Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 27

வாரிசு சிக்கல்கள்

27 ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த மகன் ஏசாவை அழைத்து “மகனே” என்றான்.

ஏசா “இங்கே இருக்கிறேன்” என்றான்.

ஈசாக்கு அவனை நோக்கி, “எனக்கு வயதாகிவிட்டது. விரைவில் நான் செத்துப் போகலாம். எனவே, உன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போ. நான் உண்பதற்காக ஒரு மிருகத்தைக் கொன்று வா. நான் விரும்புகிற அந்த உணவைத் தயாரித்து வா. அதை நான் உண்ண வேண்டும். மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். எனவே ஏசா வேட்டைக்குப் போனான்.

யாக்கோபு ஈசாக்கை ஏமாற்றியது

ஈசாக்கு ஏசாவிடம் கூறுவதை ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். இதனை அவள் யாக்கோபிடம் கூறினாள். “கவனி! உன் தந்தை உன் சகோதரனிடம் கூறுவதைக் கேட்டேன். அவர் ‘நான் உண்பதற்கு ஒரு மிருகத்தைக் கொன்று, எனக்கு உணவை சமைத்து வா, நான் உண்பேன். பிறகு நான் மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்றார். எனவே மகனே நான் சொல்வதைக் கவனித்து அதன்படி செய். நீ நமது ஆட்டு மந்தைக்குப் போ இரண்டு இளம் ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. உன் தந்தை விரும்புவதுபோல நான் சமைத்து தருவேன். 10 பிறகு அதனை உன் தந்தைக்குக் கொடு. அவர் உன்னைத் தான் மரிப்பதற்கு முன்னர் ஆசீர்வதிப்பார்” என்றாள்.

11 ஆனால் அவன் தாயிடம், “என் சகோதரனோ உடல் முழுவதும் முடி உள்ளவன். நான் அவ்வாறில்லை. 12 என் தந்தை என்னைத் தொட்டுப் பார்த்தால் நான் ஏசா இல்லை என்பதைத் தெரிந்துகொள்வார். பின் அவர் என்னை ஆசீர்வதிக்கமாட்டார்; சபித்துவிடுவார். நான் ஏமாற்றியதை அறிந்துகொள்வாரே” என்றான்.

13 அதனால் ரெபெக்காள் அவனிடம், “ஏதாவது தவறு ஏற்பட்டால் அதற்கான சாபம் என்மேல் விழட்டும், நீ போய் எனக்காக இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா” என்றாள்.

14 அதனால் யாக்கோபு வெளியே போய் இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வந்தான். அவள் அதனை ஈசாக்கு விரும்பும் வகையில் சிறப்பான முறையில் சமைத்தாள். 15 பின்னர் ரெபெக்காள் ஏசா விரும்பி அணியும் ஆடைகளை தேர்ந்தெடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள். 16 ஆட்டுத் தோலை யாக்கோபின் கைகளிலும் கழுத்திலும் கட்டினாள். 17 பிறகு அவள் மகன் யாக்கோபிடம் அவள் செய்த ரொட்டியையும் சுவையான உணவையும் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

18 யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான்.

அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான்.

19 யாக்கோபு தன் தந்தையிடம், “நான் ஏசா, உங்கள் மூத்த மகன். நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன். இப்போது உட்கார்ந்து நான் வேட்டையாடிக் கொண்டு வந்த இறைச்சியை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான்.

20 ஆனால் ஈசாக்கு தன் மகனிடம், “இவ்வளவு வேகமாக நீ எவ்வாறு வேட்டையாடி மிருகத்தைக் கொன்றாய்?” என்று கேட்டான்.

இதற்கு யாக்கோபு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் விரைவாக வேட்டையாடி மிருகத்தைக் கொல்ல எனக்கு உதவினார்” என்று சொன்னான்.

21 பிறகு ஈசாக்கு யாக்கோபிடம், “என் அருகிலே வா. உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ என் மகன் ஏசாவா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்றான்.

22 யாக்கோபு அவனது அருகிலே போனான். ஈசாக்கு அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “உனது சத்தம் யாக்கோபினுடையதுபோல் உள்ளது. ஆனால் உனது கைகள் ஏசாவின் கைகள் போல் முடி நிறைந்ததாய் இருக்கிறது” என்றான். 23 ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான்.

24 எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய மகன் ஏசாதானா?” என்று கேட்டான்.

யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான்.

யாக்கோபிற்கு ஆசீர்வாதம்

25 பிறகு ஈசாக்கு, “அந்த உணவைக் கொண்டு வா. அதனை உண்டு விட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். எனவே யாக்கோபு உணவைக் கொடுத்தான். அவனும் அதை உண்டான். பின் யாக்கோபு கொஞ்சம் திராட்சை ரசத்தைக் கொடுத்தான். அதையும் அவன் குடித்தான்.

