Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 28

யாக்கோபு மனைவியைத் தேடுதல்

28 ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தான். அவனுக்கு ஒரு ஆணையிட்டான். “நீ ஒரு கானானியப் பெண்ணை மனைவியாக்கக் கூடாது. எனவே நீ இந்த இடத்தைவிட்டுப் பதான் ஆராமுக்குப் போ. உன் தாயின் தந்தையான பெத்துவேல் வீட்டிற்குப் போ. உன் தாயின் சகோதரனான லாபான் அங்கு வாழ்கிறான். அவனது மகள்களில் ஒருத்தியை மணந்துகொள். சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். உனக்கு நிறைய குழந்தைகள் பிறப்பார்கள். ஒரு பெரிய தேசத்தின் தந்தையாவாய். தேவன் உன்னையும் உன் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பார். ஆபிரகாமையும் அப்படித்தான் ஆசீர்வதித்தார். நீ வாழ்கிற நாடு உனக்குச் சொந்தமாகும். தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த நாடு இது” என்றான்.

ஆகவே ஈசாக்கு யாக்கோபை பதான் ஆராமுக்கு அனுப்பி வைத்தான். யாக்கோபும் லாபானிடம் போனான். பெத்துவேல் லாபானுக்கும் ரெபெக்காளுக்கும் தந்தை. ரெபெக்காள் ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் தாய்.

தன் தந்தை யாக்கோபை ஆசீர்வதித்ததையும் ஒரு மனைவியைத் தேட யாக்கோபை பதான் ஆராமுக்கு தன் தந்தை அனுப்பியதையும், கானானியப் பெண்களை மணந்துகொள்ளக் கூடாது என்று ஆணை இட்டதையும் ஏசா அறிந்துகொண்டான். யாக்கோபு தன் தாயும், தந்தையும் சொன்னதைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்து பதான் ஆராமுக்குப் போனதையும் அறிந்தான். இதனால் ஈசாக்கு தம் பிள்ளைகள் கானானியப் பெண்களை மணந்துகொள்வதை விரும்பவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். அவனுக்கு ஏற்கெனவே இரண்டு மனைவியர் இருந்தனர். ஆனாலும் அவன் இஸ்மவேலிடம் போய் அவன் மகளாகிய மகலாத்தை மணந்துக்கொண்டான். இஸ்மவேல் ஆபிரகாமின் மகன். மகலாத் நெபாயோத்தின் சகோதரி.

பெத்தேல்-தேவனுடைய வீடு

10 யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்குப் போனான். 11 அவன் பயணத்தின்போது சூரியன் மறைந்தது. அன்றைய இரவு தங்கும்பொருட்டு ஒரு இடத்துக்குச் சென்றான். அங்கே ஒரு கல்லை எடுத்து அதை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 12 யாக்கோபு ஒரு கனவு கண்டான். கனவில் வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாய் இருந்த ஒரு ஏணியைக் கண்டான். தேவதூதர்கள் அதில் ஏறி மேலும் கீழும் வந்து போய்க்கொண்டிருந்தனர். 13 கர்த்தர் ஏணியின் அருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டான். கர்த்தர், “நானே தேவன். உன் தாத்தாவான ஆபிரகாமுக்கும் நானே தேவன். நான் ஈசாக்குக்கும் தேவன். இப்போது நீ படுத்திருக்கிற பூமியையே உனக்குக் கொடுப்பேன். இது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் உரியதாகும். 14 உனக்கு எண்ணிறந்த சந்ததிகள் உருவாகுவார்கள். பூமியில் உள்ள தூளைப்போன்று அவர்கள் எண்ணிக்கையில் நிறைந்திருப்பார்கள். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமாக வடக்கிலும் தெற்கிலுமாகப் பரவுவார்கள். உன்னாலும் உன் சந்ததிகளாலும் உலகிலுள்ள குடும்பங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

15 “நான் உன்னோடு இருக்கிறேன். நீ போகிற ஒவ்வொரு இடத்திலும் உன்னைக் காப்பாற்றுவேன். நான் மீண்டும் உன்னை இங்கே கொண்டுவருவேன். எனது வாக்குறுதியை முடிக்கும்வரை உன்னை விட்டு விலகமாட்டேன்” என்றார்.

