M’Cheyne Bible Reading Plan
ஆதாமின் குடும்ப வரலாறு
5 இது ஆதாமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி. தேவன் மனிதரைத் தம் சாயலிலேயே படைத்தார். 2 தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார்.
3 ஆதாமுக்கு 130 வயது ஆன பிறகு இன்னொரு மகன் பிறந்தான். அவன் ஆதாமைப்போலவே இருந்தான். ஆதாம் அவனுக்கு சேத் என்று பெயர் வைத்தான். 4 சேத் பிறந்த பிறகும் ஆதாம் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் ஆதாமுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 5 எனவே ஆதாம் மொத்தமாக 930 ஆண்டுகள் வாழ்ந்து, மரணமடைந்தான்.
6 சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோஸ் என்ற மகன் பிறந்தான். 7 ஏனோஸ் பிறந்த பிறகு சேத் 807 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 8 சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான்.
9 ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற மகன் பிறந்தான். 10 கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 11 ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தான்.
12 கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற மகன் பிறந்தான். 13 மகலாலேயேல் பிறந்த பிறகு கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 14 ஆகவே கேனான் 910 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
15 மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற மகன் பிறந்தான். 16 யாரேத் பிறந்த பின் மகலாலேயேல் 830 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 17 மகலாலேயேல் 895 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
18 யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற மகன் பிறந்தான். 19 ஏனோக் பிறந்த பின் யாரேத் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 20 யாரேத் மொத்தம் 962 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
21 ஏனோக்குக்கு 65 வயதானபோது அவனுக்கு மெத்தூசலா என்ற மகன் பிறந்தான். 22 மெத்தூசலா பிறந்தபின் ஏனோக் 300 ஆண்டுகள் தேவனோடு வழிநடந்தான். அக்காலத்தில் அவன் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். 23 அவன் மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான். 24 ஒரு நாள் ஏனோக் தேவனோடு நடந்துகொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
25 மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு லாமேக் என்ற மகன் பிறந்தான். 26 லாமேக் பிறந்தபின் மெத்தூசலா 782 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 27 மெத்தூசலா 969 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
28 லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். 29 அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். அவன், “நாம் விவசாயிகளாக பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியைச் சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்றான்.
30 நோவா பிறந்தபின், லாமேக் 595 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவன் ஆண் பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். 31 லாமேக் மொத்தம் 777 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
32 நோவாவுக்கு 500 வயதானபின் அவனுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் ஆண்பிள்ளைகள் பிறந்தனர்.
இயேசுவின் மலைப் பிரசங்கம்(A)
5 அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள். 2 இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்:
3 ,“ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.
4 இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் அவர்களைத் தேற்றுவார்.
5 பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் வாக்களித்த இடத்தை [a] அவர்கள் பெறுவார்கள்.
6 மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார்.
7 மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.
8 தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.
9 அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.
10 நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.
11 ,“உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 12 அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய மகத்தான வெகுமதி உங்களுக்குக் காத்திருக்கிறது. உங்களுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் மக்கள் அதே விதமான தீமைகளைச் செய்தார்கள்.
உப்பு, ஒளி உவமைகள்(B)
13 ,“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.
14 ,“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. 15 மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. 16 அது போலவே, நீங்களும் மற்ற மனிதர்களுக்கு விளக்காக விளங்கவேண்டும். உங்களது நற்செயல்களை மற்றவர்கள் காணும்படி வாழுங்கள். பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவை மக்கள் புகழ்ந்து பேசுமாறு நீங்கள் வாழுங்கள்.
இயேசுவும் பழைய ஏற்பாடும்
17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.
19 ,“ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.
கோபத்தைப் பற்றிய போதனை
21 ,“‘எவரையும் கொல்லாதே. [b] கொலை செய்கிறவன் தண்டிக்கப்படுவான்’ என்று வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். அனைவரும் உங்கள் சகோதரர்களே. நீங்கள் மற்றவர்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். மற்றவருக்கு எதிராகத் தீயவைகளைச் சொன்னால் யூத ஆலோசனைக் குழுவினால் தண்டிக்கப்படுவீர்கள். வேறொரு மனிதனை முட்டாள் என்று நீங்கள் அழைத்தால், நரகத் தீயின் ஆபத்துக்குள்ளாவீர்கள்.
