Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
அப்போஸ்தலர் 21:18-40

18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.

20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.

22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள [a] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.

25 “யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம்,

‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள்,

பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.

பவுல் கைதுசெய்யப்படுகிறார்

26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.

27 ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். அவர்கள் எல்லா மக்களிடமும் குழப்பம் விளைவித்தனர். அவர்கள் பவுலைப் பிடித்தனர். 28 அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள். 29 பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர்.

30 எருசலேமின் எல்லா மக்களும் நிலைகுலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஓடிப் பவுலைப் பிடித்தனர். தேவாலயத்துக்கு வெளியே அவனை இழுத்து வந்தனர். உடனே கதவுகள் மூடப்பட்டன. 31 மக்கள் பவுலைக் கொல்ல முயற்சித்தனர். எருசலேமிலுள்ள ரோமப் படை அதிகாரி நகரம் முழுவதும் தொல்லை அடைந்துள்ளது என்ற செய்தியைப் பெற்றான். 32 உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.

33 அதிகாரி பவுலிடம் சென்று அவனைக் கைது செய்தான். இரண்டு விலங்குகளால் பவுலைக் கட்டுமாறு அதிகாரி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின் அதிகாரி, “இம்மனிதன் யார்? இவன் செய்த தவறு என்ன?” என்று கேட்டான். 34 அங்கிருந்தோரில் சிலர் ஒன்றைக் கூக்குரலிடவும் பிறர் வேறொன்றைக் கூக்குரலிடவும் செய்தனர். குழப்பமாகவும், கூச்சலாகவும் இருந்தமையால் அதிகாரி நடந்த உண்மையை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அதிகாரி வீரர்களிடம் பவுலைப் படைக்கூடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினான். 35-36 எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.

37 வீரர்கள் பவுலைப் படைக்கூடத்திற்குள் கொண்டுசெல்லத் தயாராயினர். ஆனால் பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், “நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா?” என்று கேட்டான். அதிகாரி, “நீ கிரேக்க மொழி பேசுகிறாயா? 38 அப்படியானால் நான் நினைத்தது போன்ற மனிதன் அல்ல நீ. சமீபத்தில் அரசுக்கு எதிராகத் தொல்லை ஏற்படுத்திய எகிப்திய மனிதன் என்று நான் எண்ணினேன். எகிப்திய மனிதன் நாலாயிரம் கொலையாளிகளை பாலைவனத்திற்குக் கூட்டிச் சென்றான்” என்றான்.

39 பவுல், “இல்லை நான் தர்சுவைச் சேர்ந்த யூத மனிதன். தர்சு சிலிசியா நாட்டில் உள்ளது. அம்முக்கியமான நகரின் குடிமகன் நான். தயவு செய்து நான் மக்களிடம் பேச அனுமதியுங்கள்” என்றான்.

40 பவுல் மக்களிடம் பேச அதிகாரி அனுமதித்தான். எனவே பவுல் படிகளில் ஏறி நின்றான். மக்கள் அமைதியாக இருக்கும்படியாகக் கைகளால் சைகை செய்தான். மக்கள் அமைதியடைந்ததும் பவுல் அவர்களோடு பேசினான். அவன் யூதமொழியைப் பயன்படுத்தினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center