Old/New Testament
ரெகொபெயாம் முட்டாள்த்தனமாக நடந்துக்கொள்கிறான்
10 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமை ராஜாவாக்க விரும்பியதால் அவன் சீகேம் நகரத்திற்குப் போனான். 2 யெரொபெயாம், சாலொமோனுக்கு அஞ்சி ஓடி எகிப்தில் இருந்தான். அவன் நேபாத்தின் குமாரன். ரெகொபெயாம் புதிய ராஜாவாகப் போகிற செய்தியை யெரொபெயாம் கேள்விப்பட்டான். எனவே யெரொபெயாம் எகிப்திலிருந்து திரும்பி வந்தான். 3 இஸ்ரவேல் ஜனங்கள் யெரொபெயாமைத் தங்களோடு வரும்படி அழைத்தனர். பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், 4 “உனது தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெரிய பாரத்தைச் சுமப்பதுபோல் உள்ளது. இப்பாரத்தை எளிதாக்கும். பிறகு நாங்கள் உமக்கு சேவைச்செய்வோம்” என்றனர்.
5 ரெகொபெயாம் அவர்களிடம், “மூன்று நாட்களுக்குப் பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். எனவே எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள்.
6 பிறகு ராஜா ரெகொபெயாம் தன் தந்தையான சாலொமோனுடன் கூடவே இருந்த மூத்த பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்தான். அவர்களிடம் அவன், “இந்த ஜனங்களுக்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும்?” என்று கேட்டான்.
7 அம்முதியவர்கள் அவனிடம், “நீங்கள் அந்த ஜனங்களோடு கருணையோடு இருந்தால் அவர்கள் மனம் மகிழும்படி செய்யுங்கள். நல்ல முறையில் பேசுங்கள் பின் அவர்கள் உங்களுக்கு என்றென்றும் சேவை செய்வார்கள்” என்றனர்.
8 ஆனால் ரெகொபெயாம் முதியவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தன்னோடு வளர்ந்து தனக்கு சேவை செய்துவரும் இளைஞர்களிடம் ஆலோசனை கேட்டான். 9 அவர்களிடம் அவன், “நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்? அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? நான் அவர்களின் வேலை பாரத்தைக் குறைக்கவேண்டும் எனக் கேட்கிறார்கள். என் தந்தை அவர்கள்மேல் சுமத்திய பாரத்தைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று கேட்டான்.
10 ரெகொபெயாமோடு வளர்ந்த இளைஞர்களோ அவனிடம், “உன்னுடன் பேசிய ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது இதுதான். ஜனங்கள் உன்னிடம், ‘உங்கள் தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெருஞ்சுமையை சுமப்பது போல் உள்ளது. ஆனால் நீங்கள் அந்தச் சுமையைக் குறைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தப் பதிலைத்தான் நீ கூறவேண்டும்: ‘எனது சுண்டு விரலானது என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது! 11 என் தந்தை உங்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றினார். நானோ அதைவிடப் பெருஞ்சுமையை ஏற்றுவேன். என் தந்தை உங்களைச் சவுக்கினால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக் கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்று ஆலோசனை வழங்கினர்.
12 மூன்று நாட்களுக்குப் பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் வந்தனர். ராஜா ரெகொபெயாம், “மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்லி இருந்தான். 13 பிறகு ரெகொபெயாம் ராஜா அவர்களோடு மிகக் கடுமையாகப் பேசினான். முதியவர்கள் சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. 14 ரெகொபெயாம் ராஜா இளைஞர்கள் ஆலோசனை சொன்னபடியே பேசினான். அவன், “என் தந்தை உங்கள் சுமையை அதிகமாக்கினார். நான் அதைவிட அதிகமாக்குவேன். அவர் உங்களைச் சவுக்கால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக்கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்” என்றான். 15 எனவே ராஜா ரெகொபெயாம் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. இம்மாற்றங்கள் தேவனிடமிருந்து வந்ததினால் அவன் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. தேவன் இந்த விளைவை ஏற்படுத்தினார். அகியாவின் மூலமாக யெரொபெயாமுடன் கர்த்தர் பேசிய அவரது வார்த்தை உண்மையாகும்படி இது நடந்தது. அகியா சிலோனிய ஜனங்களிடமிருந்து வந்தவன். யெரொபெயாம் நேபாத்தின் குமாரன்.