23 ,“எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால், 24 உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
25 ,“உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்தால், அவனுடன் விரைவாக நட்பாகுங்கள். நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பே அதைச் செய்ய வேண்டும். அவனுடன் நட்பாகாவிட்டால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான். மேலும், நீதிபதி உங்களைச் சிறையிலடைக்க காவலரிடம் ஒப்படைப்பார். 26 நான் சொல்லுகிறேன், நீங்கள் கொடுக்கவேண்டியது அனைத்தையும் கொடுத்துத் தீர்க்கிறவரையிலும் உங்களால் அந்தச் சிறையை விட்டு மீளமுடியாது.
கற்பைக் குறித்த போதனை
27 ,“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ [c] என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். 29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. 30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று.
விவாகரத்துப்பற்றிய போதனை(C)
31 ,“‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’ [d] என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான்.
வாக்குறுதிகளைப்பற்றிய போதனை
33 ,“‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’ [e] என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம். 35 பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா இராஜாவின் நகரம். 36 உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது. 37 ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே கூறுங்கள். ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதற்கு மேலாக ஏதும் நீங்கள் கூறினால் அது பொல்லாங்கனாகிய பிசாசின் வார்த்தைகளாயிருக்கும்.”
பழிவாங்குதல் பற்றிய போதனை(D)
38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ [f] என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.
அனைவரையும் நேசியுங்கள்(E)
43 ,“‘உன் சினேகிதனை நேசி. [g] உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
5 அப்போது, ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியாவும் தேவனுடைய பெயரால் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் யூதாவிலும் எருசலேமிலும் யூதர்களை உற்சாகப்படுத்தினார்கள். 2 எனவே செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் மீண்டும் எழுந்து எருசலேமில் ஆலய வேலையை ஆரம்பித்தனர். தேவனுடைய தீர்க்கதரிசிகள் அனைவரும் அவர்களோடு இருந்து, அவர்கள் வேலைக்கு பக்கப்பலமாக இருந்தார்கள். 3 அப்போது தத்னாய் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், அவர்களுடன் இருந்தவர்களும் செருபாபேலிடமும், யெசுவா மற்றும் அவர்களோடு இருந்தவர்களிடம் சென்றார்கள். தத்னாயும், அவனோடு வந்தவர்களும் செருபாபேல் மற்றும் அவனுடனிருந்தவர்களிடம், “இந்த ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று கேட்டார்கள். 4 மேலும் அவர்கள் செருபாபேலிடம், “இக்கட்டிடத்திற்காக வேலைச் செய்பவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன?” என்றும் கேட்டனர்.
5 ஆனால் தேவன் யூதத் தலைவர்களைக் கவனித்துக் கொண்டு இருந்தார். கட்டிடம் கட்டுபவர்கள், இந்தச் செய்தி தரியுவினிடத்தில் போய் சேருகிறவரைக்கும் தம் வேலையை நிறுத்தவில்லை. கோரேசு அரசன் பதில் செல்லுகிறவரைக்கும் அவர்கள் தொடர்ந்து வேலைச் செய்தனர்.
6 ஐபிராத்து ஆற்றின் மேற்குப்பகுதிக்கு ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், மேலும் சில முக்கியமான ஜனங்களும் அரசனான தரியுவுக்குக் கடிதம் அனுப்பினார்கள். 7 இதுதான் அக்கடிதத்தின் நகல்:
தரியு அரசனுக்கு, வாழ்த்துக்கள்.
8 தரியு அரசனே! நாங்கள் யூதா பகுதிக்குப் போனது உமக்குத் தெரியும். நாங்கள் மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம். யூதாவிலுள்ள ஜனங்கள் அவ்வாலயத்தைப் பெரிய கற்களால் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவர்களில் பெரிய மரத்தடிகளை வைத்துக்கொண்டிருந்தனர். மிகக் கவனமாக வேலை நடந்துக்கொண்டிருந்தது. யூதா ஜனங்கள் கடுமையாக வேலைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வேலையை விரைவாகச் செய்கின்றனர், அது விரைவில் முடியும்.
