Chronological
தாவீதுக்கு பல போர்களில் வெற்றி
8 இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தியரை வென்றான். பெலிஸ்தியரின் தலைநகரம் பரந்த நிலப்பகுதியைக் கொண்ட நகரமாக இருந்து வந்தது. தாவீது அந்த இடங்களின் ஆட்சியைக் கைப்பற்றினான். 2 மோவாபின் ஜனங்களையும் தாவீது தோற்கடித்தான். அவர்கள் எல்லோரையும் தரை மட்டும் பணியச் செய்தான். பின் அவர்களை வரிசைகளாக ஒரு கயிற்றினால் பிரித்தான். அவர்களில் இரண்டு வரிசை ஆட்களைக் கொன்றான். மூன்றாவது வரிசை ஆட்களை உயிரோடுவிட்டான். இவ்விதமாக மோவாபின் ஜனங்கள் தாவீதின் பணியாட்களாயினர். அவர்கள் தாவீதுக்கு கப்பம் கட்டினார்கள்.
3 ரேகோபின் மகனாகிய ஆதாதேசர் சோபாவின் அரசனாக இருந்தான். ஐபிராத்து நதியருகேயுள்ள நிலப்பகுதியை தாவீது கைப்பற்றுவதற்காகச் சென்றபோது தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்தான். 4 ஆதாதேசரிடமிருந்து 1,700 குதிரை வீரர்களையும் 20,000 காலாட்படைகளையும் தாவீது கைப்பற்றினான். 100 இரதக் குதிரைகளைத் தவிர்த்துப் பிறவற்றை தாவீது முடமாக்கினான்.
5 சோபாவின் அரசனாகிய ஆதாதேசருக்கு உதவுவதற்காக தமஸ்கு நகரிலிருந்து ஆராமியர்கள் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தாவீது 22,000 ஆராமியர்களையும் வென்றான். 6 பின் தாவீது, ஆராமிலுள்ள தமஸ்குவில் வீரர்களைக் கூட்டம் கூட்டமாக நிறுத்தினான். ஆராமியர்கள் தாவீதின் பணியாட்களாகி அவனுக்கு கப்பம் கட்டி வந்தனர். தாவீது சென்ற இடங்களிலெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
7 ஆதாதேசரின் பணியாட்களுக்குரிய வெண்கல கேடயங்களைத் தாவீது எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் எருசலேமுக்குக் கொண்டு வந்தான். 8 பேத்தா, பேரொத்தா ஆகிய நகரங்களிலிருந்து வெண்கலத்தாலாகிய பற்பல பொருட்களைத் தாவீது எடுத்துக்கொண்டான். (பேத்தாவும், பேரொத்தாவும் ஆதாதேசேருக்குச் சொந்தமான நகரங்கள்)
9 ஆமாத்தின் அரசனாகிய தோயீ, ஆதாதேசரின் படைகளையெல்லாம் தாவீது தோற்கடித்ததைக் கேள்வியுற்றான். 10 எனவே, தோயீ தன் மகனாகிய யோராமைத் தாவீது அரசனிடம் அனுப்பினான். தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்ததால் யோராம் தாவீதை வாழ்த்தி ஆசீர்வதித்தான். ஆதாதேசர் முன்பு தோயீக்கு எதிராக போரிட்டிருந்தான். பொன், வெள்ளி வெண்கலம் ஆகியவற்றாலான பொருட்களை யோராம் கொண்டு வந்திருந்தான். 11 தாவீது, இப்பொருட்களை வாங்கி கர்த்தருக்கு அர்ப்பணித்தான். கர்த்தருக்குக் கொடுத்த பிற பொருட்களோடு அவற்றையும் வைத்தான். தாவீது தோற்கடித்த தேசங்களிலிருந்து அவற்றை தாவீது எடுத்துக்கொண்டான். 12 ஆராம், மோவாப், அம்மோன், பெலிஸ்தியா, அமலேக்கு ஆகிய நிலப்பகுதிகளை தாவீது வென்றான். சோபாவின் அரசனும் ரேகோபின் மகனாகிய ஆதாதேசரையும் தாவீது வென்றான். 13 தாவீது 18,000 ஆராமியரையும் உப்புப் பள்ளத்தாக்கில் தோற்கடித்தான். அவன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பியபோது புகழ் பெற்றவனாக இருந்தான். 14 தாவீது ஏதோமில் வீரர்களின் கூட்டத்தை வைத்தான். ஏதோம் முழுவதும் இவ்வாறு கூட்டம் கூட்டமாக வீரர்களை நிறுத்தினான். ஏதோமியர் எல்லாரும் தாவீதின் பணியாட்களானார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
தாவீதின் ஆட்சி
15 இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்தான். தாவீது தனது ஜனங்கள் எல்லோருக்கும் சிறந்த நன்மையான தீர்மானங்களை எடுத்தான். 16 செருயாவின் மகனாகிய யோவாப் தாவீதின் படைத்தலைவனாக இருந்தான். அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான். 17 அகிதூபின் மகனாகிய சாதோக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்கும் ஆசாரியர்கள். செராயா செயலாளனாக இருந்தான். 18 யோய்தாவின் மகனாகிய பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் [a] பொறுப்பாளியாக இருந்தான். தாவீதின் மகன்களும் முக்கிய தலைவர்களாக இருந்தார்கள்.