16 இஸ்ரவேல் ஜனங்கள் தம் ராஜாவாகிய ரெகொபெயாம் தமது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கண்டனர். பிறகு அவர்கள் ராஜாவிடம், “நாங்களும் தாவீது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? ஈசாயின் நிலத்தில் நாங்கள் ஏதாவது பெற்றோமா? எனவே இஸ்ரவேலராகிய நாம் நமது வீடுகளுக்குப் போவோம். தாவீதின் குமாரன் தன் சொந்த ஜனங்களை ஆண்டுகொள்ளட்டும்!” என்றனர். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள். 17 ஆனால் யூத நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் பலர் இருந்தனர். ரெகொபெயாம் அவர்களை ஆண்டுவந்தான்.
18 கட்டாயமாக வேலைசெய்ய வேண்டும் என நியமிக்கப்பட்ட ஜனங்களுக்கெல்லாம் அதோனிராம் பொறுப்பாளியாக இருந்தான். அவனை ரெகொபெயாம் இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்பி வைத்தான். ஆனால் அவனை இஸ்ரவேல் ஜனங்கள் கல்லெறிந்து கொன்றனர். ரெகொபெயாம் ஓடிப்போய் தேரில் ஏறிக்கொண்டான். அவன் தப்பித்து எருசலேமிற்கு ஓடினான். 19 அன்று முதல் இன்று வரை இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்துக்கு எதிராகவே இருந்து வருகின்றனர்.
11 ரெகொபெயாம் எருசலேம் வந்தபோது 1,80,000 சிறந்த வீரர்களை அணி திரட்டினான். இவ்வீரர்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய கோத்திரங்களிடமிருந்து அணி திரட்டினான். இஸ்ரவேலர்களுக்கு எதிராகச் சண்டையிடவே அவர்களை அணி திரட்டினான். இதன் மூலம் அவர்களை தன் ஆட்சிக்குள் வைத்திருக்க முடியும் என்று நம்பினான். 2 ஆனால் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி செமாயாவிற்கு வந்தது. அவன் தேவனுடைய மனிதன். கர்த்தர் அவனிடம், 3 “யூதாவின் ராஜாவாகிய சாலொமோனின் குமாரன் ரெகொபெயாமிடமும், இஸ்ரவேலிலும், யூதாவிலும், பென்யமீனிலும் உள்ள ஜனங்களிடமும் கூறு என்று 4 கர்த்தர் சொன்ன செய்திகள் இவை தான்: ‘உன் சகோதரர்களோடு நீ சண்டை போடாதே! ஒவ்வொருவரையும் தம் சொந்த வீட்டுக்குப் போகவிடு. நான் இவ்வாறு நிகழும்படிச் செய்தேன்.’” எனவே ரெகொபெயாமும் அவனது படையும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து திரும்பி வந்தது. அவர்கள் யெரொபெயாமைத் தாக்கவில்லை.
ரெகொபெயாம் யூதாவை பலப்படுத்துகிறான்
5 ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்தான். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க யூதாவில் அவன் பலமான நகரங்களை நிர்மாணித்தான். 6 அவன் பெத்லேகம், ஏத்தாம், தெக்கோவா, 7 பெத்சூர், சோகோ, அதுல்லாம், 8 காத்து, மரேஷா, சீப்பு 9 அதோராயீம், லாகீசு, அசேக்கா, 10 சோரா, ஆயிலோன், எப்ரோன் ஆகிய நகரங்களைச் செப்பனிட்டான். யூதாவிலும் பென்யமீனிலுமிருந்த இந்த நகரங்கள் பலப்படுத்தப்பட்டன. 11 ரெகொபெயாம் இவற்றைப் பலப்படுத்திய பிறகு அவற்றில் தலைவர்களை நியமித்தான். அவர்களுக்கு உணவு, எண்ணெய், திராட்சைரசம் போன்றவற்றை விநியோகித்தான். 12 இவன் ஈட்டிகளையும், கேடயங்களையும் வைத்து அந்நகரங்களைப் பலப்படுத்தினான். யூதா, பென்யமீன் ஆகிய நாடுகளின் நகரங்களையும் ஜனங்களையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தான்.
