Revised Common Lectionary (Complementary)
ஆபிரகாமைப்போன்று இஸ்ரவேலர் இருக்க வேண்டும்
51 “உங்களில் சிலர் நல்வாழ்வு வாழக் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள். உதவிக்காக நீங்கள் கர்த்தரிடம் போகிறீர்கள். என்னைக் கவனியுங்கள்! உங்கள் தந்தையான ஆபிரகாமை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் கன்மலையாகிய அவனிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர்கள். 2 ஆபிரகாம் உங்களுடைய தந்தை. நீங்கள் அவனைப் பாருங்கள்! நீங்கள் சாராளைப் பாருங்கள்! உங்களைப் பெற்றவள் அவள். நான் அழைக்கும்போது ஆபிரகாம் தனியாக இருந்தான். பிறகு நான் அவனை ஆசீர்வதித்தேன். அவன் பெரிய குடும்பமாக ஆனான். அவனிடமிருந்து ஏராளமான ஜனங்கள் வந்தனர்.”
3 அதே வழியில், கர்த்தர் சீயோனையும் அவளது எல்லா பாழான இடங்களையும் தேற்றுவார். அவளுக்காகவும், அவளது ஜனங்களுக்காகவும் கர்த்தர் வருத்தப்படுவார். அவளுக்காக அவர் பெரிய செயல்களைச் செய்வார். கர்த்தர் வனாந்திரத்தை மாற்றுவார். வனாந்திரம் ஏதேன் தோட்டத்தைப்போன்ற தோட்டமாகும். அந்தத் தேசம் காலியாய் இருந்தது. ஆனால் இது கர்த்தருடைய தோட்டம் போலாகும். அங்குள்ள ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் வெற்றியைக் குறித்தும், நன்றிகூறியும் பாடுவார்கள்.
4 “எனது ஜனங்களே! என்னைக் கவனியுங்கள்!
எனது முடிவுகள் ஜனங்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் காட்டும் வெளிச்சங்களாக இருக்கும்.
5 நான் நியாயமாக இருப்பதை விரைவில் காட்டுவேன். நான் விரைவில் உன்னைக் காப்பாற்றுவேன்.
நான் எனது வல்லமையைப் பயன்படுத்தி நாடுகளை எல்லாம் நியாயம்தீர்ப்பேன்.
துரமான இடங்கள் எல்லாம் எனக்காகக் காத்திருக்கின்றன.
அவர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள என் வல்லமைக்காகக் காத்திருக்கிறார்கள்.
6 வானத்தைப் பாருங்கள்!
கீழே உள்ள பூமியில் உங்களைச் சுற்றிப் பாருங்கள்
வானங்கள் மறைந்து போகும், மேகம் புகையைப்போன்றும்,
பூமியானது பயனற்ற பழைய ஆடைகளைப்போன்றும் ஆகும்.
பூமியிலுள்ள ஜனங்கள் மரித்துப்போவார்கள்.
ஆனால், எனது இரட்சிப்பு தொடர்ந்து என்றென்றும் இருக்கும்.
எனது நன்மைக்கு முடிவு இராது.
தாவீதின் ஒரு பாடல்.
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
வாழ்க்கையை தேவனுக்குக் கொடுங்கள்
12 சகோதர சகோதரிகளே! ஏதாவதுகொஞ்சம் செய்யுங்கள் என வேண்டுகிறேன். தேவன் நம்மிடம் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார். 2 உலகிலுள்ள மக்களைப் போன்று ஆக வேண்டுமென உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால் மனதில் புதிய எண்ணங்களால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு தேவனுடைய விருப்பத்தை உங்களால் ஏற்றுக்கொள்வது பற்றி முடிவு செய்ய முடியும். நல்லவை எவை, தேவனுக்கு விருப்பமானவை எவை என்று உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
3 தேவன் எனக்கொரு சிறப்பான வரத்தைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொல்ல என்னிடம் சில காரியங்கள் இருக்கின்றன. உங்கள் நிலைமைக்கு மீறிய நினைப்பினைக்கொள்ளாதீர்கள். உண்மையாகவே நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின்படியே ஒவ்வொருவனும் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். 4 நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. அதற்குப் பல உறுப்புகளும் உள்ளன. எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. 5 இது போலவே, நாம் பல வகை மக்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் நாம்அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் பல உறுப்புகள். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளைச் சார்ந்துள்ளன.
6 நமக்குப் பலவிதமான வரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வரமும் நமக்கு தேவனுடைய இரக்கத்தால் கிடைத்தது. நம்மிடையே தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தைப் பெற்றவன் அதனை தன் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். 7 சேவை செய்வதற்கான வரத்தைப் பெற்ற ஒருவன் நன்றாக சேவை செய்வானாக. போதிக்கும் வரத்தைப் பெற்ற ஒருவன் போதிப்பானாக! 8 மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரத்தைப் பெற்ற ஒருவன் அவ்வாறே ஆறுதல் சொல்வானாக. மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவுகிற வரத்தைப் பெற்ற ஒருவன் ஏராளமாகக் கொடுத்து உதவுவானாக! தலைவனாக இருக்க வரத்தைப் பெற்றவன் கடுமையாகப் பணியாற்றி சிறந்த தலைவனாக இருப்பானாக! மற்றவர்களிடம் இரக்கம் காட்டும் வரத்தைப்பெற்ற ஒருவன் மகிழ்ச்சியோடு இரக்கம் காட்டுவானாக!
இயேசுவே கிறிஸ்து என பேதுருவின் அறிக்கை
(மாற்கு 8:27-30; லூக்கா 9:18-21)
13 செசரியா பிலிப்பு என்ற இடத்திற்கு இயேசு சென்றார். இயேசு தம் சீஷர்களிடம், “மனித குமாரனாகிய என்னை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
14 அதற்கு சீஷர்கள், “சிலர் உம்மை யோவான்ஸ்நானகன் என்கிறார்கள். சிலர் உம்மை எலியா என்கிறார்கள். மேலும் சிலர் உம்மை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கிறார்கள்” எனப் பதில் அளித்தார்கள்.
15 பின் இயேசு தம் சீஷர்களிடம், “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
16 அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான்.
17 இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். 18 எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு[a] (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது. 19 பரலோக இராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். நீ இப்பூலோகத்தில் வழங்கும் நியாயத்தீர்ப்பு, (மெய்யாகவே) தேவனின் நியாயத்தீர்ப்பாகும். இப்பூலோகத்தில் நீ வாக்களிக்கும் மன்னிப்பு, தேவனின் மன்னிப்பாகும்” என்று சொன்னார்.
20 தான் கிறிஸ்து என்பதை ஒருவருக்கும் சொல்லக் கூடாது எனத் தமது சீஷர்களை இயேசு எச்சரித்தார்.
2008 by World Bible Translation Center