Revised Common Lectionary (Semicontinuous)
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
11 கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்?
நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.
2 தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள்.
நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
3 நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
4 கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார்.
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார்.
கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
5 கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
6 தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
7 ஆனால் கர்த்தர் நல்லவர்.
நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார்.
நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.
14 விடப்பட்ட ஜனங்கள் சத்தமிடத் தொடங்குவார்கள்.
அவர்கள் கடலின் ஆரவாரத்தைவிட மிகுதியாகச் சத்தமிடுவார்கள்.
கர்த்தர் பெரியவர் என்பதால் அவர்கள் மகிழ்வார்கள்.
15 அந்த ஜனங்கள், “கிழக்கில் உள்ள ஜனங்கள், கர்த்தரைத் துதிக்கிறார்கள்!
தொலை நாட்டு ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிக்கின்றனர்” என்று சொல்வார்கள்.
16 பூமியிலுள்ள ஒவ்வொரு இடத்திலிருந்தும் தேவனைத் துதிக்கும் பாடலைக் கேட்போம்.
இப்பாடல்கள் நல்ல தேவனைத் துதிக்கும்.
ஆனால், நான் சொல்கிறேன்:
“போதும்! எனக்கு போதுமானது உள்ளது!
நான் பார்க்கின்றவை பயங்கரமாக உள்ளன.
துரோகிகள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்பி, அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.”
17 அந்தத் தேசத்தில் வாழும் ஜனங்களுக்கு ஆபத்து வருவதைப் பார்க்கிறேன்.
அவர்களுக்கு அச்சம், குழிகள், உலைகள் இருப்பதைப் பார்க்கிறேன்.
18 ஜனங்கள் ஆபத்தைப்பற்றி கேள்விப்படுவார்கள்.
அவர்கள் அச்சப்படுவார்கள்.
சில ஜனங்கள் வெளியே ஓடுவார்கள்.
ஆனால், அவர்கள் குழிக்குள் விழுவார்கள்; வலைக்குள் அகப்படுவார்கள்.
சில ஜனங்கள் குழியிலிருந்து வெளியே ஏறி வருவார்கள்.
ஆனால், அவர்கள் இன்னொரு வலைக்குள் அகப்படுவார்கள்.
வானத்தில் உள்ள வெள்ளத்தின் கதவுகள் திறக்கும்.
வெள்ளம் பெருகத்தொடங்கும். பூமியின் அஸ்திபாரம் அசையும்.
19 நில நடுக்கம் ஏற்படும்.
பூமியானது பிளந்து திறந்துக்கொள்ளும்.
20 உலகத்தின் பாவங்கள் மிகவும் கனமானவை.
எனவே, பாரத்திற்கு அடியில் பூமி விழுந்துவிடும்.
பழைய வீடுபோன்று பூமி நடுங்கும்.
குடிகாரனைப்போன்று பூமி விழுந்துவிடும்.
பூமியானது தொடர்ந்து இருக்கமுடியாமல் போகும்.
21 அந்த நேரத்தில், கர்த்தர் பரலோகத்தின் சேனைகளை பரலோகத்திலும்,
பூமியிலுள்ள ராஜாக்களைப் பூமியிலும் தீர்ப்பளிப்பார்.
22 பல ஜனங்கள் சேர்ந்து கூடிக்கொள்வார்கள்.
அவர்களில் சிலர் குழியில் அடைக்கப்படுவார்கள்.
அவர்களின் சிலர் சிறைக்குள் இருப்பார்கள்.
ஆனால் இறுதியில், நீண்ட நேரத்திற்குப் பிறகு, அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
23 எருசலேமில், சீயோன் மலைமேல் கர்த்தர், ராஜாவைப்போன்று ஆட்சிசெய்வார்.
அவரது மகிமையானது மூப்பர்களுக்கு முன் இருக்கும்.
அவரது மகிமையானது மிகவும் பிரகாசமாயிருப்பதால்
சூரியன் நாணமடையும், சந்திரன் இக்கட்டான நிலையிலிருக்கும்.
நம்பிக்கையான ஊழியன் யார்
(மத்தேயு 24:45-51)
41 “ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான்.
42 அவனுக்குப் பதிலாகக் கர்த்தர், “யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்? 43 எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். 44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்.
45 “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான். 46 அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார்.
47 “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான். 48 ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார்.
2008 by World Bible Translation Center