M’Cheyne Bible Reading Plan
சீபா நாட்டு அரசி சாலொமோனைப் பார்க்க வருகிறாள்
9 சீபா நாட்டு அரசி சாலொமோனின் மேன்மையை அறிந்தாள். அவள் எருசலேமிற்கு வந்து சாலொமோனைக் கடினமான கேள்விகளால் சோதிக்க விரும்பினாள். அவளோடு ஒரு பெரிய குழுவும் வந்தது. அவள் தனது ஒட்டகங்களில் மணப்பொருட்களையும், பொன்னையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து அவனிடம் பேசினாள். சாலொமோனிடம் கேட்பதற்கு அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன. 2 சாலொமோன் அவளுடைய கேள்விகள் அனைத்திற்கும் விடையளித்தான். பதில் சொல்லவோ, விளக்கம் தரவோ சாலொமோனுக்கு எதுவும் கடினமாக இல்லை. 3 சீபா அரசி சாலொமோனின் அறிவு ஞானத்தையும், அவன் கட்டிய அரண்மனையையும் பார்த்தாள். 4 அவள் சாலொமோனின் மேஜையில் இருந்த உணவு வகைகளையும் அவனது முக்கிய அதிகாரிகளையும் பார்த்தாள். சாலொமோனின் வேலைக்காரர்கள் பணிசெய்யும் முறையையும், அவர்கள் ஆடைகள் அணிந்திருக்கும் விதத்தையும் கவனித்தாள். அவள் சாலொமோனின் திராட்சைரசம் பரிமாறுபவர்களையும் அவர்களது ஆடைகளையும் கவனித்தாள். கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோன் கொடுத்த தகனபலிகளையும் கண்டாள். அனைத்தையும் அவள் கண்டு வியப்பில் மூழ்கினாள்.
5 பிறகு அவள் சாலொமோன் அரசனிடம், “நான் உங்கள் அறிவைப்பற்றியும் அரிய வேலைகளைப்பற்றியும் எனது நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். 6 நான் இங்கு வந்து என் கண்ணால் இவற்றைக் காணும்வரை நம்பாமல் இருந்தேன். உங்கள் மகத்தான ஞானத்தில் பாதியளவு கூட எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைவிடவும் நீங்கள் மகத்தானவர்! 7 உங்கள் மனைவிகளும் அதிகாரிகளும் பாக்கியசாலிகள்! அவர்கள் உங்களுக்கு சேவை செய்யும்போது உங்கள் ஞானத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்! 8 உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம். அவர் உங்களால் மகிழ்கிறார். தமது சிங்காசனத்தில் உங்களை அமரச்செய்திருக்கிறார். உங்கள் தேவன் இஸ்ரவேலின் மீது அன்பு வைத்திருக்கிறார். அவர் என்றென்றும் இஸ்ரவேலுக்கு உதவுகிறார். இதனால்தான், நியாயமானதையும் சரியானதையும் செய்வதற்காக கர்த்தர் உங்களை இஸ்ரவேலின் அரசனாக்கியுள்ளார்” என்றாள்.
9 பிறகு சீபா அரசி சாலொமோன் அரசனுக்கு 120 தாலந்து பொன்னையும் மிகுதியான உணவில் சேர்க்கும் நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சீபா அரசி கொடுத்தது போன்று சாலொமோன் அரசனுக்கு உணவில் சேர்க்கும் மிக உயர்ந்த நறுமணப் பொருட்களை யாரும் கொடுத்ததில்லை.
10 ஈராமில் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் இரத்தினக் கற்களையும் கொண்டு வந்தனர். 11 அந்த வாசனை மரங்களால் கர்த்தருடைய ஆலயத்திற்கும் அரண்மனைக்கும் சாலொமோன் படிக்கட்டுகளை அமைத்தான். சாலொமோன் அம்மரத்தால் பாடகர்களுக்காகச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் செய்தான். யூதா நாட்டிலே வாசனை மரங்களால் செய்யப்பட்ட பொருட்கள் இவைபோன்று இதற்கு முன்பு இருந்ததை எவரும் பார்த்ததில்லை.
