Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 4-6

யூதாவின் மற்ற கோத்திரங்கள்

யூதாவின் குமாரர்களின் பட்டியல் பின் வருமாறு:

பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் ஆகியோர் யூதாவின் குமாரர்கள்.

சோபாலின் குமாரன் ராயா. இவன் யாகாத்தின் தந்தை. யாகாத் அகுமாயிக்கும் லாகாதுக்கும் தந்தை. இவர்களின் சந்ததிகளே சோரத்தியர்கள்.

யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் ஆகியோர் ஏதாமின் குமாரர்கள். அத்செலெல்போனி இவர்களின் சகோதரி.

பெனுவேல் கேதோருக்குத் தந்தை. எசேர் உஷாவிற்கு தந்தை. இவர்கள் ஊரின் குமாரர்கள். ஊர் எப்ராத்தாவின் முதல் குமாரன். எப்ராத்தோ பெத்லெகேமுக்குத் தந்தை.

அசூர் தெக்கோவாவுக்குத் தந்தை. தெக்கோவாவுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவியர்கள். நாராள் அசூருக்கு அகுசாம், எப்பேர், தெமனி, ஆகாஸ்தாரி ஆகிய குமாரர்களைப் பெற்றாள். ஏலாளிக்கு சேரேத், எத்சோகார், எத்னான், கோஸ் எனும் குமாரர்கள் இருந்தனர். கோஸ், அனூப், சோபேபாக் எனும் இருவரின் தந்தை. கோஸ் அகர்கேல் கோத்திரத்திற்கும் தந்தையானான். அகர்கேல் ஆருமின் குமாரன்.

யாபேஸ் மிக நல்லவன். அவன் தனது சகோதரர்களைவிடச் சிறந்தவன். அவனது தாய், “நான் அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டேன். ஏனென்றால் நான் அவனைப் பெற்றபோது பெருந்துன்பம் அடைந்தேன்” என்றாள். 10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனிடம் ஜெபித்து, “நீர் என்னை உண்மையாகவே ஆசீர்வதிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நீர் எனக்கு மிகுதியான நிலத்தைத் தரவேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு நெருக்கமாக இரும். என்னை எவரும் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளும். அதனால் நான் துன்பம் இல்லாமல் இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அவன் கேட்டதை தேவன் அவனுக்குக் கொடுத்தார்.

11 கேலூப் சூகாவின் சகோதரன். கேலூப் மேகீரின் தந்தை. மேகீர் எஸ்தோனின் தந்தை. 12 எஸ்தோன் பெத்ராபா, பசேயாக், தெகினாக் ஆகியோரின் தந்தை. தெகினாக் இர்நாகாஷின் தந்தை. இவர்கள் அனைவரும் ரேகாவைச் சேர்ந்தவர்கள்.

13 ஓத்னியேல், செராயா ஆகியோர் கேனாசின் குமாரர்கள். ஓத்னியேலின் குமாரர்கள் ஆத்தாத் மற்றும் மெயோனத்தாய் ஆகியோர். 14 மெயோனத்தாய் என்பவன் ஒபிராவுக்கு தந்தை ஆனான்.

செராயா யோவாபைப் பெற்றான். யோவாப் கராஷீமன் பள்ளத்தாக்குக்கு வித்திட்டவர். அவர்கள் திறமைமிக்க தொழிலாளிகளாக இருந்ததினால் ஜனங்கள் இந்தப் பெயரால் அவர்களை அழைத்தார்கள்.

15 காலேப் எப்புன்னேயின் குமாரன். ஈரு, ஏலா, நாகாம் ஆகியோர் காலேபின் குமாரர்கள். ஏலாவின் குமாரன் கேனாஸ்.

16 சீப், சீப்பா, திரியா, அசாரெயேல் ஆகியோர் எகலெலேலின் குமாரர்கள்.

17-18 யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன் ஆகியோர் எஸ்றாவின் குமாரர்கள், மேரேத், மிரியாமுக்கும் சம்மாயிக்கும் இஸ்பாவுக்கும் தந்தையானான். இஸ்பா எஸ்தெ மோவாவுக்குத் தந்தை ஆனான். மேரேத்திற்கு எகிப்திலுள்ள மனைவி ஒருத்தி உண்டு. அவளுக்கு யாரேது, ஏபேர், எக்குத்தியேல் எனும் குமாரர்கள் இருந்தனர். யாரேது கேதோரின் தந்தை. ஏபேர் சோக்கோவின் தந்தை. எக்குத்தியேல் சனோவாவிற்குத் தந்தை. இவர்கள் பித்தியாளின் குமாரர்கள். பித்தியாள் பார்வோனின் குமாரத்தி. இவள் எகிப்திலிருந்து வந்த மேரேத்தின் மனைவி.

