன. அவர்களின் சரீரங்களைப் பறவைகள் திருப்தியுறும்வரை தின்றன.
1 தேவனிடமிருந்து ஒரு செய்தி. இது கர்த்தரிடமிருந்து வந்த ஒரு செய்தி. மல்கியா இச்செய்தியை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்.
தேவன் இஸ்ரவேலை நேசிக்கிறார்
2 கர்த்தர், “ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன்” என்றார்.
ஆனால் நீங்கள், “நீர் எங்களை நேசிப்பதை எது காட்டும்?” என்று கேட்டீர்கள்.
கர்த்தர், “ஏசா, யாக்கோபின் சகோதரன். சரியா? ஆனால் நான் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தேன். 3 நான் ஏசாவை ஏற்றுக்கொள்ளவில்லை, நான் ஏசாவின் மலை நாட்டை அழித்தேன். ஏசாவின் நாடு அழிக்கப்பட்டது. இப்பொழுது அங்கே காட்டு நாய்கள் மட்டுமே வாழ்கின்றன” என்றார்.
4 ஏதோமின் ஜனங்கள், “நாங்கள் அழிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் திரும்பிப்போய் மீண்டும் எங்கள் நகரங்களைக் கட்டுவோம்” என்று சொல்லலாம்.
ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அவர்கள் மீண்டும் அந்நகரங்களைக் கட்டினால் பிறகு நான் மீண்டும் அவைகளை அழிப்பேன்!” எனவே ஜனங்கள் ஏதோமை ஒரு கேட்டின் நாடு என்கின்றனர். கர்த்தர் என்றென்றும் வெறுக்கும் ஒரு தேசம்.
5 ஜனங்களாகிய நீங்கள் இவற்றைப் பார்த்து நீங்கள், “கர்த்தர் பெரியவர், இஸ்ரவேலுக்கு வெளியிலும் பெரியவர்” என்றீர்கள்.
ஜனங்கள் தேவனை மதிப்பதில்லை
6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “பிள்ளைகள் தமது பெற்றோரை மதிப்பார்கள். வேலைக்காரர்கள் தம் எஜமானரை மதிப்பார்கள். நான் உனது தந்தை. நீ ஏன் என்னை மதிப்பதில்லை? நான் உனது ஆண்டவர். நீ ஏன் எனக்கு மரியாதை தருவதில்லை? ஆசாரியர்களாகிய நீங்கள் என் பெயரை மதிப்பதில்லை” என்றார்.
ஆனால் நீங்கள், “நாங்கள் உமது பெயருக்கு மரியாதை தரவில்லை என்று எச்செயல் மூலம் கூறுகின்றீர்?” எனக் கேட்கிறீர்கள்.
7 கர்த்தர், “நீங்கள் எனது பலிபீடத்திற்கு சுத்தமற்ற அப்பத்தைக் கொண்டு வருகிறீர்கள்” என்றார்.
ஆனால் நீங்கள், “அந்த அப்பத்தைச் சுத்தமற்றதாகச் செய்கிறது எது?” என்று கேட்கிறீர்கள்.
கர்த்தர், “நீங்கள் எனது மேஜைக்கு (பலிபீடம்) மரியாதை காட்டுவதில்லை. 8 நீங்கள் குருட்டு விலங்குகளைப் பலியாக கொண்டு வருகிறீர்கள். அது தவறு. நீங்கள் நோயுற்றதும் நொண்டியானதுமான விலங்குகளை பலியாக கொண்டுவருகிறீர்கள். அது தவறு. அந்நோயுற்ற விங்குகளை உங்கள் ஆளுநருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயலுங்கள். அவன் நோயுற்ற விலங்குகளை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வானா? இல்லை. அவன் அந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
9 “ஆசாரியர்களே, நீங்கள் எங்களிடம் நல்லவராக இருக்கும்படி கர்த்தரிடம் கேளுங்கள். ஆனால் அவர் நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார். இது எல்லாம் உங்களுடைய தவறு” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
10 “உறுதியாக, ஆசாரியர்களுள் சிலர் ஆலய கதவுகளை அடைத்து சரியாக நெருப்பைக் கொளுத்த முடியும். நான் உங்களிடம் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன். நான் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
11 “உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனது நாமத்தை மதிக்கிறார்கள். உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எனக்கு நறுமணப் பொருட்களை அன்பளிப்பாக எரிக்கிறார்கள். ஏனென்றால் எனது நாமம் அந்த ஜனங்கள் அனைவருக்கும் மிக முக்கியமானது” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
12 “ஆனால் நீங்கள் என் நாமத்தை மதிப்பதில்லை. கர்த்தருடைய மேசை (பலிபீடம்) சுத்தமற்றதாக உள்ளது என்று நீங்கள் சொல்கிறீர்கள். 13 நீங்கள் அந்த மேசையில் உள்ள உணவை விரும்புவதில்லை. நீங்கள் அந்த உணவை நுகர்ந்து பார்த்து அதனை உண்ண மறுப்பீர்கள். அது கெட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. பிறகு நீங்கள் நோயுள்ளதும், நொண்டியானதும், களவாடப்பட்டதுமான மிருகங்களை என்னிடம் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் எனக்கு நோயுற்ற விலங்குகளைப் பலியாகக் கொடுக்க முயல்கிறீர்கள். நான் உங்களிடமிருந்து அந்நோயுற்ற விலங்குகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன். 14 சில ஜனங்கள் நல்ல ஆண் மிருகங்களை வைத்திருப்பார்கள். அவர்களால் அவற்றை பலியாக கொடுக்கமுடியும். ஆனால் அவர்கள் அந்நல்ல மிருகங்களை எனக்குப் பலியாக கொடுக்கமாட்டார்கள். சிலர் எனக்கு நல்ல மிருகங்களைக் கொண்டு வருவார்கள். அவர்கள் அந்த ஆரோக்கியமான மிருகங்களை எனக்குத் தருவதாக வாக்குறுதியளிப்பார்கள். ஆனால் அவர்கள் ரகசியமாக அந்நல்ல மிருகங்களை மாற்றிவிட்டு எனக்கு நோயுற்ற மிருகங்களைத் தருவார்கள். அந்த ஜனங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நானே பேரரசன். நீங்கள் என்னை மதிக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள ஜனங்கள் என்னை மதிக்கின்றனர்!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
