Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 25

தாவீதின் பாடல்

25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
    என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
    ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
    அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
    உமது வழிகளை எனக்குப் போதியும்.
எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
    நீரே என் தேவன், என் மீட்பர்.
    அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
    எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
    கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.

கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
    பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
    அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
    கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
11 கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன்.
    ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.

12 கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால்
    அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார்.
13 அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான்.
    தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள்.
14 தன்னைப் பின்பற்றுவோருக்கு கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார்.
    அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார்.
15 உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன்.
    தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.

16 கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன்.
    என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும்.
17 என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும்.
    என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.
18 கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும்.
    நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.
19 என் பகைவர்களையெல்லாம் பாரும்.
    அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள்.
20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும்.
    நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.
21 தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர்.
    நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும்.
22 தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை
    அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.

சங்கீதம் 29

தாவீதின் பாடல்

29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
    உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
    மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
    அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
    லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
    இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
    இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
    கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
    கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.

10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார்.
    என்றென்றும் கர்த்தரே அரசர்.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
    கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.

சங்கீதம் 33

33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
    நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
    பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
    மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
தேவனுடைய வாக்கு உண்மையானது!
    அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
    கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
    தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
    அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
    உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
    அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
    அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
    தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
    எல்லா ஜனங்களையும் கண்டார்.
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
    பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
    ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.
16 அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
    ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
    அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
    அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
    அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
    அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
    அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!
    உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.

சங்கீதம் 36

இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்

36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
    அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
    அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
    எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
    அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
    எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
    ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.

கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
    உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
    உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
    கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
    ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
    உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
    அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
    உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
    உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
    தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
    அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.

சங்கீதம் 39

எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்

39 நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
    என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.

நான் பேச மறுத்தேன்.
    நான் எதையும் கூறவில்லை.
    ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
நான் மிகவும் கோபமடைந்தேன்.
    அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.

கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
    எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும்.
    என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
    என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல.
    ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது.
    ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!

நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
    நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை.
நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம்.
    ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.

எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
    நீரே என் நம்பிக்கை!
கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
    ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
    கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
    நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
11 கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
    நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர்.
பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர்.
    எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.

12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
    நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும்.
என் கண்ணீரைப் பாரும்.
    உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன்.
    என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
13 கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும்,
    நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center