M’Cheyne Bible Reading Plan
ஈசாக்குக்கு ஒரு மனைவி
24 ஆபிரகாம் மிகவும் வயோதிபனாக இருந்தான். அவனையும், அவன் செய்த காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். 2 ஆபிரகாமுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனே ஆபிரகாமுக்குச் சொந்தமான எல்லாவற்றுக்கும் பொறுப்பானவனாக இருந்தான். ஒரு நாள் ஆபிரகாம் அவனை அழைத்து, “எனது தொடையின் கீழ் உன் கைகளை வை. 3 நான் உன்னிடமிருந்து ஒரு வாக்குறுதியை வாங்க விரும்புகிறேன், வானத்திற்கும் பூமிக்கும் அதிபதியான தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் எனக்கு வாக்குறுதிக் கொடு. கானானியர்களிடமிருந்து ஒரு பெண்ணை என் மகன் மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் இவர்கள் மத்தியில் வாழ்கிறோம். எனினும் ஒரு கானான் தேசத்துப் பெண்ணை, அவன் மணந்துகொள்ளக் கூடாது. 4 எனது சொந்த ஜனங்கள் இருக்கிற என் நாட்டிற்குத் திரும்பிப்போ. அங்கு என் மகன் ஈசாக்குக்கு மணமுடிக்க ஒரு பெண்ணைப் பார்த்து அவளை இங்கு அழைத்துக்கொண்டு வா” என்றான்.
5 அதற்கு அந்த வேலைக்காரன், “ஒருவேளை அந்தப் பெண் இந்த நாட்டிற்கு என்னோடு வர மறுக்கலாம். எனவே உங்கள் மகனையும் என்னோடு நான் அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டான்.
6 ஆபிரகாம் அவனிடம், “இல்லை என் மகனை அந்த இடத்திற்கு உன்னோடு அழைத்துச் செல்லக் கூடாது. 7 வானத்திற்கு தேவனாகிய கர்த்தர் என்னை என் தாய் நாட்டிலிருந்து இங்கு அழைத்து வந்துள்ளார். அது என் தந்தைக்கும் என் குடும்பத்திற்கும் தாய்நாடு. ஆனால் கர்த்தர் இந்தப் புதிய நாடே எனது குடும்பத்தின் தாய்நாடு என்று வாக்குறுதிச் செய்திருக்கிறார். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன் அனுப்புவாராக. பெண்ணைத் தேர்ந்தெடுக்க உனக்கு உதவுவார். 8 ஆனால் அந்தப் பெண் உன்னோடு இங்கு வர சம்மதிக்காவிட்டால் உனது வாக்குறுதியிலிருந்து நீ விடுதலை பெறுகிறாய். ஆனால் என் மகனை மட்டும் அங்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாது” என்று கூறினான்.
9 அதன்படி, அந்த வேலைக்காரன் தன் எஜமானனின் காலடியில் தன் கையை வைத்து வாக்குறுதி செய்தான்.
பெண்ணைத் தேடுதல்
10 ஆபிரகாமின் வேலைக்காரன் பத்து ஒட்டகங்களோடு அங்கிருந்து புறப்பட்டான். அவன் தன்னோடு பலவித அழகான பரிசுப்பொருட்களையும் எடுத்து சென்றான். அவன் நாகோரின் நகரமான மெசொப்பொத்தாமியாவிற்குச் சென்றான். 11 அவன் ஊருக்கு வெளியே இருந்த கிணற்றினருகே வந்தடைந்தான். அது பெண்கள் தண்ணீர் எடுக்க வரும் மாலை நேரம். அங்கே ஒட்டகங்களைத் தங்கச் செய்தான்.
12 அவன், “என் எஜமானனின் தேவனாகிய கர்த்தாவே இன்று அவரது மகனுக்குப் பெண் தேட உதவி செய்யும். என் எஜமானரான ஆபிரகாம் மீது கருணை காட்டும். 13 நான் இந்தக் கிணற்றருகில் நின்றுகொண்டிருக்கிறேன். நகருக்குள் இருந்து ஏராளமான இளம் பெண்கள் தண்ணீரெடுக்க வருகின்றனர். 14 ஈசாக்குக்குச் சரியான பெண் யாரென்று அறிந்துகொள்ள நான் ஒரு சிறப்பான அடையாளத்துக்காகக் காத்திருக்கிறேன். அதாவது, நான் ஒரு பெண்ணிடம், ‘குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும்’ என்று சொல்லும்போது எந்தப் பெண், ‘குடி உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருவேன்’ என்று கூறுகிறாளோ அவளையே ஈசாக்கின் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி நடந்தால், அவளே நீர் ஈசாக்கிற்காக தேர்ந்தெடுத்த சரியான பெண் என்றும் அதன்பின் நீர் என் எஜமானன் மீது கருணை காட்டினீர் என்றும் நம்புவேன்” என்றான்.