19 நாகாமின் சகோதரியும் மேரேத்தின் மனைவிதான். இவள் யூதாவிலிருந்து வந்தவள். இவளுடைய குமாரர்களே கேயிலாவிற்கும் எஸ்தேமோவாவிற்கும் தந்தையாவர். ஆபிகேயிலா கர்மியன் ஜனங்களிடமிருந்தும் எஸ்தேமோவா மாகாத்திய ஜனங்களிடமிருந்தும் வந்தவர்கள். 20 அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் ஆகியோர் ஷீமோனின் குமாரர்கள்.

சோகேதும் பென் சோகேதும் இஷியின் குமாரர்கள்.

21-22 யூதாவின் குமாரன் சேலாக். ஏர், லெகா, லாதா, யோக்கீம் ஆகியோரும் கோசேபாவின் ஆண்களும், யோவாஸும், சாராப்பும் சேலாக்கின் ஜனங்களாவர். ஏர்லேக்காவூரின் தந்தை. லாதா மரேசாவூரின் தந்தை. அஸ்பெயா வீட்டு கோத்திரத்தினர் மெல்லிய புடவை நெய்யும் தொழிலாளர் ஆயினர். யோவாஸும் சாராப்பும் மோவாபிய பெண்களை மணந்துகொண்டனர். பிறகு அவர்கள் பெத்லெகேமுக்குத் திரும்பிப்போயினர். இக்குடும்பத்தைப் பற்றிய எழுத்துக்கள் எல்லாம் பழையவை. 23 சேலாக்கின் பிள்ளைகள் அனைவரும் குயவரின் வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் வாழ்ந்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்து ராஜாவுக்குப் பணி செய்துவந்தனர்.

சிமியோனின் பிள்ளைகள்

24 நெமுவேல், யாமின் யாரீப், சேரா, சவுல் ஆகியோர் சிமியோனின் குமாரர்கள். 25 சவுலின் குமாரன் சல்லூம், சல்லூமின் குமாரன் மிப்சாம், மிப்சாமின் குமாரன் மிஸ்மா.

26 மிஸ்மாவின் குமாரன் அம்முவேல், அம்முவேலின் குமாரன் சக்கூர், சக்கூரின் குமாரன் சீமேயி. 27 சீமேயிக்கு 16 குமாரர்களும் 6 குமாரத்திகளும் இருந்தனர். ஆனால் சீமேயியின் சகோதரர்களுக்கு அதிகப் பிள்ளைகள் இல்லை! அவர்களுக்குப் பெரியக் குடும்பமும் இல்லை. அது யூதாவின் மற்ற கோத்திரங்களைப் போல பெரிதாக வளரவில்லை.

28 சீமேயியின் சந்ததியினர் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும், 29 பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும், 30 பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும், 31 பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள். தாவீது ராஜாவாகும்வரை இவர்கள் இந்நகரங்களில் வாழ்ந்தனர். 32 இந்நகரங்களின் அருகில் ஐந்து கிராமங்கள் இருந்தன. அவை, ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் ஆகியவையாகும். 33 பாலாத்தைப் போன்று தொலைவில் மற்ற கிராமங்களும் இருந்தன. இவற்றில் இவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தம் குடும்ப வரலாற்றையும் எழுதி வைத்தனர்.

34-38 இவர்களது கோத்திரங்களில் உள்ள தலைவர்களின் பட்டியல் இது. மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும், யோவேலும் ஆசியேலின் குமாரனான செராயாவும், செராயாவின் குமாரன் யோசிபியாவும், யோசிபியாவின் குமாரன் ஏகூவும், எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகொயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், சீப்பியின் குமாரனான சீசாவும், அல்லோனின் குமாரனான சீப்பியும், யெதாயாவின் குமாரனான அல்லோனும், சிம்ரியின் குமாரனான யெதாயாவும், செமாயாவின் குமாரனான சிம்ரியும்.

அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிதாக வளர்ந்தன. 39 இவர்கள் தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிவரை சென்றார்கள். தம் ஆடுமாடுகளுக்குரிய மேய்ச்சல் பூமியைத் தேடி இவ்வாறு சென்றார்கள். 40 அவர்கள் ஏராளமாகப் புல் உள்ள நல்ல வயல்வெளிகளைக் கண்டு பிடித்தனர். அப்பூமி சமாதானத்தோடும், சப்தமின்றியும் இருந்தது. பண்டைக்காலத்தில் அங்கு காமின் சந்ததியார் வாழ்ந்தார்கள். 41 யூதாவின் ராஜாவாக எசேக்கியா இருந்தபோது இது நிகழ்ந்தது. அவர்கள் கேதாருக்கு வந்து காமிய மக்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். அவர்கள் காமியரின் கூடாரங்களை அழித்தனர். அதோடு அங்கு வாழ்ந்த மௌனியர்களுக்கு எதிராகவும் சண்டையிட்டு அவர்களை அழித்தனர். இன்னும் அவர்களைச் சேர்ந்த எவரையும் அங்கு விட்டு வைக்கவில்லை. எனவே இவர்கள் அங்கு வாழத்தொடங்கினார்கள். காரணம் அந்நிலம் அவர்களின் ஆடுகளுக்கான புல் நிரம்பியிருந்தது.

