Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
அப்போஸ்தலர் 18

கொரிந்துவில் பவுல்

18 இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான். கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்துகொரிந்துவுக்கு வந்திருந்தனர். கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.

ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பவுல் ஜெப ஆலயத்தில் யூதரோடும் கிரேக்கரோடும் பேசினான். அவர்கள் இயேசுவில் விசுவாசம்கொள்ள ஒப்புமாறு செய்வதற்குப் பவுல் முயற்சி செய்துகொண்டிருந்தான். சீலாவும் தீமோத்தேயுவும் மக்கதோனியாவிலிருந்துகொரிந்துவிலுள்ள பவுலிடம் வந்தனர். இதன் பிறகு பவுல் தனது நேரம் முழுவதையும் மக்களுக்கு நற்செய்தியைக் கூறுவதிலேயே செலவிட்டான். இயேசுவே கிறிஸ்து என்பதை அவன் யூதர்களுக்குக் காட்டினான். ஆனால் யூதர்கள் பவுலின் போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. சில புண்படுத்தும் வார்த்தைகளை யூதர்கள் கூறினர். எனவே பவுல் உடையிலிருந்த தூசியை உதறினான். அவன் யூதரை நோக்கி, “நீங்கள் இரட்சிக்கப்படாவிட்டால் அது உங்களின் தவறுதான்! நான் என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன்! இதன் பிறகு, நான் யூதரல்லாத மக்களிடம் மட்டுமே செல்வேன்!” என்றான்.

பவுல் ஜெப ஆலயத்தை விட்டு யுஸ்து என்பவரின் வீட்டிற்குப் போனான். இம்மனிதன் உண்மையான தேவனை வணங்கினான். அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்திருந்தது. அந்த ஜெப ஆலயத்திற்கு அதிகாரி கிறிஸ்பு என்பவன். கிறிஸ்புவும் அவன் வீட்டில் வசிக்கும் எல்லா மக்களும் கர்த்தரை விசுவாசித்தனர். கொரிந்துவிலுள்ள வேறு பலரும் பவுல் கூறியதைக் கேட்டனர். அவர்களும் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் பெற்றனர்.

இரவு வேளையில் பவுலுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. கர்த்தர் அவனை நோக்கி, “பயப்படாதே! மக்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்து செய். நிறுத்தாதே! 10 நான் உன்னோடு இருக்கிறேன். யாரும் உன்னை தாக்கித் துன்புறுத்த முடியாது. என்னுடைய மக்கள் பலர் நகரத்தில் இருக்கிறார்கள்” என்றார். 11 ஒன்றரை ஆண்டு காலம் பவுல் அங்கேயே தங்கி மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை உபதேசித்தான்.

கல்லியோன் முன் பவுல்

12 கல்லியோன் அகாயா நாட்டின் ஆளுநரானான். அக்காலத்தில் யூதர்களில் சிலர் பவுலுக்கு எதிராகக் குழுவாக வந்தனர். அவர்கள் பவுலை நீதி மன்றத்திற்குக் கொண்டு போனார்கள். 13 யூதர்கள் கல்லியோனிடம், “யூத விதிக்கு மாறான வகையில் தேவனை வழிபடும்படி இம்மனிதன் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறான்!” என்றார்கள்.

14 பவுல் ஏதோ சொல்ல இருந்தான். ஆனால் கல்லியோன் யூதர்களிடம், “நீங்கள் பெரிய குற்றத்தைக் குறித்தோ அல்லது தவறைக் குறித்தோ புகார் செய்திருந்தால் நான் உங்களுக்குச் செவிசாய்த்திருப்பேன். 15 ஆனால் யூதர்களாகிய நீங்கள் கூறுபவையோ வார்த்தைகள், பெயர்கள் ஆகியவற்றைப் பற்றிய வினாக்களும், உங்களுடைய சட்டத்தைப் பற்றிய வாக்குவாதமும் மட்டுமேயாகும். எனவே நீங்களே இந்தப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். இந்த விஷயங்களில் நான் நீதிபதியாக இருக்க விரும்பவில்லை!” என்றான். 16 பின் கல்லியோன் அவர்களை நீதிமன்றத்தை விட்டுப்போகச் செய்தான்.

17 அவர்கள் எல்லோரும் சொஸ்தேனேயைப் பிடித்துக்கொண்டார்கள். (சொஸ்தேனே அப்போது ஜெப ஆலயத்தின் தலைவனாக இருந்தான்) அவர்கள் சொஸ்தேனேயை நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். ஆனால் கல்லியோன் இதைக்குறித்து எந்தக் கவலையும்படவில்லை.

அந்தியோகியாவுக்குத் திரும்புதல்

18 பவுல் சகோதரர்களுடன் பலநாட்கள் தங்கியிருந்தான். பின் அவன் அவர்களை விட்டுப் புறப்பட்டு, சிரியாவிற்குக் கடற்பயணமானான். பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் அவனோடிருந்தனர். கெங்கிரேயாவில் பவுல் தனது தலைமயிரைக் களைந்தான். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தான் என்பதை இது உணர்த்தியது. 19 பின் அவர்கள் எபேசு பட்டணத்தை அடைந்தார்கள். இங்கு அவன் ஆக்கில்லாவையும், பிரிசில்லாவையும் பிரிந்தான். பவுல் எபேசுவில் இருந்தபோது ஜெப ஆலயத்திற்குள் சென்று யூதரோடு பேசினான். 20 யூதர்கள் பவுலை இன்னும் சில காலம் தங்குமாறு வேண்டினார்கள். ஆனால் பவுல் மறுத்துவிட்டான். 21 “ஆனால் தேவன் விரும்பினால் நான் உங்களிடம் மீண்டும் வருவேன்” என்று புறப்படும்பொழுது கூறினான். எனவே பவுல் எபேசுவிலிருந்து மீண்டும் கடற்பயணம் செய்தான்.

22 பவுல் செசரியா நகரத்திற்குச் சென்றான். பின்னர் அவன் எருசலேமிலிருந்த சபையினரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தினான். அதன் பிறகு பவுல் அந்தியோகியா நகரத்திற்குச் சென்றான். 23 பவுல் அந்தியோகியாவில் சிலகாலம் தங்கியிருந்தான். பின் அவன் கலாத்தியா, பிரிகியா நாடுகள் வழியாகச் சென்றான். இந்நாடுகளில் பவுல் ஊர் ஊராகப் பயணம் செய்தான். அவன் இயேசுவின் சீஷர்கள் அனைவரையும் பலப்படுத்தினான்.

அப்பொல்லோவின் ஊழியம்

24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் வேத வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள்.

27 அகாயா நாட்டிற்குப் போவதற்கு அப்பொல்லோ விரும்பினான். அதற்கு எபேசுவின் சகோதரர்கள் அவனுக்கு உதவினர். அகாயாவிலுள்ள இயேசுவின் சீஷர்களுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் அப்பொல்லோவை இச்சீஷர்கள் வரவேற்குமாறு அவர்கள் கேட்டனர். அகாயாவில் உள்ள இந்தச் சீஷர்கள் தேவனுடைய கிருபையின் மூலமாக இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வந்து சேர்ந்தபொழுது அவன் அவர்களுக்கு மிகவும் உதவினான். 28 அவன் எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center