Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 13

ஆபிராம் கானானுக்குத் திரும்புதல்

13 ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான். ஆபிராம் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனிடம் ஏராளமான மிருகங்களும் தங்கமும் வெள்ளியும் இருந்தன.

ஆபிராம் தொடர்ந்து பயணம் செய்து பாலைவனத்தை விட்டு பெத்தேலுக்குச் சென்று, பெத்தேல் நகரத்திற்கும் ஆயி நகரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் தங்கினான். அது ஏற்கெனவே அவனும் அவன் குடும்பத்தாரும் தங்கிய இடமாகும். இங்கு தான் ஆபிராம் பலிபீடம் அமைத்திருந்தான். எனவே, ஆபிராம் கர்த்தரை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.

ஆபிராமும் லோத்தும் பிரிகிறார்கள்

இந்த நேரத்தில் லோத்தும் ஆபிராமோடு பயணம் செய்துகொண்டிருந்தான். லோத்துக்கும் நிறைய மிருகங்களும் கூடாரங்களும் இருந்தன. ஆபிராமிடமும் லோத்திடமும் இருந்த மிருகங்கள் வாழ்கிற அளவிற்கு அந்த நிலம் அவ்வளவு போதுமானதாக இல்லை. அதோடு கானானியர்களும் பெரிசியரும் அவர்களுடன் அங்கு வாழ்ந்து வந்தனர். ஆபிராமின் மேய்ப்பர்களும் லோத்தின் மேய்ப்பர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர்.

எனவே, ஆபிராம் லோத்திடம், “நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இனி மேல் எந்த விரோதமும் வேண்டாம். நாம் சகோதரர்கள். நாம் பிரிந்து விடுவோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றான்.

10 லோத்து யோர்தான் நதிக்கு அருகான சமவெளியைப் பார்வையிட்டான். அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டான். (கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பு சோவாருக்குப்போகும் வழிவரை அது கர்த்தரின் தோட்டம் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.) 11 எனவே லோத்து யோர்தான் சமவெளியைத் தேர்ந்தெடுத்தான். இருவரும் பிரிந்தனர். லோத்து கிழக்கு நோக்கிப் பயணம் செய்தான். 12 ஆபிராம் கானான் தேசத்தில் தங்கினான். லோத்து சமவெளிப்பகுதியின் நகரங்களில் தங்கினான். லோத்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து சோதோமில் கூடாரம் அடித்தான். 13 சோதோம் ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துகொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.

14 லோத்து விலகிப்போனதும் கர்த்தர் ஆபிராமிடம், “உன்னைச் சுற்றிலும் வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் பார். 15 இந்தப் பூமியை நான் உனக்கும் உன் சந்ததியினருக்கும் கொடுக்கிறேன். இது என்றென்றும் உங்களுக்குரியதாக இருக்கும். 16 உன் ஜனங்களை உலகத்தில் உள்ள புழுதியின் அளவுக்குப் பெருகச் செய்வேன். எவராவது புழுதியை எண்ண முடியுமானால் அதுவே உங்கள் தொகையாக இருக்கும். 17 எனவே நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அவ்வளவு தூரம் நட. நான் அவற்றை உனக்குத் தருவேன்” என்றார்.

18 எனவே, ஆபிராம் தனது கூடாரத்தை எடுத்துக்கொண்டு பெரிய மரங்களிருக்கும் எபிரோனிலிலுள்ள மம்ரேயின் சமபூமிக்குச் சென்றான். இங்கு ஆபிராம் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

மத்தேயு 12

இயேசுவைக்குறித்த விமர்சனம்(A)

12 அப்போது இயேசு, யூதர்களுக்கு முக்கியமான வாரத்தின் ஓய்வு நாளன்று வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார். இயேசுவின் சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்கள் பசியுடனிருந்தனர். எனவே, சீடர்கள் கதிர்களைப் பிடுங்கி உண்டனர். இதைப் பரிசேயர்கள் பார்த்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “பாருங்கள். யூதச்சட்டத்துக்கு எதிராக ஓய்வு நாளில் செய்யக் கூடாததை உங்கள் சீடர்கள் செய்கிறார்கள்” என்றனர்.