9 அவர்களின் தலைவர்களிடம் அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளைக் குறித்து சில கேள்விகளைக் கேட்டோம். அவர்களிடம், “இவ்வாலயத்தைப் புதிது போல கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று நாங்கள் கேட்டோம். 10 அவர்களின் பெயர்களையும் நாங்கள் கேட்டோம். அவர்களின் தலைவர்கள் பெயரை நீங்கள் தெரிந்துக்கொள்ளும்படி எழுதிவைக்க நாங்கள் விரும்பினோம்.
11 அவர்கள் சொன்ன பதில் இதுதான்:
நாங்கள் பூமிக்கும், பரலோகத்திற்கும் தேவனுடைய ஊழியர்கள். இஸ்ரவேலின் மிகப் பெரிய அரசன் பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிமுடித்த ஆலயத்தை நாங்கள் திரும்பக் கட்டிக்கொண்டிருக்கிறோம். 12 ஆனால் எங்கள் முற்பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்கு கோபம் வரும்படி நடந்துக்கொண்டார்கள். எனவே தேவன் எங்கள் முற்பிதாக்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுத்தார். அவன் இந்த ஆலயத்தை அழித்தான். ஜனங்களை பலவந்தமாக பாபிலோனுக்கு கைதிகளாக அழைத்துச் சென்றான். 13 ஆனால், கோரேசு பாபிலோனின் அரசனான முதல் ஆண்டில், தேவனுடைய ஆலயத்தை மீண்டும் கட்டும்படி கட்டளையிட்டான். 14 கடந்த காலத்தில் தேவனுடைய ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொன் மற்றும் வெள்ளிப் பொருட்களை, பாபிலோனில் உள்ள நேபுகாத்நேச்சாரின் ஆலயத்திலிருந்து கோரேசு கொண்டு வந்தான். எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனில் உள்ள ஆலயத்திற்கு எடுத்துச் சென்றான். அரசன் கோரேசு, அப்பொன் மற்றும் வெள்ளிப் பொருட்களை செஸ்பாத்சாரிடம் (செருபாபேலிடம்) கொடுத்தான். கோரேசு செஸ்பாத்சாரை ஆளுநராகத் தேர்ந்தெடுத்தான்.
15 பிறகு கோரேசு செஸ்பாத்சாரிடம், “இந்தப் பொன்னையும் வெள்ளியையும் எடுத்து போய் எருசலேமில் உள்ள ஆலயத்தில் திரும்ப வை. முன்பு ஆலயம் இருந்த அதே இடத்தில் மீண்டும் ஆலயத்தைக் கட்டு” என்றான்.
16 எனவே செஸ்பாத்சார் வந்து தேவனுடைய ஆலயத்திற்கு எருசலேமில் அஸ்திவாரம் அமைத்தான். அன்றிலிருந்து இன்று வரை வேலைத் தொடர்கிறது. ஆனால் அது இன்னும் முடியவில்லை.
17 இப்போது, அரசன் விரும்பினால் அரசனுடைய பழைய அதிகாரப்பூர்வமானப் பத்திரங்களைத் தேடிப்பாருங்கள். கோரேசு அரசன் எருசலேமில் தேவனுக்காக ஆலயம் கட்ட கட்டளையிட்டது உண்மை என்றால், பிறகு ஒரு கடிதத்தை எங்களுக்கு அனுப்புங்கள். அதில் இனி நாங்கள் என்ன செய்வது என்பது பற்றி குறிப்பிடுங்கள் என்று எழுதியிருந்தனர்.
அனனியாவும் சப்பீராளும்
5 அனனியா என்றொரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சப்பீராள். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தை அனனியா விற்றான். 2 ஆனால் தனக்குக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே அவன் அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தான். மீதியிருந்த பணத்தை இரகசியமாக தனக்கென வைத்துக்கொண்டான். அவன் மனைவி இதனை அறிந்து இத்திட்டத்துக்கு ஒப்புக்கொண்டாள்.