42 சிமியோனின் கோத்திரத்திலிருந்து 500 ஜனங்கள் சேயீர் மலைநாட்டுக்குச் சென்றனர். இஷியின் குமாரர்கள் இவர்களை வழிநடத்தினர். அவர்கள், பெலத்தியா, நெகரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோராகும். சிமியோர் ஜனங்கள் அங்கே வாழ்ந்தவர்களோடு சண்டையிட்டனர். 43 அங்கே சிறிது அமலேக்கியரே வாழ்ந்து வந்தனர். அவர்கள் இவர்களோடு சண்டையிட்டுக் கொன்றனர். அன்று முதல் இன்றுவரை இவர்கள் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

ரூபனின் சந்ததியினர்

1-3 இஸ்ரவேலுக்கு முதல் குமாரன் ரூபன். இவன் மூத்த குமாரன் என்ற சிறப்பு உரிமைகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ரூபன் தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டிருந்தான். எனவே அந்த உரிமைகள் யோசேப்பின் குமாரர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வம்ச வரலாற்றில் ரூபனின் பெயர் முதல் குமாரனாகப் பட்டியலிடப்படவில்லை. யூதா தனது சகோதரர்களைவிடப் பலமுள்ளவனாக ஆனான். எனவே அவனது குடும்பத்தில் இருந்து தலைவர்கள் வந்தனர். ஆனால், யோசேப்பின் குடும்பம் மூத்த குமாரனின் குடும்பத்திற்கான சிறப்பு உரிமைகளைப் பெற்றது.

ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகியோர் ரூபனின் குமாரர்கள்.

இவை யோவேலின் சந்ததியினரின் பெயர்கள். யோவேலின் குமாரன் செமாயா, செமாயாவின் குமாரன் கோக், கோக்கின் குமாரன் சிமேய். சிமேய்யின் குமாரன் மீகா, மீகாவின் குமாரன் ராயா, ராயாவின் குமாரன் பாகால், பாகாலின் குமாரன் பேரா, தில்காத் பில்தேசர் எனும் அசீரியாவின் ராஜா பேரா தனது வீட்டைவிட்டு வெளியேறும்படி பலவந்தப்படுத்தினான். எனவே பேரா ராஜாவின் கைதியானான். ரூபனின் கோத்திரத்தில் பேரா ஒரு தலைவனாயிருந்தான்.

யோவேலின் சகோதரர்களும், அவனது கோத்திரங்களும் வம்ச வரலாற்றில் எழுதப்பட்டுள்ளபடியே பட்டியலிடப்பட்டுள்ளது. ஏயேல் முதல் குமாரன், பிறகு சகரியாவும், பேலாவும். பேலா ஆசாசின் குமாரன். ஆசாஸ் சேமாவின் குமாரன். சேமா யோவேலின் குமாரன். இவர்கள் ஆரோவேரிலும் நேபோ மட்டும் பாகால்மெயோன் மட்டும் வாழ்ந்து வந்தனர். பேலாவின் ஜனங்கள் கிழக்கே ஐபிராத்து ஆறுமுதல் வனாந்தரத்தின் எல்லைவரை வாழ்ந்தனர். காரணம் அவர்களின் ஆடுமாடுகள் கீலேயாத் நாட்டில் அதிகமாக இருந்தன. 10 சவுல் ராஜாவாக இருந்தபோது, பேலாவின் ஜனங்கள் ஆகாரியரோடு சண்டையிட்டனர். இவர்கள் அவர்களைத் தோற்கடித்தனர். ஆகாரியரின் கூடாரங்களில் பேலா ஜனங்கள் வாழ்ந்தனர். அதோடு கீலேயாத்தின் கீழ்ப்பகுதி முழுவதும் பயணம்செய்தனர்.

காத்தின் சந்ததியினர்

11 காத்தின் கோத்திரத்தினர், ரூபனின் கோத்திரத்தினருக்கு அருகிலேயே வாழ்ந்தனர். காத்தியர்கள் பாசானில் சல்கா செல்லும் வழியெங்கும் வாழ்ந்தார்கள். 12 பாசானின் முதல் தலைவனாக யோவேல் இருந்தான், சாப்பாம் இரண்டாவது தலைவனாக இருந்தான். பிறகு, யானாய் பாசானின் தலைவன் ஆனான். 13 மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேரும் இந்த குடும்பத்தில் உள்ள சகோதரர்கள். 14 இவர்கள் அனைவரும் அபியேலின் சந்ததியினர். அபியேல் ஊரியின் குமாரன், ஊரி யெரொவாவின் குமாரன், யெரொவா கீலேயாத்தின் குமாரன், கீலேயாத் மிகாவேலுக்கு குமாரன். மிகாவேல் எசிசாயியின் குமாரன், எசிசாயி யாதோவின் குமாரன், யாதோ பூசுவின் குமாரன். 15 அகி அபியேலின் குமாரன், அபியேல் கூனியின் குமாரன், அகி அந்த வம்சத்தின் தலைவன்.

