M’Cheyne Bible Reading Plan
தாவீது ராஜாவின் மரணம்
2 தாவீது மரித்துப்போவதற்குரிய நேரம் வந்தது. எனவே அவன் சாலொமோனிடம் சொல்லும்போது 2 “நான் எல்லா மனிதரையும் போலவே மரிக்க இருக்கிறேன். ஆனால் நீ மேலும் பலத்தில் வளர்ந்து மனிதனாக இரு. 3 இப்போது, உனது தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. நீ அனைத்து சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும், முடிவுகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் கீழ்ப்படி. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய். 4 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், பின்னர் இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார்” என்றான்.
5 தாவீது மேலும், “செருயாவின் மகனான யோவாப் எனக்கு என்ன செய்தான் என்பதை நினைத்துப் பார். அவன் இஸ்ரவேலரின் படையிலுள்ள இரண்டு தளபதிகளைக் கொன்றான். அவன் நேரின் மகனான அப்னேரையும் ஏத்தேரின் மகனான அமாசாவையும் கொன்றான். அவன் இவர்களைச் சமாதானக் காலத்தின்போது கொன்றான் என்பதை நினைத்துப்பார். இம்மனிதர்களின் இரத்தமானது அவனது அரைக்கச்சையிலும் கால்களிலுள்ள பாதரட்சைகளிலும் படிந்தது. நான் அவனைத் தண்டித்திருக்க வேண்டும். 6 ஆனால் இப்போது நீ தான் அரசன். எனவே நீ விரும்புகிற வழியில் அவனைத் தண்டிப்பதுதான் மிகப் புத்திசாலித்தனமானது. ஆனால் அவன் கொல்லப்படவேண்டியவன் என்பதில் மட்டும் நீ உறுதியாக இருக்கவேண்டும். அவனைத் தன் முதுமையில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே!
7 “கீலேயாத்தியனான பர்சிலாயின் பிள்ளைகளுக்கு இரக்கம் காட்டு. அவர்களை உனது நண்பர்களாக்கி உனது மேஜையிலேயே உணவு உண்ணச் செய். நான் உன் சகோதரனாகிய அப்சலோமிடமிருந்து ஓடிப்போகும்போது அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
8 “கேராவின் மகனான சீமேயி இன்னும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைத்துக்கொள். அவன் பகூரிமின் ஊரைச் சார்ந்த பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன். நான் மக்னாயீமுக்குப் போகும்போது அவன் என்னை மோசமாக சபித்தான். ஆனாலும் நான் யோர்தானுக்குப் போனதும் அவன் என்னை வரவேற்றதால் நான் உன்னை வாளால் கொல்வதில்லை என்று கர்த்தர் மேல் வாக்குறுதிக் கொடுத்துவிட்டேன். 9 எனினும், அவனை குற்றமற்றவன் என்று எண்ணி நீ தண்டிக்காமல் விட்டுவிடாதே. அவனை என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியும். அவனையும் முதியவயதில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே” என்றான்.
10 பின்னர் தாவீது மரித்தான். அவன் தாவீது நகரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டான். 11 இஸ்ரவேலை 40 ஆண்டு தாவீது அரசாண்டான். அதாவது 7 ஆண்டுகள் எப்ரோனிலும் 33 ஆண்டுகள் எருசலேமிலும் ஆண்டான்.
Solomon and Adonijah சாலொமோன் தன் இராஜ்யத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்
12 இப்போது சாலொமோன் அரசன் தனது தந்தையின் சிங்காசனத்தில் அமர்ந்தான். அவன் ராஜ்யபாரம் முழுவதையும் தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தான்.
13 ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் வந்தான். அவள் அவனிடம், “நீ சமாதானத்தோடு வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.
அவனோ, “ஆமாம், இது ஒரு சமாதான வருகையே ஆகும். 14 நான் உங்களிடம் சொல்வதற்கு ஒரு காரியம் இருக்கிறது” என்றான். பத்சேபாள், “அப்படியென்றால் சொல்” என்றாள்.
15 அதோனியா, “ஒரு காலத்தில் அரசாங்கம் எனக்குரியதாயிருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் அடுத்த அரசன் நான்தான் என்று எண்ணினார்கள். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இப்போது எனது சகோதரன் அரசனாகிவிட்டான். கர்த்தர் அவனை அரசனாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். 16 இப்போது உங்களிடம் கேட்க ஒரு காரியம் உள்ளது. தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்” என்றான். பத்சேபாள், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.
17 அதோனியா, “அரசனாகிய சாலொமோனிடம் நீ என்ன கேட்டாலும் அவன் கொடுப்பான் என்பது எனக்குத் தெரியும். அவன், நான் சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணக்கும்படி செய்யவேண்டும்” என்று கேட்டான்.