13 இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஆசாரியர்களும் லேவியர்களும் ரெகொபெயாமோடு சேர்ந்து கொண்டு அவனுக்கேற்றவர்கள் ஆனார்கள். 14 லேவியர்கள் தம் புல்வெளிகளையும் வயல்களையும் விட்டுவிட்டு யூதாவுக்கும் எருசலேமிற்கும் வந்தனர். காரணம், யெரொபெயாமும் அவனது குமாரர்களும், லேவியர்கள் கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதை மறுத்தனர்.
15 யெரொபெயாம் தன் சொந்த ஆசாரியர்களையே மேடைகளில் பலிசெலுத்த தேர்ந்தெடுத்தான். அவன் செய்த ஆடு மற்றும் கன்றுக் குட்டியின் விக்கிரகங்களை அந்த மேடைகளில் அமைத்தான். 16 லேவியர்கள் இஸ்ரவேலை விட்டு விலகியதும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மீது நம்பிக்கைகொண்ட இஸ்ரவேலின் அனைத்துக் கோத்திரங்களிலுமிருந்த ஜனங்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களின் தேவனாகிய கர்த்தருக்கு காணிக்கை செலுத்த எருசலேமுக்கு வந்தார்கள். 17 அவர்கள் யூத அரசைப் பலமுள்ளதாக்கினார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்குச் சாலொமோனின் குமாரனான ரெகொபெயாமிற்கு உதவினார்கள். அவர்கள் இக்காலக்கட்டத்தில் தாவீதைப்போலவும் சாலொமோனைப் போலவும் வாழ்ந்ததால் இவ்வாறு செய்தனர்.
ரெகொபெயாமின் குடும்பம்
18 ரெகொபெயாம் மகலாத் என்னும் பெண்ணை மணந்தான். அவளது தந்தை எரிமோத். அவளது தாய் அபியாயேல், எரிமோத் தாவீதின் குமாரன். அபியாயேல் எலியாப்பின் குமாரத்தி. எலியாப் ஈசாயின் குமாரன். 19 மகலாத் ரெகொபெயாமிற்கு ஏயூஸ், சமரியா சாகாம் என்னும் குமாரர்களைப் பெற்றாள். 20 பிறகு ரெகொபெயாம் மாக்கா என்னும் பெண்ணையும் மணந்தான். அவள் அப்சலோமின் பேத்தி. இவள் இவனுக்கு அபியா, அத்தாயி, சீசா, செலேமித் ஆகியோரைப் பெற்றாள். 21 ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வேலைக்காரிகளையும் விட மாக்காவைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கு 18 மனைவியரும், 60 வேலைக்காரிகளும் இருந்தனர். இவனுக்கு 28 குமாரர்களும், 60 குமாரத்திகளும் இருந்தனர்.
22 ரெகொபெயாம் அபியாவைத் தனது சகோதரர்களுக்கும் மேலான தலைவனாகத் தேர்ந்தெடுத்தான். அவன் இவனை ராஜாவாக்க விரும்பியதால் இவ்வாறு செய்தான். 23 ரெகொபெயாம் புத்திசாலித்தனமாகத் தன் குமாரர்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய நாடுகளில் பரவலாக ஒவ்வொரு பலமான நகரத்திலும் இருக்கும்படி செய்தான். அவர்களுக்கு வேண்டியவற்றை விநியோகம் செய்தான். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.
எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமைத் தாக்குகிறான்
12 ரெகொபெயாம் ஒரு பலமிக்க ராஜா ஆனான். அவன் தனது ஆட்சியையும் பலமுள்ளதாக்கினான். பின்னர் அவனும், அவனது யூதா கோத்திரத்தினரும் கர்த்தருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். 2 சீஷாக் எருசலேம் நகரத்தை ரெகொபெயாமின் ஐந்தாவது ஆட்சியாண்டில் தாக்கினான். இவன் எகிப்தின் ராஜா. ரெகொபெயாமும், அவனுடன் ஆட்சி செய்தவர்களும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால் இவ்வாறு நடந்தது. 3 சீஷாக்கிடம் 12,000 இரதங்களும், 60,000 குதிரை வீரர்களும், எவராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுடைய படைவீரர்களும் இருந்தனர். இவனது பெரியப் படையில் லிபியன் வீரர்களும், சூக்கிய வீரர்களும், எத்தோப்பிய வீரர்களும் இருந்தனர். 4 சீஷாக் யூதாவிலுள்ள பலமிக்க நகரங்களை வென்றான். பிறகு தனது படையை எருசலேமிற்கு கொண்டு வந்தான்.