பெண்ணைக் கண்டுபிடித்தல்
15 அந்த வேலைக்காரன் இவ்வாறு பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள் ஒரு இளம் பெண் தண்ணீரெடுக்க கிணற்றருகே வந்தாள். இவள் பெத்துவேலின் மகளாகிய ரெபெக்காள். பெத்துவேல் நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த மகன். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். அவள் தோளில் குடத்தை வைத்துக்கொண்டு தண்ணீரெடுக்க வந்தாள். 16 அவள் மிகவும் அழகுள்ளவளும், புருஷனை அறியாத கன்னிகையுமாயிருந்தாள். அவள் கிணற்றருகே சென்று தண்ணீரெடுத்து தன் குடத்தை நிறைத்தாள். 17 வேலைக்காரன் அவளிடம் போய், “நான் குடிக்கக் கொஞ்சம் தண்ணீரை உன் குடத்திலிருந்து தா” என்று கேட்டான்.
18 உடனே ரெபெக்காள் தோளிலிருந்து குடத்தை இறக்கி, “இதைக் குடியுங்கள் ஐயா” என்றாள். 19 அவன் குடித்து முடித்ததும் அவள், “உங்கள் ஒட்டகங்கள் குடிக்கவும் நான் தண்ணீர் ஊற்றுவேன்” என்று சொல்லி, 20 குடத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் ஒட்டகம் குடிக்குமாறு ஊற்றினாள். பிறகு கிணற்றுக்குப் போய் மேலும் தண்ணீரெடுத்து வந்து எல்லா ஒட்டகங்களுக்கும் ஊற்றினாள்.
21 வேலைக்காரன் அவளை அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கர்த்தர் அவனுக்கு ஒரு பதிலளித்தார் என்பதையும் அவனது பயணத்தை வெற்றிகரமானதாக்கினார் என்பதையும் உறுதிப்படுத்த விரும்பினான். 22 ஒட்டகங்கள் தண்ணீர் குடித்த பின் வேலைக்காரன் அவளுக்கு அரைச் சேக்கல் எடையுள்ள தங்கக் காதணியும், பத்து சேக்கல் எடையுள்ள இரண்டு பொன் கடகங்களையும் கொடுத்தான். 23 அவன் அவளிடம், “உனது தந்தை யார்? உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவில் தங்க இடம் உண்டா” என்று கேட்டான்.
24 அதற்கு ரெபக்காள், “என் தந்தை பெத்துவேல். அவர் நாகோர் மில்க்காள் ஆகியோரின் மகன்” என்றாள். 25 பிறகு அவள், “எங்கள் வீட்டில், உங்கள் ஒட்டகங்களுக்கு உணவும், உங்களுக்குப் படுக்க இடமும் உண்டு” என்றாள்.
26 வேலைக்காரன் பணிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். 27 அவன், “எனது எஜமான் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவருக்கு கர்த்தர் கருணை காட்டி தமது உண்மையை நிரூபித்துள்ளார். என் எஜமானனின் மகனுக்கு ஏற்ற பெண்ணிடம் கர்த்தர் என்னை வழி நடத்திவிட்டார்” என்றான்.
28 பிறகு ரெபெக்காள் ஓடிப்போய் தன் குடும்பத்தாரிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள். 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான். 31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.
32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான். பிறகு ஆபிரகாமின் வேலைக்காரனும் அவனது ஆட்களும் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். 33 பிறகு அவனுக்கு உண்ண உணவு கொடுத்தான். ஆனால் வேலையாள் உண்ண மறுத்துவிட்டான், “நான் ஏன் வந்திருக்கிறேன் என்பதைச் சொல்வதற்கு முன் உண்ணமாட்டேன்” என்றான்.
