Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
அப்போஸ்தலர் 15-16

எருசலேமில் சந்திப்பு

15 பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள்.

அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. பவுலும் பர்னபாவும் பிறரும் எருசலேமை வந்தடைந்தனர். அப்போஸ்தலரும், மூப்பர்களும் விசுவாசிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை வரவேற்றனர். பவுலும் பர்னபாவும், பிறரும் தேவன் தங்களிடம் செய்த அனைத்துக் காரியங்களையும் கூறினர். எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர்.

அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். 10 எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! 11 நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான்.

12 அப்போது அந்தக் கூட்டம் முழுமையும் அமைதியாயிற்று. பவுலும் பர்னபாவும் பேசுவதைக் கவனித்தனர். யூதரல்லாத மக்களின் மத்தியில் தேவன் அவர்கள் மூலமாகச் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் விவரித்தார்கள். 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.

16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.
    தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.
    அது விழுந்துவிட்டது.
அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
    அவனது வீட்டைப் புதியதாக்குவேன்.
17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.
    யூதரல்லாத மக்களும் என் மக்களே.
கர்த்தர் இதைக் கூறினார்.
இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’(A)

18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.

19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:

‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.

பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’

21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.

யூதரல்லாத சகோதரருக்குக் கடிதம்

22 பவுல், பர்னபா ஆகியோருடன் அந்தியோகியாவுக்குச் சில மனிதர்களை அனுப்பவேண்டுமென அப்போஸ்தலரும், மூப்பரும், சபையினர் எல்லோரும் முடிவு செய்தார்கள். அக்கூட்டத்தினர் தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பர்சபா என்ற யூதாவையும், சீலாவையும் தேர்ந்தெடுத்தனர். எருசலேமின் சகோதரர்கள் அவர்களை மதித்தனர். 23 அக்கூட்டத்தினர் அவர்கள் மூலமாக அக்கடிதத்தை அனுப்பினார்கள். அக்கடிதம் கூறியது:

அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், சகோதரர்களிடமிருந்து,

அந்தியோகியாவிலும், சிரியாவிலும், சிலிசியாவிலுமுள்ள

அன்பான யூதரல்லாத சகோதரருக்கு:

24 எங்கள் கூட்டத்திலிருந்து சில மனிதர்கள் உங்களிடம் வந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். அவர்கள் கூறிய காரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் மனங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஆனால் அவற்றைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களுக்குக் கூறவில்லை. 25 சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் அனுப்புவதென நாங்கள் எல்லோரும் முழு மனதாக முடிவு செய்துள்ளோம். நமது அன்பான நண்பர்களாகிய பர்னபா, பவுல் ஆகியோரோடு அவர்களும் இருப்பார்கள். 26 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைக்காக பர்னபாவும் பவுலும் தங்கள் பிராணனையே கொடுத்துள்ளார்கள். 27 எனவே அவர்களோடு யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். அவர்கள் வாய் வார்த்தைகளினால் அவற்றை உங்களுக்கு உறுதிசெய்வார்கள். 28 உங்கள் மீது இன்னும் அதிகமான பாரங்கள் விதிக்கப்படலாகாதென பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்தார். நாங்களும் அதை ஆமோதிக்கிறோம். நீங்கள் செய்யத் தேவையான இந்தக் காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.

29 விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடாதீர்கள்.

பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.

இத்தகைய காரிங்களில் நீங்கள் உங்களை

ஈடுபடுத்தாதிருந்தால் நல்லது.

30 எனவே பவுல், பர்னபா, யூதா, சீலா ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்றனர். அவர்கள் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அந்தியோகியாவில் விசுவாசிகளைக் கூட்டி அக்கடிதத்தைக் கொடுத்தனர். 31 விசுவாசிகள் அதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தனர். அக்கடிதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. 32 யூதாவும் சீலாவும்கூடத் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். சகோதரர்கள் வலிமைபெற உதவுவதற்காக அவர்கள் பல காரியங்களைக் கூறினர். 33 அவர்கள் சகோதரரிடமிருந்து அமைதியின் வாழ்த்தைப் பெற்றனர். யூதாவும் சீலாவும் எருசலேமில் தங்களை அனுப்பிய சகோதரரிடம் சென்றனர். 34 [a]

35 ஆனால் பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கினர். அவர்களும் இன்னும் பலரும் தேவனுடைய செய்தியைக் கற்பிக்கவும் உபதேசிக்கவும் செய்தார்கள்.

