Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 16

காசா என்னும் நகருக்கு சிம்சோன் செல்லுதல்

16 ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர்.

ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான்.

சிம்சோனும் தெலீலாளும்

பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள்.

பெலிஸ்திய ஜனங்களின் தலைவர்கள் தெலீலாளிடம் சென்றனர். அவர்கள், “சிம்சோனைப் பெலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம். அவனது இரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்துக் கட்டுவது எப்படியென்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவனைக் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளியைக் கொடுப்போம்” என்றார்கள்.

எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள்.

சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான்.

அப்போது பெலிஸ்தியரின் அதிகாரிகள் தெலீலாளிடம் ஏழு பச்சையான வில் நாண்களைக் கொண்டு வந்தனர். அவை இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவற்றால் தெலீலாள் சிம்சோனைக் கட்டினாள். சிலர் அடுத்த அறையில் ஒளித்திருந்தனர். தெலீலாள் சிம்சோனிடம், “சிம்சோன், உங்களைப் பெலிஸ்தியர்கள் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். ஆனால் சிம்சோன் எளிதாக அந்த வில் நாண்களை அறுத்துப்போட்டான். விளக்கில் எரியும் திரியிலுள்ள சாம்பலைப் போன்று அவைத் தெறித்து விழுந்தன. எனவே பெலிஸ்தியர்கள் சிம்சோனின் பெலத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை.

10 அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்! என்னை முட்டாளாக்கினீர்கள். உண்மையைத் தயவுசெய்து எனக்குக் கூறுங்கள். எப்படி, யாரால் உங்களைக் கட்டிப்போட முடியும்?” என்று கேட்டாள்.

11 சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான்.

12 எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான்.

13 பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி, “நீங்கள் என்னிடம் மீண்டும் பொய் சொல்லிவிட்டீர்கள்! என்னை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். இப்போது உங்களை ஒருவன் எவ்வாறு கட்டக்கூடும் என்பதைக் கூறுங்கள்” என்றாள்.

சிம்சோன், “நீ என் தலைமயிரின் 7 ஜடைகளையும் நெசவு தறியால் நெய்து அதனைப் பின்னலிட்டு இறுகக் கட்டினால் நானும் பிற மனிதரைப்போல் பெலமற்றவனாவேன்” என்றான்.

14 பின் சிம்சோன் உறங்கப்போனான். தெலீலாள் நெசவுத் துணியின் நூலைப் பயன்படுத்தி அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் நெய்தாள். பின் தறியை நிலத்தில் ஒரு கூடார ஆணியால் அடித்தாள். அவள் மீண்டும் சிம்சோனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். சிம்சோன் கூடார ஆணியையும், தறியையும், பாவையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு எழுந்தான்!

15 பின் தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, “முற்றிலும் என்மேல் நம்பிக்கையற்றவராக இருக்கும்போது ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? உங்கள் இரகசியத்தை சொல்ல மறுக்கிறீர்கள்? மூன்றாவதுமுறை நீங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள். உங்களது பேராற்றலின் இரகசியத்தை நீங்கள் இன்னும் எனக்குக் கூறவில்லை” என்றாள். 16 தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான். 17 இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.

18 சிம்சோன் அவளிடம் இரகசியத்தைக் கூறிவிட்டான் என்பதைத் தெலீலாள் கண்டு கொண்டாள். பெலிஸ்தியரின் தலைவர்களுக்கு அவள் செய்தியைச் சொல்லியனுப்பினாள். அவள், “மீண்டும் இங்கே வாருங்கள். சிம்சோன் என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான்” என்றாள். எனவே பெலிஸ்தியரின் தலைவர்கள் தெலீலாளிடம் வந்தார்கள். அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த பணத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.

19 சிம்சோன் அவள் மடியில் படுத்திருந்தபோதே அவனைத் தெலீலாள் உறங்க வைத்தாள். பின்பு அவள் சவரம் செய்யும் ஒருவனை அழைத்து அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் சிரைத்துவிடச் செய்தாள். அப்போது சிம்சோன் தனது பெலத்தை இழந்தான். சிம்சோனின் பலம் அவனை விட்டு நீங்கியது. 20 அப்போது தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்தியர் உன்னைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். அவன் எழுந்து, “நான் எப்போதும் போல் என்னை விடுவித்து தப்பிவிடுவேன்” என்று நினைத்தான். கர்த்தர் அவனை விட்டு நீங்கிச்சென்றதை அவன் அறியவில்லை.