இயேசு அவர்களிடம்,, “தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவனுடைய வீட்டிற்குச் சென்றான். தேவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அப்பத்தைத் தாவீதும் மற்றவர்களும் உண்டார்கள். அந்த அப்பத்தை உண்டது குற்றமா? ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தை உண்ணலாம். நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் படித்திருக்கிறீர்கள். அதாவது ஓய்வு நாளில் ஆலயங்களில் ஆசாரியர்கள் ஓய்வு கொள்ளாமல் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று. ஆனால், அவ்வாறு செய்யும் ஆசாரியர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆலயத்தைக் காட்டிலும் மேலானவர் இங்கே இருக்கிறார். வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ [a] அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள்.

,“மனித குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என்று பதிலுரைத்தார்.

சூம்பிய கையைக் குணமாக்குதல்(B)

இயேசு அவ்விடத்தைவிட்டு, ஜெப ஆலயத்துக்குள் நுழைந்தார். 10 ஜெப ஆலயத்துக்குள் சூம்பிய கையுடன் ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்துவதற்கான ஒரு காரணத்தைத் தேடி சில யூதர்கள் அங்கிருந்தனர். எனவே அவர்கள் இயேசுவிடம்,, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?” [b] என்று கேட்டார்கள்.

11 இயேசு,, “உங்களில் யாருக்கேனும், ஓர் ஆடு இருந்து அது ஓய்வு நாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைக் குழியில் இருந்து தூக்கி எடுப்பீர்கள் அல்லவா? 12 ஓர் ஆட்டைக் காட்டிலும் மனிதன் நிச்சயமாக மேலானவன். எனவே, ஓய்வு நாளில் நற்செயல்களைச் செய்ய மோசேயின் நியாயப்பிரமாணம் அனுமதிக்கின்றது” என்று பதிலளித்தார்.

13 பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம்,, “எங்கே உன் கைகளைக் காட்டு!” என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான். அது மற்ற கையைப்போல குணமாயிற்று. 14 ஆனால் பரிசேயர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டியவாறு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இயேசு தேவனின் ஊழியர்

15 பரிசேயர்களின் எண்ணத்தை அறிந்த இயேசு, அவ்விடத்தை விட்டு நீங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு நோயாளிகள் அனைவரையும் குணமாக்கினார். 16 ஆனால், தான் யாரென்பதை மற்றவர்களிடம் கூறக் கூடாது என அவர்களை எச்சரித்தார். 17 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடக்கும்படிக்கு இயேசு இவ்வாறு செய்தார். ஏசாயா சொன்னது இதுவே,

18 ,“இதோ என் ஊழியன்.
    நான் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
நான் இவரை நேசிக்கிறேன்;
    இவரைக்குறித்து நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
என் ஆவியை இவர்மேல் அமரச்செய்வேன்.
    இவர் தேசங்களுக்கு (என்) நேர்மையான நியாயத்தைக் கூறுவார்.
19 இவர் வாக்குவாதம் செய்யார்; கூக்குரல் செய்யார்.
    வீதிகளில் உள்ள மக்கள் இவர் குரலைக் கேளார்.
20 ஏற்கெனவே வளைந்த நாணலைக்கூட இவர் உடைக்கமாட்டார்.
    அணையப்போகிற விளக்கைக்கூட இவர் அணைக்கமாட்டார்.
    நியாயத்தீர்ப்பு செய்து முடிக்கும்வரை இவர் தம் முயற்சியில் தளரமாட்டார்.
21 எல்லா மக்களும் இவரிடம் நம்பிக்கைக்கொள்வார்கள்.” (C)

இயேசுவின் வல்லமை(D)

22 பின்னர், சிலர் இயேசுவிடம் ஒரு மனிதனை அழைத்து வந்தனர். குருடனான அவனால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு பிசாசு இருந்தது. இயேசு அவனைக் குணப்படுத்தினார். அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. 23 வியப்புற்ற மக்கள்,, “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்!” என்றனர்.

24 மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள்,, “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன்.

