Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
அப்போஸ்தலர் 13:26-52

26 “எனது சகோதரர்களே! ஆபிரகாமின் குடும்பத்து மக்களே! உண்மையான தேவனை வணங்கும் யூதரல்லாதோரே, கவனியுங்கள்! மீட்பைக் குறித்த செய்தி நமக்காக அனுப்பப்பட்டுள்ளது. 27 எருசலேமில் வாழும் யூதர்களும், யூதத் தலைவர்களும் இயேசுவே மீட்பர் என்பதை உணரவில்லை. இயேசுவைக் குறித்து தீர்க்கதரிசிகள் எழுதிய வார்த்தைகள் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் யூதர்களுக்கு வாசிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யூதர்கள் இயேசுவைக் குற்றப்படுத்தினார்கள். அவர்கள் இதைச் செய்தபோது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறும்படிச் செய்தார்கள். 28 இயேசு இறப்பதற்கான உண்மையான காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவரைக் கொல்லும்படியாக பிலாத்துவைக் கேட்டார்கள்.

29 “கிறிஸ்துவுக்கு ஏற்படும் என வேதவாக்கியங்கள் கூறிய எல்லா தீமைகளையும் அந்த யூதர்கள் செய்தார்கள். பின் அவர்கள் இயேசுவைச் சிலுவையிலிருந்து இறக்கி, அவரை ஒரு கல்லறையில் வைத்தார்கள். 30 ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார்! 31 அதன் பிறகு, கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு இயேசுவோடு வந்திருந்தவர்கள் அவரைப் பல நாட்கள் கண்டார்கள். இவர்களே, இப்போது எல்லா மக்களுக்கும் அவரது சாட்சிகள்.

32 “தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறோம். 33 நாம் அவர்களுடைய மக்கள். இந்த வாக்குறுதி நமக்கு உண்மையாகுமாறு தேவன் செய்தார். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியபடியால் தேவன் இதைச் செய்தார். சங்கீதம் இரண்டிலும் நாம் இதைப்பற்றி வாசிக்கிறோம்.

“‘நீர் எனது மகன்,
    இன்று நான் உமது தந்தையாகி இருக்கிறேன்.’ (A)

34 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். இயேசு மீண்டும் கல்லறைக்கு ஒரு போதும் போகமாட்டார். புழுதியாகமாட்டார். எனவே தேவன் சொன்னார்:

“‘நான் தாவீதுக்குச் செய்த தூய உண்மையான வாக்குறுதிகளை உங்களுக்குக் கொடுப்பேன்.’ (B)

35 ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்:

“‘உங்களது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறையில் மக்கிப்போக அனுமதிக்கமாட்டீர்கள்.’ (C)

36 “தேவனுடைய விருப்பத்தை தாவீது உயிரோடிருக்கும் காலத்தில் நிறைவேற்றினான். பின் அவன் இறந்தான். தாவீது அவனது முன்னோரோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனது சரீரமும் கல்லறையில் மக்கிப் போனது. 37 ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை. 38-39 சகோதரரே, நாங்கள் உங்களுக்குக் கூறுவது என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர் மூலமாக உங்கள் பாவங்களின் மன்னிப்பை நீங்கள் பெற முடியும். மோசேயின் சட்டம் உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்க முடியவில்லை. ஆனால் இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் இயேசுவின் மூலமாகத் தனது எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான். 40 சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,

41 “‘ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள்.
    நீங்கள் வியப்புறக்கூடும்,
    ஆனால் மரித்து அழிவீர்கள்.
ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன்.
சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்’” (D)

என்றனர்.

42 பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தை விட்டுச் செல்லும்பொழுது, அடுத்த ஓய்வு நாளில் மீண்டும் வந்து இவற்றைக் குறித்து இன்னும் பல விஷயங்களை அவர்களுக்குச் சொல்லுமாறு மக்கள் கூறினார்கள். 43 இக்கூட்டத்திற்குப் பின், அந்த இடத்திலிருந்து யூதர்கள் பலர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். யூதர்களோடு யூத மதத்திற்கு மாறிய பலரும் இருந்தார்கள். இவர்களும் உண்மையான தேவனை வணங்கினார்கள். பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு அவர்களை உற்சாகமூட்டினார்கள்.

44 அடுத்த ஓய்வு நாளில் அநேகமாக நகரத்தின் எல்லா மக்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக ஒருமித்துக் கூடினார்கள். 45 யூதர்கள் அந்த எல்லா மக்களையும் அங்கே கண்டார்கள். அது அவர்களுக்கு மிகுந்த பொறாமையை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் வெகு தீமையான சில காரியங்களைக் கூறி பவுல் கூறிய வார்த்தைகளுக்கு எதிராக விவாதித்தார்கள். 46 ஆனால் பவுலும் பர்னபாவும் மிகவும் துணிச்சலாகப் பேசினார்கள். அவர்கள், “யூதர்களாகிய உங்களுக்கு முதலில் தேவனுடைய செய்தியை நாங்கள் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். நீங்கள் உங்களை இழக்கப்பட்டவர்களாக நித்தியமான வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்கள்! எனவே நாங்கள் இப்போது வேறு தேசங்களின் மக்களிடம் செல்வோம்! 47 இதைத் தான் நாங்கள் செய்யும்படியாக ஆண்டவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறினார்:

“‘இரட்சிப்பின் பாதையை உலகின் எல்லா மக்களுக்கும் நீங்கள்
    காட்டும் பொருட்டு உங்களை வேறு தேசங்களுக்கு ஒளியாக்கினேன்.’” (E)

48 பவுல் இவ்வாறு கூறியதை யூதரல்லாத மக்கள் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சிகொண்டனர். அவர்கள் கர்த்தரின் செய்திக்கு மதிப்பளித்தனர். பல மக்கள் செய்தியை நம்பினர். இவர்கள் நித்தியமான வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாவர்.

49 எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது. 50 ஆனால் யூதர்கள் சில முக்கியமான பக்தியுள்ள பெண்களையும், நகரத் தலைவர்களையும் சினமடையும்படியாகவும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராகவும் நகரத்திலிருந்து கிளப்பி விட்டனர். இந்த மக்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிரான செயல்களைச் செய்து அவர்களை ஊரை விட்டு வெளியேறும்படிச் செய்தனர். 51 எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள். 52 ஆனால் அந்தியோகியாவிலுள்ள இயேசுவின் சீஷர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து பரிசுத்த ஆவியால் நிரம்பினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center