16 காத் கோத்திரத்தினர் கீலேயாத் பகுதியில் வாழ்ந்தனர். அவர்கள் பாசான் பகுதியிலும் அதைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களிலும் சாரோனின் வயல்வெளிகளிலும் அவற்றின் எல்லைப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர்.

17 யோதாம் மற்றும் யெரொபெயாமின் காலங்களில் இவர்கள் அனைவரும் காத்தின் குடும்ப வரலாற்றில் எழுதப்பட்டார்கள். யோதாம் யூதாவின் ராஜா. யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜா.

சில வீரர்களின் போர்த் திறமை

18 ரூபனின் ஜனங்களிலும், காத்தியரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தினரிலும் 44,760 பேர் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர். அவர்கள் போரில் திறமை உடையவர்கள். அவர்கள் கேடயங்களையும் வாட்களையும் தாங்கினார்கள். வில்லிலும் அம்புகளிலும் வல்லவர்களாக இருந்தனர். 19 அவர்கள் ஆகாரிய ஜனங்களுக்கு எதிராகச் சண்டையைத் தொடங்கினார்கள். பின் யெத்தூர் நோதாப் நாப்பீஸ் ஆகியோர்களோடும் சண்டை செய்தனர். 20 மனாசே, ரூபன், காத் ஆகியக் கோத்திரங்களின் ஜனங்கள் போரில் தேவனிடம் ஜெபித்தனர். அவர்கள் தேவனை நம்பியதால் வெற்றிக்கு உதவும்படி ஜெபித்தனர். எனவே, தேவன் உதவினார். அவர்கள் ஆகாரியர்களை வெல்லுவதற்கு தேவன் அனுமதித்தார். ஆகாரியர்களோடு சேர்ந்த மற்ற எதிரிகளையும் அவர்கள் தோற்கடித்தனர். 21 அவர்கள் ஆகாரியர்கள் உரிமையுடைய மிருகங்களைக் கவர்ந்துக்கொண்டனர். 50,000 ஒட்டகங்களையும், 2,50,000 ஆடுகளையும், 2,000 கழுதைகளையும், 1,00,000 ஜனங்களையும் கவர்ந்துகொண்டனர். 22 ஏராளமான ஆகாரியர்கள் கொல்லப்பட்டனர். ஏனென்றால் தேவன் ரூபனின் ஜனங்கள் போரில் வெல்லும்படி உதவினார். பிறகு மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்கள் ஆகாரியரின் நிலங்களில் வசித்தனர். அவர்கள் அங்கே பாபிலோனின் படைகள் வந்து சிறைபிடித்து போகும்வரை வாழ்ந்தனர்.

23 மனாசே கோத்திரத்தினரில் பாதி ஜனங்கள் பாசான் பகுதி தொடங்கி பாகால் எர்மோன், செனீர், எர்மோன் மலைவரை பரவியிருந்தனர். இவர்கள் மிகப் பெருங்கூட்டமாகப் பெருகி இருந்தனர்.

24 இவர்கள் மனாசேயின் பாதி கோத்திரங்களின் ஜனங்களுக்குத் தலைவர்கள். இவர்கள் ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் ஆகியோராவர். அவர்கள் வலிமையும், தைரியமும் கொண்டவர்களாய் இருந்தனர். அவர்கள் புகழ்பெற்றவர்களாயிருந்தனர். அவர்கள் தமது குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். 25 ஆனால் அத்தலைவர்கள் தமது முற்பிதாக்கள் தொழுதுவந்த தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்த தேவனால் அழிக்கப்பட ஜனங்கள் தொழுதுகொண்ட பொய் தெய்வங்களை தொழுதுவந்தனர்.

26 இஸ்ரவேலரின் தேவன் பூலைப் போருக்குப் போகும்படி செய்தார். பூல் அசீரியாவின் ராஜா, அவனது இன்னொரு பெயர் தில்காத் பில்நேசர். இவன் மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்களோடு சண்டையிட்டான். அவர்களை வீட்டிலிருந்து வெளியேறி கைதிகளாகும்படி பலவந்தப்படுத்தினான். பூல் அவர்களைப் பிடித்து ஆலா, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றங்கரை போன்ற இடங்களுக்குக் கொண்டு போனான். அந்த கோத்திரத்தினர் அவ்விடங்களில் அன்று முதல் இந்நாள்வரை வாழ்ந்து வருகின்றனர்.

