Chronological
95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
2 கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
3 ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
4 ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
5 சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
6 வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
7 அவரே நமது தேவன்!
நாம் அவரது ஜனங்கள்.
அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
8 தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.
9 உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள்.
அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.
10 நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன்.
அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன்.
அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
11 எனவே நான் கோபமடைந்தேன்,
எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன்.
97 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
2 அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
3 கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
அது பகைவரை அழிக்கிறது.
4 வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
5 கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
6 வானங்களே, அவரது நன்மையைக் கூறுங்கள்!
ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!
7 ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.
அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
8 சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்!
ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
9 மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் அரசர்.
பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!
ஒரு துதிப்பாடல்
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
99 கர்த்தர் அரசர்.
எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார்.
எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
தேவன் பரிசுத்தர்.
4 வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார்.
தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
2008 by World Bible Translation Center