26 பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். 27 எனவே யாக்கோபு அருகிலே போய் தந்தையை முத்தமிட்டான். ஈசாக்கு அவனது ஆடையை நுகர்ந்து பார்த்து அவனை ஏசா என்றே நம்பி ஆசீர்வதித்தான்.

“என் மகன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வயலைப் போன்று மணக்கிறான்.
28 கர்த்தர் உனக்கு மிகுதியாக மழையைத் தரட்டும். அதனால் நீ பூமியின் செல்வத்தைப் பெறுவாய்.
29 எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும்.
    நாடுகள் உனக்கு அடிபணியட்டும்.
உன் சகோதரர்களையும் நீ ஆள்வாய்.
உன் தாயின் மகன்கள் உனக்கு அடிபணிந்து கீழ்ப்படிவார்கள்.

“உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள்.
உன்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று கூறினான்.

ஏசாவின் ஆசீர்வாதம்

30 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடித்தான். யாக்கோபு தந்தையிடமிருந்து போன உடனேயே ஏசா வேட்டையை முடித்துவிட்டு உள்ளே வந்தான். 31 தந்தைக்கென வேட்டையாடிய மிருகத்தைச் சிறப்பாக சமைத்தான். அதனை எடுத்துக்கொண்டு தந்தையிடம் போனான். “தந்தையே நான் உங்களின் மகன் எழுந்திருங்கள். உங்களுக்காக வேட்டையாடி சமைத்துக்கொண்டு வந்த உணவை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான்.

32 ஆனால் ஈசாக்கோ “நீ யார்” என்று கேட்டான்.

“நான்தான் உங்கள் மூத்தமகன் ஏசா” என்றான்.

33 அதனால் ஈசாக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான். “நீ வருவதற்கு முன்னால் இறைச்சி உணவு சமைத்துக் கொடுத்துவிட்டுப் போனானே அவன் யார்? நான் அதனை உண்டு அவனை ஆசீர்வாதம் செய்தேனே. அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.

34 ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டான். பிறகு கோபமும் ஆத்திரமும் அடைந்து அழுதான். தந்தையிடம் “என்னையும் ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான்.

35 ஈசாக்கு அவனிடம், “உன் தம்பி என்னை ஏமாற்றிவிட்டான். அவன் வந்து உனது ஆசீர்வாதத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான்” என்றான்.

36 “அவன் பெயரே யாக்கோபு, (தந்திரசாலி என்றும் பொருள்.) அவனுக்குப் பொருத்தமான பெயர்தான். அவன் இருமுறை என்னை ஏமாற்றி இருக்கிறான். முன்பு முதல் மகன் என்ற உரிமைப் பங்கையும் அவன் பெற்றுக்கொண்டான். இப்போதோ எனது ஆசீர்வாதங்களையும் எடுத்துக்கொண்டானே” என்று புலம்பினான். பிறகு, “எனக்கென்று ஏதாவது ஆசீர்வாதம் மீதி இருக்கிறதா” என்று கேட்டான்.

37 அதற்கு ஈசாக்கு, “இல்லை. இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் அவனுக்கு உன்மீது ஆளுகை செலுத்தும்படி ஆசீர்வதித்துவிட்டேன். அவனது சகோதரர்கள் அனைவரும் அவனுக்கு வேலை செய்வார்கள் என்றும் கூறிவிட்டேன். ஏராளமான உணவும் திராட்சைரசமும் பெறுவான் என்றும் ஆசீர்வதித்து விட்டேன். உனக்கென்று தர எதுவும் இல்லையே” என்றான்.

38 ஆனால் தொடர்ந்து ஏசா தந்தையை கெஞ்சிக்கொண்டிருந்தான். “அப்பா உங்களிடம் ஒரு ஆசீர்வாதம்தான் உள்ளதா, என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று அழுதான்.

39 பிறகு ஈசாக்கு

“நல்ல நிலத்தில் நீ வாழமாட்டாய்.
    அதிக மழை இருக்காது.
40 நீ உன் பட்டயத்தால்தான் வாழ்வாய்.
    உன் தம்பிக்கு நீ அடிமையாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் விடுதலைக்காகச் சண்டையிட்டு
    அவனது கட்டுகளை உடைத்துவிடுவாய்” என்றார்.

யாக்கோபு நாட்டைவிட்டு செல்கிறான்

41 அதற்குப் பின் ஏசா யாக்கோபுக்கு எதிராக வஞ்கசம் கொண்டான். ஏனென்றால் தந்தையின் ஆசீர்வாதத்தை அவன் பெற்றுள்ளான். “என் தந்தை விரைவில் மரித்துபோவார். அதனால் நான் சோகமடைவேன். அதற்குப் பின் நான் யாக்கோபை கொன்றுவிடுவேன்” என்று தனக்குள் ஏசா கூறிக்கொண்டான்.