16 உடனே யாக்கோபு தனது தூக்கத்திலிருந்து எழுந்தான். “கர்த்தர் இங்கேதான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் தூங்கும்வரை இதை அறிந்துகொள்ளவில்லை” என்றான்.

17 அவனுக்கு பயம் வந்தது, “இது மிகச் சிறந்த இடம். இது தேவனுடைய வீடு, பரலோகத்தின் வாசல்” என்றான்.

18 யாக்கோபு அதிகாலையில் எழுந்ததும் தலைக்கு வைத்துப்படுத்த கல்லை நிமிர்த்தி வைத்து, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். இவ்வாறு அவன் அந்தக் கல்லை நினைவுச் சின்னமாக ஆக்கினான். 19 இந்த நகரத்தின் பெயர் லூஸ். ஆனால் யாக்கோபு அதற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்.

20 பின் யாக்கோபு: “தேவன் என்னோடு இருந்து, எங்கு போனாலும் என்னைத் தேவன் காப்பாற்று வாரானால், உண்ண உணவும் அணிய ஆடையும் தேவன் கொடுப்பாரானால், 21 என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார். 22 இந்த இடத்தில் இக்கல்லை ஞாபகார்த்தக் கல்லாக நிறுத்துவேன். தேவனுக்கான பரிசுத்த இடம் இது என்று அடையாளம் காட்டும். தேவன் எனக்குக் கொடுக்கும் அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பேன்” என்று பொருத்தனை செய்தான்.

மத்தேயு 27

பிலாத்துவின் முன் இயேசு(A)

27 தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள். அவர்கள் இயேசுவைச் சங்கிலியில் பிணைத்து, ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைத்தார்கள்.

யூதாஸின் தற்கொலை(B)

இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். யூதாஸ்,, “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான்.

அதற்கு யூதத் தலைவர்கள்,, “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.

ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான்.

வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள்,, “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது. தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது.

, “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. 10 கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.” [a]

பிலாத்துவின் விசாரணை(C)

11 இயேசு ஆளுநரான பிலாத்துவின் முன்னால் நின்றார். பிலாத்து இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டான்., “யூதர்களின் இராஜன் நீர்தானா?” என்று கேட்டான்.

அதற்கு இயேசு,, “ஆம், நானே தான்” என்றார்.

12 தலைமை ஆசாரியர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவைக் குற்றம் சுமத்தியபொழுது, அவர் எதுவும் கூறவில்லை.

13 ஆகவே பிலாத்து இயேசுவிடம்,, “இவர்கள் உன்மீது சுமத்திய இத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டாயல்லவா? நீ ஏன் பதில் சொல்லக் கூடாது?” என்றான்.

14 ஆனால், இயேசு பிலாத்துவிற்கு பதில் ஏதும் கூறவில்லை. அதைக்கண்டு பிலாத்து மிகவும் வியப்படைந்தான்.

இயேசுவை விடுவிக்கப் பிலாத்துவின் முயற்சி(D)

15 ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம். 16 அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ்.

17 பிலாத்துவின் வீட்டிற்கு முன் மக்கள் கூடினார்கள். பிலாத்து மக்களைப் பார்த்து,, “உங்களுக்காக ஒருவனை விடுதலை செய்கிறேன். நீங்கள் யாரை விடுவிக்க விரும்புகிறீர்கள். பரபாஸையா அல்லது கிறிஸ்து எனப்படும் இயேசுவையா?” என்றான். 18 பொறாமை கொண்டே மக்கள் தன்னிடம் இயேசுவை ஒப்படைத்துள்ளார்கள் என்பதை பிலாத்து அறிந்தான்.

19 நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து பிலாத்து இவற்றைக் கூறினான். அப்பொழுது அவனது மனைவி ஒரு செய்தி அனுப்பினாள். அதில்,, “இயேசுவை எதுவும் செய்யாதீர்கள். அவர் குற்றமற்றவர். இன்று நான் அவரைப்பற்றி ஒரு கனவு கண்டேன். அது என்னை மிகவும் கலங்க வைத்தது” என்றிருந்தது.