இயேசு கைது செய்யப்படுதல்(A)
18 இயேசு தன் பிரார்த்தனையை முடித்துக்கொண்டதும், தன் சீஷர்களுடன் போனார். அவர்கள் கீதரோன் என்னும் பள்ளத்தாக்குக்கு அப்பால் தாண்டிப்போனார்கள். ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. இயேசுவும் சீஷர்களும் அங்கே போனார்கள்.
2 யூதாஸுக்கு இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏனென்றால் இயேசு அடிக்கடி அவ்விடத்தில் தம் சீஷர்களோடு சந்தித்திருக்கிறார். 3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு சேவகர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.
4 இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, “நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
5 அதற்கு அவர்கள் “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.
இயேசுவோ, “நானே இயேசு” என்றார். (அவருக்கு எதிராக மாறின யூதாஸும் அவர்களோடு நின்றிருந்தான்.) 6 இயேசு அவர்களிடம், “நான்தான் இயேசு” என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
7 இயேசு மீண்டும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அவர்கள் அதற்கு, “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.
8 இயேசு அதற்கு, “‘நான்தான் இயேசு’ என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆகையால் நீங்கள் என்னைத் தேடுவதானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். 9 “நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை” என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.
10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான். (அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்) 11 இயேசு பேதுருவிடம் “உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும்” என்றார்.
அன்னாவின் முன் இயேசு(B)
12 பிறகு போர்ச்சேவகரும் அவர்கள் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி 13 அன்னாவிடம் கொண்டுவந்தனர். இவன் காய்பாவின் மாமனார். காய்பா அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். 14 இந்தக் காய்பாதான் ஏற்கெனவே யூதர்களிடம், “எல்லா மக்களுக்காகவும் ஒரு மனிதன் மரிப்பது நல்லது” என்று சொன்னவன்.
பேதுருவின் மறுதலிப்பு(C)
15 சீமோன் பேதுருவும் இயேசுவின் இன்னொரு சீஷனும் இயேசுவைப் பின்தொடர்ந்து போனார்கள். அந்தச் சீஷன் தலைமை ஆசாரியனை அறிந்திருந்தான். அதனால் அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து தலைமை ஆசாரியனின் முற்றம் போனான். 16 ஆனால் பேதுரு வாசலுக்கு வெளியே காத்திருந்தான். தலைமை ஆசாரியனைத் தெரிந்த சீஷன் வெளியே வந்தான். அவன் கதவைத் திறந்த பெண்ணோடு பேசினான். பிறகு அவன் பேதுருவையும் உள்ளே அழைத்துக்கொண்டு போனான். 17 வாசலுக்குக் காவலாக இருந்த அந்தப் பெண் பேதுருவிடம் “நீயும் இந்த மனிதனின் சீஷர்களுள் ஒருவன் தானே?” என்று கேட்டாள்.
அதற்குப் பேதுரு “இல்லை. நான் அல்ல” என்றான்.
18 அது குளிர்காலம். எனவே வேலைக்காரர்களும், சேவகர்களும் நெருப்பை உண்டாக்கினர். அவர்கள் அதைச் சுற்றி நின்றுகொண்டு குளிர் காய்ந்தனர். பேதுருவும் அவர்களோடு குளிர்காய நின்றுகொண்டான்.
தலைமை ஆசாரியனின் கேள்வி(D)
19 தலைமை ஆசாரியன் இயேசுவிடம் அவரது சீஷர்களைக் குறித்து விசாரித்தான். அதோடு அவரது போதனைகளைக்குறித்து விசாரித்தான். 20 அதற்கு இயேசு, “நான் மக்களிடம் எப்பொழுதும் வெளிப்படையாகவே பேசிவந்தேன். நான் எப்பொழுதும் யூதர்கள் கூடும் அரங்கங்களிலும், ஆலயங்களிலுமே உபதேசித்து இருக்கிறேன். யூதர்கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிறார்கள். நான் எதையும் இரகசியமாகப் பேசவில்லை. 21 அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை விசாரிக்கிறீர்கள்? என் போதனைகளைக் கேட்டவர்களை விசாரித்துப் பாருங்கள். நான் என்ன சொன்னேன் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார்.
