New Testament in a Year
பவுல் பயணத்திட்டம்
21 இக்காரியங்களுக்குப் பிறகு, பவுல் எருசலேமுக்குச் செல்லத் திட்டமிட்டான். மக்கதோனியா, அகாயா நாடுகள் வழியாகச் சென்று, பின் எருசலேமுக்குச் செல்லப் பவுல் திட்டமிட்டான். பவுல், “நான் எருசலேமை அடைந்த பிறகு, ரோமையும் பார்க்க வேண்டும்” என்று எண்ணினான். 22 தீமோத்தேயுவும், எரஸ்துவும் பவுலுக்கு உதவியவர்களில் இருவர். மக்கதோனியாவுக்கு அவர்களைத் தனக்கு முன்பாகவே பவுல் அனுப்பினான். ஆசியாவில் இன்னும் சிலகாலம் பவுல் தங்கியிருந்தான்.
எபேசுவில் குழப்பம்
23 ஆனால் அக்காலத்தில் எபேசுவில் மிகத் தீவிரமான ஒரு குழப்பம் ஏற்பட்டது. தேவனுடைய வழியைக் குறித்த குழப்பம் அது. அவையெல்லாம் இவ்வாறு நிகழ்ந்தன. 24 தெமெத்திரியு என்னும் பெயர் கொண்ட மனிதன் ஒருவன் இருந்தான். அவன் வெள்ளி வேலை செய்பவனாக இருந்தான். ஆர்தமிஸ் தேவதையின் தேவாலயத்தைப் போன்று தோற்றமளித்த வெள்ளியாலான சிறிய மாதிரி தேவாலயங்களை அவன் செய்து வந்தான். இவ்வேலையைச் செய்தவர்கள் மிகுந்த பணம் சம்பாதித்தார்கள்.
25 இதே வேலையைச் செய்து வந்தவர்கள் அனைவரையும் அதன் தொடர்பான வேலையைச் செய்தவர்களையும் தெமெத்திரியு ஒன்று கூட்டினான். தெமெத்திரியு அவர்களை நோக்கி, “நமது வளம் இத்தொழிலைச் சார்ந்துள்ளதை அறிவீர்கள். 26 ஆனால் இந்த மனிதன் பவுல் செய்துகொண்டிருப்பதைப் பாருங்கள்! அவன் சொல்வதைக் கேளுங்கள்! பவுல் மனிதர்களைத் தூண்டி, மனம் மாற்றிவிட்டான். எபேசுவிலும் அநேகமாக ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலும் இதைச் செய்திருக்கிறான். மனிதன் செய்கின்ற கடவுள் சிலைகள் உண்மையானவை அல்ல என்று பவுல் சொல்கிறான். 27 பவுல் சொல்கின்ற இந்தக் காரியங்கள் மக்களை, நமது வேலைக்கெதிராகத் திருப்பக்கூடும். ஆனால் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. பெரிய தேவியான ஆர்தமிஸின் தேவாலயம் முக்கியமானதல்ல என்று மக்கள் நினைக்கக் கூடும். அவளது பெருமை அழிக்கப்படக்கூடும். ஆசியாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் வழிப்படுகின்ற தேவதை ஆர்தமிஸ் ஆவாள்” என்றான்.
28 அம்மனிதர்கள் இதனைக் கேட்டபோது மிகவும் கோபமுற்றனர். அவர்கள், “எபேசு பட்டணத்தார்களின் தேவியான ஆர்தமிஸே பெரியவள்” என்று உரக்க கூவினர். 29 நகரத்தின் எல்லா மக்களும் குழப்பமான நிலையில் காயுவையும், அரிஸ்தர்க்குவையும் பிடித்தார்கள். (இவ்விருவரும் மக்கதோனியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பவுலோடு பயணம் செய்துகொண்டிருந்தனர்.) பின் எல்லா மக்களும் அரங்கிற்குள் ஓடினார்கள். 30 பவுல் உள்ளே சென்று கூட்டத்தில் பேச விரும்பினான். ஆனால் இயேசுவின் சீஷர்கள் அவனைப் போக அனுமதிக்கவில்லை. 31 மேலும் நாட்டின் சில தலைவர்கள் பவுலின் நண்பர்களாக இருந்தனர். இத்தலைவர்கள் அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அவர்கள் பவுல் அரங்கிற்குள் செல்ல வேண்டாமென்று கூறினர்.
32 ஒருவர் சத்தம் போட்டு ஒன்றையும் இன்னொருவர் சத்தம் போட்டு இன்னொன்றையும் சொன்னார்கள். மேலும் அவர்கள் எதற்காகக் கூடியிருக்கிறார்கள் என்பதைப் பெரும்பாலோர் அறியாதவாறு கூட்டத்தில் குழப்பம் மிகுந்திருந்தது. 33 யூதர்கள் அலெக்ஸாண்டர் என்னும் பெயருள்ள ஒருவனை மக்கள் முன்பாக நிறுத்தினர். அவன் செய்ய வேண்டியதை மக்கள் அவனுக்கு விளக்கினார்கள். மக்களுக்குக் காரியங்களை விளக்கவேண்டியிருந்ததால் அலேக்ஸாண்டர் தனது கையை அமைதிக்காக அசைத்தான். 34 அலெக்ஸாண்டர் ஒரு யூதன் என்பதை மக்கள் அடையாளம் கண்டபோது அவர்கள் எல்லோரும் உரத்த குரலில் கூச்சலிட ஆரம்பித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். மக்கள் “எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை பொருந்தியவள்! எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை மிக்கவள்! ஆர்தமிஸ் பெரியவள்!” என்றனர்.
35 நகர அலுவலன் மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினான். அவன், “எபேசுவின் மக்களே! ஆர்தமிஸ் தேவியின் தேவாலயத்தையும் பரலோகத்திலிருந்து விழுந்த அவளது பரிசுத்தப் பாறையையும் [a] பெற்ற நகரம் எபேசு என்பதை எல்லா மக்களும் அறிவர். 36 இவற்றை யாரும் மறுக்க முடியாது. எனவே நீங்கள் அமைதியாக இருங்கள். முரட்டுத்தனமாக எதையும் செய்யாதீர்கள்
37 “நீங்கள் இந்த மனிதர்களை அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால் நமது தேவிக்கு விரோதமாக அவர்கள் எதுவும் கூறவில்லை. அவள் தேவாலயத்திலிருந்து அவர்கள் எதையும் திருடவில்லை. 38 நம்மிடம் நீதி வழங்கும் மன்றங்களும் நீதிபதிகளும் இருக்கிறார்கள். தெமெத்திரியுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் எவருக்கேனும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றனவா? அவர்கள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும்! அங்கே குற்றச்சாட்டுகளையும் எதிர் குற்றச்சாட்டுக்களையும் வைக்கலாம்.
39 “நீங்கள் பேசவேண்டியது வேறு ஏதேனும் உள்ளதா? அப்படியானால் மக்களின் நகரமன்றம் நமக்கிருக்கிறது. அங்கு முடிவெடுக்கலாம். 40 நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்று ஒருவன் இந்தத் தொல்லையைப் பார்த்துவிட்டு, நாம் கலகத்தை உண்டாக்குகிறோம் என்று கூறலாம். இந்தத் தொல்லையை நம்மால் விளக்க முடியாது, ஏனெனில் இக்கூட்டத்திற்கு உண்மையான காரணம் எதுவும் இல்லை” என்றான். 41 நகர அலுவலன் இவற்றைக் கூறிய பிறகு, அவன் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினான். எல்லா மக்களும் கலைந்தார்கள்.
2008 by World Bible Translation Center