21 பெலிஸ்திய ஆட்கள் சிம்சோனைச் சிறைபிடித்தனர். அவர்கள் அவனது கண்களைப் பிடுங்கி, அவனைக் காசா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் ஓடிவிடாதபடிக்கு அவனுக்கு விலங்கிட்டுக் கட்டினார்கள். அவர்கள் சிம்சோனைச் சிறையில் அடைத்து, அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர். 22 ஆனால் சிம்சோனின் தலைமயிர் மீண்டும் வளர ஆரம்பித்தது.

23 பெலிஸ்தியரின் தலைவர்கள் கொண்டாட்டத்திற்கென ஓரிடத்தில் கூடினார்கள். தங்கள் பொய்த் தெய்வமாகிய தாகோனிற்குப் பெரும்பலிகொடுக்க அங்கு வந்தனர். அவர்கள், “நமது தேவன் நமது பகைவனாகிய சிம்சோனை வெல்வதற்கு நமக்கு உதவினார்” என்று சொன்னார்கள். 24 பெலிஸ்தியர் சிம்சோனைக் காணும்பொழுது, அவர்கள் தம் பொய்த் தெய்வத்தை வாழ்த்தினார்கள். அவர்கள்,

“இம்மனிதன் நம் ஜனங்களை அழித்தான்!
    இம்மனிதன் நம் ஜனங்களில் பலரைக் கொன்றான்!
ஆனால் நமது தெய்வம்
    நம் பகைவனை வெல்ல உதவினார்!” என்றார்கள்.

25 அவர்கள் கொண்டாட்டத்தில் களிகூர்ந்து நன்றாகப் பொழுதைப் போக்கினார்கள். எனவே அவர்கள், “சிம்சோனை வெளியே அழைத்து வாருங்கள். அவனை ஆட்டம் காண்பித்து கிண்டல் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் சிம்சோனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து அவனைக் கேலிச் செய்தனர். பொய்த் தெய்வம் தாகோன் கோவிலின் தூண்களுக்கு நடுவே அவனை நிறுத்தினார்கள். 26 ஒரு பணியாள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிம்சோன் அவனிடம், “இக்கோவிலைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு என்னை நிறுத்து. நான் அவற்றில் சாய்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.

27 அக்கோவில் ஆண்களாலும் பெண்களாலும் நிரம்பிவழிந்தது. பெலிஸ்தியரின் எல்லா தலைவர்களும் அங்கிருந்தனர். கோவிலின் மாடி அடுக்கில் சுமார் 3,000 ஆண்களும் பெண்களும் இருந்தனர். அவர்கள் நகைத்துக் கொண்டு, சிம்சோனைக் கேலிச் செய்தபடி இருந்தனர்.

28 அப்போது சிம்சோன் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தான். அவன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, என்னை நினைவுகூரும். தேவனே, எனக்கு இன்னொருமுறை பெலன் தாரும். எனது இரு கண்களையும் பிடுங்கியதற்காய் இப்பெலிஸ்தியரை ஒருமுறை நான் தண்டிக்க அனுமதியும்!” என்றான். 29 பின்பு கோவிலின் நடுவே கோவிலைத் தாங்கிக் கொண்டிருந்த இரண்டு தூண்களையும் சிம்சோன் பற்றிக்கொண்டான். ஒரு தூண் அவனது வலதுபுறமும், இன்னொரு தூண் அவனது இடதுபுறமும் இருக்கும்படி நின்று கொண்டான். 30 சிம்சோன், “என்னையும் இந்த பெலிஸ்தியர்களுடன் மரிக்கவிடும்” என்றான். பின்பு அத்தூண்களைப் பலங்கொண்டமட்டும் தள்ளினான். தலைவர்கள் மீதும், அதிலிருந்த ஜனங்கள்மீதும் கோவில் இடிந்து விழுந்தது. இவ்வாறு உயிரோடிருந்தபோது கொன்றதைக் காட்டிலும் அதிகமான பெலிஸ்தியரைச் சிம்சோன் மரித்தபோது கொன்றான்.

