Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மாற்கு 11

எருசலேமுக்குள் இயேசு நுழைதல்(A)

11 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார்.

சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள். அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.

சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர்.

“அவரைப் புகழுங்கள்
    ‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ (B)

10 “தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக.
    அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது.
பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்”

என்று அவர்கள் சத்தமிட்டனர்.

11 எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார்.

அத்திமரம் பட்டுப்போவதை இயேசு அறிவித்தல்(C)

12 மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. 13 இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. 14 ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தேவாலயத்தில் இயேசு(D)

15 அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். 16 ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். 17 பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. [a] ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” [b] என்றார்.

18 தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர். 19 அன்று இரவு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்நகரத்தை விட்டு வெளியேறினர்.

விசுவாசத்தின் வல்லமை(E)

20 மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. 21 பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.

22 அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள். 23 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார். 24 ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும். 25 நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார். 26 [c]

இயேசுவின் அதிகாரத்தை சந்தேகித்தல்(F)

27 இயேசுவும் சீஷர்களும் மீண்டும் எருசலேமுக்குச் சென்றார்கள். அவர் தேவாலயத்திற்குள் நடந்து கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவிடம் வந்தனர். 28 அவரிடம், “எங்களுக்குச் சொல். இவற்றையெல்லாம் செய்ய நீ எங்கிருந்து அதிகாரம் பெற்றாய்? யார் உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று கேட்டனர்.

29 அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். பிறகு நான் யாருடைய அதிகாரத்தால் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 30 யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அந்த அதிகாரம் அவனுக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.

31 யூதத் தலைவர்கள் இயேசுவின் கேள்வியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “நாம் இவனிடம், ‘யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொன்னால்’, நம்மிடம் இவன், ‘பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என்று கேட்பான். 32 ‘மனிதனிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், பின்னர் மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

33 ஆகையால் அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குப் பதில் தெரியாது” என்றனர். இயேசுவும், “அப்படியானால், நானும் யார் அதிகாரத்தால் இதனைச் செய்கிறேன் என்பதைச் சொல்லமாட்டேன்” என்றார்.

யோவான் 12

பெத்தானியாவில் இயேசு(A)

12 பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்) பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர். மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது.

யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை. அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான். ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான்.

இயேசு அவனிடம், “அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள். ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நானோ எப்பொழுதும் உங்களோடு இருப்பதில்லை” என்றார்.

லாசருவுக்கு எதிரான சதி

யூதர்களில் பலர், இயேசு பெத்தானியாவில் இருப்பதாக அறிந்தனர். ஆகையால் அவர்கள் அங்கே சென்றனர். அவர்கள் இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் பார்க்க எண்ணினர். லாசரு இயேசுவால் மரணத்துக்குப் பின்னும் உயிரோடு எழுப்பப்பட்டவன். 10 ஆகவே, தலைமை ஆசாரியர்களும் இயேசுவோடு லாசருவையும் கொல்லத் திட்டமிட்டார்கள். 11 ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலைசெய்ய விரும்பினர்.

எருசலேமில் இயேசு(B)

12 மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள். 13 அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்:

“‘அவரைப் புகழ்வோம்! வருக!’
    ‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’ (C)

“தேவன் இஸ்ரவேலின் இராஜாவை ஆசீர்வதிப்பாராக!”

என்று முழங்கினர்.

14 இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார்.

15 “சீயோன் [a] நகரமே அஞ்சவேண்டாம். பார்.
    உன் அரசர் வந்துகொண்டிருக்கிறார்.
அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார்” (D)

என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர்.

16 இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்துகொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவுகூர்ந்தனர்.

இயேசுவைப்பற்றி மக்கள் பேசுதல்

17 மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி “கல்லறையை விட்டு வெளியே வா” என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப்பற்றிக் கூறினர். 18 இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர். 19 அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், “பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்” என்று பேசிக்கொண்டனர்.

ஜீவன்-மரணம்

20 அங்கே கிரேக்க நாட்டு மக்களில் சிலரும் இருந்தனர். இவர்கள் பஸ்கா பண்டிகையில் வழிபாடு செய்ய எருசலேமுக்கு வந்திருந்தனர். 21 இவர்கள் பிலிப்புவிடம் சென்று (கலிலேயாவிலுள்ள பெத்சாய்தாவில் இருந்து வந்தவன் பிலிப்பு) “ஐயா, நாங்கள் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறோம்” என்றனர். 22 பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள்.

23 இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது. 24 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும். 25 தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான். 26 எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”

இயேசு தன் மரணத்தைப்பற்றிப் பேசியது

27 “நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன். 28 பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார்.

அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது.

29 அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர்.

வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.

30 மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக. 31 உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான். 32 நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார். 33 தான் எவ்வாறு இறந்துபோவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார்.

34 ஆனால் மக்களோ, “கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க ‘மனித குமாரன் உயர்த்தப்படுவார்’ என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த ‘மனித குமாரன்?’” எனக் கேட்டனர்.

35 பிறகு இயேசு, “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்துபோகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும். 36 ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார்.

இயேசுவை நம்பாத யூதர்கள்

37 இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. 38 தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.

“கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்?
    தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” (E)

39 இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும்,

40 “தேவன் மக்களைக் குருடாக்கினார்.
    தேவன் அவர்களின் மனதை மூடினார்.
அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார்.
அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” (F)

41 இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார்.

42 ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர். 43 அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர்.

தீர்ப்பளிக்கும் வசனங்கள்

44 பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான். 45 என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான். 46 நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான்.

47 “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. 48 என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும். 49 ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும். 50 என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center