3 பேதுரு “அனனியாவே, சாத்தான் உனது இருதயத்தை ஆள ஏன் அனுமதித்தாய்? நீ பொய் கூறி, பரிசுத்த ஆவியை ஏமாற்ற முயன்றாய். நீ உனது நிலத்தை விற்றாய். ஆனால் பணத்தில் ஒரு பகுதியை ஏன் உனக்காக வைத்துக்கொண்டாய்? 4 நீ நிலத்தை விற்கும் முன்பு அது உனக்கு உரியதாக இருந்தது. நீ அதனை விற்ற பிறகும் அந்தப் பணத்தை நீ விரும்பிய வகையில் செலவழித்திருக்கலாம். ஏன் இந்தத் தீய செயலைச் செய்வதற்கு எண்ணினாய்? நீ தேவனிடம் பொய் கூறினாய், மனிதரிடம் அல்ல!” என்றான்.
5-6 அனனியா இதனைக் கேட்டபோது, கீழே விழுந்து உயிர்விட்டான். சில இளைஞர்கள் வந்து அவன் சரீரத்தைப் பொதிந்தனர். அதனை வெளியே எடுத்துச்சென்று புதைத்தனர். இதைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மனமும் அச்சத்தால் நிரம்பியது.
7 சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை. 8 பேதுரு அவளை நோக்கி, “உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா?” என்று கேட்டான்.
சப்பீராள் பதிலாக, “ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது” என்றாள்.
9 பேதுரு அவளை நோக்கி, “கர்த்தருடைய ஆவியைச் சோதிப்பதற்கு நீயும் உன் கணவனும் ஏன் ஒத்துக்கொண்டீர்கள்? கவனி, அந்தக் காலடிகளின் சத்தத்தைக் கேட்டாயா? உனது கணவனைப் புதைத்த மனிதர்கள் கதவருகே வந்துவிட்டனர். உன்னையும் அவர்கள் அவ்வாறே சுமந்து செல்வர்” என்றான். 10 அதே கணத்தில் சப்பீராள் அவன் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். அம்மனிதர்கள் உள்ளே வந்து அவள் இறந்துவிட்டதைக் கண்டனர். அவர்கள் அவளைச் சுமந்துசென்று, அவளது கணவனின் அருகே புதைத்தனர். 11 விசுவாசிகளனைவரும், இந்தக் காரியங்களைக் குறித்துக் கேட்ட பிற மக்களும் பயத்தால் நிரம்பினர்.
தேவனிடமிருந்து சான்றுகள்
12 அப்போஸ்தலர்கள் அதிசயங்கள் பலவற்றையும், வல்லமைமிக்க காரியங்களையும் செய்தனர். எல்லா மக்களும் இந்தக் காரியங்களைப் பார்த்தனர். சாலோமோனின் மண்டபத்தில் அப்போஸ்தலர்கள் கூடியிருந்தனர். அவர்கள் ஒரே நோக்கம் உடையோராக இருந்தனர். 13 வேறு எந்த மக்களும் அவர்களோடு அங்கு நிற்பதற்குத் தகுதியானவர்களாகத் தங்களைக் கருதவில்லை. அப்போஸ்தலர்களை எல்லா மக்களும் மிகவும் புகழ்ந்தார்கள். 14 மேலும் மேலும் மிகுதியான மக்கள் கர்த்தரில் நம்பிக்கை வைத்தனர். பல பெண்களும் ஆண்களும் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். 15 எனவே மக்கள் தங்களுடைய நோயாளிகளை தெருவுக்குக் கொண்டு வந்தனர். பேதுரு அவ்வழியே வருகிறானென்று கேள்விப்பட்டனர். எனவே மக்கள் நோயாளிகளை சிறு கட்டில்களிலும் படுக்கைகளிலும் படுக்கவைத்தனர். பேதுருவின் நிழல் நோயாளிகள் மீது விழுந்தால் கூட அவர்கள் குணமாவதற்கு அதுவே போதும் என்று அவர்கள் நம்பி பேதுரு நடக்கும் வழியில் அவர்களைப் படுக்க வைத்தனர். 16 எருசலேமின் சுற்றுப் புறத்திலுள்ள எல்லா ஊர்களிலுமிருந்து மக்கள் வந்தனர். நோயாளிகளையும் பிசாசின் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்டோரையும் அவர்கள் கொண்டு வந்தனர். இந்த மக்கள் எல்லோரும் குணம் பெற்றனர்.