12 சாலொமோன் அரசன் சீபா அரசிக்கு அவள் விரும்பியதையும் கேட்டவற்றையும் கொடுத்தான். அவள் அவனுக்குக் கொடுத்தவற்றைவிட அதிக அளவில் அவன் அவளுக்கு கொடுத்தான். பிறகு சீபா அரசியும் அவளது வேலைக்காரர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.
சாலொமோனின் பெரும் செல்வம்
13 ஓராண்டு காலத்திற்குள் சாலொமோன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து பொன்னைப் பெற்றான். 14 பயணம் செய்யும் வியாபாரிகளும், வணிகர்களும் மேலும் அதிகமான பொன்னைக் கொண்டு வந்தனர். அரேபியாவின் எல்லா அரசர்களும், நிலங்களை ஆள்பவர்களும் சாலொமோனுக்கு பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவந்து கொடுத்தனர்.
15 சாலொமோன் அடித்த பொன் தகட்டால் 200 பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 600 சேக்கல் எடை கொண்டதாக இருந்தது. 16 சாலொமோன் அரசன் அடித்த பொன் தகட்டால் 300 சிறிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 300 சேக்கல் பொன் எடையுள்ளதாக இருந்தது. சாலொமோன் இவற்றை லீபனோனின் காட்டு அரண்மனையில் வைத்தான்.
17 சாலொமோன் அரசன் தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தைச் செய்தான். அவன் அதனை பரிசுத்த தங்கத்தால் மூடினான். 18 அந்த சிங்காசனம் 6 படிக்கட்டுகளைக் கொண்டது. அதற்குத் தங்கத்தாலான பாதப்படியும் இருந்தது. சிங்காசனத்தின் இருக்கையின் இரண்டு பக்கங்களிலும் கை சாய்மானங்கள் வைக்கப்பட்டன. இந்த இரண்டு சாய்மானங்களுக்கும் கீழே சிங்கத்தின் உருவங்கள் நிறுத்தப்பட்டன. 19 ஆறு படிக்கட்டுகளிலும் 12 சிங்கங்களின் உருவங்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு படிக்கட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சிங்கம் இருந்தது. எந்த அரசாங்கத்திலும் இதுபோன்ற சிங்காசனம் இருந்ததில்லை.
20 சாலொமோன் அரசனது அனைத்து தண்ணீர் கோப்பைகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. லீபனோனில் உள்ள வனமாளிகையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தூய பொன்னால் செய்யப்பட்டிருந்தன. சாலொமோனின் காலத்தில் வெள்ளியானது விலைமதிப்புள்ளதாகக் கருதப்படவில்லை.
21 தார்ஷிஸ் என்னும் நகருக்குச் செல்ல சாலொமோனிடம் கப்பல்கள் இருந்தன. சாலொமோனின் கப்பல்களை ஈராமின் ஆட்கள் செலுத்தினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கப்பல்கள் தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் போன்றவற்றோடு தார்ஷிஸிலிருந்து திரும்பி வந்தன.
22 பூமியில் உள்ள மற்ற அரசர்களைவிட செல்வத்திலும் ஞானத்திலும் சாலொமோன் பெரியவனாக இருந்தான். 23 பூமியிலுள்ள அனைத்து அரசர்களும் சாலொமோனிடம் வந்து அவனது ஆலோசனைகளைக் கேட்டனர். தேவன் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். 24 ஒவ்வொரு ஆண்டும் அரசர்கள் சாலொமோனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் வெள்ளியாலானப் பொருட்கள், தங்கத்தாலானப் பொருட்கள், துணிகள், ஆயுதங்கள், மணப்பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
25 சாலொமோனிடம் இரதங்களையும் குதிரைகளையும் நிறுத்திவைக்க 4,000 லாயங்கள் இருந்தன. அவனிடம் 12,000 இரதம் ஓட்டுபவர்கள் இருந்தனர். சாலொமோன் இரதங்களை அவற்றுக்குரிய சிறப்பு நகரங்களிலும் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான். 26 ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தரின் நாடுவரைக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் உள்ள அனைத்து அரசர்களையும் சாலொமோன் ஆண்டான். 27 எருசலேமிலே அரசன் சாலொமோனிடம் கற்களைப் போன்று ஏராளமான வெள்ளி இருந்தது. பள்ளத்தாக்குகளிலே உள்ள காட்டத்தி மரங்களைப்போன்று சாலொமோனிடம் கேதுருமரங்கள் இருந்தன. 28 எகிப்திலிருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் ஜனங்கள் சாலொமோனுக்குக் குதிரைகளை கொண்டு வந்தனர்.