பவுலும் பர்னபாவும் பிரிதல்

36 சில நாட்களுக்குப் பிறகு பவுல் பர்னபாவை நோக்கி, “பல ஊர்களில் கர்த்தரின் செய்தியை நாம் கூறியுள்ளோம். அந்த ஊர்களிலுள்ள சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்திக்கவும், அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைக் காணவும் நாம் அந்த ஊர்களுக்குத் திரும்பவும் போக வேண்டும்” என்றான்.

37 பர்னபா அவர்களோடு யோவான் மாற்குவையும் அழைத்துச் செல்ல விரும்பினான். 38 ஆனால் அவர்களின் முதல் பயணத்தில் பம்பிலியாவில் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவர்களது வேலையில் அவர்களோடு அவன் சேர்ந்துகொள்ளவில்லை. எனவே பவுல் அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாமென வலியுறுத்தினான். 39 பவுலும் பர்னபாவும் இதைக் குறித்துப் பெரிய வாக்குவாதம் நிகழ்த்தினார்கள். எனவே அவர்கள் பிரிந்து வெவ்வேறு வழிகளில் சென்றார்கள். பர்னபா சீப்புருவுக்கு கடல் வழியாகச் சென்றான். அவனோடு மாற்குவையும் சேர்த்துக்கொண்டான்.

40 பவுல் தன்னோடு செல்வதற்கு சீலாவைத் தேர்ந்துகொண்டான். அந்தியோகியாவில் சகோதரர்கள் பவுலைக் கர்த்தரின் கவனிப்பில் ஒப்புவித்து அவனை அனுப்பினர். 41 பவுலும் சீலாவும் சிரியா, சிலிசியா நாடுகளின் வழியாக சபைகள் பலமடைவதற்கு உதவியபடியே பயணம் செய்தனர்.

பவுல்-சீலா-தீமோத்தேயு

16 தெர்பை, லிஸ்திரா ஆகிய நகரங்களுக்குப் பவுல் சென்றான். தீமோத்தேயு எனப்படும் கிறிஸ்துவின் சீடன் அங்கிருந்தான். தீமோத்தேயுவின் தாய் ஒரு விசுவாசியான யூதப் பெண்மணி, அவன் தந்தை ஒரு கிரேக்கன். லிஸ்திரா, இக்கோனியம் நகரங்களிலுள்ள விசுவாசிகள் தீமோத்தேயுவை மதித்தனர். அவனைப் பற்றிய நல்ல கருத்துக்களையே கூறினர். தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.

பின் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் பிற பட்டணங்கள் வழியாகப் பிரயாணம் செய்தனர். எருசலேமில் அப்போஸ்தலரும் மூப்பர்களும் எடுத்த முடிவுகளையும் விதிகளையும் அவர்கள் விசுவாசிகளுக்கு அளித்தார்கள். இந்த விதிகளைப் பின்பற்றும்படிக்கு அவர்கள் விசுவாசிகளுக்குக் கூறினர். எனவே சபைகள் விசுவாசத்தில் வலிமையுற்று நாள்தோறும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன.

ஆசியாவிற்கு வெளியே அழைப்பு

பிரிகியா, கலாத்தியா நாடுகளின் வழியாகப் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் சென்றனர். ஆசியா நாட்டில் அவர்கள் நற்செய்தியைப் போதிப்பதை பரிசுத்த ஆவியானவர் அனுமதிக்கவில்லை. மீசியா நாட்டிற்கருகே பவுலும் தீமோத்தேயுவும் சென்றனர். பித்தினியா நாட்டிற்குள் போக அவர்கள் விரும்பினர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளே செல்ல விடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகருக்குச் சென்றனர்.

அன்றிரவு பவுல் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சியில் மக்கதோனியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் பவுலிடம் வந்தான். அம்மனிதன் அங்கு நின்று, “மக்கதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்றான். 10 பவுல் அக்காட்சியைக் கண்ட பின்பு கர்த்தருடைய நற்செய்தியை அம்மக்களுக்குக் கூறுவதற்கு தேவன் எங்களை அழைத்துள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

லீதியாளின் மாற்றம்

11 நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம். 12 அங்கிருந்து நாங்கள் பிலிப்பிக்குச் சென்றோம். மக்கதோனியாவில் பிலிப்பி ஒரு முக்கியமான நகரம். அது ரோமர்களுக்கான நகரம். சில நாட்கள் நாங்கள் அந்நகரில் தங்கினோம்.