தடை செய்யும் முயற்சி
17 தலைமை ஆசாரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். 18 அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். 19 ஆனால் இரவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் சிறையின் கதவுகளைத் திறந்தான். தேவ தூதன் அப்போஸ்தலர்களை வெளியே அழைத்துச் சென்று அவர்களை நோக்கி, 20 “செல்லுங்கள். தேவாலயத்தில் போய் நில்லுங்கள். இப்புதிய வாழ்க்கையைக் குறித்த ஜீவ வார்த்தைகள் அனைத்தையும் மக்களுக்குக் கூறுங்கள்” என்றான். 21 அப்போஸ்தலர்கள் இதைக் கேட்டபோது அவ்வாறே கீழ்ப்படிந்து தேவாலயத்துக்குச் சென்றார்கள். அது அதிகாலை வேளையாக இருந்தது. அப்போஸ்தலர்கள் மக்களுக்குப் போதிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசாரியனும் அவனது நண்பர்களும் தேவாலயத்துக்கு வந்தனர். யூதத் தலைவர்களும் எல்லா முக்கியமான யூத முதியவர்களும் கூடி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போஸ்தலர்களை அவர்களிடம் அழைத்து வருவதற்கெனச் சில மனிதர்களை அனுப்பினர். 22 அவர்கள் சிறைக்குப் போனபோது, அங்கு அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பிச் சென்று, யூத அதிகாரிகளுக்கு அதனை அறிவித்தனர். 23 அம்மனிதர்கள், “சிறை பூட்டித் தாளிடப்பட்டிருந்தது. சிறைவாயில்களருகே காவலர்கள் நின்றனர். ஆனால் நாங்கள் கதவுகளைத் திறந்தபோது சிறையில் யாருமில்லை!” என்றனர். 24 தேவாலயத்துக் காவலரின் தலைவனும் முக்கிய போதகர்களும் இதனைக் கேட்டனர். அவர்கள் குழப்பமுற்றனர். அவர்கள் ஆச்சரியமுற்று, “இதனால் என்ன நடக்கப்போகிறதோ?” என்றனர்.
25 பின் மற்றொரு மனிதன் வந்து, “கேளுங்கள்! நீங்கள் சிறையில் அடைத்த மனிதர்கள் தேவாலயத்துக்குள் நிற்கின்றனர். அவர்கள் மக்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கின்றனர்” என்று அவர்களுக்குக் கூறினான். 26 காவலர் தலைவனும், காவலரும் வெளியே வந்து அப்போஸ்தலரை அழைத்துச் சென்றனர். மக்களுக்குப் பயந்ததால் வீரர்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தவில்லை. மக்கள் சினம் கொண்டு கற்களாலெறிந்து அவர்களைக் கொல்லக்கூடுமென்று வீரர்கள் பயந்தனர்.
27 வீரர்கள், கூட்டத்திற்கு அப்போஸ்தலரை அழைத்து வந்து, யூதத் தலைவர்களுக்கு முன்பு அவர்களை நிற்கும்படியாகச் செய்தனர். தலைமை ஆசாரியன் அப்போஸ்தலர்களை விசாரித்தான். 28 அவன், “இந்த மனிதனைக் குறித்து உபதேசிக்கக் கூடாது என உங்களுக்கு ஏற்கெனவே நாங்கள் உறுதியாகக் கட்டளை இட்டிருக்கவில்லையா? ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எருசலேமை உங்கள் உபதேசங்களால் நிரப்பியுள்ளீர்கள். இந்த மனிதனின் மரணத்திற்கு எங்களைக் காரணர்களாக ஆக்குவதற்கு நீங்கள் முயல்கிறீர்கள்” என்றான்.