31 சிம்சோனின் சகோதரர்களும் அவனது தந்தையின் குடும்பத்தினரும் அவனது உடலை எடுத்துக் கொண்டு வந்து, அவனது தந்தையின் கல்லறையிலேயே புதைத்தனர். அக்கல்லறை சோரா நகரத்திற்கும் எஸ்தாவோல் நகரத்திற்கும் நடுவே இருந்தது. இஸ்ரவேலருக்கு 20 ஆண்டுகள் சிம்சோன் நியாயாதிபதியாக இருந்தான்.

அப்போஸ்தலர் 20

மக்கதோனியா, கிரீஸில் பவுல்

20 தொல்லை நீங்கியபோது பவுல் சீஷர்களைத் தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தான். அவன் அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி,பின் விடை பெற்றான். பவுல் மக்கதோனியா நாட்டிற்குத் தன் பயணத்தைத் துவக்கினான். மக்கதோனியாவிற்குச் சென்ற வழியில் பல இடங்களில் தங்கி சீஷர்களை பலப்படுத்துவதற்குப் பல காரியங்களை அவர்களுக்குக் கூறினான். பின் பவுல் கிரீசை அடைந்தான். அவன் அங்கு மூன்று மாதங்கள் தங்கினான். அவன் சிரியாவுக்குக் கடற்பயணம் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். ஆனால் சில யூதர்கள் அவனுக்கெதிராகத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தனர். எனவே பவுல் மக்கதோனியா வழியாக சிரியாவுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தான். சில மனிதர்கள் அவனோடிருந்தனர். அவர்கள் பெரேயா நகரத்தைச் சேர்ந்த சோபத்தர், தெசலோனிக்கா நகரத்தின் அரிஸ்தர்க்கு மற்றும் செக்குந்து, தெர்பெ நகரின் காயு, தீமோத்தேயு, ஆசியாவின் இரண்டு மனிதர்களான தீகிக்குவும், துரோப்பீமும் ஆவர். பவுலுக்கு முன்னரே இம்மனிதர்கள் சென்றனர். துரோவா நகரில் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். புளிப்பில்லாத அப்பத்தின் பண்டிகைக்குப் பிறகு நாங்கள் பிலிப்பி நகரத்திலிருந்து கடற் பயணமாகச் சென்றோம். ஐந்து நாட்களுக்குப் பிறகு துரோவாவில் இம்மனிதர்களை நாங்கள் சந்தித்தோம். அங்கு ஏழு நாட்கள் தங்கினோம்.

துரோவாவில் பவுல்

கர்த்தரின் திருவிருந்தை [a] உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.

10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். 11 பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான். 12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.

மிலேத்துவுக்குப் பயணம்

13 ஆசோ நகருக்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். நாங்கள் பவுலுக்கு முன்பாகவே முதலாவதாக அங்கு சென்றோம். ஆசோவில் பவுல் எங்களைச் சந்தித்து அங்குள்ள கப்பலில் எங்களோடு சேர்ந்துகொள்ளத் திட்டமிட்டான். பவுல் ஆசோவிற்கு நிலத்தின் வழியாகப் பயணம் செய்ய விரும்பியதால் இவ்வாறு செய்யும்படி எங்களுக்குக் கூறினான். 14 பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம். 15 மறுநாள் நாங்கள் மித்திலேனேயிலிருந்து கடற்பயணமானோம். கீயுதீவின் அருகேயுள்ள ஓரிடத்திற்கு வந்தோம். மறுநாள் சாமோஸ் தீவிற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். ஒரு நாள் கழித்து, மிலேத்து நகரத்திற்கு வந்தோம். 16 எபேசுவில் தங்கவேண்டாமென்று பவுல் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தான். ஆசியாவில் நீண்ட காலம் தங்க அவன் விரும்பவில்லை. முடிந்தால் பெந்தெகோஸ்து [b] நாளில் எருசலேமில் இருக்க விரும்பியதால் அவன் அவசரப்பட்டுக்கொண்டிருந்தான்.

