Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 78:1-8

ஆசாபின் ஒரு மஸ்கீல்.

78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
    நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
    நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
    எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
    இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
    அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.

கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார்.
    தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார்.
நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார்.
    தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள்.
    அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள்.
    இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள்.
எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள்.
    தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
    அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்.
தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்.
    அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள்.
    அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
    அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை.

சங்கீதம் 78:17-29

17 ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்.
    பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள்.
18 பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள்.
    தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள்.
19 அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு,
    “பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா?
20 தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது.
    நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள்.
21 அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார்.
    யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார்.
    தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார்.
22 ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை.
    தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை.
23-24 ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார்.
    உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது.
வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து
    தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.
    அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார்.
26-27 தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார்.
    காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன.
தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார்.
    பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
28 பாளையத்தின் நடுவே
    கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.
29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.
    ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.

யாத்திராகமம் 16:2-15

இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். பாலைவனத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: “எகிப்து தேசத்தில் கர்த்தர் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீர் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர். பசியால் இங்கு நாங்கள் எல்லோரும் செத்துப்போவோம்” என்றனர்.

அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்கு அது உணவாகும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். இப்படி நான் அவர்களைச் சோதித்து, என் ஆலோசனைகளைப் பின்பற்றுகிறார்களா என்று பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்”[a] என்றார்.

மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “இன்றிரவு நீங்கள் கர்த்தரின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கர்த்தரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளைக் காலையில் கர்த்தரின் மகிமையைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்” என்றார்கள்.

மோசே தொடர்ந்து, “நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்” என்றான்.

மோசே ஆரோனை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம், ‘கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார் என்று சொல்’” என்றான்.

10 ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆரோன் பேசும்போது, எல்லா ஜனங்களும் திரும்பிப் பாலைவனத்தை நோக்கினார்கள். மேகத்தில் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதைக் கண்டார்கள்.

11 கர்த்தர் மோசேயை நோக்கி, 12 “இஸ்ரவேல் ஜனங்களின் முறையீட்டைக் கேட்டேன். எனவே அவர்களிடம் ‘இன்றிரவு நீங்கள் இறைச்சி உண்பீர்கள், காலையில் உங்களுக்கு வேண்டிய ரொட்டி கிடைக்கும். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்பலாம் என்று அறிவீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்.

13 அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது. 14 பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது. 15 இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?”[b] என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே.

யாத்திராகமம் 16:31-35

31 அந்த விசேஷ உணவை ஜனங்கள் “மன்னா” என்று அழைத்தார்கள். இந்த மன்னா தோற்றத்தில் சிறிய வெண்மையான கொத்து மல்லி விதைகளைப் போன்றிருந்தன. அவை ருசியில் தேனில் தோய்க்கப்பட்ட மெல்லிய வார்ப்புரொட்டி போன்று இருந்தன. 32 மோசே, “கர்த்தர் உங்கள் சந்ததியினருக்காக ‘இந்த உணவில் எட்டு கிண்ணம் எடுத்து வையுங்கள். அப்போது, உங்களை எகிப்திலிருந்து அழைத்து செல்கையில் வனாந்திரத்தில் நான் உங்களுக்கு கொடுத்த உணவை உங்கள் தலைமுறையினர் பார்க்க முடியும்’ என்றார்” என்று சொன்னான்.

33 எனவே மோசே ஆரோனை நோக்கி, “ஒரு சிறிய ஜாடியை எடுத்து அதை 8 கிண்ணம் மன்னாவால் நிரப்பு. கர்த்தருக்கு முன் வைக்கும்படியாக அதைப் பத்திரப்படுத்து. அதை நமது சந்ததியினருக்காகவும் பாதுகாத்து வை” என்றான். 34 (கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே ஆரோன் செய்தான். உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் அந்த ஜாடியை ஆரோன் வைத்தான்.) 35 ஜனங்கள் 40 ஆண்டுகள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். ஓய்வுக்குரிய நாடாகிய, கானான் தேசத்தின் எல்லையை வந்தடையும் மட்டும் அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள்.

மத்தேயு 15:32-39

நாலாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு அளித்தல்

(மாற்கு 8:1-10)

32 இயேசு தம் சீஷர்களை அருகில் அழைத்து, “இம்மக்களுக்காக நான் வருந்துகிறேன். இவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உணவு ஏதுமில்லை. அவர்களைப் பசியுடன் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குத் திரும்பும்பொழுது அவர்கள் சோர்வடையலாம்” என்றார்.

33 இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள்.

34 இயேசு, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார்.

அதற்கு அவரது சீஷர்கள், “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர்.

35 இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார். 36 இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர். 37 மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள். 38 அங்கு சுமார் 4,000 ஆண்கள் உணவருந்தினர். மேலும் பல பெண்களும் குழந்தைகளும் உணவு உண்டார்கள். 39 அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center