20 ஆனால், தலைமை ஆசாரியர்களும் மூத்த யூதத் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யவும் இயேசுவைக் கொல்ல வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க மக்களைத் தூண்டினார்கள்.

21 பிலாத்து,, “என்னிடம் பரபாசும், இயேசுவும் உள்ளார்கள். யாரை விடுவிக்க நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு மக்கள், “பரபாஸ்” என்று சொன்னார்கள்.

22 ,“அப்படியானால் கிறிஸ்து எனப்படும் இயேசுவை என்ன செய்வது?” என்று பிலாத்து கேட்டான்.

, “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று மக்கள் சொன்னார்கள்.

23 ,“அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?” என்று பிலாத்து மக்களைக் கேட்டான்.

ஆனால் மக்கள் அனைவரும், “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

24 மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதைப் பிலாத்து கண்டான். மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் பிலாத்து கவனித்தான். ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும் காணுமாறு தன் கைகளைக் கழுவினான். பின்பு,, “இவரது மரணத்திற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான்.

25 ,“அவரது மரணத்திற்கு நாங்களே பொறுப்பு. அவரது மரணத்திற்கான தண்டனையை எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்குமாக நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று மக்கள் அனைவரும் கூறினார்கள்.

26 பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவைச் சாட்டையால் அடிக்குமாறு பிலாத்து சில வீரர்களிடம் கூறினான். பிறகு சிலுவையில் அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான்.

இயேசுவைக் கேலி செய்தல்(E)

27 பின்னர் பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்குள் கொண்டு வந்தார்கள். 28 எல்லா வீரர்களும் இயேசுவைச் சுற்றிக்கொண்டு அவரது ஆடைகளைக் கழற்றி ஒரு சிவப்பு மேலங்கியை அணிவித்தார்கள். 29 வீரர்கள் முட்களால் ஒரு கிரீடம் செய்து அதை இயேசுவின் தலையில் சூட்டினார்கள். அவரது வலது கையில் ஒரு தடியைக் கொடுத்தார்கள். பின்னர் அவ்வீரர்கள் இயேசுவின் முன்னால் குனிந்து கேலி செய்தார்கள்., “வணக்கம் யூதர்களின் அரசரே” என்றார்கள். 30 அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள். 31 இயேசுவை அவர்கள் கேலி செய்து முடித்ததும், சிவப்பு மேலங்கியை நீக்கியபின் அவரது ஆடைகளை அணிவித்தார்கள். பின்னர் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றார்கள்.

இயேசு சிலுவையில் கொல்லப்படுதல்(F)

32 போர்வீரர்கள் இயேசுவுடன் நகரை விட்டு வெளியில் சென்று கொண்டிருந்தார்கள். சிரேனே என்னுமிடத்திலிருந்து வந்த சீமோன் என்பவனை இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்துவர போர்வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள். 33 மண்டை ஓட்டின் இடம் என்னும் பொருள்படும் கொல்கொதா என்று அழைக்கப்படுமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். 34 அங்கு வலியை மறக்கச்செய்யும் மருந்து கலந்த பானத்தை இயேசுவுக்குக் கொடுத்தார்கள். அதைச் சுவைத்த இயேசு அதைக் குடிக்க மறுத்தார்.

35 போர் வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளை வைத்து அறைந்தார்கள். யார் இயேசுவின் ஆடைகளைப் பெறுவது என்பதை சீட்டுப் போட்டு முடிவு செய்தார்கள். 36 போர்வீரர்கள் அங்கு உட்கார்ந்து இயேசுவை கவனித்துக்கொண்டிருந்தார்கள். 37 இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் , “இவர் இயேசு, யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.

38 இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கொள்ளைக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். 39 மக்கள் இயேசுவின் அருகில் நடந்துச்சென்று அவரைத் திட்டினார்கள். தலையைக் குலுக்கியபடி மக்கள் கூறினார்கள், 40 ,“தேவாலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட முடியும் எனக் கூறினாயே! உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ தேவனின் குமாரன் என்பது உண்மையானால், சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்றனர்.