சாலொமோனின் மரணம்
29 தொடக்கக் காலமுதல் இறுதிவரை சாலொமோன் செய்த மற்ற செயல்களைப் பற்றிய குறிப்புகள் தீர்க்கதரிசியான நாத்தானின் எழுத்துக்களிலும் சீலோவின் அகியாவினது தீர்க்கதரிசனங்களிலும் நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமைப் பற்றி எழுதிய ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவினது தரிசனங்களிலும் உள்ளன. 30 எருசலேமில் சாலொமோன் 40 ஆண்டுகள் இஸ்ரவேலின் அரசனாக இருந்தான். 31 பிறகு அவன் தன் முற்பிதாக்களோடு நித்திரையடைந்தான். அவனுடைய தந்தையாகிய தாவீதின் நகரத்திலேயே ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். சாலொமோனது இடத்தில் அவனது மகனான ரெகொபெயாம் அரசன் ஆனான்.
1 யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து,
தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: பிதாவாகிய தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
2 எல்லா இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களுக்குரியதாகுக.
தவறு செய்கிற மக்களை தேவன் தண்டிப்பார்
3 அன்பான நண்பர்களே, நாம் எல்லோரும் ஒருமித்துப் பங்குகொள்கிற மீட்பைக் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுமென நான் மிகவும் விரும்பினேன். ஆனால் வேறு சிலவற்றைக் குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதன் தேவையை நான் உணர்ந்தேன். தேவன் தம் பரிசுத்தமான மக்களுக்கு எல்லா காலத்திற்குமாகக் கொடுத்த விசுவாசத்திற்காகப் போராடுமாறு உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். 4 சிலர் உங்கள் கூட்டத்தில் இரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனையை வெகு காலத்திற்கு முன்பே வேதவாக்கியங்கள் கூறியுள்ளன. வெகு காலத்திற்கு முன் தீர்க்கதரிசிகள் இம்மக்களைக் குறித்து எழுதினார்கள். இம்மக்கள் தேவனுக்கு எதிரானவர்கள். அவர்கள் தேவனுடைய கருணையை பாலியல் அநீதிகளுக்கு ஒரு அனுமதியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். நமது ஒரே ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற இம்மக்கள் மறுக்கிறார்கள்.
5 நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளவற்றை நினைவுகூருவதற்கு உங்களுக்கு உதவ நான் விரும்புகிறேன். ஒரு காலத்தில் எகிப்து நாட்டுக்கு வெளியே தம் மக்களை அழைத்து வந்ததன் மூலம் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். பிற்காலத்தில் விசுவாசமற்ற எல்லா மக்களையும் கர்த்தர் அழித்தார். 6 தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார். 7 சோதோம், கொமோரா, நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களையும்கூட நினைவுகூருங்கள். அந்த தேவதூதர்களைப் போன்றே அவையும் பாலியல் நீதிகளை இழந்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் மூழ்கின. நித்திய அக்கினியாகிய தண்டனையில் இப்பொழுது அவை துன்புறுகின்றன. நாம் பார்த்தறிவதற்கு தேவனுடைய தண்டனைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அவை இருக்கின்றன.
8 உங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கிற மக்களின் வழியும் இதுவே. அவர்கள் கனவுகளால் வழிகாட்டப்படுகிறார்கள். அவர்கள் தம் பாலியல் பாவங்களால் தம்மை அசுத்தப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தரின் அதிகாரத்தைத் தள்ளி விட்டு, மகிமைபொருந்திய தேவதூதர்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். 9 ஆனால் பிரதான தேவதூதனாகிய மிகாவேல் மோசேயின் உடலுக்காகப் பிசாசோடு விவாதித்தபொழுது, பழியுரைத்ததற்காக பிசாசைத் தண்டிக்க வேண்டுமென மிகாவேல் முடிவு கட்டவில்லை. (கர்த்தரின் தீர்ப்புக்காக மிகாவேல் கோரிக்கை விடுத்தான்.) “கர்த்தர் உன்னைத் தண்டிக்கட்டும்” என்று மட்டும் அவன் சொன்னான்.