42 யாக்கோபை கொல்ல வேண்டும் என்ற ஏசாவின் திட்டத்தை ரெபெக்காள் அறிந்துகொண்டாள். அவள் யாக்கோபை அழைத்து அவனிடம், “உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லத் திட்டமிடுகிறான். 43 எனவே நான் சொல்கிறபடி நீ செய். ஆரானில் இருக்கிற என் சகோதரன் லாபானிடம் ஓடிச் சென்று அவனோடு இரு. 44 உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு. 45 கொஞ்சக் காலம் ஆனதும் உன் சகோதரன் நீ செய்ததை மறந்துவிடுவான். பிறகு உன்னை இங்கு அழைக்க ஒரு வேலைக்காரனிடம் செய்தியைச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் எனது இரண்டு மகன்களையும் நான் இழக்க விரும்பவில்லை” என்றாள்.

46 பிறகு ரெபெக்காள் ஈசாக்கிடம், “உமது மகன் ஏசா ஏத்தியர் பெண்களை மணந்துகொண்டான். நான் அந்தப் பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் நம் இனத்தவர்களல்ல. யாக்கோபும் இதுபோல் மணம் செய்தால் நான் மரித்துப்போவேன்” என்றாள்.

மத்தேயு 26

இயேசுவைக் கொல்லத் திட்டமிடுதல்(A)

26 இவை அனைத்தையும் சொல்லி முடித்த இயேசு, தம் சீஷர்களை நோக்கி, ,“நாளைக்கு மறுநாள் பஸ்கா பண்டிகை என்பதை அறிவீர்கள். அன்றையதினம் மனிதகுமாரன் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்காக எதிரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்” என்று கூறினார்.

தலைமை ஆசாரியரும் வேதபாரகரும் தலைமை ஆசாரியன் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். தலைமை ஆசாரியனின் பெயர் காய்பா. அக்கூட்டத்தில் இயேசுவைக் கைது செய்யத்தக்க வழியைத் தேடினார்கள். பொய் கூறி இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய திட்டமிட்டார்கள். அக்கூட்டத்தில் இருந்தவர்கள், “பஸ்கா நாளில் நாம் இயேசுவைக் கைதுசெய்ய முடியாது. மக்களுக்குக் கோபமூட்டி அதனால் கலவரம் ஏற்பட நமக்கு விருப்பமில்லை” என்று கூறினார்கள்.

ஒரு பெண்ணின் சிறப்பு செயல்(B)

இயேசு பெத்தானியாவில் இருந்தார். தொழுநோயாளியான சீமோன் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்பொழுது ஒரு பெண் அவரிடம் வந்தாள். அவளிடம் ஒரு வெள்ளைக் கல் ஜாடியில் நிறைய மிக விலையுயர்ந்த வாசனைத் தைலம் இருந்தது. அப்பெண் இயேசுவின் தலைமீது அவ்வாசனைத் தைலத்தை அவர் உணவு அருந்திக்கொண்டிருந்தபொழுது ஊற்றினாள்.

அப்பெண் இவ்வாறு செய்ததைக் கண்ட இயேசுவின் சீஷர்கள் அவள்மீது எரிச்சல் அடைந்தார்கள்., “வாசனைத் தைலத்தை ஏன் வீணாக்குகிறாய்? அதை நல்ல விலைக்கு விற்றால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே?” என்று கடிந்து கொண்டார்கள்.

10 ஆனால் நடந்ததை அறிந்த இயேசு,, “இப்பெண்ணை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? இவள் எனக்கு ஒரு நற்செயலைச் செய்திருக்கிறாள். 11 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். 12 வாசனைத் தைலத்தை என் தலைமீது ஊற்றி இப்பெண் நான் மரித்தப்பின் அடக்கம் செய்வதற்கான ஆயத்தத்தைச் செய்திருக்கிறாள். 13 நான் உண்மையைச் சொல்லுகிறேன், உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்லப்படும். நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இப்பெண் செய்த செயலும் சொல்லப்படும். அப்பொழுது மக்கள் அவளை நினைவுகூர்வார்கள்” என்றார்.

துரோகியான யூதாஸ்(C)

14 யூதா ஸ்காரியோத்து என்று பெயர் கொண்ட இயேசுவின் சீஷர்களில் ஒருவன் தலைமை ஆசாரியனிடம் பேசுவதற்குச் சென்றான். 15 யூதாஸ்,, “நான் இயேசுவை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதற்கு நீங்கள் எனக்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டான். தலைமை ஆசாரியர்கள் யூதாஸ்க்கு முப்பது வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார்கள். 16 அப்பொழுதிலிருந்து, யூதாஸ் ஆசாரியர்களிடம் இயேசுவை ஒப்படைக்கத்தக்க நேரத்திற்குக் காத்திருந்தான்.