லேவியின் சந்ததியார்

கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் குமாரர்கள்.

அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் கோகாத்தின் குமாரர்கள்,

அம்ராம், மோசே, மிரியாம் ஆகியோர் அம்ராமின் குமாரர்கள்.

நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் அம்ராமின் பிள்ளைகள் எலெயாசார் பினெகாசின் தந்தை, பினெகாஸ் அபிசுவாவின் தந்தை. அபிசுவா புக்கியின் தந்தை, புக்கி ஊசியின் தந்தை. ஊசி செராகியாவின் தந்தை, செராகியா மெராயோதின் தந்தை. மெராயோத் அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் அகிமாசின் தந்தை. அகிமாஸ் அசரியாவின் தந்தை, அசரியா யோகானானின் தந்தை. 10 யோகானான் அசரியாவின் தந்தை. (இவன்தான் சாலொமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டியபோது ஆசாரிய பணியைச் செய்தவன்.) 11 அசரியா அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. 12 அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் சல்லூமின் தந்தை. 13 சல்லூம் இல்க்கியாவின் தந்தை, இல்க்கியா அசரியாவின் தந்தை. 14 அசரியா செராயாவின் தந்தை, செராயா யோசதாக்கின் தந்தை.

15 யூதர்களையும், எருசலேம் ஜனங்களையும் கர்த்தர் வெளியேற்றியபோது யோசதாக்கினையும் கட்டாயமாக வெளியேற்றினார். இவர்கள் இன்னொரு நாட்டில் அடிமைகளானார்கள். நேபுகாத்நேசரைப் பயன்படுத்தி கர்த்தர் இவர்களைச் சிறை பிடித்தார்.

லேவியின் மற்ற சந்ததியினர்

16 கெர்சோம், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் குமாரர்கள்.

17 லிப்னி, சிமேயி ஆகியோர் கெர்சோமின் குமாரர்கள்.

18 கோகாத்தின் குமாரர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்.

19 மெராரியின் குமாரர்கள் மகேலி, மூசி ஆகியோர். இதுதான் லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் விபரமாகும். அவர்கள் தம் தந்தை பெயர்களோடு சேர்க்கப்பட்டனர்.

20 இது கெர்சோமின் சந்ததியினரின் விபரம்: கெர்சோமின் குமாரன் லிப்னி, லிப்னியின் குமாரன் யாகாத், யாகாத்தின் குமாரன் சிம்மா. 21 சிம்மாவின் குமாரன் யோவா, யோவாவின் குமாரன் இத்தோ, இத்தோவின் குமாரன் சேரா, சேராவின் குமாரன் யாத்திராயி.

22 இது கோகாத்தின் சந்ததியினரின் விபரம்: கோகாத்தின் குமாரன் அம்மினதாப், அம்மினதாபின் குமாரன் கோராகு, கோராகுவின் குமாரன் ஆசீர். 23 ஆசீரின் குமாரன் எல்க்கானா, எல்க்கானாவின் குமாரன் அபியாசாப், அபியாசாப்பின் குமாரன் ஆசிர். 24 ஆசிரின் குமாரன் தாகாத், தாகாத்தின் குமாரன் ஊரியேல், ஊரியேலின் குமாரன் ஊசியா, ஊசியாவின் குமாரன் சவுல்.

25 அமாசாயியும், ஆகிமோத்தும் எல்க்கானாவின் குமாரர்கள். 26 எல்க்கானாவின் இன்னொரு குமாரன் சோபாய், சோபாயின் குமாரன் நாகாத். 27 நாகாத்தின் குமாரன் எலியாப், எலியாப்பின் குமாரன் எரோகாம், எரோகாமின் குமாரன் எல்க்கானா. 28 சாமுவேலின் மூத்த குமாரன் யோவேல், இரண்டாவது குமாரன் அபியா.

29 இவர்கள் மெராரியின் பிள்ளைகள், மெராரியின் குமாரர்களில் ஒருவன் மகேலி. மகேலியின் குமாரன் லிப்னி, லிப்னியின் குமாரன் சிமேயி, சிமேயியின் குமாரன் ஊசா. 30 ஊசாவின் குமாரன் சிமெயா, சிமெயாவின் குமாரன் அகியா, அகியாவின் குமாரன் அசாயா.

ஆலயத்தின் இசைக் கலைஞர்கள்

31 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை கூடாரத்திற்குள் வைத்தபோது, அதைப் பாதுகாக்கவென தாவீதால் இசை சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு. 32 இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் பாடி சேவை செய்தனர். இப்பரிசுத்தக் கூடாரம் ஆசரிப்புக் கூடாரமென்றும் அழைக்கப்பட்டது. எருசலேமில் சாலோமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டும்வரை இவர்கள் சேவை செய்தனர். இவர்களது வேலைக்கான சட்டங்களைப் பின்பற்றி சேவை செய்து வந்தனர்.