25 இயேசு பரிசேயர்களின் எண்ணங்களை அறிந்தார். எனவே இயேசு,, “தனக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவுகளைக்கொண்ட எந்த இராஜ்யமும் அழிந்துவிடும். பிரிவுகொள்ளுகின்ற எந்த நகரமும் நிலைக்காது. பிரிகின்ற எந்தக் குடும்பமும் முன்னேற்றம் அடையாது. 26 எனவே சாத்தான் [c] தன்னுடைய பிசாசுகளையே துரத்தினால், சாத்தான் பிரிந்திருக்கிறான். எனவே சாத்தானின் இராஜ்யம் நிலைத்திருக்காது. 27 நான் பிசாசுகளை விரட்டும்பொழுது சாத்தானின் வல்லமையை நான் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மையெனில், உங்கள் மனிதர்கள் பிசாசுகளை விரட்ட எந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்கள் மக்களே நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கிறார்கள். 28 ஆனால், பிசாசுகளை விரட்ட நான் தேவ ஆவியின் வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. 29 ஒருவன் வலிமையான மனிதனின் வீட்டுக்குள் புகுந்து திருட நினைத்தால், முதலில் அவ்வலிமையான மனிதனைக் கட்டிப்போட வேண்டும். பின்னரே, அவன் அவ்வலிமையான மனிதனின் வீட்டிலிருந்து பொருட்களைத் திருட முடியும். 30 என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன்.

31 ,“அதனால் நான் சொல்லுகிறேன், மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. 32 மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்படமாட்டான்.

செயல்கள் வெளிப்படுத்தும் உண்மை(E)

33 ,“நல்ல பழங்கள் தேவையெனில், நல்ல மரத்தை வளர்க்க வேண்டும். மரம் தீயதானால், பழங்களும் தீயனவாகும். ஒரு மரத்தின் தரம் அதன் பழங்களைக்கொண்டே அறியப்படும். 34 பாம்புகள் நீங்கள்! பொல்லாதவர்கள் நீங்கள்! நீங்கள் எப்படி நல்லவற்றைக் கூற முடியும். உள்ளத்திலுள்ளதையே வாய் பேசுகிறது. 35 ஒரு நல்லவன் தன் உள்ளத்தில் நல்லவைகளை வைத்திருக்கிறான். எனவே அவன் நல்லவைகளை உள்ளத்திலிருந்து பேசுகிறான். ஆனால் பொல்லாத மனிதன் தன் உள்ளத்தில் பொல்லாதவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறான். எனவே அவன் பொல்லாதவைகளைத் தன் உள்ளத்திலிருந்து பேசுகிறான். 36 மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளில் நடக்கும். 37 உங்களது வார்த்தைகளே உங்களுக்கு நியாயம் வழங்க பயன்படுத்தப்படும். உங்களது வார்த்தைகளே உங்களை நல்லவரென்றும் உங்கள் வார்த்தைகளே உங்களைத் தீயோர் என்றும் நியாயம் தீர்க்கும்” என்று சொன்னார்.

யூதர்கள் ஆதாரம் கேட்டல்(F)

38 பின்னர், பரிசேயர்கள் சிலரும் வேதபாரகர்கள் சிலரும் இயேசுவுக்கு மறுமொழி கூறினார்கள். அவர்கள்,, “போதகரே, உம்மை நிரூபிக்கும்படியாக ஓர் அற்புதம் செய்து காட்டும்” என்று கேட்டனர்.

39 அதற்கு இயேசு,, “பொல்லாதவர்களும் பாவிகளும்தான் அற்புதங்களை ஆதாரமாகக் கேட்பார்கள். ஆனால், எந்த அற்புதமும் அவர்களுக்கு ஆதாரமாகக் காட்டப்படமாட்டாது. தீர்க்கதரிசி யோனாவிற்கு நிகழ்ந்த அற்புதம் மட்டுமே ஆதாரமாக கொடுக்கப்படும். 40 யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருந்தான். அதைப் போலவே, மனித குமாரனும் கல்லறைக்குள் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருப்பார். 41 மேலும் நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில் நினிவே [d] பட்டணத்து மனிதர் உயிர்த்தெழுந்து இன்று வாழ்கின்ற உங்கள் தவறுகளை நிரூபிப்பார்கள். ஏனென்றால், யோனாவின் போதனையைக் கேட்டு, அவர்கள் மனந்திரும்பினார்கள். நான் சொல்லுகிறேன், நான் யோனாவைக் காட்டிலும் மேன்மையானவன்.

42 ,“நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில், தென்திசையின் அரசி உயிர்த்தெழுந்து உங்கள் மேல் குற்றம் சுமத்துவாள். ஏனென்றால், அந்த அரசி மிகத் தொலைவிலிருந்து சாலமோனின் ஞானம் செறிந்த போதனைகளைக் கேட்க பயணப்பட்டு வந்தாள். நான் சொல்லுகிறேன், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவன்.