ஆகையால் லாபான், “பிறகு எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
ரெபெக்காளைப் பெண் கேட்டுப் பேசுதல்
34 வேலையாள், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன். 35 கர்த்தர் எல்லாவகையிலும் என் எஜமானனை சிறப்பாக ஆசீர்வதித்திருக்கிறார். என் எஜமானன் பெரிய மனிதராகிவிட்டார். அவருக்கு ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவரிடம் தங்கமும் வெள்ளியும் உள்ளன. நிறைய வேலைக்காரர்களும் உள்ளனர். ஒட்டகங்களும் கழுதைகளும் இருக்கின்றன. 36 சாராள் என் எஜமானனின் மனைவி. அவள் தனது முதிய வயதில் ஆண் குழந்தையை பெற்றாள். எனது எஜமானன் தனக்குரிய அனைத்தையும் அவனுக்கே கொடுத்திருக்கிறார். 37 என் எஜமானன் என்னை ஒரு வாக்குறுதி செய்யுமாறு வற்புறுத்தினார். என் எஜமானன் என்னிடம், ‘என் மகன் கானான் நாட்டுப் பெண்ணை மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் கானானியர்களுக்கிடையில் வாழ்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்ணை என் மகன் மணந்துகொள்ளக் கூடாது. 38 அதனால் எனது தந்தையின் நாட்டிலுள்ள எனது குடும்பத்தாரிடம் போய் என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும்’ என்று சொன்னார். 39 அதற்கு நான், என் எஜமானிடம் ‘ஒருவேளை அந்தப் பெண் என்னோடு இங்கு வர மறுப்பாள்’ என்றேன். 40 உடனே அவர், ‘நான் கர்த்தருக்குச் சேவை செய்கிறேன். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன்பாக அனுப்பி உனக்கு உதவுவார். அங்கே எனது குடும்பத்தில் என் மகனுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடிப்பாய்’ என்று கூறினார். 41 ஆனால் அவர்கள் என் மகனுக்குப் பெண் கொடுக்க மறுத்தால் பிறகு நீ செய்த வாக்குறுதியிலிருந்து விடுதலை பெறுவாய்” என்றார்.
42 “இன்று அந்தக் கிணற்றருகில் வந்து ‘என் எஜமானன் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தாவே! எனது பயணத்தை வெற்றிகரமாக்கும். 43 நான் இந்தக் கிணற்றருகில் ஒரு இளம் பெண்ணுக்காகக் காத்திருப்பேன். அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்பேன். 44 பொருத்தமான பெண் எனில் சிறப்பான முறையில் சரியான பதிலைத் தருவாள். அவள், “இந்த தண்ணீரைக் குடியுங்கள். உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்” என்பாள். அதன் மூலம் இந்தப் பெண்ணே என் எஜமானின் மகனுக்கு கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் என்று அறிவேன்’” என்று பிரார்த்தனை செய்தேன்.
45 “நான் வேண்டுதல்களை முடிக்கும் முன்னரே ரெபெக்காள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு வந்தாள். அவள் தோளில் குடத்தோடு வந்து தண்ணீரை நிரப்பினாள். நான் அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். 46 அவள் உடனே வேகமாகக் குடத்தை இறக்கி எனக்கு தண்ணீர் ஊற்றினதுடன், ‘இந்த தண்ணீரைக் குடியுங்கள். நான் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்றாள். எனவே நான் தண்ணீரைக் குடித்தேன். பிறகு அவள் என் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள். 47 பிறகு நான் ‘உனது தந்தை யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘என் தந்தை பெத்துவேல், அவர் நாகோருக்கும் மில்க்காளுக்கும் மகன்’ என்றாள். பிறகு அவளுக்கு நான் காதணிகளும் கடகங்களும் கொடுத்தேன். 48 பின்னர் நான் குனிந்து கர்த்தருக்கு நன்றி சொன்னேன். என் எஜமானனாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரைப் புகழ்ந்தேன். என்னைச் சரியான வழியில் நடத்தியதற்காக நான் நன்றி சொன்னேன். என் எஜமானனின் சகோதரரது பேத்தியையே தேவன் காட்டிவிட்டார். 49 இப்போது சொல்லுங்கள். என் எஜமானன் மீது நீங்கள் கருணையும் நேசமும் வைத்து உங்கள் பெண்ணைக் கொடுப்பீர்களா? அல்லது உங்கள் பெண்ணைக் கொடுக்க மறுப்பீர்களா? சொல்லுங்கள். பின்னரே நான் செய்ய வேண்டியதை முடிவு செய்ய வேண்டும்” என்றான்.
50 லாபானும் பெத்துவேலும், “இது கர்த்தரிடமிருந்து வந்த காரியம் என உணர்கிறோம். ஆகையால் சொல்வதற்கு ஏதுமில்லை. 51 இதோ ரெபெக்காள் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டுபோம். அவள் உமது எஜமானனின் மகனை மணந்துகொள்ளட்டும். இதுவே கர்த்தரின் விருப்பம்” என்றனர்.