33 கீழ்க்கண்ட பெயர்கள் இசை மூலம் சேவை செய்த ஆண்கள் மற்றும் அவர்களது குமாரர்களுக்குடையவை:

கோகாத் குடும்பத்தின் சந்ததியினர்: ஏமான் என்பவன் ஒரு பாடகன். இவன் யோவேலின் குமாரன், யோவேல் சாமுவேலின் குமாரன். 34 சாமுவேல் எல்க்கானாவின் குமாரன், எல்க்கானா யெரொகாமின் குமாரன், யெரொகாம் எலியேலின் குமாரன், எலியேல் தோவாகின் குமாரன். 35 தோவாக் சூப்பின் குமாரன், சூப் இல்க்கானாவின் குமாரன், இல்க்கானா மாகாத்தின் குமாரன், மாகாத் அமாசாயின் குமாரன், 36 அமாசாய் எல்க்கானாவின் குமாரன், எல்க்கானா யோவேலின் குமாரன், யோவேல் அசரியாவின் குமாரன், அசரியா செப்பனியாவின் குமாரன். 37 செப்பனியா தாகாதின் குமாரன், தாகாத் ஆசீரின் குமாரன், ஆசீர் எபியாசாப்பின் குமாரன், எபியாசாப் கோராகின் குமாரன், 38 கோராக் இத்சாரின் குமாரன், இத்சார் கோகாத்தின் குமாரன், கோகாத் லேவியின் குமாரன், லேவி இஸ்ரவேலின் குமாரன்.

39 ஏமானின் உறவினன் ஆசாப். இவன் ஏமானின் வலதுபுறத்தில் பணிசெய்வான். ஆசாப் பெரகியாவின் குமாரன், பெரகியா சிமேயாவின் குமாரன். 40 சிமேயா மிகாவேலின் குமாரன், மிகாவேல் பாசெயாவின் குமாரன், பாசெயா மல்கியாவின் குமாரன். 41 மல்கியா எத்னியின் குமாரன், எத்னி சேராவின் குமாரன், சேரா அதாயாவின் குமாரன். 42 அதாயா ஏத்தானின் குமாரன், ஏத்தான் சிம்மாவின் குமாரன், சிம்மா சீமேயின் குமாரன். 43 சீமேயி யாகாதின் குமாரன், யாகாத் கெர்சோமின் குமாரன், கெர்சோம் லேவியின் குமாரன்.

44 இவர்களுடைய சகோதரர்கள் மெராரியின் சந்ததியினர். இவர்கள் ஏமானின் இடது பக்கத்தில் நின்று பாடினார்கள். ஏதான் கிஷியின் குமாரன். கிஷி அப்தியின் குமாரன், அப்தி மல்லூகின் குமாரன். 45 மல்லூக் அஸபியாவின் குமாரன், அஸபியா அமத்சியாவின் குமாரன், அமத்சியா இல்க்கியாவின் குமாரன். 46 இல்க்கியா அம்சியின் குமாரன், அம்சி பானியின் குமாரன், பானி சாமேரின் குமாரன். 47 சாமேர் மகேலியின் குமாரன், மகேலி மூசியின் குமாரன், மூசி மெராரியின் குமாரன், மெராரி லேவியின் குமாரன்.

48 ஏமானும் ஆசாப்பின் சகோதரர்களும் லேவியின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். லேவியின் கோத்திரத்தில் வந்தவர்கள் லேவியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்பரிசுத்தக் கூடாரமே தேவனுடைய ஆலயம். 49 ஆனால் ஆரோனின் சந்ததியினர் மட்டுமே நறு மணப் பொருட்களை தகனபலிக்காக பலிபீடத்தில் எரிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை ஆரோனின் சந்ததியினர் தேவனுடைய ஆலயத்திலுள்ள மகா பரிசுத்தமான இடத்தில் செய்துவந்தனர். அவர்கள் இஸ்ரவேலரைச் சுத்தமாக்கும் சடங்குகளையும் செய்துவந்தனர். மோசே கட்டளையிட்ட சட்டங்களையும், அவர்கள் பின்பற்றி வந்தனர். மோசே தேவனுடைய ஊழியன்.

ஆரோனின் சந்ததியினர்

50 கீழ்க்கண்டவர்கள் ஆரோனின் குமாரர்கள்: ஆரோனின் குமாரன் எலெயாசார், எலெயாசாரின் குமாரன் பினெகாஸ், பினெகாஸின் குமாரன் அபிசுவா. 51 அபிசுவாவின் குமாரன் புக்கி, புக்கியின் குமாரன் ஊசி, ஊசியின் குமாரன் செராகியா. 52 செராகியாவின் குமாரன் மெராயோத், மெராயோத்தின் குமாரன் அமரியா, அமரியாவின் குமாரன் அகித்தூப். 53 அகித்தூப்பின் குமாரன் சாதோக், சாதோக்கின் குமாரன் அகிமாஸ்.