திரும்பி வரும் தீய ஆவி(G)

43 ,“பிசாசின் பொல்லாத ஆவி ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியில் வரும்பொழுது, வறண்ட நிலப்பகுதியில் ஓய்விடம் தேடி அலைகிறது. ஆனால், அதற்கு ஓய்விடம் கிடைப்பதில்லை. 44 எனவே, அந்த ஆவி, ‘நான் புறப்பட்ட இடத்திற்கே திரும்பச் செல்வேன்’ என்று சொல்லி அந்த ஆவி திரும்பி அதே மனிதனிடம் வரும்பொழுது, அது இருந்த இடம் வெறுமையாயும் சுத்தமாயும் ஒழுங்குடனும் இருப்பதை அறிகிறது. 45 பின்னர், வெளியேறித் தன்னிலும் பொல்லாத மேலும் ஏழு பொல்லாத ஆவிகளை அழைத்து வருகிறது. எல்லா ஆவிகளும் அவனுக்குள் புகுந்து வசிக்கின்றன. முன்பைவிட அவனுக்கு ஆழ்ந்த தொல்லை ஏற்படுகிறது. இன்று வாழ்கின்ற பொல்லாதவர்களுக்கும் அப்படியே நேரும்” என்று பதிலளித்தார்.

இயேசுவின் குடும்பத்தினர் யார்?(H)

46 இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர். 47 ஒருவன் இயேசுவிடம்,, “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான்.

48 இயேசு,, “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். 49 தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி,, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும். 50 பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.

நெகேமியா 2

அர்தசஷ்டா அரசன் நெகேமியாவை எருசலேமிற்கு அனுப்புகிறான்

அர்தசஷ்டா அரசனின் இருபதாம் ஆட்சியாண்டில், நிசான் மாதத்தில் கொஞ்சம் திராட்சைரசம் அரசனுக்கு கொண்டுவரப்பட்டது. நான் திராட்சைரசத்தை எடுத்து அரசனுக்கு கொடுத்தேன். நான் அரசனோடு இருக்கும்போது எப்பொழுதும் துக்கமாக இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது நான் துக்கமாய் இருந்தேன். எனவே அரசன் என்னிடம், “நீ நோயுற்றிருக்கிறாயா? ஏன் துக்கமாய் காணப்படுகிறாய்? உனது இதயம் துக்கத்தால் நிறைந்திருப்பது போன்று நான் எண்ணுகிறேன்” என்று கேட்டான்.

பிறகு நான் மிகவும் பயந்தேன். பயந்தாலும் கூட நான் அரசனிடம், “அரசன் என்றென்றும் வாழ்வாராக! நான் துக்கமாய் இருக்கிறேன். ஏனென்றால் எனது முற்பிதாக்களின் கல்லறைகள் உள்ள நகரம் பாழாயிற்று. அதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன” என்றேன்.

பிறகு அரசன் என்னிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாய்?” என்று கேட்டான்.

நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் பரலோகத்தில் இருக்கிற தேவனிடம் ஜெபம் செய்தேன். பிறகு நான் அரசனுக்கு, “இது அரசனுக்கு பிடித்தமானதாக இருந்தால், நான் உமக்கு நல்லவனாக இருந்திருந்தால், தயவுசெய்து எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள யூதாவிற்கு என்னை அனுப்பும். யூதாவில் நான் போய் எருசலேம் நகரத்தை மீண்டும் கட்ட விரும்புகிறேன்” என்று பதில் சொன்னேன்.

அரசி அரசனுக்கு அடுத்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். அரசன் என்னிடம், “நீ போய் வர எவ்வளவு காலம் எடுக்கும். நீ இங்கே எப்பொழுது திரும்பி வருவாய்?” என்று கேட்டான்.

அரசன் என்னை அனுப்புவதில் சந்தோஷப்பட்டான். எனவே நான் அவனுக்குக் குறிப்பிட்ட காலத்தைச் சொன்னேன்.