52 ஆபிரகாமின் வேலையாள் இதனைக் கேட்டு தரையில் விழுந்து கர்த்தரை வணங்கினான். 53 பின்னர் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களையெல்லாம் ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவன் அழகான ஆடைகளையும், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன நகைகளையும் கொடுத்தான். அவன் ரெபெக்காளின் தாய், சகோதரன் போன்றவர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். 54 பிறகு அவனும் அவனோடு வந்தவர்களும் அங்கே உண்டு இரவில் உறங்கினர். மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, “இப்போது நான் என் எஜமானனிடம் போக வேண்டும்” என்றனர்.
55 ரெபக்காளின் தாயும் சகோதரனும், “இவள் இன்னும் பத்து நாட்கள் எங்களோடு இருக்கட்டும். பிறகு அவளை அழைத்துப் போகலாம்” என்றனர்.
56 ஆனால் வேலையாளோ, “என்னைக் காத்திருக்கும்படி செய்யாதீர்கள். கர்த்தர் என் பயணத்தை வெற்றிகரமாக்கியுள்ளார். இப்போது என் எஜமானனிடம் போகவிடுங்கள்” என்றான்.
57 “ரெபெக்காளின் தாயும் சகோதரனும், நாங்கள் ரெபெக்காளை அழைத்து அவளது விருப்பத்தை அறியவேண்டும்” என்றனர். 58 அவர்கள் அவளை அழைத்து, “இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?”
என்று கேட்டனர், “ஆம், நான் போகிறேன்” என்று அவள் சொன்னாள்.
59 எனவே, அவர்கள் அவளை வேலையாளோடும் ஆட்களோடும் அனுப்ப அனுமதி கொடுத்தனர். ரெபெக்காளின் தாதியும் அவளோடு போனாள். 60 அவள் அவர்களை விட்டுப் போகும்போது அவளை ஆசீர்வதித்து:
“எங்கள் சகோதரியே லட்சக்கணக்கான ஜனங்களுக்கு நீ தாயாவாய்.
உனது சந்ததியார் தங்கள் பகைவரை வெல்லுவார்கள். நகரங்களைக் கைப்பற்றுவார்கள்” என்றனர்.
61 பின் ரெபெக்காளும் அவளது தாதியும் ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து வேலையாளைப் பின் தொடர்ந்து போனார்கள். அவன் அவர்களை அழைத்துக் கொண்டு போனான்.
62 ஈசாக்கு, பெயர்லகாய்ரோயியை விட்டு பாலைவனப் பகுதியில் வசித்துக்கொண்டிருந்தான். 63 ஒரு நாள் மாலை தியானம் செய்ய அவன் வயலுக்குச் சென்றான். அப்போது வெகு தூரத்திலிருந்து ஒட்டகங்கள் வருவதைப் பார்த்தான்.
64 ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். பின் அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கினாள். 65 அவள் வேலைக்காரனிடம், “வயலில் நம்மை சந்திக்க வருகிறாரே அந்த இளைஞன் யார்?”
என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமானனின் மகன்” என்று பதில் சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டாள்.
66 ஈசாக்கிடம் வேலைக்காரன் நடந்ததை எல்லாம் விபரமாகச் சொன்னான். 67 பின் ஈசாக்கு அவளை அழைத்துக்கொண்டு அவனது தாயான சாராளின் கூடாரத்திற்குப் போனான். அன்று அவள் அவனது மனைவியானாள். ஈசாக்கு ரெபெக்காளைப் பெரிதும் நேசித்தான். அவன் தாயின் மரணத்தினால் அடைந்த துக்கம் குறைந்து அமைதியும் ஆறுதலும் பெற்றான்.
இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்(A)
23 பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். 2 ,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 3 ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. 4 மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை.
5 ,“அவர்கள் நற்செயல்களைச் செய்வதற்கான ஒரே காரணம் மற்றவர்கள் அவற்றைக் காண வேண்டும் என்பதே. அவர்கள் வேத வாக்கியங்களில் வாசகங்களைக் கொண்ட தோல் பைகளை அணிந்து செல்கிறார்கள். அவற்றை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலும் மக்கள் காணும்படியாகப் பிரார்த்தனைக்கான சிறப்பு உடையை மிக நீண்டதாக அணிகிறார்கள். 6 அத்தகைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் விருந்துகளின்போது முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். மேலும் ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். 7 கடைவீதிகளில் மக்கள் தங்களுக்கு மரியாதை செய்யவும் மக்கள் தங்களை ‘போதகரே’ என அழைக்கவும் விரும்புகிறார்கள்.