சவுலின் குடும்பத்தாருக்கு தாவீது இரக்கம் காட்டுகிறான்
9 தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.
2 சவுலின் குடும்பத்தை சேர்ந்த சீபா என்னும் வேலைக்காரன் இருந்தான். தாவீதின் பணியாட்கள் சீபாவை தாவீதிடம் அழைத்து வந்தனர். தாவீது அரசன், சீபாவிடம், “நீ சீபாவா?” என்று கேட்டான்.
சீபா, “ஆம் நான் உங்கள் பணியாளாகிய சீபா” என்றான்.
3 அரசன், “சவுலின் குடும்பத்தில் யாராவது உயிரோடிருக்கிறார்களா? தேவனுடைய இரக்கத்தை நான் அவனுக்குக் காட்ட வேண்டும்” என்றான்.
தாவீதிடம், “யோனத்தானுக்கு இரு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான்” என்று சீபா சொன்னான்.
4 அரசன் சீபாவை நோக்கி, “அந்த மகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.
சீபா, அரசனிடம், “லோதேபாரில் அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்றான்.
5 தாவீது அரசன் பணியாட்களை லோதேபாரிலுள்ள அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான். 6 யோனத்தானின் மகன் மேவிபோசேத் என்பவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
தாவீது, “மேவிபோசேத்?” என்றான்.
மேவிபோசேத், “நான் உங்கள் பணியாளாகிய மேவிபோசேத்” என்றான்.
7 தாவீது மேவிபோசேத்தை நோக்கி, “பயப்படாதே நான் உனக்கு இரக்கம் காட்டுவேன். உன் தந்தை யோனத்தானிமித்தம் இதைச் செய்வேன். உன் பாட்டனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் தருவேன். நீ எப்பொழுதும் எனது பந்தியில் உண்பாய்” என்றான்.
8 மேவிபோசேத் மீண்டும் தாவீதை வணங்கினான். மேவிபோசேத், “உங்கள் பணியாளாகிய என்னிடம் நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள். நான் செத்த நாயைக் காட்டிலும் மேலானவன் அல்ல” என்றான்.
9 அப்போது தாவீது அரசன் சவுலின் வேலைக்காரன் சீபாவை அழைத்தான். தாவீது சீபாவை நோக்கி, “உன் எஜமானரின் பேரனாகிய மேவிபோசேத்திற்கு சவுல் குடும்பம் மற்றும் சவுலுக்கும் சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். 10 நீ அந்த நிலத்தைப் பயிர் செய்வாய். உன் மகன்களும் வேலையாட்களும் மேவிபோசேத்திற்காக இதைச் செய்ய வேண்டும். நீ பயிர்களை அறுவடைச் செய்து விளைச்சலைச் சேர்ப்பாய். அப்போது உன் எஜமானனின் பேரனான, மேவிபோசேத் உண்பதற்குத் தேவையான உணவைப் பெறுவான். உனது எஜமானின் பேரன், எப்பொழுதும் என் பந்தியில் ஆகாரம் உண்பான்” என்றான்.
சீபாவிற்கு 15 மகன்களும் 20 வேலைக்காரரும் இருந்தனர். 11 சீபா தாவீது அரசனை நோக்கி “நான் உங்கள் பணியாள், ஆண்டவனாகிய எனது அரசன் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றான்.
மேவிபோசேத் ராஜகுமாரனைப்போல் தாவீதின் பந்தியில் உணவுண்டான். 12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் சிறிய மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தின் ஜனங்கள் அனைவரும் மேவிபோசேத்தின் வேலையாட்களாயினர். மேவிபோசேத் இரு கால்களும் முடமானவன். 13 மேவிபோசேத் எருசலேமில் வாழ்ந்தான். ஒவ்வொரு நாளும் அவன் அரச பந்தியில் உணவுண்டான்.
தாவீது பல நாடுகளை வெல்கிறான்
18 பிறகு தாவீது பெலிஸ்தரைத் தாக்கித் தோற்கடித்தான். காத் நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள சிறு நகரங்களையும் பெலிஸ்தரின் வசமிருந்து கைப்பற்றினான்.
2 பிறகு தாவீது மோவாப் நாட்டைத் தோற்கடித்தான். மோவாபியர்கள் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். அவர்கள் தாவீதிற்கு புகழுரைகளைச் செலுத்தினார்கள்.