18 பிறகு பத்சேபாள், “நல்லது இதுபற்றி உனக்காக அரசனிடம் பேசுவேன்” என்றாள்.
19 எனவே பத்சேபாள் அரசன் சாலொமோனிடம் பேசுவதற்காகப் போனாள். சாலொமோன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றான். அவன் குனிந்து வணங்கி பிறகு உட்கார்ந்தான். அவளுக்கு இன்னொரு சிங்காசனம் கொண்டுவரும்படி வேலைக்காரர்களிடம் கூறினான். அவனது வலது பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள்.
20 பத்சேபாள் அவனிடம், “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய காரியம் உள்ளது. தயவுசெய்து மறுத்துவிடாதே” என்றாள்.
அதற்கு அரசன், “அம்மா, நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நான் மறுக்கமாட்டேன்” என்றான்.
21 எனவே பத்சேபாள், “உனது சகோதரனான அதோனியா சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும்” என்றாள்.
22 அதற்கு அவன் தன் தாயிடம், “அபிஷாகை அதோனியாவிற்குக் கொடுக்கும்படி நீ ஏன் வேண்டுகிறாய். அவனையே அரசனாக்கிவிடு என்று நீ ஏன் கேட்கவில்லை. இத்தனைக்கும் அவன் எனக்கு மூத்தசகோதரன் தானே! ஆசாரியனான அபியத்தாரும் யோவாபும் அவனுக்கு பக்கபலமாக இருப்பார்கள்!” என்றான்.
23 பிறகு சாலொமோன் கர்த்தரிடம் ஒரு வாக்குறுதி செய்துகொடுத்தான். “நான் இதற்குரிய விலையை அதோனியாவை செலுத்தச் செய்வேன்! அது அவனது உயிராகவும் இருக்கும்! 24 கர்த்தர் என்னை இஸ்ரவேலின் அரசனாக்கினார். என் தந்தை தாவீதிற்கு உரிய சிங்காசனத்தை நான் பெறுமாறு செய்தார். கர்த்தர் தன் வாக்குறுதியைக்காத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆட்சியை அளித்தார். நான் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று அதோனியா கொல்லப்படுவான்” என்றான்.
25 அரசனான சாலொமோன் அதை பெனாயாவிற்கு கட்டளையிட்டான். அவன் சென்று அதோனியாவைக் கொன்று விட்டான்.
26 பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம் அரசனான சாலொமோன், “நான் உன்னைக் கொல்ல வேண்டும். ஆனால் உன்னை உனது வீடு இருக்கிற ஆனதோத்திற்குப் போக அனுமதிக்கிறேன். நான் இப்போது உன்னைக் கொல்லமாட்டேன். ஏனென்றால் என் தந்தையோடு பயணம்செய்யும்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றாய். என் தந்தையின் துன்பங்களிலும் பங்கு பெற்றிருக்கிறாய் என்று தெரியும்” என்றான். 27 சாலொமோன் ஆசாரியனாகிய அபியத்தாரிடம் மேலும் தொடர்ந்து அவன் கர்த்தருக்கு சேவை செய்யமுடியாது என்றும் சொன்னான். இது கர்த்தர் சொன்ன வழியிலேயே நிகழ்ந்தது. சீலோவில் தேவன் ஆசாரியனான ஏலி பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் இவ்வாறுதான் சொன்னார். அபியத்தாரும் ஏலியின் குடும்பத்தினன்தான்.
28 யோவாப், இதைப்பற்றி கேள்விப்பட்டதும் அஞ்சினான். அவன் அப்சலோமிற்கு உதவாவிட்டாலும் அதோனியாவிற்கு உதவியிருக்கிறான். அவன் கர்த்தருடைய கூடாரத்துக்கு ஓடிப்போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். 29 யாரோ ஒருவன் சாலொமோனிடம் போய், யோவாப் கர்த்தருடைய கூடாரத்தில் பலிபீடத்தருகில் இருப்பதாய் சொன்னான். எனவே சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவிடம் அங்குபோய் அவனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.
30 பெனாயா கர்த்தருடைய கூடாரத்திற்குப் போய் யோவாபிடம், “வெளியே வா! என அரசன் சொல்கிறான்” என்றான்.
ஆனால் யோவாபோ, “இல்லை, நான் இங்கேயே மரிக்கிறேன்” என்றான்.
எனவே பெனாயா அரசனிடம் திரும்பி வந்து யோவாப் சொன்னதைச் சொன்னான்.
