Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 131

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

131 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல.
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை.
    நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை.
    எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.
நான் அமைதியாக இருக்கிறேன்.
    என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது.
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று
    என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு.
    அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.

சங்கீதம் 138-139

தாவீதின் ஒரு பாடல்

138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
    எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
    நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
    உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
    நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
    பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
    ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
தேவன் மிக முக்கியமானவர்.
    ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
    பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
    என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
    கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
    கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று

139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
    என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
    வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
    நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
    என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
    நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
    நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
    கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
    மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
    நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
    என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.

11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
    பகல் இரவாக மாறிப்போயிற்று.
    “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
    இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
    இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
    என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
    நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
    நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!

15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
    என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
    உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
    நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
    முக்கியமானவை.
    தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
    நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.

19 தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும்.
    அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.
20 அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
    அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
21 கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன்.
    உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.
22 அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன்.
    உம்மைப் பகைப்பவர்கள் எனக்கும் பகைவர்களே.
23 கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்.
    என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.
24 என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும்.
    நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.

சங்கீதம் 143-145

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று

143 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
    நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
    நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.
    என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.
ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள்.
    அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.
    என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.
ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.
    நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
    வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.
    நான் என் தைரியத்தை இழந்தேன்.
    என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும்.
    கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
    நான் உம்மை நம்புகிறேன்.
    நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும்.
    நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன்.
கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.
    நீரே என் தேவன்.
11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.
    அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.
    என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும்.
    ஏனெனில் நான் உமது ஊழியன்.

தாவீதின் ஒரு பாடல்

144 கர்த்தர் என் கன்மலை.
    கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார்.
    கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார்.
    மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தர் என்னை விடுவிக்கிறார்.
    கர்த்தர் எனது கேடகம்.
நான் அவரை நம்புகிறேன்.
    நான் என் ஜனங்களை ஆள்வதற்கு கர்த்தர் உதவுகிறார்.

கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்?
    நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்?
ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது.
    மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை.

கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும்.
    மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும்.
கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும்.
    உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.
கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்!
    பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும்.
    இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
இப்பகைவர்கள் பொய்யர்கள்.
    அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.

கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன்.
    நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
10 அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார்.
    பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.

11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    இப்பகைவர்கள் பொய்யர்கள்.
    அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
12 நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள்.
    நம் இளமகள்கள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.
13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன.
    நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.
14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
    எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை.
    நாங்கள் போருக்குச் செல்லவில்லை.
    ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.

15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

தாவீதின் ஜெபங்களுள் ஒன்று

145 என் தேவனும் அரசருமாகிய உம்மைத் துதிக்கிறேன்.
    உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன்.
    நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.
கர்த்தர் பெரியவர்.
    ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள்.
    அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.
கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள்.
    நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள்.
உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை.
    உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன்.
கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
    நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன்.
நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
    உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள்.
கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.
    கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.
    தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.
10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும்.
    உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள்.
    நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள்.
12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
    உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும்.
    நீர் என்றென்றும் அரசாளுவீர்.
14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.
    கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.
    அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,
    ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.
17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.
    அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும்.
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
    உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார்.
    கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார்.
    அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
21 நான் கர்த்தரைத் துதிப்பேன்!
    என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center