10 ஆனால் புரிந்துகொள்ளாத காரியங்களை இம்மக்கள் விமர்சிக்கிறார்கள். பகுத்தறிவற்ற சில மிருகங்களைப்போல, தாமாகவே சிலவற்றைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஆனால் இவற்றாலேயே அவர்கள் அழிக்கப்படுகிறார்கள். 11 அது அவர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். காயீன் சென்ற பாதையை இந்த மக்களும் பின்பற்றுகிறார்கள். பணம் பெறுவதற்காக பிலேயாமின் தவறான வழியைப் பின்பற்ற இவர்கள் தம்மைத்தாமே ஒப்படைத்திருக்கிறார்கள். கோரா செய்ததைப்போல இந்த மக்களும் தேவனுக்கு எதிராக மோதுகிறார்கள். அவர்களும் கோராவைப்போல அழிக்கபடுவார்கள்.
12 உங்கள் அன்பின் விருந்துகளில் உங்களோடு அச்சமின்றி விருந்துண்ணும் இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாறைகள்போல இருக்கிறார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மேய்ப்பர்களாவார்கள். அவர்கள் காற்றால் அடித்துச்செல்லப்படுகிற மழை பொழியாத மேகங்களைப் போன்றவர்கள். அவர்கள் அறுவடைக் காலத்தில் கனி கொடுக்காத மரங்களைப் போன்றவர்கள். எனவே பூமியில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இருமுறை மரணம் அடைகிறார்கள். 13 அவர்கள் கடலின் பெரும் அலைகளைப் போன்றவர்கள். கடலலைகள் தம் நுரைக்கழிவுகளை வீசியடித்து கரையில் ஒதுக்குவதுபோல அவர்கள் தம் வெட்கத்துக்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். எங்கெங்கும் அம்மக்கள் வானில் திரியும் விண்மீன்களைப் போன்றவர்கள். மிகுந்த கரிய இருளில் ஓர் இடம் அம்மக்களுக்காக நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
14 ஆதாமின் ஏழாம் தலைமுறையினனான ஏனோக்கு இம்மக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினான். “பாருங்கள், பல்லாயிரக்கணக்கான தம் தூய தேவதூதர்களோடு கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார். 15 எல்லா மக்களையும் நியாயந்தீர்ப்பதற்காகவும், தம் தீய செயல்களாலும், பாவம் நிறைந்த இம்மக்கள் தேவனுக்கு எதிராகச் சொன்ன முரட்டுத்தனமான வார்த்தைகளாலும் தேவனை எதிர்த்தவர்களை தண்டிக்கவும் கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினான்.
16 இம்மக்கள் எப்போதும் குறை கூறிக் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் செய்யவிரும்பும் தீய காரியங்களை அவர்கள் எப்போதும் செய்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாய் பேசுகிறார்கள். தாங்கள் விரும்புவதைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் பிறரைக் குறித்து நல்லவை கூறுவர்.
ஓர் எச்சரிக்கையும் செய்யவேண்டிய காரியங்களும்
17 அன்பான நண்பர்களே, முன்னர் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கூறியவற்றை நினைவுகூருங்கள். 18 சீஷர்கள் உங்களிடம், “கடைசி நாட்களில் தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும், தேவனுக்கு எதிரான தம் தீய ஆசைகளைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்” என்றனர். 19 அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள். பாவம் மிகுந்த, சுயம் விரும்புகின்ற காரியங்களை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் ஆவியானவர் இல்லை.
20 ஆனால் அன்பான நண்பர்களே, மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே பலமுள்ளவர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட பிரார்த்தனை செய்யுங்கள். 21 தேவனுடைய அன்பில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணைக்காகக் காத்திருங்கள்.