8 ,“ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். 9 உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். 10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. 11 உங்களுக்கு வேலைக்காரனைப்போல ஊழியம் செய்கிறவனே உங்களில் பெரியவன். 12 தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
13 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடுகாலம். நீங்கள் மாயமானவர்கள். பரலோக இராஜ்யத்தின் நுழைவாயிலை நீங்கள் அடைக்கிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைய முயற்சிக்கும் மற்றவர்களையும் தடுக்கிறீர்கள். 14 [a]
15 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் உங்களுக்கு ஒரு சீஷனைத் தேடுகிறீர்கள். நீங்கள் அவனைக் கண்டடைந்து அவனை உங்களை விட மோசமானவனாக மாற்றுகிறீர்கள். மேலும் நரகத்திற்கு உரிய நீங்கள் மிகவும் பொல்லாதவர்களே.
16 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள் குருடர்கள். நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை ஆனால், தேவாலயத்தில் உள்ள தங்கத்தின் பெயராலே சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 17 நீங்கள் அறிவற்ற குருடர்கள். தங்கம் பெரிதா தேவாலயம் பெரிதா? தங்கத்தைப் பரிசுத்தமாக்குவது தேவாலயமே! எனவே, தேவாலயமே பெரியது.
18 ,“மேலும், நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், ஒருவன் பலிபீடத்திலுள்ள பலிப்பொருளின் பெயரால் சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. 20 பலிபீடத்தின் பெயராலே சத்தியம் செய்கிறவன் உண்மையில் பலிபீடத்தையும் அதில் உள்ள அனைத்துப் பொருளையும் பயன்படுத்துகிறான். 21 மேலும் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன், உண்மையில் தேவாலயத்தையும் அதில் வாசம் செய்பவரையும் பயன்படுத்துகிறான். 22 பரலோகத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன் தேவனின் அரியாசனத்தின் பெயராலும் அதில் அமர்கிறவரின் பெயராலும் சத்தியம் செய்கிறான்.
23 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். 24 நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள்.
25 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் மாயமானவர்கள். உங்கள் கோப்பைகளையும் பாத்திரங்களையும் வெளிப்புறம் நன்கு கழுவுகிறீர்கள். (சுத்தம் செய்கிறீர்கள்) ஆனால் அவற்றின் உள்ளே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி உங்கள் விருப்பத்தின்படி சேர்த்த பொருட்களால் நிரம்பியுள்ளது. 26 பரிசேயர்களே, நீங்கள் குருடர்கள். முதலில் கோப்பையின் உள்ளே சுத்தம் செய்யுங்கள், பின், கோப்பையின் வெளிப்புறம் உண்மையிலேயே சுத்தமாகும்.
27 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போன்றவர்கள். அக்கல்லறைகளின் வெளிப்புறம் நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே முழுவதும், இறந்தவர்களின் எலும்புகளும், அசுத்தங்கள் பலவும் இருக்கின்றன. 28 அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள்.
29 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். 30 மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். 31 அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். 32 உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள்.
33 ,“நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள்! தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள். 34 ஆகவே, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன். தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் அவர்களில் சிலரைச் சாகடிப்பீர்கள். சிலரைச் சிலுவையில் அறைவீர்கள். சிலரை ஜெப ஆலயங்களில் கட்டிவைத்து அடிப்பீர்கள். அவர்களை நகருக்கு நகர் துரத்திச் செல்வீர்கள்.
35 ,“ஆகவே, நேர்மையான வாழ்வை நடத்திய சிலரைக் கொன்ற குற்றத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். நல்லவனான ஆபேல் முதல் சகரியா ஆகியோரைக் கொன்ற பழிக்கும் உட்படுவீர்கள். ஆபேல் முதல் பரகியாவின் மகனும் ஆலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் கொல்லப்பட்டவனான சகரியா வரையில் வாழ்ந்த நல்லவர்களைக் கொன்ற பழிக்கும் ஆளாவீர்கள். 36 நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும்.
எருசலேம் மக்களுக்கு எச்சரிப்பு(B)
37 ,“எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ [b] என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.
நெகேமியாவின் இறுதி கட்டளைகள்
13 அந்த நாளில், மோசேயின் புத்தகம் உரக்க வாசிக்கப்பட்டது. எனவே, அனைத்து ஜனங்களாலும் கேட்கமுடிந்தது. அவர்கள், இந்தச் சட்டம் மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை கண்டுக் கொண்டனர்: அம்மோனியரும், மோவாபியரும் தேவசபையில் ஒன்றுகூட அனுமதிக்கக் கூடாது. 2 அந்தச் சட்டம் எழுதப்பட்டது. ஏனென்றால், அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தண்ணீரும் உணவும் கொடுக்கவில்லை. அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி பிலேயாமுக்குப் பணம் கொடுத்தனர். ஆனால் நமது தேவன் அச்சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார். 3 எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் இச்சட்டம் இருப்பதைக் கேட்டவுடன் அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் தம்மை அயலவர்களின் சந்ததிகளிடமிருந்து தனியே விலக்கிக் கொண்டனர்.