22 இயேசு இவ்வாறு சொன்னபோது, அவர் அருகிலே நின்றிருந்த சேவகரில் ஒருவன் அவரை ஓர் அறை அறைந்தான். அவன், “நீ தலைமை ஆசாரியனிடம் அந்த முறையில் பதில் சொல்லக்கூடாது” என்று எச்சரித்தான்.
23 அதற்கு இயேசு, “நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந்தால் எது தப்பு என்று இங்கு இருக்கிற எல்லாருக்கும் சொல். ஆனால் நான் சொன்னவை சரி என்றால் பிறகு ஏன் என்னை அடிக்கிறாய்?” என்று கேட்டார். 24 ஆகையால் அன்னா இயேசுவைத் தலைமை ஆசாரியனாகிய காய்பாவிடம் அனுப்பிவைத்தான். இயேசு அப்பொழுது கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார்.
பேதுருவின் பொய்(E)
25 சீமோன் பேதுரு நெருப்பருகில் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் “அந்த மனிதனின் சீஷர்களுள் நீயும் ஒருவன்தானே?” என்று கேட்டார்கள்.
பேதுரு அதனை மறுத்தான். அவன், “இல்லை. நான் அல்ல” என்றான்.
26 தலைமை ஆசாரியனின் வேலைக்காரர்களுள் ஒருவன் அங்கு இருந்தான். அவன் பேதுருவால் காது அறுபட்டவனின் உறவினன். அவன், “அந்தத் தோட்டத்தில் நான் உன்னையும் அந்த மனிதனோடு பார்த்தேன் என்று நினைக்கிறேன்” என்றான்.
27 ஆனால் பேதுரு மீண்டும், “இல்லை. நான் அவரோடு இருக்கவில்லை” என்று கூறினான். அப்பொழுது சேவல் கூவிற்று.
பிலாத்துவுக்கு முன் இயேசு(F)
28 பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர். 29 எனவே பிலாத்து வெளியே வந்தான். அவன் அவர்களிடம், “இந்த மனிதன் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்று கேட்டான்.
30 அதற்கு யூதர்கள், “அவன் ஒரு கெட்ட மனிதன். அதனால்தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம்” என்றனர்.
31 பிலாத்து யூதர்களிடம், “யூதர்களாகிய நீங்கள் இவனை அழைத்துக்கொண்டு போய் உங்கள் விதி முறைகளின்படி நியாயம் தீருங்கள்” என்றான்.
அதற்கு யூதர்கள், “எவரையும் மரண தண்டனைக்குட்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லையே” என்றனர். 32 (தான் எவ்வாறு மரிக்கப்போகிறேன் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது)
33 பிறகு பிலாத்து அரண்மனைக்குள் திரும்பிச் சென்றான். அவன் இயேசுவைத் தன்னிடம் அழைத்தான். “நீ யூதர்களின் அரசரா?” என்று அவரிடம் கேட்டான்.
34 இயேசு அவனிடம், “இது உமது சொந்தக் கேள்வியா அல்லது என்னைப்பற்றி பிறர் உம்மிடம் சொன்னதா?” என்று கேட்டார்.
35 பிலாத்து அதற்கு, “நான் யூதனல்ல. உனது சொந்த மக்களும் அவர்களின் தலைமை ஆசாரியனும் உன்னை என்னிடம் கொண்டுவந்திருக்கிறார்கள். நீ என்ன தவறு செய்தாய்?” என்று கேட்டான். 36 “எனது இராஜ்யம் இந்த உலகத்துக்கு உரியதன்று. அது இந்த உலகத்தோடு தொடர்புடையது எனில் என் சேவகர்கள் எனக்காகப் போரிட்டிருப்பார்கள். நான் யூதர்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கமாட்டேன். எனவே என் இராஜ்யம் இவ்விடத்திற்கு உரியதன்று” என்று இயேசு சொன்னார்.
37 பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன் தானோ?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நான் அரசன் என்று நீ சொல்கிறாய். அது உண்மைதான். இந்த நோக்கத்துக்காகத் தான் நான் இந்த உலகத்தில் பிறந்தேன். உண்மையைச் சொல்வதற்காக வந்தேன். உண்மையுடையவன் எவனும் என் பேச்சைக் கேட்கிறான்” என்றார்.
38 பிலாத்து, “உண்மை என்பது என்ன?” என்று கேட்டான். கேட்டுக்கொண்டே மறுபடியும் அவன் யூதர்களிடம் போனான். “நான் அவனுக்கெதிராகக் குற்றம்சாட்ட முடியவில்லை. 39 பஸ்கா பண்டிகையில் உங்களுக்காக எவனாவது ஒருவனை நான் விடுதலை செய்யலாமே. ஆகையால் யூதருடைய இராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்யலாமா?” என்று கேட்டான்.
40 அதற்கு யூதர்கள், “இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).
2008 by World Bible Translation Center