31 பிறகு அரசன் பெனாயாவை நோக்கி, “அவன் சொல்வதுபோன்று செய்! அங்கேயே அவனைக் கொன்று புதைத்துவிடு. பின்னரே நானும் எனது குடும்பமும் பழியிலிருந்து விடுதலை பெறுவோம். அப்பாவி ஜனங்களை கொன்றதுதான் யோவாப் செய்த குற்றம். 32 யோவாப் அவனைவிட மிகச்சிறந்த இரண்டு பேரைக் கொன்றிருக்கிறான். அவர்கள் நேரின் மகனான அப்னேரும் ஏதேரின் மகனான அமாசாவும் ஆவார்கள். அப்னேர் இஸ்ரவேல் படையின் தளபதியாகவும் அமாசா யூதேயா படையின் தளபதியாகவும் இருந்தனர். அந்தக் காலத்தில் அவர்களை யோவாப்தான் கொன்றான் என்பது என் தந்தையான தாவீதிற்குத் தெரியாது. எனவே கர்த்தர் அவனைக் கொலையுறும்படி தண்டித்துள்ளார். 33 அவர்களின் மரணத்துக்கு அவனே காரணம், அவனது குடும்பத்திற்கும் இப்பழி எக்காலத்திற்கும் உரியதாகும். ஆனால் தேவன் தாவீதிற்கும், அவனது சந்ததியினருக்கும், குடும்பத்திற்கும், அரசாங்கத்திற்கும் எக்காலத்திலும் சமாதானத்தை உருவாக்குவார்” என்றான்.
34 எனவே, யோய்தாவின் மகனான பெனாயா யோவாபைக் கொன்றான். அப்பாலைவனத்திலேயே, அவனது வீட்டிற்கு அருகிலேயே யோவாப் அடக்கம் செய்யப்பட்டான். 35 பிறகு யோவாபின் இடத்தில் யோய்தாவின் மகனான பெனாயாவைத் தனது படைத்தளபதியாக அரசன் நியமித்தான். அபியத்தாரின் இடத்தில் சாதோக்கை சாலொமோன் தலைமை ஆசாரியனாக நியமித்தான். 36 பிறகு சீமேயியை வரவழைத்தான். அரசன் அவனிடம், “எருசலேமிலே உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டி அதிலே வாழ்ந்து கொள். நகரத்தை விட்டு வெளியே போகாதே. 37 நீ நகரத்தை விட்டு கீதரோன் ஆற்றை தாண்டிச் சென்றால் கொல்லப்படுவாய். அது உனது சொந்த தவறாக இருக்கும்” என்றான்.
38 எனவே சீமேயி, “அரசனே! அது நல்லது. நான் உங்களுக்குக் கீழ்ப்படிவேன்” என்றான். அதனால் எருசலேமில் நீண்ட காலம் அவன் வாழ்ந்தான். 39 ஆனால் மூன்று ஆண்டுகள் கழிந்ததும், அவனது இரண்டு அடிமைகள் அவனைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் காத் நகர அரசனான மாக்காவின் மகனான ஆகீஸிடம் ஓடிச் சென்றனர். சீமேயிக்கு தனது அடிமைகள் காத் நகரில் இருப்பது தெரியவந்தது. 40 எனவே சீமேயி தனது கழுதையின் மீது சேணத்தைப் போட்டு காத்திலுள்ள ஆகீஸ் அரசனிடம் சென்றான். அவன் தன் அடிமைகளைக் கண்டுபிடித்து வீட்டிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்தான்.
41 ஆனால் சிலர் சாலொமோனிடம் சீமேயி எருசலேமிலிருந்து காத்திற்குச்சென்று திரும்பியதைப் பற்றி சொன்னார்கள். 42 எனவே சாலொமோன் அவனை அழைத்துவரச் செய்தான். அரசன், “நீ எருசலேமை விட்டுச்சென்றால் கொல்லப்படுவாய் என்று நான் கர்த்தருடைய பேரால் ஆணைச் செய்து உன்னை எச்சரித்துள்ளேன். நீ எங்காவது சென்றால், உன் மரணத்துக்கு உன் தவறே காரணம் என்றும் எச்சரித்திருக்கிறேன். நான் சொன்னதற்கு நீயும் ஒப்புக்கொண்டிருக்கிறாய். எனக்குக் கீழ்ப்படிவதாகக் கூறினாய். 43 உனது சத்தியத்திலிருந்து ஏன் தவறினாய்? எனது கட்டளைக்கு ஏன் கீழ்ப்படியவில்லை 44 என் தந்தை தாவீதிற்கு எதிராகப் பல தவறுகளை நீ செய்துள்ளாய் என்பதை அறிவேன். இப்போது அத்தவறுகளுக்குக் கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். 45 ஆனால் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார். அவர் தாவீதின் அரசாங்கத்தை என்றென்றும் பாதுகாப்பார்” என்றான்
46 பிறகு அரசன் பெனாயாவிடம் சீமேயியைக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவனும் அப்படியே செய்தான். இப்போது சாலொமோன் தன் அரசாங்கத்தை தன் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.