22 பெலவீனமுள்ள மக்களிடம் இரக்கம் கொள்ளுங்கள். 23 நெருப்பிலிருந்து விடுவிப்பதன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள். சிறு எச்சரிக்கையுணர்வோடு இரக்கம் காட்டவேண்டிய சிலர் இருக்கிறார்கள். பாவத்தினால் அழுக்கேறிய அவர்களது ஆடைகளையும் கூட வெறுத்துவிடுங்கள்.
தேவனை வாழ்த்துங்கள்
24 நீங்கள் தடுக்கி விழுந்துவிடாதபடி செய்யவும், தம் மகிமையின் முன் எந்தப் பிழையுமின்றி உங்களை அழைக்கவும், அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கவும், அவரால் முடியும். 25 அவர் ஒருவரே தேவன். அவரே நம் மீட்பர். அவருக்கே மகிமை, வல்லமை, அதிகாரம் அனைத்தும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கடந்தகாலம் முழுக்கவும், நிகழ்காலத்துக்கும், என்றென்றைக்குமாக உண்டாவதாக ஆமென்.
1 கர்த்தர் செப்பனியாவுக்குக் கொடுத்தச் செய்தி இது. செப்பனியா இச்செய்தியை யூதாவின் அரசனான ஆமோனின் மகனான யோசியா ஆண்டபோது பெற்றான். செப்பனியா கூஷின் மகன். கூஷ் கெதலியாவின் மகன். கெதலியா ஆமரியாவின் மகன். ஆமரியா எஸ்கியாவின் மகன்.
ஜனங்ளைத் தீர்ப்பளிக்கும் கர்த்தருடைய நாள்
2 கர்த்தர் கூறுகிறார், “நான் பூமியில் உள்ள எல்லாவற்றையும் அழிப்பேன். 3 நான் அனைத்து ஜனங்களையும், அனைத்து விலங்குகளையும் அழிப்பேன். வானில் உள்ள பறவைகளையும், கடலிலுள்ள மீன்களையும் அழிப்பேன். நான் தீய ஜனங்களையும். அவர்களைப் பாவம் செய்யத் தூண்டும் அனைத்தையும் அழிப்பேன். நான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அகற்றுவேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
4 கர்த்தர், “நான் யூதாவையும், எருசலேமில் வாழ்கிற ஜனங்களையும் தண்டிப்பேன். நான் அந்த இடத்திலிருந்து எல்லாவற்றையும் அகற்றுவேன். நான் பாகால் வழிபாட்டின் இறுதி அடையாளங்களை அகற்றுவேன். நான் ஆசாரியர்களையும் அகற்றுவேன். 5 நான் நட்சத்திரங்களை வழிபடச் செல்ல கூரையின் மேல் செல்லும் ஜனங்களை அகற்றுவேன். ஜனங்கள் அப்பொய் ஆசாரியர்களை மறப்பார்கள். சில ஜனங்கள் என்னை ஆராதிப்பதாகச் சொல்கிறார்கள். அந்த ஜனங்கள் என்னை வழிபடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் பொய்த் தெய்வமான மல்காமை வழிபடுகின்றனர். எனவே, நான் அந்த ஜனங்களை அந்த இடத்திலிருந்து நீக்குவேன். 6 சில ஜனங்கள் கர்த்தரிடமிருந்து விலகினார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டனர். அந்த ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதை நிறுத்தினார்கள். எனவே, நான் அந்த இடத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவேன்” என்றார்
7 எனது கர்த்தராகிய ஆண்டவர் முன்னால் அமைதியாயிரு. ஏனென்றால், கர்த்தருடைய நீயாயத்தீர்ப்பின் நாள் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. கர்த்தர் பலியைத் தயாரித்திருக்கிறார். அவர் தனது அழைக்கப்பட்ட விருந்தினர்களை ஆயத்தப்படும்படிச் சொல்லியிருக்கிறார்.