பஸ்கா விருந்து(D)

17 புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பண்டிகையின் முதல் நாளன்று, சீஷர்கள் இயேசுவிடம் வந்து,, “பஸ்கா விருந்துண்ண உமக்காக ஏற்பாடுகளைச் செய்யக் காத்திருக்கிறோம். எங்கே உணவுக்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

18 அவர்களுக்கு மறுமொழியாக இயேசு,, “நகருக்குள் செல்லுங்கள். அங்கே எனக்கு அறிமுகமான ஒருவரிடம் சென்று, போதகர் கூறுவதாகக் கூறுங்கள், ‘குறிக்கப்பட்ட வேளை நெருங்கிவிட்டது. நான் என் சீஷர்களுடன் உன் வீட்டில் பஸ்கா விருந்துண்பேன்’, என்று கூறுங்கள்” என்று கூறினார். 19 இயேசுவின் சீஷர்கள் அவரது சொற்படியே அவர் சொன்னவற்றைச் செய்தார்கள். அவர்கள் பஸ்கா விருந்தைத் தயார் செய்தார்கள்.

20 அன்று மாலை இயேசுவும் அவரது பன்னிரண்டு சீஷர்களும் மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். 21 அப்பொழுது இயேசு கூறினார்,, “உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவன் விரைவில் என்னை எதிரிகளிடம் பிடித்துக் கொடுப்பான்” என்றார்.

22 அதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். ஒவ்வொரு சீஷரும் இயேசுவிடம்,, “ஆண்டவரே, நிச்சமாய் அது நானல்ல!” என்றனர்.

23 அதற்கு இயேசு,, “நான் கை கழுவும் பாத்திரத்திலேயே கை கழுவுகின்றவனே எனக்கு எதிராவான். 24 மனித குமாரன் இறப்பார். இது நடக்குமென வேதவாக்கியம் சொல்கிறது. மனித குமாரனைக் கொல்வதற்குக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு மிகுந்த தீமை விளையும். அதைவிட அவன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்” என்றார்.

25 பின் யூதாஸ் இயேசுவிடம்,, “போதகரே! நான் நிச்சயம் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டேன்!” என்றான். (இயேசுவை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யூதாஸ் தான்) அதற்கு இயேசு,, “இல்லை. நீ தான் என்னைக் காட்டிக் கொடுப்பாய்” என்றார்.

கர்த்தரின் இரவு உணவு(E)

26 அவர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த பொழுது, இயேசு சிறிது அப்பத்தைக் கையிலெடுத்தார். அந்த அப்பத்துக்காக தேவனுக்கு நன்றி கூறி அதைப் பங்கிட்டார். அதைத் தம் சீஷர்களுக்கு கொடுத்து,, “இந்த அப்பத்தை எடுத்து சாப்பிடுங்கள். இந்த அப்பமே என் சரீரம்” என்று சொன்னார்.

27 பின் இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்து, அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். அதைத் தமது சீஷர்களுக்குக் கொடுத்த இயேசு,, “நீங்கள் ஒவ்வொருவரும் இதைக் குடியுங்கள். 28 இந்த திராட்சை இரசம் என் இரத்தம், என் இரத்தத்தின் மூலம் (மரணம்) தேவனுக்கும் மக்களுக்குமான புதிய உடன்படிக்கை துவங்குகிறது. இந்த இரத்தம் பலருக்கும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்காக அளிக்கப்படுகிறது. 29 நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், அதாவது, நாம் மீண்டும் என் பிதாவின் இராஜ்யத்தில் ஒன்று சேர்ந்து திராட்சை இரசத்தைப் புதியதாய் பானம் பண்ணும்வரைக்கும் நான் இதை அருந்தமாட்டேன்” என்று கூறினார்.

30 சீஷர்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். பின்பு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

சீஷர்கள் பற்றிய முன்னறிவிப்பு(F)

31 இயேசு தம் சீஷர்களிடம்,, “இன்றிரவு நீங்கள் உங்கள் விசுவாசத்தை என்னிமித்தம் இழப்பீர்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:

, “‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன்.
    மந்தையின் ஆடுகள் கலைந்து ஓடும்’ (G)

என்று கூறினார்.

32 ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.

33 அதற்கு பேதுரு,, “மற்ற எல்லாச் சீஷர்களும் தங்கள் விசுவாசத்தை இழக்கலாம். ஆனால், ஒரு போதும் என் விசுவாசத்தை இழக்கமாட்டேன்” என்று கூறினான்.

34 அதற்குப் இயேசு,, “நான் உண்மையை சொல்லுகிறேன், இன்றிரவு உனக்கு என்னைத் தெரியாது எனக் கூறுவாய். அதுவும் சேவல் கூவுவதற்குமுன் மூன்று முறை சொல்வாய்” என்று கூறினார்.