லேவியர் குடும்பங்களுக்கான வீடுகள்

54 ஆரோனின் சந்ததியினர் வாழ்ந்த இடங்கள் பின் வருவன: இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் வாழ்ந்தார்கள். கோகாத் குடும்பத்தினர் லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பங்கைப்பெற்றனர். 55 அவர்களுக்கு எப்ரோன் நகரமும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் கொடுக்கப்பட்டன. இவ்விடங்கள் யூதாவின் ஒரு பகுதியாக உள்ளது. 56 ஆனால் அந்நகரத்தின் வயல்களையும் கிராமங்களையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். 57 ஆரோனின் சந்ததியினருக்கு எப்ரோன் எனும் நகரம் கொடுக்கப்பட்டது. இது அடைக்கலம் தேடுபவர்களுக்கான நகரமாக[a] விளங்கியது. அதோடு அவர்களுக்கு லிப்னா, யாத்தீர், எஸ்தெ மோவா, 58 ஈலேன், தெபீர், 59 ஆசான், பெத்சேமே சஸ், ஆகிய நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள வெளி நிலங்களையும் கொடுத்தனர். 60 பென்யமீன் கோத்திரத்தினர் கேபா, அலெமேத், ஆனதோத், ஆகிய நகரங்களையும் அதன் வெளிநிலங்களையும் பெற்றனர்.

கோகாத் கோத்திரத்தினருக்கு 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன.

61 மற்ற கோகாத்தின் சந்ததியினர் 10 நகரங்களைப் பெற்றனர். இவை மனாசே கோத்திரத்தின் பாதி பேர்களிடம் இருந்து பெறப்பட்டன.

62 கெர்சோமின் கோத்திரத்தினர் 13 நகரங்களைப் பெற்றனர். அவர்கள் அவற்றை, இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் உள்ள மனாசேயின் ஒரு பகுதி, கோத்திரத்தினரிடமிருந்தும் பெற்றுக்கொண்டனர்.

63 மெராரி கோத்திரத்தினர் 12 நகரங்களைப் பெற்றனர். அவர்கள் அவற்றை ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களில் இருந்து பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றைச் சீட்டுக் குலுக்கல் முறையில் பெற்றுக்கொண்டனர்.

64 எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நகரங்களையும் வயல்களையும் லேவியர்களுக்குக் கொடுத்தனர். 65 அந்நகரங்கள் எல்லாம் யூதா, சிமியோன், பென்யமீன் ஆகியோர்களிடமிருந்து வந்தன. அவர்கள் இதனைச் சீட்டு குலுக்கல் மூலமே தீர்மானம் செய்தனர்.

66 சில நகரங்களை எப்பிராயீம் கோத்திரத்தினர் கோகாத் ஜனங்களுக்குக் கொடுத்தனர். அந்நகரங்கள் சீட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. 67 அவர்களுக்குச் சீகேம் எனும் நகரமும் கொடுக்கப்பட்டது. இது பாதுகாப்பான நகரம். அவர்களுக்கு கேசேரும் அதைச் சுற்றிய வெளிநிலங்களும் கொடுக்கப்பட்டன. 68 அதோடு யோக்மேயாம், பேத் ஓரோன். 69 ஆயலோன், காத்ரிம்மோன் ஆகிய நகரங்களையும் வெளிநிலங்களையும் பெற்றனர். அந்நகரங்கள் எப்பிராயீம் மலைநாட்டிற்குள் இருந்தன. 70 மனாசே கோத்திரத்தினரின் பாதி குடும்பங்களுடைய ஆனேர் மற்றும் பீலியாம் நகரங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கோகாத் கோத்திரத்தினருக்கு கொடுத்தனர். அந்நகரங்களைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் கோகாத் கோத்திரத்தினர் பெற்றனர்.

மற்ற லேவிய குடும்பத்தினர் வீடுகள் பெற்றது

71 கெர்சோம் குடும்பங்கள் மனாசே கோத்திரத்தின் பாதி குடும்பங்களிடமிருந்து பாசான் மற்றும் அஸ்தரோத் ஆகிய பகுதிகளிலிருந்த கோலானின் நகரங்களைப் பெற்றன. இந்நகரங்களின் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்களையும் அவர்கள் பெற்றார்கள்.

72-73 கெர்சோம் கோத்திரத்தினர் கேதேஸ், தாபிராத், ராமோத், ஆனேம் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை இசக்கார் கோத்திரத்தினருக்குரியவை.

74-75 கெர்சோம் கோத்திரத்தினர் மாஷால், அப்தோன், உக்கோக், ரேகோப் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவை ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தது.