8 கர்த்தர், “கர்த்தருடைய பலிநாளில், நான் அரசனின் மகன்களையும் மற்ற தலைவர்களையும் தண்டிப்பேன். நான் வேறு நாடுகளிலிருந்து வந்த துணிகளை அணிந்த ஜனங்களைத் தண்டிப்பேன். 9 அந்த நேரத்தில், நான் வாசற்படியைத் தாண்டிய ஜனங்களையும் தண்டிப்பேன். நான் தம் அதிகாரியின் வீடுகளைப் பொய்களாலும், வன்முறையாலும் நிரப்புகிற ஜனங்களைத் தண்டிப்பேன்” என்றார்.
10 கர்த்தரும், “அந்த வேளையில் எருசலேமில் மீன்வாசல் அருகே உள்ள ஜனங்கள் என்னிடம் உதவிக்கு அழைப்பார்கள். பட்டணத்தின் மற்றப் பகுதிகளில் உள்ள ஜனங்கள் அழுவார்கள். நகரத்தைச் சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பொருட்கள் அழிக்கப்படுகிற சத்தங்களை ஜனங்கள் கேட்பார்கள். 11 பட்டணத்தின் தாழ்வான பகுதிகளில் வாழும் ஜனங்கள் அழுவார்கள். ஏனென்றால் எல்லா வியாபாரிகளும், பணக்காரர்களும் அழிக்கப்படுவார்கள்.
12 “அந்த வேளையில், நான் ஒரு விளக்கை எடுத்து எருசலேம் முழுவதும் தேடுவேன். நான் தம் வழியில் செல்வதில் திருப்தி காணும் ஜனங்களைக் கண்டு கொள்வேன். அந்த ஜனங்கள், ‘கர்த்தர் எதுவும் செய்வதிலை. அவர் உதவுவதில்லை! அவர் காயப்படுத்துவதில்லை!’ நான் அவர்களைக் கண்டு பிடித்து தண்டிப்பேன் என்று கூறுகின்றார். 13 பிறகு மற்ற ஜனங்கள் அவர்களின் செல்வத்தை எடுத்துக்கொண்டு வீடுகளை அழிப்பார்கள். அந்த நேரத்தில், வீடுகட்டிய ஜனங்கள் அதில் வாழமாட்டார்கள். திராட்சை கொடிகளை நட்டவர்கள் அதன் ரசத்தைக் குடிக்கமாட்டார்கள். மற்ற ஜனங்கள் அவற்றைப் பெறுவார்கள்”.
14 கர்த்தருடைய நியாயதீர்ப்பின் நாள் விரைவில் வரும். அந்த நாள் அருகாமையில் உள்ளது. விரைவில் வரும். கர்த்தருடைய நியாத்தீர்ப்பின் நாளில் ஜனங்கள் சோகக் குரல்களைப் கேட்பார்கள். வலிமையான வீரர்கள் கூட அழுவார்கள். 15 தேவன் அந்நேரத்தில் தன் கோபத்தைக் காட்டுவார். அது பயங்கரமான துன்பங்களுக்குரிய நேரமாக இருக்கும். இது அழிவுக்கான நேரம்தான். இது இருண்ட கருத்த மேகமும், புயலுமுள்ள நாளாக இருக்கும். 16 இது போருக்குரிய காலத்தைப் போன்றிருக்கும். ஜனங்கள் எக்காளம் மற்றும் பூரிகை சத்தங்களை கோபுரங்கள் மற்றும் பாதுகாப்புக்குரிய நகரங்களிலிருந்தும் கேட்பார்கள்.
17 கர்த்தர், “நான் ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமானதாகச் செய்வேன். ஜனங்கள் குருடர்களைப்போன்று எங்கே போகிறோம் என்று தெரியாமல் அலைந்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஏராளமான ஜனங்கள் கொல்லப்படுவார்கள். அவர்களின் இரத்தம் தரையில் சிந்தும். அவர்களின் மரித்த உடல்கள் தரையில் சாணத்தைப் போன்றுக் கிடக்கும். 18 அவர்களது பொன்னும், வெள்ளியும் அவர்களுக்கு உதவாது. அந்த நேரத்தில் கர்த்தர் எரிச்சலும், கோபமும் கொள்வார். கர்த்தர் உலகம் முழுவதையும் அழிப்பார். கர்த்தர் உலகில் உள்ள ஒவ்வொன்றையும் முழுவதுமாக அழிப்பார்” என்றார்.