35 ஆனால், பேதுரு,, “உம்மை எனக்குத் தெரியாது எனக் கூறவேமாட்டேன். உம்முடன் சேர்ந்து நானும் இறப்பேன்!” என்றான். மேலும் மற்ற சீஷர்கள் அனைவரும் அவ்வாறே கூறினார்கள்.

இயேசுவின் பிரார்த்தனை(H)

36 பின்பு இயேசு தம் சீஷர்களுடன் கெத்செமனே என்ற இடத்திற்குச் சென்றார். அவர் தம் சீஷர்களிடம்,, “நான் அங்கே சென்று பிரார்த்தனை செய்யும்வரைக்கும் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்றார். 37 பேதுருவையும், செபதேயுவின் இரு மகன்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். 38 இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு மகன்களிடமும், “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார்.

39 பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார்,, “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார். 40 பிறகு தம் சீஷர்களிடம் இயேசு திரும்பி வந்தார். தம் சீஷர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்ட இயேசு, பேதுருவிடம் கூறினார்,, “ஒருமணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? 41 சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் ஆவி சரியானதைச் செய்ய விரும்புகிறது. ஆனால் உங்கள் சரீரமோ பலவீனமாக உள்ளது” என்றார்.

42 இயேசு இரண்டாவது முறையாக சென்று பிரார்த்தனை செய்தார்,, “என் பிதாவே, வேதனை மிகுந்த இக்காரியங்கள் எனக்கு ஏற்படாதிருக்குமாறு செய்ய முடியாதெனில், நீர் விரும்பியபடியே நடக்க நான் வேண்டுகிறேன்” என்றார்.

43 பின்பு இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்றார். மீண்டும் அவர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்டார். அவர்களது கண்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டன. 44 ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார்.

45 பின் இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்று அவர்களிடம்,, “இன்னுமா நீங்கள் தூங்கிக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறீர்கள்? மனித குமாரனைப் பாவிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 46 எழுந்திருங்கள்! நாம் போக வேண்டும். இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார்.

இயேசு கைது செய்யப்படுதல்(I)

47 இப்படிப் பேசிக்கொண்டிருந்தபொழுதே யூதாஸ் அங்கு வந்தான், யூதாஸ் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன். அவனுடன் பலரும் இருந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியனாலும் மூத்த தலைவர்களாலும் அனுப்பப்பட்டவர்கள். யூதாஸூடன் இருந்தவர்கள் அரிவாள்களையும் தடிகளையும் வைத்திருந்தனர். 48 யார் இயேசு என்பதை அவர்களுக்குக் காட்ட யூதாஸ் ஒரு திட்டமிட்டிருந்தான். அவன் அவர்களிடம்,, “நான் முத்தமிடுகிறவரே இயேசு. அவரைக் கைது செய்யுங்கள்” என்றான். 49 அதன்படி யூதாஸ் இயேசுவிடம் சென்று,, “வணக்கம். போதகரே!” என்று கூறி இயேசுவை முத்தமிட்டான்.

50 இயேசு,, “நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்” என்று கூறினார்.

பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள். 51 இது நடந்தபொழுது, இயேசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் அரிவாளை எடுத்தான். அச்சீஷன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரனை அரிவாளால் தாக்கி அவனது காதை வெட்டினான்.

52 இயேசு அச்சீஷனைப் பார்த்து,, “அரிவாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான். 53 நான் என் பிதாவைக் கேட்டால் அவர் எனக்கு பன்னிரண்டு தேவ தூதர் படைகளும் அதற்கு அதிகமாகவும் அனுப்புவார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். 54 ஆனால் இது இப்படியே வேதவாக்கியங்கள் கூறுகிறபடியே நடக்க வேண்டும்” என்றார்.

55 பின்னர் இயேசு தம்மைப் பிடிக்க வந்தவர்கள் அனைவரையும் நோக்கி,, “ஒரு குற்றவாளியைப் போல என்னைப் பிடிக்க அரிவாள் தடிகளுடன் வந்திருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதனை செய்தேன். ஆனால், என்னை அங்கே கைது செய்யவில்லை. 56 தீர்க்கதரிசிகள் எழுதி வைத்துள்ளபடியே இவை அனைத்தும் நடந்துள்ளன” என்று கூறினார். பின்பு இயேசுவின் எல்லா சீஷர்‌களும் அவரைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள்.

யூதத் தலைவர்கள் முன் இயேசு(J)

57 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமை ஆசாரியனான காய்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதபாரகர்களும் மற்ற யூதத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். 58 இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான்.