5 பிறகு செமாயா எனும் தீர்க்கதரிசி ரெகொபெயாமிடமும் யூதத் தலைவர்களிடமும் வந்தான். அந்த யூதத் தலைவர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். ஏனென்றால் அவர்கள் சீஷாக்குக்குப் பயந்தனர். செமாயா அவர்களிடம், “கர்த்தரால் சொல்லப்பட்டது இதுதான்: ‘ரெகொபெயாம்! நீயும், உனது ஜனங்களும் என்னைவிட்டு விலகி எனது சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டீர்கள். எனவே இப்போது உன்னைவிட்டு நான் விலகி நான் உங்களைச் சீஷாக்கின் கையில் அகப்படச் செய்வேன்’” என்றான்.
6 பிறகு யூதத் தவைர்களும், ரெகொபெயாம் ராஜாவும் வருத்தத்துடனும், பணிவுடனும் இருந்தனர். “கர்த்தர் சொல்வது சரிதான்” என்றனர்.
7 யூதத் தலைவர்களும், ராஜாவும் அடங்கிப் போனதைக் கர்த்தர் கவனித்தார். பிறகு கர்த்தரிடமிருந்து செமாயாவுக்குச் செய்தி வந்தது. கர்த்தர் செமாயாவிடம், “யூதத் தலைவர்களும், ராஜாவும் அடக்கமாயினர். எனவே நான் அவர்களை அழிக்கமாட்டேன். நான் விரைவில் அவர்களைக் காப்பேன். எனது கோபத்தை தீர்க்க சீஷாக்கை எருசலேமின் மீது அனுப்பமாட்டேன். 8 ஆனால் எருசலேம் ஜனங்கள் சீஷாக்கின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இதனால் அவர்களுக்கு எனக்கு சேவைச் செய்வதற்கும் மற்ற தேசத்து ராஜாக்களுக்கு சேவைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும்” என்றார்.
9 சீஷாக் எருசலேமைத் தாக்கினான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த கருவூலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். அரண்மனையில் இருந்த கருவூலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான். சாலொமோன் செய்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக் கொண்டான். 10 அவற்றுக்குப் பதிலாக ரெகொபெயாம் ராஜா வெண்கல கேடயங்களைச் செய்தான். அக்கேடயங்களை ரெகொபெயாம் அரண்மனை வாசல் காவல்காரர்களின் தலைவர்கள் கையில் கொடுத்தான். 11 ராஜா கர்த்தருடைய ஆலய வாசலுக்குள் நுழையும்போது காவலர்கள் வந்து கேடயங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். பிறகு அவர்கள் அக்கேடயங்களைத் தம் அறையிலே வைத்து பூட்டிவிடுவார்கள்.
12 ரெகொபெயாம் தனக்குள்ளே அடக்கமாகத் தாழ்வாக இருந்தபோது கர்த்தர் அவன் மீதுள்ள கோபத்தை விலக்கிக்கொண்டார். எனவே, கர்த்தர் ரெகொபெயாமை முழுவதுமாக அழிக்கவில்லை. ஏனென்றால் யூதாவில் சிலவற்றை நன்மையானதாகக் கண்டார்.
13 ரெகொபெயாம் தன்னை எருசலேமில் பலமுள்ள ராஜாவாக ஆக்கிக்கொண்டான். இவன் ராஜாவாகும்போது 41 வயது. இவன் எருசலேமில் 17 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். இந்நகரம் கர்த்தரால் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கர்த்தர் தனது பெயரை எருசலேமில் விளங்கும்படி செய்தார். ரெகொபெயாமின் தாய் நாமாள். நாமாள் அம்மோன் நாட்டிலிருந்து வந்தவள். 14 ரெகொபெயாம் தீயச் செயல்களைச் செய்தான். ஏனென்றால் அவனது மனதில் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை.