41 தலைமை ஆசாரியர், வேதபாரகர் மற்றும் மூத்த யூதத்தலைவர்கள் ஆகிய அனைவரும் அங்கிருந்தனர். மக்கள் செய்தது போலவே அவர்களும் இயேசுவைக் கேலி செய்தார்கள். 42 அவர்கள்,, “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான்! ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் அரசன் என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் அரசனானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43 இவன் தேவனை நம்பினான். எனவே தேவன் விரும்பினால் இவனைக் காப்பாற்றட்டும் ‘நான் தேவ குமாரன்’ என இவன் கூறினான்” என்றார்கள். 44 அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர்.

இயேசுவின் மரணம்(G)

45 நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. 46 சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் , “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினார். இதன் பொருள்,, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” [b] என்பதாகும்.

47 அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள்,, “அவன் எலியாவை அழைக்கிறான்” என்றார்கள்.

48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். 49 ஆனால் மற்றவர்கள்,, “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள்.

50 மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது.

51 இயேசு இறந்தபொழுது, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கிழிசல் திரைச்சீலையின் மேலிருந்துத் துவங்கி கீழே வரைக்கும் வந்தது. மேலும், நிலம் நடுங்கியது. பாறைகள் நொறுங்கின. 52 கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். 53 கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள்.

54 இயேசுவுக்குக் காவலிருந்த படைத் தலைவனும் போர்வீரர்களும் நில நடுக்கம் ஏற்பட்டதையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கண்டார்கள். மிகவும் பயந்துபோன அவர்கள்,, “இவர் உண்மையிலேயே தேவகுமாரன்தான்” என்றார்கள்.

55 பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள். 56 மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.

இயேசு அடக்கம் செய்யப்படுதல்(H)

57 அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான் 58 யோசேப்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். பிலாத்து இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். 59 பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான். 60 இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான்.

இவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். 61 மகதலேனா மரியாளும், மரியாள் என்னும் பெயர் கொண்ட மற்றொரு பெண்ணும் கல்லறைக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.

இயேசுவின் கல்லறைக்கு காவல்

62 ஆயத்தநாளுக்கு [c] மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று, 63 ,“ஐயா, தான் உயிருடன் இருந்தபொழுது அப்பொய்யன், ‘நான் மூன்று நாட்களுக்குப் பின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன்’ என்று கூறினான். 64 ஆகவே மூன்று நாட்களாகிறவரையிலும் கல்லறையை நன்கு காவல் காக்க உத்தரவிடுங்கள். அவனது சீஷர்கள் வந்து சரீரத்தை திருட முயற்சிக்கலாம். பின், மக்களிடம் சென்று அவன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டதாகக் கூறக்கூடும். அவனைப் பற்றி அவர்கள் முன்னர் கூறிய பொய்களைக் காட்டிலும் இது அதிக மோசமானதாக இருக்கும்” என்றார்கள்.

65 அதற்கு பிலாத்து,, “சில போர் வீரர்களை அழைத்துச் சென்று உங்களால் முடிந்த அளவு கல்லறையைக் காவல் செய்யுங்கள்” என்று கூறினான். 66 ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.

எஸ்தர் 4

மொர்தெகாய் உதவிக்காக எஸ்தரை தூண்டுகிறான்

நடந்த அனைத்தையும் மொர்தெகாய் கேள்விப்பட்டான். யூதர்களுக்கு எதிரான அரசனது கட்டளையைக் கேட்டதும் அவன் தனது ஆடையைக் கிழித்தான். துக்கத்திற்கு அடையாளமான ஆடையை அணிந்து தலையில் சாம்பலை போட்டுக்கொண்டான். பிறகு அவன் நகரத்திற்குள் உரத்தக்குரலில் அழுதவண்ணம் சென்றான். ஆனால் மொர்தெகாய் அரசனது வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். எல்லா நாடுகளிலும் அரசனது கட்டளை போய்ச் சேர்ந்தது. அதனால் யூதர்களிடம் அழுகையும், துக்கமும், அதிகரித்தன. அவர்கள் உரத்த அழுகையுடன் உபவாசத்தை கடைப்பிடித்தனர். பல யூதர்கள் துக்கத்திற்கான ஆடையை அணிந்தும் தலைகளில் சாம்பலைப் போட்டுக்கொண்டும் தரையில் விழுந்துகிடந்தனர்.

