Revised Common Lectionary (Complementary)
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.
67 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.
தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.
நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!
ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர்.
நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.
எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
அவரது ஜனங்களுக்கு உதவ தேவனிடம் ஒரு ஜெபம்
15 கர்த்தாவே! வானத்திலிருந்து கீழே பாரும்!
இப்பொழுது, நிகழ்ந்துகொண்டிருப்பவற்றைப் பாரும்!
பரலோகத்திலுள்ள உமது பெருமையும். பரிசுத்தமும் கொண்ட வீட்டிலிருந்து என்னைப் பாரும்!
என் மீதிருந்த உமது பலமான அன்பு எங்கே? உமது ஆழத்திலிருந்து வரும் வல்லமையான உமது வேலைகள் எங்கே?
எனக்கான உமது இரக்கம் எங்கே?
என்னிடமிருந்து உமது கருணையை ஏன் மறைத்தீர்?
16 பாரும். நீர் எமது தந்தை!
எங்களை ஆபிரகாம் அறியமாட்டார்.
இஸ்ரவேல் (யாக்கோபு) எங்களை அடையாளம் காணவில்லை.
கர்த்தாவே, நீர் எமது தந்தை.
எங்களை எப்போதும் காப்பாற்றுகிறவர் நீர் ஒருவரே.
17 கர்த்தாவே, எங்களை நீர் ஏன் உம்மிடமிருந்து தள்ளுகிறீர்.
உம்மைப் பின்தொடர்வதை நீர் ஏன் கடினமாக்கினீர்?
கர்த்தாவே எங்களிடம் திரும்பி வாரும்.
நாங்கள் உமது ஊழியர்கள்.
எங்களிடம் வந்து எங்களைக் காப்பாற்றும்.
எங்கள் குடும்பங்களும் உம்மைச் சார்ந்தது.
18 உமது பரிசுத்தமான ஜனங்கள் அவர்களின் நாடுகளில் கொஞ்சம் காலமே வாழ்ந்தார்கள்.
பிறகு எங்கள் பகைவர்கள் உமது பரிசுத்தமான ஆலயத்தை மிதித்தனர்.
19 சிலர் உம்மைப் பின்பற்றவில்லை.
அந்த ஜனங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படவில்லை.
நாங்களும் அந்த ஜனங்களைப்போல் இருந்தோம்.
19 பின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர். 20 இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.
அந்தியோகியாவுக்குத் திரும்புதல்
21 பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர். 22 அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர். 23 பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர்.
24 பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர். 25 அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர்.
26 அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர்.
27 பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள். 28 கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.
2008 by World Bible Translation Center