நான் அரசனிடம், “அரசனுக்கு விருப்பமானால் எனக்கு உதவலாம். நான் உதவி கேட்கலாமா? ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளின் ஆளுநர்களிடம் காட்ட எனக்கு சில கடிதங்களைத் தயவு செய்துக் கொடும். யூதாவிற்கு போகும் வழியில், அவர்களின் பகுதிகளின் வழியாகப் போவதற்கான அனுமதியை ஆளுநர்களிடம் பெற இக்கடிதங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. வாசல்கள், சுவர்கள், ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் எனது வீடு ஆகியவற்றிற்குத் தேவையான மரத்தடிகள் எனக்குத் தேவைப்படுகின்றது. எனவே உம்மிடமிருந்து ஆசாப்பிற்கு ஒரு கடிதம் எனக்குத் தேவை. உமது காடுகளுக்கு ஆசாப் பொறுப்பு அதிகாரி” என்றேன்.

அரசன் எனக்குக் கடிதங்களைக் கொடுத்தான். நான் கேட்டவற்றையெல்லாம் கூட கொடுத்தான். ஏனென்றால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்ததால், அரசன் இவற்றைச் செய்தான்.

எனவே, நான் ஐபிராத்து நதியின் மேற்குப் பகுதியின் ஆளுநர்களிடம் சென்றேன். அரசனிடமிருந்து பெற்ற கடிதங்களை ஆளுநர்களிடம் கொடுத்தேன். அரசன் என்னுடன் படை அதிகாரிகளையும் குதிரை வீரர்களையும் அனுப்பியிருந்தான். 10 நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என்பது பற்றி சன்பல்லாத்தும் தொபியாவும் கேள்விப்பட்டனர். அவர்கள் இடிந்து போனார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவ ஒருவன் வந்திருக்கிறான் என்று அறிந்து கோபமுற்றனர். சன்பல்லாத் ஓரோனியனிலிருந்தும் தொபியா அம்மோனியாவிலிருந்தும் வந்த அதிகாரிகள்.

நெகேமியா எருசலேம் சுவர்களைக் கண்காணிக்கிறான்

11-12 நான் எருசலேமிற்குப் போனேன். நான் அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். பிறகு இரவில் நான் சில மனிதர்களோடு புறப்பட்டேன். எருசலேமிற்காக என்ன செய்யவேண்டும் என்று தேவன் என் இதயத்தில் வைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நான் எவரிடமும் சொல்லியிருக்கவில்லை. நான் சவாரி செய்து வந்த குதிரையைத் தவிர வேறு குதிரைகள் என்னிடம் இல்லை. 13 இருட்டாக இருக்கும்போது நான் பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் போய் வலுசர்ப்பத்துரவு மற்றும் குப்பைமேட்டு வாசலை நோக்கிச் சவாரி செய்தேன். உடைக்கப்பட்டிருந்த எருசலேமின் சுவர்களையும், நெருப்பால் எரிக்கப்பட்டிருந்த சுவர்களிலுள்ள வாசல்களையும் நான் பார்வையிட்டேன். 14 பிறகு நான் அங்கிருந்து நீருற்று வாசலுக்கும் அரசனின் குளத்துக்கும் சென்றேன். ஆனால் நான் அருகில் நெருங்கும்போது எனது குதிரை செல்வதற்குப் போதிய இடம் இல்லை என்பதைக் கண்டுக்கொள்ள முடிந்தது. 15 எனவே, இருட்டில் நான் பள்ளத்தாக்கிற்குச் சென்றேன். இறுதியாக நான் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல் வழியாகத் திரும்பி வந்தேன். 16 இஸ்ரவேலின் முக்கிய அதிகாரிகளும் மற்ற ஜனங்களும் நான் எங்கே போய் வந்தேன் என்பதையும், நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்பதையும் அறியவில்லை. யூதர்கள், ஆசாரியர்கள், அரச குடும்பத்தினர், அதிகாரிகள், அந்தந்த வேலையைச் செய்யப்போகும் ஜனங்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை.

17 பிறகு நான் அந்த ஜனங்களிடம், “இங்கே நமக்குள்ள துன்பத்தை உங்களால் பார்க்க முடியும். எருசலேம் பாழாகியிருக்கிறது. இதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள் மீண்டும் நாம் எருசலேமின் சுவர்களைக் கட்டுவோம். அதன்பின் ஒருபோதும் நாம் அவமானமடைந்தவர்களாக இருக்கமாட்டோம்” என்றேன்.