எபேசு மூப்பர்களுடன் பவுல்

17 மிலேத்துவிலிருந்து பவுல் ஒரு செய்தியை எபேசுவுக்கு அனுப்பினான். எபேசு சபையின் மூப்பரைத் தன்னிடம் வருமாறு அவன் அழைத்தான்.

18 மூப்பர்கள் அவனிடம் வந்தபொழுது பவுல் அவர்களை நோக்கி, “நான் ஆசியாவுக்கு வந்த முதல் நாளிலிருந்து என் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். நான் உங்களோடிருந்த காலம் முழுவதும் நான் வாழ்ந்த வகையையும் நீங்கள் அறிவீர்கள். 19 யூதர்கள் அடிக்கடி எனக்கு எதிராகக் காரியங்களைத் திட்டமிட்டனர். இது எனக்குத் துன்பங்களைத் தந்தது. நான் அடிக்கடி அழுதேன். ஆனால் மிகப் பணிவாக எப்போதும் தேவனுக்கு சேவை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 20 உங்களுக்கு மிகவும் சிறந்ததையே நான் எப்போதும் செய்தேன். இயேசுவைக் குறித்த நற்செய்தியை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறினேன். வீடுகளிலும் உங்களுக்குக் கற்பித்தேன். 21 தங்கள் இருதயங்களை மாற்றி, தேவனுக்கு நேராகத் திரும்பும்படி, யூதரும் கிரேக்கருமாகிய எல்லா மக்களுக்கும் நான் கூறினேன். நமது கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைக்குமாறு அவர்கள் எல்லோருக்கும் சொன்னேன்.

22 “ஆனால் இப்போது பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து எருசலேமுக்கு நான் போக வேண்டும். எனக்கு அங்கு என்ன நேருமென்று எனக்குத் தெரியாது. 23 துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன். 24 நான் எனது உயிரைப் பொருட்படுத்தவில்லை. நான் பந்தயத்தை முடிக்கிறேன் என்பதும் தேவனுடைய கிருபையைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குச் சொல்லுமாறு கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்த வேலையை முடிக்கிறேன் என்பதும் முக்கியமானவை.

25 “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். என்னை உங்களில் ஒருவரும் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நான் உங்களோடிருந்த போதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். 26 எனவே நான் உறுதியாயிருக்கிற ஒன்றைக் குறித்து இன்று உங்களுக்குக் கூற முடியும். உங்களில் சிலர் இரட்சிக்கப்படாவிட்டால் தேவன் என்னைக் குற்றம் சாட்டமாட்டார். 27 நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென தேவன் விரும்பிய அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன். எதையும் விட்டு வைக்கவில்லை என்பதால் இதை நான் சொல்ல முடிகிறது. 28 உங்களுக்காகவும் தேவன் உங்களுக்குத் தந்த எல்லா மக்களுக்காகவும் எச்சரிக்கையாக இருங்கள். அவரது மந்தையைக் கவனிக்கும் வேலையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனின் சபைக்கு நீங்கள் மேய்ப்பர்களைப்போல் இருக்க வேண்டும். தேவன் தமது சொந்த இரத்தத்தால் வாங்கிய சபை இது. 29 நான் பிரிந்த பின் உங்கள் குழுவில் சில மனிதர்கள் வருவார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கொடிய ஓநாய்களைப் போல் இருப்பார்கள். அவர்கள் மந்தையை அழிக்க முயல்வர். 30 மேலும் உங்கள் சொந்தக் குழுவின் மனிதர்களும் மோசமான தலைவராக மாறுவர். அவர்கள் தவறான போதனைகளைப் போதிக்கத் தொடங்குவர். உண்மையை விட்டு விலகி இயேசுவின் சீஷர்கள் சிலரைத் தம்மைப் பின்பற்றுமாறு செய்வார்கள். 31 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எப்போதும் இதை நினைவுகூருங்கள். நான் உங்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். இக்காலத்தில் நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தவில்லை. நான் இரவும் பகலும் உங்களுக்கு உபதேசித்தேன். நான் அடிக்கடி உங்களுக்காக அழுதேன்.