பிலாத்துவின் கேள்வி(A)
23 அந்தக் கூட்டம் முழுவதும் எழுந்து நின்று இயேசுவைப் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றது. 2 அவர்கள் இயேசுவைப் பழிக்க ஆரம்பித்தார்கள் பிலாத்துவிடம் அவர்கள், “நமது மக்களைக் குழப்புகிற செய்திகளைக் கூறுகிறபடியால் இந்த மனிதனை நாங்கள் பிடித்து வந்தோம். இராயனுக்கு வரி கொடுக்கக் கூடாதென்று அவன் கூறுகிறான். அவன் தன்னைக் கிறிஸ்துவாகிய அரசர் என்று அழைக்கிறான்” என்றனர்.
3 பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.
இயேசு, “ஆம், அது சரியே” என்றார்.
4 அதைக் கேட்ட பிலாத்து தலைமை ஆசாரியரிடமும், மக்களிடமும் “இந்த மனிதனிடம் தவறு எதையும் நான் காணவில்லையே” என்றான்.
5 அவர்கள் மீண்டும் மீண்டும், “இயேசு மக்களின் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கிக்கொண்டுள்ளான். யூதேயாவைச் சுற்றிலும் அவன் போதிக்கிறான். அவன் கலிலேயாவில் ஆரம்பித்து இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள்.
ஏரோதுவின் முன் இயேசு
6 அதைக் கேட்ட பிலாத்து, “இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா?” என்று வினவினான். 7 பின்பு ஏரோதின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து இயேசு வருவதை அறிந்தான். அப்போது ஏரோது எருசலேமில் இருந்தான். எனவே பிலாத்து, இயேசுவை அவனிடம் அனுப்பினான்.
8 இயேசுவைப் பார்த்ததும் ஏரோது மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவரைப்பற்றி அவன் அதிகமாக கேள்விப்பட்டிருந்தபடியினாலும், இயேசு ஏதேனும் ஓர் அதிசயம் செய்வாரா எனப் பார்க்க விருப்பப்பட்டிருந்தபடியினாலும் அவரைக் காண வெகு நாளாக விருப்பம்கொண்டிருந்தான். 9 இயேசுவிடம் பல கேள்விகளைக் கேட்டான் ஏரோது. ஆனால் இயேசு ஒன்றுமே கூறவில்லை. 10 தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு எதிரானவைகளை உரக்கக் கூறிக்கொண்டிருந்தார்கள். 11 ஏரோதுவும், அவனது வீரர்களும் இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். அரசனுக்குரிய ஆடைகளை அணிவித்து அவரை எள்ளி நகையாடினார்கள். பின்பு ஏரோது இயேசுவைப் பிலாத்துவிடமே திரும்ப அனுப்பினான். 12 முன்னர் பிலாத்துவும், ஏரோதுவும் பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால் அன்று ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர்.
பிலாத்துவும் மக்களும்(B)
13 தலைமை ஆசாரியரையும் யூத அதிகாரிகளையும் மக்களோடு கூட பிலாத்து அழைத்தான். 14 பிலாத்து அவர்களை நோக்கி, “நீங்கள் இந்த மனிதனை (இயேசு) என்னிடம் அழைத்து வந்தீர்கள். மக்களின் நடுவில் அமைதியின்மையை விளைவிக்கிறான் என்று சொன்னீர்கள். ஆனால் உங்களுக்கு முன்பாக நான் நியாயம் தீர்த்தேன். அவன் செய்ததாக நான் எந்தக் குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் புகார் சொல்கிற காரியங்களில் இயேசு குற்றவாளியாக்கப்படவில்லை. 15 மேலும் ஏரோதுவும் அவரிடம் தவறேதும் காணவில்லை. மீண்டும் இயேசுவை நம்மிடமே திருப்பி அனுப்பினான் ஏரோது. அவருக்கு மரணதண்டனை தரத் தேவையில்லை. 16 எனவே நான் அவரைச் சிறிய தண்டனை ஏதேனும் கொடுத்து விடுவித்து விடுவேன்” என்றான். 17 [a]
18 ஆனால் மக்கள் அனைவரும், “அவனைக் கொல்லுங்கள். பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டனர். 19 (நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான்.)