4-5 ஆனால் அது நிகழும் முன்னால், ஆலயத்தின் அறையை எலியாசிப், தொபியாவுக்குக் கொடுத்திருந்தான். தேவனுடைய ஆலயத்தில் எலியாசிப் சேமிப்பு அறைகளின் அதிகாரியாக இருந்தான். எலியாசிப். தொபியாவின் நெருங்கிய நண்பனாக இருந்தான். அந்த அறையானது தானியக் காணிக்கைகளையும், நறுமணப் பொருட்களையும், ஆலயப் பாத்திரங்களையும் பொருட்களையும் வைக்கப் பயன்பட்டது. அவர்கள் பத்தில் ஒரு பங்காக வந்த தானியத்தையும் புதிய திராட்சைரசத்தையும் லேவியர் பாடகர் மற்றும் வாசல் காவலர்களுக்கான எண்ணெயையும் அந்த அறையில் வைத்திருந்தனர். அவர்கள் ஆசாரியர்களுக்கான அன்பளிப்புகளையும் அந்த அறையில் வைத்தனர். ஆனால் அந்த அறையை எலியாசிப் தொபியாவுக்கக் கொடுத்தான்.
6 இவை அனைத்தும் நிகழும்போது நான் எருசலேமில் இல்லை. நான் பாபிலோன் அரசனிடம் மறுபடியும் போயிருந்தேன். பாபிலோன் அரசனான அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் மறுபடியும் போனேன். பின்னர் நான் அரசனிடம் எருசலேமிற்குத் திரும்பிப் போக அனுமதி கேட்டேன். 7 எனவே நான் எருசலேமிற்குத் திரும்பி வந்தேன். எலியாசிப் செய்திருந்த வருத்தத்திற்குரிய செயலை நான் கேள்விப்பட்டேன். நமது தேவனுடைய ஆலயத்தில் உள்ள ஒரு அறையை எலியாசிப் தொபியாவுக்குக் கொடுத்திருந்தான். 8 எலியாசிப் செய்திருந்த செயலுக்காக நான் மிகவும் கோபமாக இருந்தேன். எனவே நான் அறையிலிருந்த தொபியாவின் பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே எறிந்தேன். 9 அந்த அறையைச் சுத்தமும் பரிசுத்தமும் செய்யும்படி நான் கட்டளையிட்டேன். பிறகு நான் ஆலயப் பாத்திரங்களையும், பொருட்களையும், தானியக் காணிக்கைகளையும், நறுமணப் பொருட்களையும் மீண்டும் அந்த அறையில் வைத்தேன்.
10 ஜனங்கள் தங்களது பங்கை லேவியர்களுக்குக் கொடுக்கவில்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன். எனவே லேவியர்களும், பாடகர்களும் தங்கள் வயல்களில் வேலை செய்ய திரும்பப் போயிருந்தனர். 11 எனவே நான் அதிகாரிகளிடம் அவர்கள் தவறு செய்தனர் என்று கூறினேன். நான் அவர்களிடம், “நீங்கள் தேவனுடைய ஆலயப் பொறுப்பை ஏன் கவனிக்கவில்லை?” என்று கேட்டேன். பிறகு நான் லேவியர்கள் அனைவரையும் கூட்டினேன். அவர்கள் ஆலயத்தில் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று தங்கள் பணியைச் செய்யுமாறு நான் சொன்னேன். 12 பிறகு யூதாவிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் தானிய விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தையும் புதிய திராட்சைரசத்தையும், ஆலயத்துக்கான எண்ணெயையும் கொண்டு வந்தனர். அவை சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டன.
13 நான் சேமிப்பு அறைகளின் பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்களை நியமித்தேன். ஆசாரியனாகிய செலேமியா, வேதபாரகனாகிய சாதோக், லேவியரில் பெதாயா, இவர்களுக்குத் துணையாக மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன் ஆனான் ஆகியோரை நியமித்தேன். இவர்களை நம்பமுடியும் என்று நான் அறிந்தேன். எனவே அவர்கள் உறவினர்களுக்குப் பங்கிட்டு வழங்குகிற பொறுப்பு அவர்களுடையது.