எஸ்தரின் பெண் வேலைக்காரிகளும், பிரதானிகளும் வந்து அவளிடம் மொர்தெகாயைப் பற்றிச் சொன்னார்கள். அது எஸ்தர் அரசியைக் கலங்கவும் துக்கப்படவும் வைத்தது. அவள் அவனுக்கு துக்கத்திற்குரிய ஆடையை எடுத்துவிட்டு அணிந்துகொள்ள வேறு ஆடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால் அவன் அந்த ஆடைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு, எஸ்தர் ஆத்தாகை அழைத்தாள். ஆத்தாகு அரசனின் பிரதானிகளுள் ஒருவன். அவன் அவளுக்கு சேவைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மொர்தெகாயை அழவைத்து துக்கப்படுத்தியது எதுவென அறிந்து வரும்படி அவள் அவனுக்கு கட்டளையிட்டாள். எனவே, அவன் வெளியே போய் வாசலுக்கு முன்னால் திறந்த வெளியில் மொர்தெகாய் இருக்கும் இடத்தை அடைந்தான். பிறகு, மொர்தெகாய் ஆத்தாகிடம் அவனுக்கு ஏற்பட்டதைப்பற்றி சொன்னான். அதோடு அவன் ஆத்தாகிடம் ஆமான் யூதர்களைக் கொல்வதற்கு எவ்வளவு பணம் அரசின் பொக்கிஷ சாலைக்குக் கொடுப்பதாக வாக்களித்துள்ளான் என்பதையும் சொன்னான். மொர்தெகாய் ஆத்தாகிடம் யூதர்களைக் கொல்வதற்குரிய அரசனது கட்டளைப் பிரதிகளையும் கொடுத்தான். அக்கட்டளை சூசான் தலைநகரம் முழுவதும் போயிருந்தது. அவன் ஆத்தாகிடம், அதனை எஸ்தருக்குக் காட்டி எல்லாவற்றையும் சொல்லும்படி கூறினான். எஸ்தர் அரசனிடம் சென்று, அரசனிடம் மொர்தெகாய்க்கும், அவளது ஜனங்களுக்கும் இரக்கம் காட்டிக் காக்குமாறு வேண்டிக்கொள்ளச் சொன்னான்.

ஆத்தாகு எஸ்தரிடம் போய் மொர்தெகாய் சொன்னவற்றையெல்லாம் சொன்னான்.

10 பிறகு எஸ்தர் ஆத்தாகிடம், மொர்தெகாயிடம் சொல்லுமாறு சொல்லியனுப்பினது இதுவே: 11 “மொர்தெகாய் அரசனின் தலைவர்கள் அனைவரும் அரசனது நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். அரசனிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் அரசனிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது அரசனது பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. அரசன் அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் அரசனைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள்.

12-13 எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ அரசனது அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே. 14 நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கான உதவியும் விடுதலையும் வேறு இடத்திலிருந்து வரும், ஆனால் நீயும் உனது தந்தையின் குடும்பமும் அழியும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று எழுதியிருந்தான்.

15-16 பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு அரசனிடம் செல்வேன். அரசன் அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.”

17 எனவே மொர்தெகாய் வெளியே போனான். அவன் எஸ்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான்.

அப்போஸ்தலர் 27

ரோமாபுரிப் பயணம்

27 நாங்கள் இத்தாலிக்குக் கடற்பயணம் செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. ஜூலியஸ் என்னும் பெயருள்ள படை அதிகாரி பவுலையும் வேறு சில கைதிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டான். இராயரின் படையில் ஜூலியஸ் சேவை புரிந்துகொண்டிருந்தான். நாங்கள் ஒரு கப்பலில் ஏறிச் சென்றோம். கப்பல் அதிரமித்தியம் என்னும் நகரிலிருந்து வந்து ஆசியாவின் பல இடங்களுக்குப் பயணம் செல்லத் தயாராக இருந்தது. அரிஸ்தர்க்கும் எங்களோடு வந்தான். அம்மனிதன் மக்கதோனியாவில் தெசலோனிக்கா நகரத்தைச் சேர்ந்தவன்.