3 தாவீது, ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகவும் சண்டையிட்டான். ஆதாரேசர் சோபா நாட்டின் அரசன். தாவீது, அப்படைகளோடு ஆமாத் நகரத்தின்வரை போரிட்டான். தாவீது இவ்வாறு செய்வதற்குக் காரணம் என்னவென்றால் ஆதாரேசர் தனது அரசை ஐபிராத்து நதிவரை பரப்ப விரும்பினான். 4 தாவீது, ஆதாரேசரிடமிருந்து 1,000 இரதங்களையும் 7,000 இரதமோட்டிகளையும் 20,000 வீரர்களையும் கைப்பற்றினான். ஆதாரேசரின் பெரும்பாலான குதிரைகளைத் தாவீது முடமாக்கினான். அவை தேர் இழுக்கப் பயன்படுவன. ஆனால் தாவீது, அவற்றில் நூறு இரதக் குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டான்.
5 தமஸ்குஸ் நகரத்தில் இருந்து ஆர்மீனியர்கள் ஆதாரேசருக்கு உதவி செய்யவந்தனர். ஆனால் தாவீது, அவர்களையும் தோற்கடித்து 22,000 ஆர்மீனியர்களைக் கொன்றான். 6 பிறகு தாவீது, ஆராமில் உள்ள தமஸ்குஸ் நகரில் கோட்டை அமைத்தான். ஆர்மீனியர்கள் தாவீதின் வேலைக்காரர்களாகி அவனுக்குப் புகழுரைகளைக் கொண்டுவந்தனர். தாவீது எங்கெங்கு போனானோ அங்கெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றிகளைத் தந்தார்.
7 தாவீது ஆதாரேசரின் படைத்தளபதிகளிடமிருந்து தங்கள் கேடயங்களைப் பறித்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். 8 திப்காத்திலும் கூனிலுமுள்ள வெண்கலத்தையும் தாவீது எடுத்து வந்தான். இந்நகரங்கள் ஆதாரேசருக்கு உரியவை. பிறகு சாலொமோன் இந்த வெண்கலத்தை ஆலயத்திற்குரிய வெண்கலத்தொட்டி, தூண், தட்டுமுட்டு போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தினான்.
9 ஆமாத் நகரத்தின் அரசன் தோயூ. ஆதாரேசர் சோபா நாட்டின் அரசன். தோயூ, தாவீது ஆதாரேசரின் படைகளை வென்றுவிட்டதை அறிந்தான். 10 எனவே, தோயூ அவனது மகனான ஆதோராமை அரசன் தாவீதினிடம் அனுப்பி சமாதானத்தைத் தெரிவித்து ஆசீர்வாதத்தை வேண்டினான். தாவீது ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்கடித்ததால் அவன் இவ்வாறு நடந்துக்கொண்டான். முன்பு போர்க்களத்தில் ஆதாரேசர் தோயூவோடு இருந்தான். ஆதோராம், தாவீதிற்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றால் செய்யப்பட்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். 11 தாவீது அரசன் அவற்றைப் பரிசுத்தப்படுத்தி கர்த்தருக்கு கொடுத்துவிட்டான். ஏதோம், மோவாப், அம்மோனியர், பெலிஸ்தர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து பெற்ற பொன், வெள்ளி போன்றவற்றையும் தாவீது இவ்வாறே செய்து பரிசுத்தப்படுத்தினான்.
12 உப்பு பள்ளத்தாக்கிலே செருயாவின் மகனான அபிசாயி 18,000 ஏதோமியரைக் கொன்றான். 13 அபிசாயி ஏதோமில் அரண் அமைத்தான். அனைத்து ஏதோமியரும் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். தாவீது செல்லுமிடங்களில் எல்லாம் கர்த்தர் வெற்றியளித்தார்.
தாவீதின் முக்கிய அதிகாரிகள்
14 தாவீது, அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் அரசன் ஆனான். அவன் ஒவ்வொருவருக்கும் சரியானதையும், நியாயமானதையும் செய்தான். 15 செருயாவின் மகனான யோவாப் தாவீதின் படைத்தளபதியாக இருந்தான். ஆகிலூதின் மகனாகிய யோசபாத் வரலாறு எழுதுபவனாக இருந்தான். 16 சாதோக்கும், அபிமெலேக்கும் ஆசாரியர்கள். சாதோக் அகிதூபின் மகன். அபிமெலேக் அபியதாரின் மகன். சவிஷா எழுத்துக்காரன். 17 பெனாயா, கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாய் இருந்தான். பெனாயா யோய்தாவின் மகன். தாவீதின் மகன்களும் முக்கிய அதிகாரிகளாய் இருந்தனர். அவர்கள் தாவீதின் பக்கம் தொண்டு செய்தனர்.
2008 by World Bible Translation Center