18 நான் அந்த ஜனங்களிடம் தேவன் என்னிடம் கருணையோடு இருப்பதைப் பற்றியும் சொன்னேன். அரசன் என்னிடம் சொல்லியிருந்தவற்றைப் பற்றியும் நான் அவர்களிடம் சொன்னேன். பிறகு அந்த ஜனங்கள், “இப்பொழுது நாம் வேலையை ஆரம்பிக்கலாம்” என்று பதிலுரைத்தனர். எனவே இந்த நல்ல வேலையை நாங்கள் தொடங்கினோம். 19 ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும் அம்மோனியனான தொபியா என்னும் வேலைக்காரனும் அரபியனான கேஷேமும் நாங்கள் மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் கேள்விப்பட்டனர். அவர்கள் மிக இழிவான வழியில் எங்களைக் கேலிச் செய்தனர். அவர்கள், “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அரசனுக்கு எதிராகிக்கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டனர்.

20 ஆனால் நான் அந்த மனிதர்களிடம், “பரலோகத்தில் உள்ள தேவன் எங்களுக்கு கைக்கூடிவர உதவுவார். நாங்கள் தேவனுடைய அடியார்கள். நாங்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்டுவோம். இந்த வேலைக்கு நீங்கள் எங்களுக்கு உதவ முடியாமல் போகும். உங்கள் குடும்பத்தில் எவரும் இங்கே எருசலேமில் வாழவில்லை. இந்த நாட்டை நீங்கள் சொந்தம் கொள்ளவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என்று சொன்னேன்.

அப்போஸ்தலர் 12

சபையைத் துன்புறுத்துதல்

12 அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான். ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன். யூதர்கள் இதை விரும்பினர் என்பதை ஏரோது கண்டான். எனவே அவன் பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது பஸ்கா பண்டிகை எனப்படும் யூதரின் பண்டிகையின்போது நடந்தது) ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16 வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியுமட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான். எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டான். ஆனால் சபையினரோ பேதுருவுக்காகத் தொடர்ந்து தேவனிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.

பேதுரு விடுவிக்கப்படுதல்

இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிகமான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக்கொண்டிருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான்.

அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவ தூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன், “விரைந்து எழு!” என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன. தேவதூதன் பேதுருவை நோக்கி, “ஆடைகளை உடுத்து, செருப்புகளை அணிந்துகொள்” என்றான். அவ்வாறே பேதுருவும் செய்தான். பின் தேவ தூதன் “அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா” என்றான்.

தேவதூதன் வெளியே சென்றான். பேதுருவும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண்மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான். 10 பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந்தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானாகவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான்.

11 நடந்தது என்னவென்பதைப் பேதுரு அப்போது உணர்ந்தான். அவன், “கர்த்தர் உண்மையாகவே தனது தேவதூதனை என்னிடம் அனுப்பினார் என்பதை நான் அறிவேன். ஏரோதிடமிருந்து அவன் என்னை விடுவித்தான். தீமை எனக்கு நேருமென்று யூதர்கள் எண்ணினர். ஆனால் கர்த்தர் இவற்றிலிருந்து என்னைக் காத்தார்” என்று எண்ணினான்.

12 பேதுரு அதை உணர்ந்தபோது அவன் மரியாளின் வீட்டிற்குப் போனான். அவள் யோவானின் தாய். யோவான் மாற்கு என்றும் அழைக்கப்பட்டான். பல மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

13 பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள். 14 ரோதை பேதுருவின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் கதவைத் திறக்கவும் மறந்துவிட்டாள். அவள் உள்ளே ஓடி, கூட்டத்தினரிடம், “பேதுரு கதவருகே நிற்கிறார்!” என்றாள். 15 விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.

16 ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். 17 அவர்களை அமைதியாக இருக்கும்படியாகப் பேதுரு தனது கையால் சைகை செய்தான். தேவன் அவனைச் சிறையினின்று எவ்வாறு விடுவித்தார் என்பதை அவன் அவர்களுக்கு விவரித்தான். அவன், “நடந்ததை யாக்கோபுக்கும் பிற சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்றான். பின் வேறிடத்திற்குப் போவதற்காக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான்.

18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர். 19 ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான்.

ஏரோது அகிரிப்பாவின் மரணம்

பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான். 20 தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.

21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். 22 மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர். 23 ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.

24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது.

25 எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center