13 ஓய்வுநாளில் நகர வாசல் வழியாக ஆற்றை நோக்கிச் சென்றோம். நதியருகே ஒரு சிறப்பான பிரார்த்தனை செய்வதற்கு இடம் கிடைக்கக்கூடும் என்று எண்ணினோம். சில பெண்கள் அங்குக் கூடியிருந்தனர். நாங்கள் அங்கு அமர்ந்து அவர்களோடு பேசினோம். 14 தியத்தீரா என்னும் நகரிலுள்ள லீதியாள் என்னும் பெண்மணி அங்கிருந்தாள். ஊதாநிற பட்டு ஆடைகளை விற்பதே அவளது தொழில். அவள் உண்மையான தேவனை வழிபட்டாள். அவள் பவுலைக் கவனித்துக்கொண்டிருந்தாள். கர்த்தர் அவளது இருதயத்தைத் திறந்து பவுல் சொன்னவற்றை ஒப்புக்கொள்ளச் செய்தார். அவள் பவுல் கூறியவற்றை நம்பினாள். 15 அவளும் அவளது வீட்டினரும் ஞானஸ்நானம் பெற்றனர். பின் லீதியாள் எங்களை அவளது வீட்டிற்கு அழைத்தாள். அவள், “கர்த்தராகிய இயேசுவில் நான் உண்மையாகவே விசுவாசம் உள்ளவள் என்று நீங்கள் எண்ணினால் என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்றாள். அவள் எங்களை அவளோடு தங்குமாறு வற்புறுத்தினாள்.

சிறையில் பவுலும் சீலாவும்

16 ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். 17 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். 18 அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று.

19 அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். 20 தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். 21 நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.

22 பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள். 23 அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் பல முறை அடித்தார்கள். பின் அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ளினார்கள். தலைவர்கள் சிறை அதிகாரியை நோக்கி, “கவனமாக அவர்களைக் காவலில் வையுங்கள்!” என்றார்கள். 24 சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான்.

25 நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். 26 திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர். 27 சிறையதிகாரி விழித்தெழுந்தான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதை அவன் கண்டான். சிறைக் கைதிகள் ஏற்கெனவே தப்பித்துப் போயிருக்க வேண்டுமென அவன் நினைத்தான். எனவே சிறையதிகாரி தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள இருந்தான். 28 ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான்.

29 சிறையதிகாரி விளக்குகளைக் கொண்டுவருமாறு ஒருவனுக்குப் பணித்தான். பின் அவன் உள்ளே ஓடினான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் பவுல், சீலா ஆகியோர் முன்பாகக் கீழே விழுந்தான். 30 பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், “நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

31 அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். 32 எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர். 33 சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் அழைத்துச் சென்று அவர்களது காயங்களைக் கழுவினான். பின் சிறையதிகாரியும் அவன் வீட்டிலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். 34 அதன் பிறகு சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்தான். அவன் வீட்டிலிருந்த அனைவரும் தேவன் மீதுகொண்ட விசுவாசத்தால் மகிழ்ந்தார்கள்.

35 மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.

36 சிறையதிகாரி பவுலிடம், “உங்களை விடுதலை செய்யும்படியாகக் கூறி தலைவர்கள் இந்த வீரர்களை அனுப்பியுள்ளனர். நீங்கள் போகலாம். அமைதியாகச் செல்லுங்கள்” என்று அறிவித்தான்.

37 ஆனால் பவுல் வீரரை நோக்கி, “உங்கள் தலைவர்கள் எங்களை விசாரணை செய்யவில்லை. ஆனால் மக்கள் முன்பாக அவர்கள் எங்களை அடித்துச் சிறையில் அடைத்தார்கள். நாங்கள் ரோம மக்கள். எங்களுக்கு உரிமை உள்ளது. இப்போது தலைவர்கள் நாங்கள் இரகசியமாகப் போக வேண்டுமென விரும்புகிறார்கள். முடியாது, தலைவர்களே வந்து எங்களை வெளியேற்றட்டும்!” என்றான்.

38 பவுல் கூறியவற்றை வீரர்கள் தலைவர்களுக்குக் கூறினர். பவுலும் சீலாவும் ரோம மக்கள் என்பதைத் தலைவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் பயந்தார்கள். 39 எனவே அவர்கள் வந்து பவுலிடமும், சீலாவிடமும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறைக்கு வெளியே அழைத்துவந்து அவர்களை நகரத்தை விட்டுப்போகுமாறு கூறினர். 40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center