Add parallel Print Page Options

பிலாத்துவுக்கு முன் இயேசு

(மத்தேயு 27:1-2,11-31; மாற்கு 15:1-20; லூக்கா 23:1-25)

28 பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர். 29 எனவே பிலாத்து வெளியே வந்தான். அவன் அவர்களிடம், “இந்த மனிதன் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்று கேட்டான்.

30 அதற்கு யூதர்கள், “அவன் ஒரு கெட்ட மனிதன். அதனால்தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம்” என்றனர்.

31 பிலாத்து யூதர்களிடம், “யூதர்களாகிய நீங்கள் இவனை அழைத்துக்கொண்டு போய் உங்கள் விதி முறைகளின்படி நியாயம் தீருங்கள்” என்றான்.

அதற்கு யூதர்கள், “எவரையும் மரண தண்டனைக்குட்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லையே” என்றனர். 32 (தான் எவ்வாறு மரிக்கப்போகிறேன் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது)

Read full chapter