லூக்கா 9:10-17
Tamil Bible: Easy-to-Read Version
5,000 க்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு
(மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; யோவான் 6:1-14)
10 சீஷர்கள் திரும்பி வந்ததும் தம் பயணத்தின்போது அவர்கள் செய்த செயல்கள் அனைத்தையும் இயேசுவிடம் சொன்னார்கள். பின்னர், இயேசு அவர்களை பெத்சாயிதா என்னும் நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இயேசுவும் சீஷர்களும் தனிமையில் ஒருமித்திருக்க முடிந்தது. 11 ஆனால் இயேசு சென்ற இடத்தை மக்கள் அறிய நேர்ந்தது. அவர்கள் அவரைப் பின்பற்றி வந்தனர். இயேசு அவர்களை வரவேற்று தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து அவர்களுக்குக் கூறினார். நோயுற்றிருந்த மக்களைக் குணப்படுத்தினார்.
12 மதியத்திற்குப் பின்பு பன்னிரண்டு சீஷர்களும் இயேசுவிடம் வந்து, “இது மக்கள் வசிக்கிற இடம் அல்ல. மக்களை அனுப்பிவிடுங்கள். அவர்கள் உணவைத் தேடவும், இரவைக் கழிப்பதற்காக அக்கம் பக்கத்து நகரங்களிலும், பண்ணைகளிலும் இடம் தேடவும் வேண்டும்” என்றார்கள்.
13 ஆனால் இயேசு சீஷர்களை நோக்கி, “அவர்கள் உண்ணும்படியாக எதையாவது நீங்கள் கொடுங்கள்” என்றார்.
சீஷர்கள் “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே உள்ளன. இங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாங்கள் உணவு வாங்கி வர முடியுமா?” என்று கேட்டனர். 14 (அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தனர்.)
இயேசு தன் சீஷர்களிடம், “மக்களிடம் ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக அமரும்படி கூறுங்கள்” என்றார்.
15 சீஷர்களும் அவ்வாறே கூற எல்லா மக்களும் அதன்படியே அமர்ந்தனர். 16 அப்போது இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்தார். இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்னர் இயேசு உணவைப் பகிர்ந்து தன் சீஷர்களிடம் கொடுத்து, அவ்வுணவை மக்களுக்குக் கொடுக்குமாறு கூறினார். 17 எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். நிரம்ப உணவும் எஞ்சியது. சாப்பிடாது எஞ்சியதை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.
Read full chapter2008 by Bible League International