59 தலைமை ஆசாரியனும் யூத ஆலோசனைச் சங்கமும் இயேசுவைக் கொல்ல அவரிடம் ஏதேனும் குற்றம் காண முயற்சித்தார்கள். இயேசு தவறு செய்தார் என சொல்லக்கூடிய மக்களைத் தேட முயற்சித்தார்கள். 60 பலரும் வந்து இயேசுவைப் பற்றிப் பொய்யான செய்திகளைக் கூறினர். ஆனாலும் இயேசுவைக் கொல்லத்தக்க காரணம் எதையும் யூத ஆலோசனைச் சங்கம் காணவில்லை. பிறகு இருவர் வந்து, 61 ,“நான் தேவனின் ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் மீண்டும் அதைக் கட்டுவேன் என்று இவன் (இயேசு) கூறினான்” என்றார்கள்.

62 பின் தலைமை ஆசாரியன் எழுந்திருந்து இயேசுவைப் பார்த்து,, “இவர்கள் உமக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள், இவர்கள், உம்மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உம்மிடம் ஏதும் பதில் உள்ளதா? இவர்கள் கூறுவது உண்மையா?” என்று கேட்டார். 63 ஆனால், இயேசு ஏதும் பதில் கூறவில்லை.

மீண்டும் தலைமை ஆசாரியன் இயேசுவிடம்,, “நான் உன்னை உறுதி மொழிக்கு உட்படுத்துகிறேன். ஜீவனுள்ள தேவனின் வல்லமையின் பெயரால் ஆணையிடுகிறேன். உண்மையைச் சொல் நீயா தேவகுமாரனாகிய கிறிஸ்து?” என்று கேட்டான்.

64 அதற்கு இயேசு,, “ஆம் நான் தான், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பீர்கள்” என்று விடையளித்தார்.

65 இதைக்கேட்ட தலைமை ஆசாரியன் மிகக் கோபமடைந்தான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,, “இவன் தேவனுக்கு எதிரானவைகளைப் பேசுகிறான். வேறு சாட்சியம் எதுவும் தேவையில்லை. தேவனுக்கு எதிராக இவன் கூறியவற்றை நீங்கள் எல்லோரும் கேட்டீர்கள். 66 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று சொன்னான்.

யூதர்கள் அனைவரும்,, “இவன் குற்றவாளி. இவன் (இறக்க) மரிக்க வேண்டும்” என்றார்கள்.

67 பின் அங்கிருந்தவர்கள் இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். அவரைத் தங்கள் கையால் அடித்தார்கள். மற்றவர்கள் அவரது கன்னத்தில் அறைந்தார்கள். 68 அவர்கள் இயேசுவைப் பார்த்து,, “நீ தீர்க்கதரிசி என்பதைக் காட்டு. கிறிஸ்துவே, உன்னை அடித்தது யார் என்பதைக் கூறு” என்று கேட்டார்கள்.

பேதுருவின் மறுதலிப்பு(K)

69 அப்பொழுது, முற்றத்தில் அமர்ந்திருந்த பேதுருவிடம் ஒரு வேலைக்காரப்பெண் வந்து,, “கலிலேயாக்காரனான அம்மனிதன் இயேசுவுடன் நீயும் இருந்தாயல்லவா?” எனக் கேட்டாள்.

70 ஆனால் பேதுரு, தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை என அங்கிருந்தவர்களிடம் கூறினான். பேதுரு, “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினான்.

71 பின்பு, முற்றத்தை விட்டுச்சென்ற பேதுருவை, வாயிற்கதவருகில் வேறொரு பெண் பார்த்தாள். அங்கிருந்தவர்களிடம் அப்பெண்,, “நசரேயனாகிய இயேசுவுடன் இருந்தது இவன்தான்” என்று சொன்னாள்.

72 மீண்டும் பேதுரு தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை எனக் கூறினான்., “தேவனின் மீது ஆணையாக இம்மனிதன் இயேசுவை எனக்குத் தெரியாது” என பேதுரு கூறினான்.

73 சிறிது நேரம் கழித்து அங்கு நின்றிருந்த சிலர் பேதுருவிடம் சென்று,, “இயேசுவின் சீஷர்களில் நீயும் ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும். நீ பேசுவதிலிருந்து எங்களுக்கு அது தெரிகிறது” என்று கூறினார்கள்.

74 பின் சாபமிடத் துவங்கிய பேதுரு,, “தேவன் மேல் ஆணையாக எனக்கு இயேசுவைத் தெரியாது” என்றான். பேதுரு இதைக் கூறிய பின் சேவல் கூவியது. 75 அப்போது, “சேவல் கூவுவதற்குமுன் என்னை உனக்குத் தெரியாது என நீ மூன்று முறை கூறுவாய்” என இயேசு கூறியதைப் பேதுரு ஞாபகப்படுத்திக் கொண்டான். பின்பு வெளியில் சென்ற பேதுரு மிகுந்த மனக் கசப்புடன் அழுதான்.