14 “தேவனே நான் செய்திருப்பவற்றை நினைத்துப் பாரும். தேவனுடைய ஆலயத்திற்கும் அதன் சேவைகளுக்கும் நான் உண்மையோடு செய்திருப்பதை மறக்கவேண்டாம்.”
15 யூதாவில் அந்தக் காலத்தில், ஜனங்கள் ஓய்வுநாளில் வேலை செய்வதை நான் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைரசத்தைச் செய்ய திராட்சைகளை மிதிப்பதைப் பார்த்தேன். ஜனங்கள் தானியங்களைக் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமை ஏற்றுவதைப் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் நகரத்தில் சுமந்து செல்வதைப் பார்த்தேன். ஓய்வுநாளில் அவர்கள் இவை எல்லாவற்றையும் எருசலேமிற்குள் கொண்டுவந்தனர். எனவே, நான் இதைப்பற்றி அவர்களை எச்சரித்தேன். நான் அவர்களிடம் ஓய்வுநாளில் உணவை விற்கக்கூடாது என்று சொன்னேன்.
16 எருசலேமில் தீரு நகரத்திலுள்ள சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வுநாளில் மீனையும் மற்றும் சில பொருட்களையும் எருசலேமிற்குள் கொண்டுவந்து விற்றனர். அவற்றை யூதர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். 17 யூதாவில் உள்ள முக்கியமான ஜனங்களிடம் நான் அவர்கள் தவறு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். நான் அந்த முக்கிய மனிதர்களிடம், “நீங்கள் மிக மோசமான செயலைச் செய்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை மற்ற நாட்களைப் போன்று ஆக்கிவிட்டீர்கள். 18 உங்கள் முற்பிதாக்கள் இதைப் போன்றே செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அதனால்தான் நமது தேவன் எல்லாத் துன்பங்களையும் அழிவுகளையும் நமக்கும் இந்த நகருக்கும் கொண்டுவந்தார். இப்பொழுது அதையே நீங்கள் செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இதைவிட அதிகமாக இஸ்ரவேலருக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால் நீங்கள் ஓய்வுநாளை அசுத்தம் செய்து, இது ஒரு முக்கியமான நாளல்ல என கருதுகிறீர்கள்” என்றேன்.
19 எனவே நான் இதைத்தான் செய்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் இருட்டுவதற்கு முன்னால், வாசல் காவலாளர்களிடம் எருசலேமின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போடுமாறு கட்டளையிட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை அவர்கள் கதவைத் திறக்கக்கூடாது. வாசல்களில் நான் எனது சொந்த மனிதர்கள் சிலரை நியமித்தேன். அவர்களுக்கு உறுதியாக ஓய்வுநாளில் எருசலேமிற்குள் எந்த சுமையையும் கொண்டு வரக்கூடாது என்று ஆணையிட்டேன்.
20 ஒன்று அல்லது இரண்டு தடவை வியாபாரிகளும் விற்பனையாளர்களும் எருசலேமிற்கு வெளியே இரவில் தங்கும்படி ஏற்பட்டது. 21 ஆனால் நான் அந்த வியாபாரிகளையும், விற்பனையாளர்களையும் எச்சரிக்கை செய்தேன். அவர்களிடம் நான், “இரவில் சுவருக்கு முன்னால் தங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இவ்வாறு செய்தால் நான் உங்களைக் கைது செய்வேன்” என்று கூறினேன். எனவே அந்நாளிலிருந்து அவர்கள் ஓய்வுநாளில் தங்கள் பொருள்களை விற்க வருவதில்லை.
22 பிறகு நான் லேவியர்களிடம் தங்களை பரிசுத்தமாக்க கட்டளையிட்டேன். அதனைச் செய்தபிறகு அவர்கள் வாயில்களைக் காக்கச் செல்லவேண்டும். ஓய்வுநாள் பரிசுத்தமான நாளாக அனுசரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த இது செய்யப்பட்டது. “தேவனே, நான் இவற்றையெல்லாம் செய்ததற்காக என்னை நினைத்துப்பாரும், என்னிடம் இரக்கமாக இரும். உமது பெரும் அன்பை என்னிடம் காட்டும்.”