32 “நான் இப்போது உங்களை தேவனுக்கு நியமம் செய்கிறேன். உங்களை பலப்படுத்தக் கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருக்கிறேன். தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை இந்தச் செய்தி உங்களுக்குக் கொடுக்கும். 33 நான் உங்களோடிருந்தபோது, பிறருடைய பணத்தையோ விலை உயர்ந்த ஆடைகளையோ விரும்பவில்லை. 34 எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 35 நான் செய்ததைப் போலவே நீங்களும் உழைத்து எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென எப்போதும் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூருவதற்கு உங்களுக்குக் கற்பித்தேன். ‘நீங்கள் ஒன்றைப் பெறும் வேளையைக் காட்டிலும் பிறருக்குக் கொடுக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று இயேசு கூறினார்” என்றான்.

36 இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான். 37-38 அங்கு அழுகின்ற பெரும் சத்தம் இருந்தது. பவுல் மீண்டும், அவர்கள் தன்னைப் பார்க்கமாட்டார்கள் என்று கூறியதால் அம்மனிதர்கள், மிகவும் வருத்தமுடனிருந்தார்கள். அவர்கள் பவுலைக் கட்டிக்கொண்டு, முத்தம் கொடுத்தனர். அவனை வழியனுப்புவதற்காக அவனோடு கப்பல் வரைக்கும் சென்றனர்.

எரேமியா 29

பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம்

29 எரேமியா பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். பாபிலோனில் உள்ள மூப்பர்களுக்கும் (தலைவர்கள்) ஆசாரியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் அவன் அதனை அனுப்பினான். இந்த ஜனங்களெல்லாம் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். (இந்தக் கடிதம், எகொனியா அரசனும், அரச மாதாவும், அதிகாரிகளும், யூதா, எருசலேம் மற்றும் யூதா தலைவர்களும், தச்சர்களும் கொல்லர்களும் எருசலேமிலிருந்து கொண்டு செல்லப்பட்டப் பிறகு அனுப்பப்பட்டது). சிதேக்கியா எலெயாசா மற்றும் கெமரியாவை நேபுகாத்நேச்சார் அரசனிடம் அனுப்பினான். சிதேக்கியா யூதாவின் அரசன். எலெயாசா சாப்பானின் மகன். கெமரியா இலக்கியாவின் மகன். எரேமியா அவர்களிடம் பாபிலோனுக்கு கொண்டு செல்லுமாறு கடிதத்தைக் கொடுத்தான். கடிதம் சொன்னது இதுதான்:

சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக அனுப்பப்பட்ட அனைவருக்கும் இதைக் கூறுகிறார்: “வீடுகளைக் கட்டி அவற்றில் வாழுங்கள். நாட்டில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதில் வளர்ந்த கனிகளை உண்ணுங்கள். திருமணம் செய்துக்கொண்டு மகன்கள் மற்றும் மகள்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவியர்களைக் கண்டுக்கொள்ளுங்கள். உங்கள் மகள்கள் மணந்துக்கொள்ளும்படிச் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அவர்களுக்கும் மகன்களும் மகள்களும் பிறப்பார்கள். பல குழந்தைகளைப் பெற்று பாபிலோனில் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்காதீர்கள். நான் உங்களை அனுப்பிய நகரத்திற்கு நல்லவற்றைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிற நகரத்திற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், அந்நகரத்தில் சமாதானம் இருந்தால், நீங்களும் சமாதானமாக இருக்கலாம்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார். “உங்களது தீர்க்கதரிசிகளும் மந்திரம் பழகும் ஜனங்களும் உங்களை முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் வைத்துள்ள கனவுகளைக் கேட்காதீர்கள். அவர்கள் பொய்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள். அச்செய்தி என்னிடமிருந்து வந்ததாக அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10 இதுதான் கர்த்தர் சொல்லுகிறது: “பாபிலோன் 70 ஆண்டுகளுக்கு வல்லமையுடையதாக இருக்கும். அக்காலத்திற்குப் பிறகு, பாபிலோனில் வாழ்கிற உங்களிடம் வருவேன். என்னுடைய நல்ல வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். உங்களை எருசலேமிற்கு மீண்டும் கொண்டுவருவேன். 11 நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன். 12 பிறகு, ஜனங்களாகிய நீங்கள் எனது நாமத்தை அழைப்பீர்கள். நீங்கள் என்னிடம் வருவீர்கள்: ஜெபம் செய்வீர்கள், நான் உங்களை கவனிப்பேன். 13 நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் முழு மனதோடு என்னைத் தேடினால் என்னைக் கண்டுப்பிடிக்கலாம். 14 நீங்கள் என்னைக் கண்டுப்பிடிக்க அனுமதிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “உங்கள் சிறையிலிருந்து திரும்பவும் நான் உங்களைக் கொண்டுவருவேன். இந்த இடத்திலிருந்து போகும்படி நான் உங்களை கட்டாயப்படுத்தினேன். ஆனால் உங்களை எங்கெங்கு அனுப்பினேனோ அங்கங்கிருந்தெல்லாம் அழைத்துச் சேர்ப்பேன். உங்களைக் கைதிகளாய் கொண்டுப்போகச் செய்த இந்த இடத்திற்கே மீண்டும் உங்களைக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