15 ரெகொபெயாம் தொடக்கக் காலமுதல், ஆட்சியின் இறுதிவரை செய்தச் செயல்களெல்லாம் தீர்க்கதரிசியான செமாயா மற்றும் ஞானதிருஷ்டிக்காரனான இத்தோ ஆகியோரின் எழுத்துக்களில் உள்ளன. இவர்கள் குடும்ப வரலாறுகளை எழுதினார்கள். ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருவரும் ஆட்சிபுரிந்தக் காலம் முழுவதும் போர் நடந்தது. 16 ரெகொபெயாம் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்ந்தான். அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு ரெகொபெயாமின் குமாரன் அபியா புதிய ராஜாவானான்.
30 இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார். 31 யூதர்கள் பலர் மரியாளோடு அவளது வீட்டில் இருந்தனர். அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். மரியாள் எழுந்து வேகமாகச் செல்வதைப் பார்த்து அவள் லாசருவின் கல்லறைக்குப் போகக்கூடும் என எண்ணினர். அவள் அங்கு அழப்போகலாம் என்று கருதி அவளோடு அவர்களும் சென்றனர். 32 இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் சென்றாள். அவள் இயேசுவைப் பார்த்ததும் குனிந்து அவரை வணங்கினாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்துபோயிருக்கமாட்டான்” என்று சொன்னாள்.
33 மரியாள் அழுவதை இயேசு பார்த்தார். அவளோடு வந்த யூதர்களையும் அவர் கவனித்தார். அவர்களும் அழுதனர். இயேசு மனப்பூர்வமாக வருந்தி, ஆழமாக வேதனைப்பட்டார். 34 “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார்.
அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர். 35 இயேசு அழுதார்.
36 இதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார்” என்றனர்.
37 ஆனால் சில யூதர்களோ, “இயேசு குருடனின் கண்களைக் குணப்படுத்தினார். லாசருவுக்கு உதவிசெய்ய. அவனை ஏன் சாகாமலிருக்கச் செய்திருக்கக் கூடாது?” என்று கேட்டனர்.
லாசருவை உயிர்ப்பித்தல்
38 மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது. 39 இயேசு, “அந்தப் பாறையை அகற்றுங்கள்” என்றார்.
மார்த்தாளோ, “ஆண்டவரே, லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதில் கெட்ட நாற்றம் வீசுமே” என்றாள். அவள் இறந்துபோன லாசருவின் சகோதரி.
40 இயேசு மார்த்தாளிடம், “நான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
41 ஆகையால் அவர்கள் அந்தப் பாறையை குகையின் வாசலில் இருந்து அகற்றினார்கள். இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்து “பிதாவே! நான் சொல்வதை நீர் கேட்டதற்காக நன்றி கூறுகிறேன். 42 எப்பொழுதும் நான் சொல்வதை நீர் கேட்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இங்கே கூடியிருக்கிற இம்மக்களுக்காகவே இவற்றைக் கூறுகிறேன். நீர்தான் என்னை அனுப்பினீர் என்று இவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். 43 இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார். 44 இறந்தவன் வெளியே வந்தான். அவனது கைகளிலும் கால்களிலும் துணிகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் முகத்தை ஒரு துண்டுத் துணி மூடியிருந்தது.
இயேசு மக்களிடம், “துணிகளை அப்புறப்படுத்தி அவனை விடுவியுங்கள்” என்றார்.
யூதத்தலைவர்களின் சதித்திட்டம்
(மத்தேயு 26:1-5; மாற்கு 14:1-2; லூக்கா 22:1-2)
45 மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். 46 ஆனால், சிலர் பரிசேயர்களிடம் சென்றனர். இயேசு செய்ததை அவர்கள் பரிசேயர்களிடம் சொன்னார்கள். 47 பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். “இனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான். 48 அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
49 அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 50 நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான்.
51 காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான். 52 ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார்.
53 அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர். 54 ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார்.
55 யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர். 56 மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். 57 ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.
2008 by World Bible Translation Center