29 பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் பதிலாக “நாங்கள் தேவனுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கு அல்ல! 30 நீங்கள் இயேசுவைக் கொன்றீர்கள். அவரைச் சிலுவையில் தொங்கும்படியாகச் செய்தீர்கள். ஆனால் நமது முன்னோரின் கர்த்தராகிய நம் தேவன் இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார்! 31 தேவன் இயேசுவை உயர்த்தித் தனது வலது பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். இயேசுவை எங்கள் தலைவராகவும் இரட்சகராகவும் ஆக்கினார். எல்லா யூதர்களும் தங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக தேவன் இதைச் செய்தார். இப்போது தேவன் அவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும். 32 இக்காரியங்கள் அனைத்தும் நடந்ததைக் கண்டோம். இவை அனைத்தும் உண்மையென்று நாங்கள் கூறமுடியும். பரிசுத்த ஆவியானவரும் இவையனைத்தும் உண்மையென்று நிலை நாட்டுகிறார். தேவன் அவருக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் பரிசுத்த ஆவியை அளித்திருக்கிறார்” என்று கூறினர்.
33 யூதத் தலைவர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அப்போஸ்தலரைக் கொல்வதற்கு ஒரு வழிகாண அவர்கள் திட்டமிட ஆரம்பித்தனர். 34 கூட்டத்திலிருந்த பரிசேயரில் ஒருவர் எழுந்தார். அவர் பெயர் கமாலியேல். அவர் வேதபாரகராக இருந்தார். எல்லா மக்களும் அவரை மதித்தனர். சில நிமிடங்கள் அப்போஸ்தலரை வெளியே அனுப்புமாறு அவர் கூறினார். 35 பின் அவர் அங்கிருந்தோரை நோக்கி, “இஸ்ரவேலின் மனிதர்களே, இம்மனிதருக்கெதிராகச் செயல்படுமாறு நீங்கள் வகுக்கும் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்! 36 எப்போது தெயுதாஸ் தோன்றினான் என்பதை நினைவு கூருகிறீர்களா? அவன் தன்னை ஒரு முக்கியமான மனிதன் என்று கூறினான். சுமார் 400 மனிதர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். ஆனால் அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றியவர்கள் சிதறுண்டு ஓடினார்கள். அவர்களால் எதையும் செய்யக் கூடவில்லை. 37 அவனுக்குப்பின் கலிலேயாவிலிருந்து யூதா என்னும் பெயருள்ள மனிதன் வந்தான். மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் அவன் வந்தான். அவன் தன்னைப் பின் பற்றியவர்களுக்குத் தலைமையும் தாங்கினான். அவனும் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறியோடினர். 38 எனவே இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். இம்மனிதரிடமிருந்து விலகியிருங்கள். அவர்களைத் தனித்து விட்டுவிடுங்கள். அவர்கள் திட்டம் மனிதர்களிடமிருந்து உருவாகியிருந்தால் அது தகர்ந்து விழும். 39 ஆனால் அது தேவனிடமிருந்து வந்ததெனில், நீங்கள் அவர்களைத் தடுக்கவியலாது. நீங்கள் தேவனுடனேயே சண்டையிடுபவர்களாக ஆவீர்கள்” என்றார்.
கமாலியேல் கூறியவற்றிற்கு யூதத் தலைவர்கள் உடன்பட்டனர். 40 அவர்கள் அப்போஸ்தர்களை மீண்டும் உள்ளே அழைத்தனர். அவர்கள் அப்போஸ்தலரை அடித்து இயேசுவைக் குறித்து மேலும் மக்களிடம் பேசாதிருக்குமாறு கூறினர். பின்னர் அப்போஸ்தலர்களைப் போகுமாறு விடுவித்தனர். 41 அப்போஸ்தலர்கள் கூட்டத்தைவிட்டுச் சென்றனர். இயேசுவின் பெயரில் வெட்கமுறும்படியாகக் கிடைக்கப்பெற்ற பெருமைக்காக அப்போஸ்தலர்கள் மகிழ்ந்தனர். 42 மக்களுக்குப் போதிப்பதை அப்போஸ்தலர்கள் நிறுத்தவில்லை.இயேசுவே கிறிஸ்து என்னும் நற்செய்தியை அப்போஸ்தலர்கள் மக்களுக்குத் தொடர்ந்து கூறி வந்தனர். தேவாலயத்திலும், மக்களின் வீடுகளிலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் இதைச் செய்தனர்.
2008 by World Bible Translation Center