மறுநாள் நாங்கள் சீதோன் நகரத்திற்கு வந்தோம். ஜூலியஸ் பவுலோடு நல்ல முறையில் நடந்துகொண்டான். அவன், பவுல் அவனது நண்பர்களைச் சென்று சந்திக்கும் சுதந்திரத்தை அவனுக்குக் கொடுத்தான். இந்த நண்பர்கள் பவுலுக்குரிய தேவைகளைக் கவனித்து வந்தனர். நாங்கள் சீதோன் நகரத்திலிருந்து கடலில் பயணமானோம். காற்று எங்களுக்கு எதிர்த் திசையில் வீசியபடியால் சீப்புரு தீவின் கரையோரம் எங்கள் கடற்பயணம் தொடர்ந்தது. சிலிசியா, பம்பிலியா வழியாகக் கடலைக் கடந்து சென்றோம். பின் லீசியாவிலுள்ள மீரா நகரத்திற்கு நாங்கள் வந்தோம். மீராவில் படை அதிகாரி அலெக்ஸாண்டிரியா நகரத்திலிருந்து வந்த ஒரு கப்பலைக் கண்டான். இந்தக் கப்பல் இத்தாலிக்குப் போய்க் கொண்டிருந்தது. எனவே அவன் எங்களை அதில் ஏற்றினான்.

நாங்கள் நிதானமாகப் பல நாட்கள் கடலில் பயணம் செய்தோம். காற்று எங்களுக்கு எதிராக வீசிக்கொண்டிருந்தபடியால் கினீது நகரை அடைவதே கடினமாக இருந்தது. அவ்வழியாக மேலும் போக முடியவில்லை. சால்மோனின் அருகேயுள்ள கிரேத்தா தீவின் தென் பகுதியின் வழியாகக் கடல் பயணமானோம். கடற்கரை ஓரமாகப் போனோம். ஆனாலும் கடற் பயணம் கடினமாக இருந்தது. பாதுகாப்பான துறைமுகம் என்னும் இடத்திற்கு வந்தோம். லசேயா நகரம் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது.

நிறைய நேரத்தை நாங்கள் இழந்திருந்தோம். கடற்பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில் யூதர்களின் உபவாச தினம் ஆரம்பித்திருந்தது. எனவே பவுல், 10 “மனிதரே இப்பயணத்தில் இன்னும் தொல்லைகள் மிகுதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களை எச்சரித்தான். “கப்பலும், கப்பலின் பொருள்களும் இழக்கப்படலாம். நம் உயிரையும் நாம் இழக்கக்கூடும்!” என்றான். 11 ஆனால் கப்பல் தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் பவுல் கூறியதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் படை அதிகாரி பவுலை நம்பவில்லை. பதிலாக, தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் கூறியதை அதிகாரி நம்பினான். 12 குளிர்காலத்தில் கப்பல் தங்குவதற்கு அத்துறைமுகமும் ஏற்றதல்ல. எனவே பெரும்பான்மையான மனிதர்களும் கப்பல் புறப்படவேண்டுமென முடிவெடுத்தனர். பேனிக்ஸ் நகரத்தை அடையக் கூடுமென அவர்கள் நம்பினர். குளிர்காலத்தில் கப்பல் அங்கு தங்கமுடியும். (கிரேத்தா தீவில் பேனிக்ஸ் ஒரு நகரம். தென் மேற்கு, வட மேற்கு திசைகளை நோக்கிய துறைமுகம் அங்கிருந்தது.)

புயல்

13 தெற்கிலிருந்து ஒரு நல்ல காற்று வீசியது. கப்பலிலிருந்த மனிதர்கள், “நமக்குத் தேவையான காற்று இது. இப்போது அது வீசுகிறது!” என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை மேலே இழுத்தார்கள். கிரேத்தா தீவுக்கு வெகு அருகில் பயணம் செய்தோம். 14 “வட கிழக்கன்” என்னும் பெயருள்ள மிகப் பலமான காற்று தீவின் குறுக்காக வந்தது. 15 இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம்.

