Add parallel Print Page Options

5,000 த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு

(மத்தேயு 14:13-21; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14)

30 இயேசுவால் உபதேசம் செய்ய அனுப்பப்பட்ட அவரது சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடித் தாம் அனைவரும் செய்தவற்றையும் கற்பித்தவற்றையும் அவரிடம் சொன்னார்கள். 31 இயேசுவும், அவரது சீஷர்களும் மக்கள் நெருக்கடி மிக்க இடத்தில் இருந்தனர். அம்மக்கள் அளவில் மிக அதிகமாக இருந்தனர். இயேசுவுக்கும், அவரது சீஷர்களுக்கும் உணவு உட்கொள்ளக்கூட நேரம் இல்லாமல் இருந்தது. இயேசு தன் சீஷர்களிடம் “என்னோடு வாருங்கள். நாம் அமைதியான தனி இடத்துக்குப் போவோம். அங்கு நாம் ஓய்வு எடுக்கலாம்” என்றார்.

32 எனவே, இயேசுவும் அவரது சீஷர்களும் தனியாகச் சென்றனர். மக்களே இல்லாத இடத்துக்கு அவர்கள் படகில் சென்றனர். 33 ஆனால் அவர்கள் செல்வதை நிறைய மக்கள் கண்டனர். அந்த மக்களுக்கு அவர் இயேசு என்று தெரிந்தது. எனவே இயேசு செல்லுகிற இடத்துக்கு எல்லா நகர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கே ஓடினர். இயேசு போய்ச் சேர்வதற்கு முன்னரே அவர்கள் போய்ச் சேர்ந்துவிட்டனர். 34 இயேசு அங்கே போய்ச் சேர்ந்ததும் தனக்காக ஏராளமான மக்கள் காத்திருப்பதை அறிந்தார். அவர் அவர்களுக்காக மனம் உருகினார். ஏனென்றால், அவர்கள் மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போன்று கவனிக்க ஆளில்லாமல் இருந்தனர். எனவே அவர்களுக்கு இயேசு நிறைய உபதேசம் செய்தார்.

35 அன்று அதிக நேரமாயிற்று. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள், “இங்கு எந்த மக்களும் வாழவில்லை, மற்றும் வெகு நேரமாகிவிட்டது. 36 எனவே மக்களை அனுப்பிவிடும். அவர்களும் சுற்றி இருக்கிற பண்ணைகளுக்கும், நகர்களுக்கும் சென்று தேவையான உணவுப் பொருள்களை அவர்களாகவே வாங்கிக் கொள்வார்கள்” என்றனர்.

37 ஆனால் இயேசுவோ, “அவர்களுக்கு உண்ண நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்றார்.

சீஷர்களோ இயேசுவிடம், “இவர்கள் அனைவரும் உண்ணுகிற அளவுக்கு நம்மால் அப்பத்தை வாங்கத் தேவையான பணத்துக்கு நாம் அனைவரும் ஒரு மாதக் காலத்துக்கு உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும்” என்றனர்.

38 இயேசு, தன் சீஷர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன. போய்ப் பாருங்கள்” என்றார்.

சீஷர்கள் தங்களிடம் உள்ள அப்பங்களை எண்ணிப் பார்த்துவிட்டு இயேசுவிடம் வந்து, “நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன”, என்றார்கள்.

39 பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு, சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார். 40 ஆகவே எல்லா மக்களும் குழுக்களாக அமர்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 100 பேர் இருந்தனர்.

41 இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கொண்டார். அவர் வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அந்த அப்பங்களுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களை பங்கு வைத்துத் தன் சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு சொன்னார். மீனையும் அவ்வாறே பங்கிட்டு எடுத்துக் கொடுத்தார்.

42 எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். 43 மக்கள் உண்டு முடித்ததும் எஞ்சியுள்ளவற்றைச் சீஷர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேகரித்தனர். 44 ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர்.

Read full chapter