Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
33 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார், “நான் உங்கள் பாவங்களைக் கழுவும் நாளில் நான் உங்களை உங்களது நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வருவேன். அந்த அழிந்துபோன நகரங்கள் மீண்டும் கட்டப்படும். 34 காலியான நிலங்கள் பயிரிடப்படும். அந்த வழியாகப் போகிறவர்களின் பார்வையில் இனி பாழாக இராது. 35 அவர்கள் சொல்வார்கள், ‘முன்பு இந்நிலம் பாழாகக் கிடந்தது, ஆனால் இப்பொழுது ஏதேன் தோட்டம் போல் ஆகியிருக்கிறது. நகரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவை பாழாகி வெறுமையாயிற்று. ஆனால் இப்பொழுது அவை பாதுகாக்கப்பட்டன. அவற்றில் ஜனங்கள் வாழ்கின்றனர்.’”
36 தேவன் சொன்னார்: “பின்னர் உன்னைச் சுற்றியுள்ள அந்நாடுகள் நானே கர்த்தர் என்பதையும் நான் பாழான இடங்களை மீண்டும் கட்டினேன் என்பதையும் அறிவார்கள். காலியாக இருந்த இந்த நிலத்தில் நான் நட்டுவைத்தேன். நானே கர்த்தர் நான் இவற்றைக் கூறினேன் இவை நடக்கும்படிச் செய்வேன்!”
37 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் ஜனங்களையும் கூட என்னிடம் வந்து தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க அனுமதிப்பேன். அவர்கள் மேலும், மேலும் பெருகும்படிச் செய்வேன். அவர்கள் ஆட்டு மந்தைகளைப் போன்றிருப்பார்கள். 38 எருசலேமில் அதன் சிறப்பான திருவிழாக்களில் வருகிற மந்தைக் கூட்டம்போன்று ஜனங்கள் மிகுதியாக இருப்பார்கள். அதைப்போலவே நகரங்களும் பாழான இடங்களும் ஜனங்கள் கூட்டத்தால் நிரம்பும். பின்னர் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
யூதத்தலைவர்களைக் குறித்து எச்சரிக்கை
(மாற்கு 8:14-21)
5 இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயா ஏரியைக் கடந்து சென்றார்கள். ஆனால், சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்தனர். 6 இயேசு தம் சீஷர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! பரிசேயர் சதுசேயரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்,” என்று கூறினார்.
7 அவரது சீஷர்கள் அதன் பொருளைக் குறித்து விவாதித்தனர், “நாம் அப்பங்களைக் கொண்டு வர மறந்ததினாலா இயேசு இவ்வாறு கூறினார்?” என்று அவர்கள் விவாதித்தனர்.
8 தமது சீஷர்கள் இதைக் குறித்து விவாதித்ததை இயேசு அறிந்தார். எனவே, இயேசு அவர்களிடம், “அப்பங்கள் இல்லாததைக் குறித்து ஏன் பேசுகிறீர்கள்? உங்கள் விசுவாசம் குறைவுள்ளது. 9 இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? மக்கள் உண்டதில் மீதியைப் பல கூடைகளில் இட்டு நிரப்பியதும் ஞாபகமில்லையா? 10 ஏழு அப்பங்களைக் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? பின் மக்கள் உண்டு மீந்ததைப் பல கூடைகளில் நிரப்பியதும் ஞாபகமில்லையா? 11 எனவே, நான் அப்பத்தை குறித்து உங்களுடன் பேசவில்லை. அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான தீய போதனைகளை விட்டு விலகிப் பாதுகாப்பாயிருக்க நான் உங்களுக்குக் கூறுகிறேன்,” என்றார்.
12 பின்னரே, இயேசு கூறியதன் பொருளைச் சீஷர்கள் புரிந்துகொண்டார்கள். அப்பம் செய்யப் பயன்படுத்தப்படும் புளித்த மாவைக் குறித்து இயேசு பேசவில்லை. மாறாக, இயேசு அவர்களைப் பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான போதனைகளைக் குறித்தே எச்சரித்தார்.
2008 by World Bible Translation Center