15 நீங்கள், “ஆனால் கர்த்தர் இங்கே பாபிலோனில் தீர்க்கதரிசிகளைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லலாம். 16 ஆனால் கர்த்தர் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படாத உறவினர்களைப்பற்றி இவற்றைக் கூறுகிறார். நான், இப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் இருக்கிற அரசனைப் பற்றியும் எருசலேம் நகரிலுள்ள ஜனங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். 17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் விரைவில் பட்டயம், பசி மற்றும் பயங்கரமான நோயை எருசலேமில் இன்னும் வாழும் ஜனங்களுக்கு எதிராக அனுப்புவேன். நான் அவர்களை உண்ணவே முடியாத அளவிற்கு அழுகிப்போன கெட்ட அத்திப் பழங்களைப் போன்று ஆக்குவேன். 18 நான், இன்னும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை பட்டயம், பசி, மற்றும் பயங்கரமான நோயால் துரத்துவேன். நான் இதனைச் செய்வேன். அதனால் அந்த ஜனங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்த்து பூமியில் உள்ள அனைத்து இராஜ்யங்களும் பயப்படும். அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நிகழ்ந்தவற்றைப்பற்றி அவர்கள் கேள்விப்படும்போது ஜனங்கள் ஆச்சரியத்துடன் பிரமிப்பார்கள். அவர்கள், ஜனங்களுக்குத் தீயவை நடைபெறட்டும் என்று கேட்கும்போது ஜனங்கள் அவர்களை ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்துவர். அந்த ஜனங்களை நான் போகும்படி வற்புறுத்தும் போதெல்லாம் ஜனங்கள் அவர்களை நிந்திப்பார்கள். 19 அவையெல்லாம் நடக்கும்படி நான் செய்வேன். ஏனென்றால், எருசலேமிலுள்ள அந்த ஜனங்கள் எனது வார்த்தையைக் கேட்கவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களுக்கு எனது செய்தியை மீண்டும் மீண்டும் அனுப்பினேன். நான் அந்த ஜனங்களுக்கு எனது வேலைக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி எனது செய்தியைக் கொடுத்தேன். ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. 20 “ஜனங்களாகிய நீங்கள் கைதிகள். நான் உங்களை எருசலேமிலிருந்து பாபிலோனுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். எனவே கர்த்தரிடமுள்ள செய்தியைக் கேளுங்கள்.”