எஸ்தர் 3

யூதர்களை அழிப்பதற்கான ஆமானின் திட்டம்

இவை நிகழ்ந்த பிறகு, அகாஸ்வேரு அரசன் ஆமானைக் கௌரவித்தான். ஆமான், அம்மெதாத்தாவின் மகன். இவன் ஆகாகியன். அரசன் ஆமானுக்குப் பதவி உயர்வு கொடுத்து மற்ற அதிகாரிகளைவிட உயர் அதிகாரியாகச் செய்தான். அரசனின் வாசலில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஆமானுக்குப் பணிந்து வணங்கி மரியாதைச் செய்தனர். அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று அரசன் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் அவனுக்குப் பணிந்து மரியாதை அளிக்க மறுத்துவிட்டான். பிறகு, அரச வாசலில் உள்ள அரசனின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர்.

நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான். மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான். மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான்.

அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது). பிறகு, ஆமான் அகாஸ்வேரு அரசனிடம் வந்தான். அவன், “அகாஸ்வேரு அரசே, உமது ஆட்சியிலுள்ள நாடுகளில் எல்லாம் ஒருவித ஜனங்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்துள்ளனர். அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக உள்ளன. அவர்கள் அரசனது சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் உமது அரசாட்சியில் வாழ அனுமதிப்பது அரசனாகிய உமக்கு நல்லதல்ல.

“இது அரசனுக்கு விருப்பமானதாக இருந்தால், நான் ஒரு கருத்து சொல்கிறேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கு எனக்கு ஒரு கட்டளைகொடும். நான் 10,000 வெள்ளிக் காசுகளை அரசனின் பொக்கிஷதாரரிடம் செலுத்திவிடுகிறேன். அப்பணத்தை இவ்வேலையைச் செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.

10 எனவே, அரசன் தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன். ஆமான் யூதர்களின் எதிரி. 11 பிறகு அரசன் ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான்.

12 பிறகு முதல் மாதத்தின் 13வது நாள் அரசனின் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள மொழிகளில் ஆமானின் கட்டளைகளை எழுதினார்கள். அவர்கள் அரசனது நாட்டு அதிகாரிகளுக்கும், பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கும், பல்வகை ஜனங்களின் தலைவர்களுக்கும் எழுதினார்கள். அரசன் அகாஸ்வேருவின் அதிகாரத்தின்படியும், அவனது சொந்த மோதிரத்தின் முத்திரையிட்டும் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.

13 தூதுவர்கள் அரசனது அனைத்து மாகாணங்களுக்கும் கடிதங்களைக் கொண்டுசென்றனர். அக்கடிதத்தில் யூதர்கள் அனைவரையும் முழுமையாக அழிக்கவும், கொல்லவும் அரசனது கட்டளை இருந்தது. அதாவது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவரையும் அழிக்க வேண்டும். ஒரே நாளில் யூதர்கள் அனைவரையும் கொல்லவேண்டும் என்று கட்டளை இருந்தது. அந்நாளும் ஆதார் எனும் பன்னிரண்டாவது மாதத்தின் 13வது நாளாக இருக்கவேண்டும். யூதர்களுக்குரிய உடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இருந்தது.

14 கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள். 15 அரசனது கட்டளையோடு தூதுவர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். அந்த கட்டளை தலைநகரமான சூசானில் கொடுக்கப்பட்டது. அரசனும், ஆமானும் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சூசான் நகரம் குழம்பிக்கொண்டிருந்தது.

அப்போஸ்தலர் 26

அகிரிப்பா மன்னன் முன் பவுல்

26 அகிரிப்பா பவுலை நோக்கி, “இப்போது உன்னைப்பற்றி நீயே பேசலாம்” என்றான். பின் பவுல் தனது கையை உயர்த்தித் தனக்கு சார்பாகப் பேசத் துவங்கினான். அவன், “அகிரிப்பா மன்னரே, யூதர்கள் எனக்கு எதிராகச் சொன்ன எல்லா வழக்குகளுக்கும் நான் பதில் கூறுவேன். நான் இன்று உங்கள் முன்பாக நின்று இதைச் செய்வதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். நீங்கள் எல்லா யூத வழக்கங்களையும் யூதர்கள் வாதிடுகிற காரியங்களையும் மிகுதியாக அறிந்திருப்பதால் நான் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.

“எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த யூதர்களுக்கு என்னைப் பல காலமாகத் தெரியும். அவர்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல பரிசேயன் என்று உங்களுக்குக் கூற முடியும். யூத மக்களில் பிற எல்லா பிரிவினரைக் காட்டிலும் பரிசேயர்கள் யூத மதவிதிகளைக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள். தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன். நமது மக்களில் பன்னிரண்டு குலத்தினரும் பெறவேண்டுமென நம்பும் வாக்குறுதி இதுவே. இந்நம்பிக்கைக்காக யூதர்கள் தேவனுக்கு இரவும் பகலும் சேவை புரிகின்றனர். எனது மன்னரே, நான் இந்த வாக்குறுதியிலே நம்பிக்கை வைத்திருப்பதால் யூதர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர்! தேவன் மரணத்தினின்று மக்களை எழுப்ப முடியுமென்பது நம்ப இயலாதது என ஏன் மக்கள் எண்ணுகின்றனர்?

“நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன். 10 எருசலேமில் விசுவாசிகளுக்கு [a] எதிராகப் பல காரியங்களைச் செய்தேன். விசுவாசிகளில் பலரைச் சிறையிலிடும் அதிகாரத்தைத் தலைமை ஆசாரியர் எனக்குக் கொடுத்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் கொல்லப்பட்டபோது, அது ஒரு நல்ல செய்கை என்று நான் ஒப்புக்கொண்டேன். 11 ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன்.

இயேசுவைப் பற்றி பவுலின் சாட்சி

12 “ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள். 13 நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது. நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன். சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது. அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது. 14 நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ‘சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொண்டிருக்கிறாய்’ என்றது.

15 “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே. 16 எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய். 17 நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன். 18 உண்மையை இம்மக்களுக்கு நீ காட்டுவாய். அதனால் மக்கள் இருளிலிருந்து ஒளிக்குத் திரும்புவார்கள். சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் திரும்புவார்கள். மேலும் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். என்னை நம்புவதால் பரிசுத்தமாக்கப்பட்ட மனிதரோடு அவர்களும் பங்குபெற முடியும்’ என்றார்” என்று கூறினான்.

தன் ஊழியம் பற்றி பவுல்

19 பவுல் தொடர்ந்து பேசினான். “அகிரிப்பா மன்னரே, பரலோகத்திலிருந்து இக்காட்சி வந்தபோது, நான் அதற்குக் கீழ்ப்படிந்தேன். 20 மக்கள் அவர்களது இருதயங்களையும் வாழ்க்கைகளையும் மாற்றிக்கொண்டு, தேவனிடம் திரும்ப வேண்டுமென்று அவர்களுக்குக் கூற ஆரம்பித்தேன். அவர்கள் மனம் மாறினார்கள் என்பதை வெளிக்காட்டும்படியான செயல்களைச் செய்யுமாறு மக்களுக்குக் கூறினேன். தமஸ்குவிலுள்ள மக்களுக்கு முதலில் இதைக் கூற ஆரம்பித்தேன். பின் எருசலேமுக்கும், யூதேயாவின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கு இவற்றைக் கூறினேன். மேலும் யூதரல்லாத மக்களிடமும் நான் சென்றேன்.

21 “எனவேதான் யூதர்கள் என்னைப் பிடித்து, தேவாலயத்தில் என்னைக் கொல்ல முயன்றார்கள். 22 ஆனால் தேவன் எனக்கு உதவினார். இன்னமும் எனக்கு உதவிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உதவியால் நான் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் கண்ட மகத்தானதும் எளியதுமானவற்றையும் கூறிக்கொண்டுள்ளேன். ஆனால் நான் எதையும் புதிதாகக் கூறிக் கொண்டிருக்கவில்லை. பின்னர் நிகழுமென்று மோசேயும் தீர்க்கதரிசிகளும் கூறியவற்றை நான் கூறிக்கொண்டிருக்கிறேன். 23 தொல்லைகளை அனுபவித்தபின் மரணத்தின்று முதன் முதலில் எழுபவர் கிறிஸ்துவே என்று அவர்கள் கூறினர். மோசேயும் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்து யூத மக்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் ஒளியைத் தருபவர் என்று கூறினார்கள்” என்றான்.

அகிரிப்பாவை தன் சார்பாக்க முனைவது

24 பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான்.

25 பவுல், “மிக மாட்சிமைமிக்க பெஸ்துவே, நான் பித்தன் அல்லன். நான் கூறுபவை உண்மையானவை. எனது வார்த்தைகள் ஒரு மூடனின் வார்த்தைகள் அல்ல. அவை உண்மையானவையும், ஞானமிக்கவையும் ஆகும். 26 அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே. 27 அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான்.

28 அகிரிப்பா பவுலிடம் “நீ அவ்வளவு எளிதாக என்னைக் கிறிஸ்தவனாக மாறுவதற்குத் தூண்ட முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

29 பவுல், “அது எளிதானதா கடினமானதா, என்பது முக்கியமல்ல. நீங்கள் மட்டுமல்ல, என்னைக் கேட்கிற இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இரட்சிக்கப்பட்டு எனக்குப் பூட்டப்பட்டுள்ள இந்த விலங்குகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் என்னைப் போலாக வேண்டுமென்று தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றான்.

30 அகிரிப்பா மன்னரும் கவர்னர் பெஸ்துவும் பெர்னிசும் அவர்களோடு அமர்ந்திருந்த எல்லா மக்களும் எழுந்து 31 ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், “இம்மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை!” என்றார்கள். 32 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center