Chronological
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்
5 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
2 எனது தேவனாகிய அரசனே,
என் ஜெபத்தைக் கேளும்.
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
9 அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.
38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
3 நீர் என்னைத் தண்டித்தீர்.
இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
6 நான் குனிந்து வளைந்தேன்.
நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
7 காய்ச்சலினாலும் வலியினாலும்
என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
என் தேவனே, என்னை மீட்டருளும்.
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்
41 ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன், பல ஆசீர்வாதங்களைப் பெறுவான்.
தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார்.
2 கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார்.
பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான்.
அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார்.
3 அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார்.
அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.
4 நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன்.
ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.
5 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள்.
அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.
6 சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள்.
ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை.
அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள்.
அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள்.
7 என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள்.
அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள்.
8 அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான்.
அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள்.
9 என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான்.
நான் அவனை நம்பினேன்.
ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.
10 எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.
11 கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும்.
அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன்.
12 நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர்.
என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள்.
இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர்.
ஆமென்! ஆமென்!
புத்தகம் 2
(சங்கீதம் 42-72)
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்
42 நீரூற்றின் தண்ணீருக்காக மானானது தாகங்கொள்ளுகிறது.
அவ்வாறே என் ஆத்துமா தேவனே உமக்காகத் தாகமடைகிறது.
2 என் ஆத்துமா ஜீவனுள்ள தேவனுக்காகத் தாகமடைகிறது.
அவரைச் சந்திக்க நான் எப்போது போவேன்?
3 என் பகைவன் எப்போதும் என்னைக் கேலி செய்து, “உன் தேவன் எங்கே?
உன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் இன்னமும் வரவில்லையா?” என்று கேட்கிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே என் உணவாயிற்று.
4 தேவனுடைய ஆலயத்திற்குக் கூட்டத்தினரை வழிநடத்தி நடந்ததையும்,
பலரோடு ஓய்வு நாளைக் கொண்டாடியதையும்,
துதித்துப் பாடல்களைப் பாடி மகிழ்ந்ததையும்,
நான் நினைவு கூரும்போது என் உள்ளம் உடைந்து போகிறது.
5 ஏன் நான் மிகவும் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் மிகவும் கலங்கிப்போக வேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்.
6 என் தேவனே, நான் மிகவும் துக்கமாயிருக்கிறேன்.
எனவே நான் உம்மைக் கூப்பிட்டேன்.
யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும்
பின் மிசார் மலை (சிறுமலை) வரைக்கும் போனேன்.
7 பூமியின் ஆழங்களிலிருந்து பொங்கியெழும் தண்ணீரைப் போன்றும், கடலிலிருந்து அலைகள் தொடர்ந்து எழும்புவதைப் போன்றும், மீண்டும் மீண்டும் தொல்லைகள் என்னைச் சூழ்ந்தன.
கர்த்தாவே, உமது அலைகள் என்னைச் சூழ்ந்து தாக்குகின்றன.
8 ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மை அன்பை வெளிப்படுத்துகிறதினால் ஒவ்வொரு இரவும் அவரது பாடல்களை நான் பாடுகிறேன்.
ஜீவனுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்.
9 என் பாறையான தேவனிடம் நான் பேசுவேன்.
நான், “கர்த்தாவே, ஏன் என்னை மறந்தீர்?
என் பகைவரிடமிருந்து தப்பும் வழியை எனக்கு நீர் ஏன் காட்டவில்லை” என்பேன்.
10 என் பகைவர்கள் என்னை இடைவிடாது கேலி செய்து, “உன் தேவன் எங்கே?
உன்னைக் காப்பாற்ற இன்னமும் அவர் வரவில்லையா?”
என்று என்னைக் கேட்டு அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறார்கள்.
11 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்!
2008 by World Bible Translation Center