76 கெர்சோம் கோத்திரத்தினர் கலிலேயாவிலுள்ள கேதேஸ், அம்மோன், கீரியாத்தாயீம் ஆகிய நகரங்களையும், அவற்றின் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவை நப்தலி கோத்திரத்தினருக்கு உரியவை.

77 மெராரியின் மற்ற ஜனங்களுக்கு ரிம்மோன், தாபோர் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புற நிலங்களையும் பெற்றனர். இவை செபுலோன் கோத்திரத்தினருக்குரியவை.

78-79 மெராரி கோத்திரத்தினர் மேலும் வனாந்திரத்திலிருந்த பேசேர் யாத்சா, கேதேமோத், மேப்பாத் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் பெற்றனர். இவை ரூபன் கோத்திரத்தினருக்குரியவை. ரூபன் கோத்திரத்தினர், எரிகோவுக்கப் புறமுள்ள யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே வாழ்ந்தனர்.

80-81 மெராரி கோத்திரத்தினர் மேலும் கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம், எஸ்போன், யாசேர் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியும் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை காத் கோத்திரத்தினருக்குரியவை.

யோவான் 6:1-21

5,000 க்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு

(மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17)

பிறகு இயேசு திபேரியாக் கடல் என அழைக்கப்படும் கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். ஏராளமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். ஏனென்றால் இயேசு வழியில் நோயாளிகளைக் குணப்படுத்தித் தன் வல்லமையை வெளிப்படுத்தியதை அவர்கள் கண்டிருந்தனர். இயேசு மலையின்மேல் ஏறினார். அங்கே தம்மைப் பின்தொடர்ந்தவர்களோடு உட்கார்ந்தார். அப்பொழுது யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது.

ஏராளமான மக்கள் அவரை நோக்கி வருவதை இயேசு கண்களை ஏறெடுத்து நோக்கினார். பிலிப்புவிடம் இயேசு, “இவர்களெல்லாம் உண்பதற்கு நாம் அப்பத்தை எங்கே வாங்குவது?” என்று கேட்டார். (பிலிப்புவை சோதனை செய்வதற்காகவே இயேசு அவனிடம் இவ்வாறு கேட்டார். தனது திட்டத்தை இயேசு ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார்.)

பிலிப்பு, “இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், கொஞ்சம் அப்பம் உண்பதற்குக்கூட, நாம் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டியதிருக்குமே” என்றான்.

அந்திரேயா அவரது இன்னொரு சீஷன். அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். அந்திரேயா இயேசுவிடம், “இங்கே ஒரு சிறுவன் வாற்கோதுமையால் ஆன ஐந்து அப்பத் துண்டுகளையும், இரண்டு சிறு மீன்களையும் வைத்திருக்கிறான். ஆனால் அவை இவ்வளவு மிகுதியான மக்களுக்குப் போதுமானதல்ல” என்றான்.

10 “மக்களை உட்காரும்படிக் கூறுங்கள்” என்றார் இயேசு. அந்த இடத்தில் நிறைய புல் இருந்தது. அங்கே ஐயாயிரம் எண்ணிக்கை வரையுள்ள ஆண்கள் உட்கார்ந்தனர். 11 பிறகு இயேசு அப்பத் துண்டுகளை எடுத்தார். அவர் தேவனுக்கு நன்றி சொன்னார். அதை அங்கு அமர்ந்திருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கச் செய்தார். அவர் மீனையும் அதைப்போலவே பகிர்ந்தளிக்கச் செய்தார். இயேசு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வேண்டியமட்டும் கொடுத்தார்.

12 அனைத்து மக்களும் வேண்டிய மட்டும் உண்டனர். அவர்கள் உண்டு முடித்ததும் இயேசு தன் சீஷர்களிடம், “உண்ணப்படாத அப்பத்துண்டுகளையும் மீன் துண்டுகளையும் சேகரியுங்கள். எதையும் வீணாக்க வேண்டாம்” என்றார். 13 எனவே சீஷர்கள் அவற்றைச் சேகரித்தனர். மக்கள் ஐந்து அப்பத்துண்டுகளிலிருந்தே உண்ண ஆரம்பித்தனர். ஆனால் உண்டு பிறகு மீதியிருந்த துணுக்குகளோ பன்னிரண்டு கூடைகளில் நிரப்பப்பட்டன. 14 இயேசு செய்த இந்த அற்புதத்தை மக்கள் கண்டனர். “இவர் உண்மையிலேயே உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்” என்றனர் மக்கள்.

15 அவரை மக்கள் ராஜாவாக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

இயேசு தண்ணீர் மீது நடத்தல்

(மத்தேயு 14:22-27; மாற்கு 6:45-52)

16 அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர். 17 அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத்தொடங்கினர். 18 காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன. 19 அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர். 20 “நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். 21 இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக்கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center