16 கிலவுதா என்னும் ஒரு சிறிய தீவின் கீழே சென்றோம். எங்களால் உயிர் மீட்கும் படகை வெளியே எடுக்கமுடிந்தது. ஆனால் அதை எடுப்பது மிகக் கடினமான செயலாக இருந்தது. 17 உயிர் மீட்கும் படகை மனிதர்கள் எடுத்த பின், அவர்கள் கப்பலைச் சுற்றிலும் கயிறுகளால் கப்பல் சரியாக இருப்பதற்கென்று கட்டினார்கள். சிர்டிஸின் மணற் பாங்கான கரையில் கப்பல் மோதக்கூடுமென்று அவர்கள் நினைத்தார்கள். எனவே துடுப்புகளை எடுத்துவிட்டு, காற்று கப்பலைச் செலுத்தும்படியாக விட்டார்கள்.

18 மறுநாள் புயல் கடுமையாகத் தாக்கியதால் மனிதர்கள் கப்பலிலிருந்து சில பொருட்களை வெளியே வீசினார்கள். 19 ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர். 20 பல நாட்கள் எங்களால் சூரியனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. புயல் கொடுமையாக இருந்தது. நாங்கள் உயிர் பிழைக்கும் நம்பிக்கையைக் கைவிட்டோம். நாங்கள் இறந்து விடுவோமென எண்ணினோம்.

21 நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. 22 ஆனால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிக்கு உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் ஒருவரும் இறக்கமாட்டீர்கள்! ஆனால் கப்பல் அழிந்து போகும். 23 நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன். 24 தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான். 25 எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும். 26 ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான்.

27 பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர். 28 அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. 29 நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர். 30 சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர். 31 ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான். 32 எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர்.

33 அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை. 34 நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான். 35 இதைக் கூறிய பிறகு பவுல் ரொட்டியை எடுத்து எல்லோர் முன்பாகவும் அதற்காக தேவனுக்கு நன்றி சொன்னான். அதில் ஒரு பகுதியை எடுத்து, அவன் உண்ண ஆரம்பித்தான். 36 எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். 37 (கப்பலில் 276 பேர் இருந்தனர்.) 38 நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம்.

கப்பல் அழிந்தது

39 பகல் ஒளி வர ஆரம்பித்ததும் மாலுமிகள் நிலத்தைக் கண்டனர். அந்நிலம் எதுவென்று அவர்களால் அறியமுடியவில்லை. அவர்கள் கடற்கரையோடு கூடிய ஒரு வளைகுடாவைக் கண்டனர். மாலுமிகள் அவர்களால் முடிந்தவரைக்கும் கடற்கரைக்கு நேராக கப்பலைச் செலுத்த முயன்றனர். 40 ஆனால் கப்பல் மணல் மேட்டில் மோதியது. 41 கப்பலின் முன்பகுதி அதற்குள் நுழைந்து நின்றது. கப்பலால் அசைய முடியவில்லை. பெரும் அலைகள் வந்து கப்பலின் பின்பகுதியில் மோதி, கப்பலை உடைத்துவிட்டன.

42 எந்தக் கைதியும் நீந்தித் தப்பித்துப் போகாதவாறு வீரர்கள் அவர்களைக் கொல்வதற்கு முடிவு செய்தார்கள். 43 ஆனால் படைத் தலைவன் பவுலை உயிரோடு காக்க எண்ணினான். எனவே வீரர்கள் கைதிகளைக் கொல்வதற்கு அவன் அனுமதிக்கவில்லை. நீந்தத் தெரிந்தவர்கள் கடலில் குதித்து நீந்திக் கரை சேரலாமென்று ஜூலியஸ் மக்களுக்குக் கூறினான். 44 பிற மக்கள் மரப் பலகைகளையோ கப்பலின் உடைந்த பகுதிகளையோ பிடித்து நீந்தினர். இவ்வாறு எல்லா மக்களும் நிலத்தை அடைந்தனர். மக்களில் ஒருவரும் இறக்கவில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center