21 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கொலாயாவின் மகனான ஆகாப் மற்றும் மாசெயாவின் மகனான சிதேக்கியாவைப் பற்றியும் கூறுகிறார்: “உங்களிடம் இவ்விருவரும் பொய்யைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களின் செய்தி என்னிடம் இருந்து வந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைத்தனர். நான் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் கைதிகளாய் உங்கள் முன்னால் கொல்லுவான். 22 அனைத்து யூதா கைதிகளிலும் மற்றவர்களுக்குத் தீயவை ஏற்படட்டும் என்று கேட்கும்போதெல்லாம் அம்மனிதர்களை எடுத்துக்காட்டுகளாக வைத்துக்கொள்வார்கள். அக்கைதிகள் சொல்லுவார்கள்: ‘சிதேக்கியா மற்றும் ஆகாப் போன்று கர்த்தர் உன்னை நடத்தட்டும். பாபிலோனின் அரசன் அவ்விருவரையும் நெருப்பில் எரித்தான்.’ 23 இஸ்ரவேல் ஜனங்களிடையே அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் மிகவும் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் தங்கள் அயலவர் மனைவிகளோடு சோரம் என்னும் பாவத்தைச் செய்தனர். அவர்களும் பொய்களைப் பேசினார்கள். அத்துடன் அப்பொய்கள் கர்த்தராகிய என்னிடமிருந்து வந்தது என்றும் கூறினர். அவற்றைச் செய்யும்படி நானே அவர்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நானே ஒரு சாட்சி” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

செமாயாவுக்கு தேவனுடைய செய்தி

24 செமாயாவுக்கும் ஒரு செய்தியைக் கொடு. செமாயா நெகெலாமிய குடும்பத்தில் உள்ளவன். 25 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “செமாயா, எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். மாசெயாவின் மகனான செப்பனியா ஆசாரியர்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். நீயும் அனைத்து ஆசாரியர்களுக்கும் கூட கடிதங்களை அனுப்பினாய். அக்கடிதங்களை நீ கர்த்தருடைய அதிகாரத்தால் அல்லாமல் உனது சொந்தப் பெயரில் அனுப்பினாய். 26 செமாயா, செப்பனியாவிற்கான கடிதத்தில் நீ சொன்னது இதுதான்: ‘செப்பனியா, கர்த்தர் உன்னை யோய்தாவின் இடத்தில் ஆசாரியனாக ஆக்கியிருக்கிறார். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளனாக நீ இருக்கிறாய். பைத்தியம் போலவும் தீர்க்கதரிசி போலவும் நடிக்கின்ற எவரையும் நீ கைது செய்யலாம். நீ அவர்களின் கால்களுக்கு இடையில் மரக் கட்டைகளையும் கழுத்தில் இரும்புச் சங்கிலிகளையும் மாட்டலாம். 27 இப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி போன்று நடிக்கிறான். எனவே, அவனை ஏன் கைது செய்யாமல் இருக்கிறாய்? 28 எரேமியா பாபிலோனிலுள்ள எங்களுக்கு அவனது செய்தியை அனுப்பியிருக்கிறான்: பாபிலோனில் உள்ள ஜனங்களாகிய நீங்கள் அங்கேயே நீண்டகாலம் இருப்பீர்கள். எனவே, வீடுகளைக்கட்டி அங்கேயே குடியிருங்கள். தோட்டங்களை ஏற்படுத்தி நீங்கள் வளர்த்தவற்றை உண்ணுங்கள்.’”

29 செப்பனியா ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியிடம் கடிதத்தை வாசித்தான். 30 பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: 31 “எரேமியா, இந்த வார்த்தையை பாபிலோனில் உள்ள அனைத்து சிறைக்கைதிகளுக்கும் அனுப்பு, ‘நெகெலாமியனாகிய செமாயாவைப்பற்றி கர்த்தர் கூறுவது இதுதான்: செமாயா உங்களிடம் பிரசங்கம் செய்திருக்கிறான். ஆனால் நான் அவனை அனுப்பவில்லை. செமாயா உங்களை ஒரு பொய்யை நம்பும்படி செய்திருந்தான். 32 ஏனென்றால், செமாயா அதனைச் செய்திருந்தான். இதுதான் கர்த்தர் சொல்கிறது: நான் விரைவில் நெகெலாமியனாகிய செமாயாவைத் தண்டிப்பேன். நான் அவனது குடும்பம் முழுவதையும் அழிப்பேன். நான் எனது ஜனங்களுக்குச் செய்யப் போகிற நன்மைகளில் அவன் பங்குக்கொள்ளமாட்டான்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் செமாயாவைத் தண்டிப்பேன். ஏனென்றால் அவன் கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படி ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.”