23 அந்நாட்களில், சில யூதர்கள் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஆகிய நாடுகளில் உள்ள பெண்களை மணந்துகொண்டதைக் கவனித்தேன். 24 அத்திருமணங்களால் வந்த குழந்தைகளில் பாதிபேருக்கு யூதமொழியை எப்படி பேசுவது என்று தெரியவில்லை. அக்குழந்தைகள் அஸ்தோத், அம்மோன் அல்லது மோவாப் மொழிகளைப் பேசின. 25 எனவே நான் அந்த மனிதர்களிடம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொன்னேன். நான் அவர்களிடம் கடின வார்த்தைகளைச் சொன்னேன். அத்தகைய மனிதர் சிலரை நான் அடித்தேன். நான் அவர்களின் தலைமயிரைப் பிடித்து இழுத்தேன். நான் அவர்களை தேவனுடைய பேரால் வாக்குறுதியளிக்குமாறு பலவந்தப்படுத்தினேன். நான் அவர்களிடம், “நீங்கள் அந்த ஜனங்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது. உங்கள் மகன்களை அயல்நாட்டு ஜனங்களின் பெண்கள் மணந்துகொள்ளும்படி விடக்கூடாது. உங்கள் மகள்களை அயல்நாட்டு ஜனங்களின் மகன்களை மணந்துகொள்ளும்படிவிடக் கூடாது. 26 இது போன்ற திருமணங்கள் சாலொமோனைப் பாவம் செய்யும்படி செய்தது என்று உங்களுக்குத் தெரியும். அனைத்து நாடுகளிலும் சாலொமோனைப் போன்ற பேரரசன் இல்லை. தேவன் சாலொமோனை நேசித்தார். தேவன் சாலொமோனை இஸ்ரவேல் தேசத்தின் முழுவதற்கும் பேரரசனாகச் செய்தார். ஆனாலும் சாலொமோன் வெளிநாட்டுப் பெண்களால் பாவம் செய்யும்படி ஆயிற்று. 27 இப்பொழுது நீங்களும் இந்தப் பயங்கரமான பாவத்தைச் செய்வதாக நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.
28 யொயதா, தலைமை ஆசாரியனாகிய எலியாசிபின் மகன். யொயதாவின் மகன்களில் ஒருவன் ஆரானிலுள்ள சன்பல்லாத்தின் மருமகனாக இருந்தான். நான் அவனை இந்த இடத்தை விட்டுப் போகும்படி வற்புறுத்தினேன். அவனை ஓடிவிடும்படி வற்புறுத்தினேன்.
29 “எனது தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். அவர்கள் ஆசாரிய பதவியை அசுத்தம் செய்கிறார்கள். அது முக்கியமில்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நீர் ஆசாரியர்களோடும், லேவியர்களோடும் செய்த உடன்படிக்கைக்கு அவர்கள் அடிபணிய மறுக்கிறார்கள். 30 எனவே, நான் ஆசாரியர்களையும் லேவியர்களையும் சுத்தமாக்கினேன். வெளிநாட்டவர்களையும், அவர்களின் உபதேசங்களையும் எடுத்துப்போட்டேன். நான் லேவியர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் அவர்களது கடமைககளையும், பொறுப்புகளையும் கற்றுக் கொடுத்தேன். 31 சரியான காலத்தில் ஜனங்கள் அன்பளிப்பாக விறகையும் முதற்பலன்களையும் கொண்டு வருவதை உறுதிபடுத்தினேன்.
“எனது தேவனே, இத்தகைய நல்ல காரியங்களைச் செய்ததற்காக என்னை நினைவுக்கொள்ளும்.”
23 யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். 2 தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். 3 பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான்.
4 பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர்.
5 பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ [a] என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.
6 அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!” என்றான்.
7 பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது. 8 (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) 9 எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!” என்றனர்.
10 விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
11 மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார்.
பவுலைக் கொல்ல சில யூதர்களின் திட்டம்
12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். 13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். 14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.
16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.
19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.
22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.
செசரியாவிற்குப் பவுல் அனுப்பப்படுதல்
23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, “செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள். 24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான். 25 அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.
26 கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
27 யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன். 28 அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். 29 எனவே யூத சங்கத்திற்கு முன்னால் அவனைக் கொண்டு வந்தேன். இதுவே நான் கண்டது. தவறான சில காரியங்களைப் பவுல் செய்ததாக யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த யூதவிதிகளைப் பற்றியது. இந்த விஷயங்கள் எதுவும் சிறைத் தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஏற்றவை அல்ல. 30 சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.
31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர். 32 மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர். 33 குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.
34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார். 35 ஆளுநர், “உன்மீது குற்றம் சுமத்தியவர்கள் இங்கு வரும்போது வழக்கை விசாரிக்கிறேன்” என்றார். அரண்மனையில் பவுலை வைத்திருக்கும் பொருட்டு ஆளுநர் ஆணைகள் பிறப்பித்தார். (இக்கட்டிடம் ஏரோதால் கட்டப்பட்டது)
2008 by World Bible Translation Center