20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பினான். எனவே பிலாத்து மீண்டும் அவர்களை நோக்கி, இயேசுவை விடுவிப்பதாகக் கூறினான். 21 ஆனால் அவர்கள் மீண்டும் உரத்த குரலில், “அவனைக் கொல்லுங்கள். அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்றார்கள்.
22 மூன்றாம் முறை பிலாத்து மக்களை நோக்கி, “ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? அவன் குற்றவாளி அல்ல. அவனைக் கொல்வதற்கேற்ற காரணம் எதையும் நான் காணவில்லை. எனவே அவனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அவனை விடுதலை செய்வேன்” என்றான்.
23 ஆனால் தொடர்ந்து மக்கள் சத்தமிட்டார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டுமென வேண்டினார்கள். அவர்கள் மிகவும் உரத்த குரலில் சத்தமிட்டதைக் கேட்டதும் 24 அவர்களின் விருப்பத்தின்படியே செய்ய முடிவெடுத்தான் பிலாத்து. 25 மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர்.
சிலுவையில் இயேசு(C)
26 இயேசுவைக் கொல்லும்பொருட்டு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது வயல்களிலிருந்து நகருக்குள் ஒரு மனிதன் வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். அவன், சிரேனே நகரைச் சேர்ந்தவன். இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை வீரர்கள் வற்புறுத்தினார்கள்.
27 பலரும் இயேசுவைத் தொடர்ந்தனர். சில பெண்கள் வருந்தி அழுதனர். அவர்கள் இயேசுவுக்காகக் கவலைப்பட்டனர். 28 ஆனால் இயேசு திரும்பி அப்பெண்களை நோக்கி, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் அழுங்கள். 29 ஏனெனில் பிள்ளைகளைப் பெற முடியாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் பிள்ளைகள் இல்லாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் பேசப்போகும் காலம் வரும். 30 அப்போது மக்கள் மலையை நோக்கி, ‘எங்கள் மேல் விழு’ என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்’ என்று சொல்லத் தொடங்குவார்கள். [b] 31 வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்?” [c] என்றார்.
32 கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள். 33 இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள்.
34 இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார்.
இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். 35 இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள்.
36 வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். 37 வீரர்கள், “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். 38 சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் அரசன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.
39 சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.
40 ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். 41 நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். 42 பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான்.
43 இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார்.
இயேசு மரித்தல்(D)
44 அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. 45 சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. 46 இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.
47 அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், “இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன்” என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான்.
48 இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள். 49 இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அங்கு இருந்தார்கள். கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த சில பெண்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சிலுவைக்கு சற்றே தொலைவில் இவற்றைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
அரிமத்தியா ஊரின் யோசேப்பு(E)
50-51 அரிமத்தியா என்னும் நகரில் இருந்து ஒரு மனிதன் அங்கே வந்திருந்தான். அவன் பெயர் யோசேப்பு. அவன் நல்ல பக்தியுள்ள மனிதன். தேவனின் இராஜ்யத்தின் வருகையை எதிர் நோக்கி இருந்தான். யூதர் அவையில் அவன் ஒரு உறுப்பினன். பிற யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்தபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. 52 இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான். 53 எனவே யோசேப்பு சிலுவையில் இருந்து இயேசுவின் உடலைக் கீழே இறக்கி ஒரு துணியால் உடலைச் சுற்றினான். பிறகு பாறைக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் இயேசுவின் உடலை வைத்தான். அக்கல்லறை அதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 54 அப்பொழுது ஆயத்த நாளின் [d] இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும்.
55 கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள். 56 இயேசுவின் உடலில் பூசுவதற்காக மணம்மிக்க பொருள்களைத் தயாரிப்பதற்காக அப்பெண்கள் சென்றார்கள்.
ஓய்வு நாளில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். மோசேயின் சட்டம் இவ்வாறு செய்யுமாறு எல்லா மக்களுக்கும் கட்டளை இட்டிருந்தது.
2008 by World Bible Translation Center