மாற்கு 15

பிலாத்துவின் விசாரணை(A)

15 அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள், யூதத் தலைவர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்தனர்.

“நீ யூதர்களின் மன்னனா?” என்று பிலாத்து கேட்டான்.

அதற்கு இயேசு, “ஆமாம். நீர் சொல்வது சரிதான்” என்றார்.

தலைமை ஆசாரியர் இயேசுவின்மீது பல குற்றங்களைச் சுமத்தினர். பிலாத்து இயேசுவிடம், “இம்மக்கள் உனக்கு எதிராகக் குற்றங்களை சுமத்துவதை நீ அறிவாய். எனினும் நீ ஏன் எந்தப் பதிலும் சொல்லவில்லை?” என்று மீண்டும் கேட்டான்.

ஆனால் இயேசு இதுவரை எந்தப் பதிலையும் கூற வில்லை. இதைப்பற்றி பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான்.

இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயன்று தோற்பது(B)

ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது சிறையில் இருந்து ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். மக்கள் விரும்புகின்றவனையே அவர் விடுதலை செய்ய முடியும். அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

வழக்கத்தின்படி ஒருவனை விடுதலை செய்யும்படி மக்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர். மக்களிடம் பிலாத்து, “யூதர்களின் மன்னனை விடுதலைசெய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 10 பொறாமை காரணமாகத்தான் தலைமை ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்பதைப் பிலாத்து அறிந்திருந்தான். 11 தலைமை ஆசாரியர்கள் இயேசுவை விடுதலை செய்யவேண்டாம் என்றும் பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்க மக்களைத் தூண்டிவிட்டனர்.

12 “அப்படியானால் யூதர்களின் மன்னனாகிய இந்த மனிதனை நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று பிலாத்து மக்களிடம் கேட்டான்.

13 “அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று அவர்கள் மீண்டும் சத்தமிட்டனர்.

14 “ஏன்? இவன் என்ன பாவம் செய்தான்” என்று பிலாத்து கேட்டான். ஆனால் மக்கள் மேலும் மேலும் சப்தமிட்டனர். “அவனைச் சிலுவையில் கொல்லுங்கள்” என்றனர்.

15 மக்களைப் பிரியப்படுத்த, பிலாத்து விரும்பினான். எனவே பரபாசை விடுதலை செய்தான். இயேசுவைச் சவுக்கால் அடிக்கும்படி வீரர்களிடம் சொன்னான். பின்னர் அவரைச் சிலுவையில் அறையும்படி வீரர்களிடம் ஒப்படைத்தான்.

16 பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். 17 அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். 18 பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். 19 கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள். 20 எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.

இயேசு சிலுவையில் அறையப்படுதல்(C)

21 சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். 22 “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) 23 அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார். 24 வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.

25 அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி. 26 அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். 27 அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர். 28 [a]

29 அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே. 30 ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர்.

31 வேதபாரகர்களும் தலைமை ஆசாரியர்களும் அங்கே அவர்களோடு இருந்தனர். அவர்களும் இயேசுவை மற்ற மக்கள் செய்த விதத்திலேயே கேலி செய்தனர். “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான். ஆனால் தன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை. 32 இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே” என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசுவைப்பற்றி அவதூறாகப் பேசினர்.

இயேசு இறத்தல்(D)

33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” [b] என்று பொருள்.

35 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர். 36 ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான்.

37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.

38 இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது. 39 இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார்.

40 சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய மகன்.) 41 இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம்(E)

42 இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளுக்கு முந்தின நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் 43 மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காகக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவிடம் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.

44 ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான். 45 அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான்.

46 யோசேப்பு மெல்லிய துணியை வாங்கி வந்தான். சிலுவையில் இருந்து இயேசுவின் சரீரத்தை இறக்கி அதனைத் துணியால் சுற்றினான். பிறகு அச்சரீரத்தைக் கொண்டு போய் பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறை வாசலை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டான். 47 இயேசு வைக்கப்பட்ட கல்லறையை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயான மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center