ஒருவருக்கொருவர் உதவுக
6 சகோதர சகோதரிகளே, உங்கள் குழுவில் உள்ள ஒருவன் தவறு செய்யலாம். ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனிடம் போக வேண்டும். அவன் நல்ல வழிக்கு வர சாந்தத்தோடு உதவ வேண்டும். ஆனால் கவனமாக இருங்கள். நீங்கள் பாவம் செய்யத் தூண்டப்படலாம். 2 உங்களுக்குச் சுமையாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்போது கிறிஸ்துவின் ஆணைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறீர்கள். 3 முக்கியத்துவம் இல்லாத ஒருவன் தன்னைப் பெரிதும் முக்கியத்துவம் கொண்டவனாக நினைத்துக்கொள்வானேயானால், அது தன்னைத் தானே முட்டாளாக்கிக்கொள்ளும் காரியமாகும். 4 ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். 5 ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது வயலில் நடுவது போன்றது
6 வேதவசனத்தில் போதிக்கப்படுகிறவன், போதிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் பங்கு வைத்துக் கொடுப்பானாக.
7 புத்தியற்றவர்களாகாதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். 8 பாவம் நிறைந்த தன் சுயத்தை திருப்தி செய்யும் பொருட்டு வாழத் தொடங்குவானேயானால், பாவம் நிறைந்த அவன் சுயமானது நிலையான மரணத்தையே தரும். ஆனால் பரிசுத்த ஆவியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு ஒருவன் வாழத் தொடங்குவானேயானால், அழிவற்ற வாழ்வை ஆவியானவரிடமிருந்து பெறுவான். 9 நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது. 10 எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், நாம் செய்ய வேண்டும். குறிப்பாக தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்.
பவுல் தன் நிருபத்தை முடித்தல்
11 இதை நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். கடிதங்கள் எவ்வளவு பெரியவை என்று பாருங்கள். 12 சிலர் உங்களை விருத்தசேதனம் செய்யுமாறு கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சில மக்கள் தம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்பதன் பொருட்டு அவர்கள் இதனைச் செய்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை பிரசங்கித்தால் துன்பப்பட நேரும் என அஞ்சுகிறார்கள். 13 விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களோ சட்டத்தை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களைச் செய்ய வைப்பதில் பெருமைப்பட மட்டும் விரும்புகிறார்கள்.
14 இது போன்றவற்றைக் குறித்து நான் பெருமையடித்துக்கொள்ளமாட்டேன் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சிலுவை ஒன்றே நான் பெருமைப்படத்தக்கது. சிலுவையில் இயேசு இறந்து போனதால் எனக்கு இந்த உலகமே செத்துப்போனது. இந்த உலகத்துக்கு நான் செத்துப்போனேன். 15 ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொண்டவனா இல்லையா என்பது முக்கியமல்ல. தேவனால் புதுப்படைப்பாக ஆக்கப்படுவது தான் முக்கியம். 16 இந்தச் சட்டத்தின் முறைப்படி வாழ்கிற தேவனுடைய இஸ்ரவேலர்களுக்கு சமாதானமும் கிருபையும் உண்டாவதாக.
17 இனிமேல் எந்தத் தொந்தரவும் எனக்குத் தர வேண்டாம். எனது சரீரத்தில் வடுக்களை ஏற்றிருக்கிறேன். இந்த வடுக்கள் நான் இயேசு கிறிஸ்துவைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டும்.
18 என் சகோதர சகோதரிகளே, நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு கூட இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்.
தேவன் இஸ்ரவேலின் காவல்காரனாக எசேக்கியேலைத் தெரிந்தெடுக்கிறார்
33 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம் கூறு, ‘நான் இந்த நாட்டிற்கு விரோதமாகப் போரிட பகைவரைக் கொண்டுவருவேன். அது நிகழும்போது, ஜனங்கள் ஒரு மனிதனைத் தங்கள் காவல்காரனாகத் தேர்ந்தெடுத்தனர். 3 இந்தக் காவல்காரன், பகை வீரர்கள் வருவதைப் பார்க்கும்போதும் எக்காளத்தை ஊதி ஜனங்களை எச்சரிப்பான். 4 ஜனங்கள் எச்சரிக்கையைக் கேட்டாலும் அதனைப் புறக்கணித்தால் எதிரிகள் அவர்களைக் கைப்பற்றிச் சிறையெடுத்துச் செல்வார்கள். அவனது சொந்த மரணத்திற்கு அவனே பொறுப்பாவன். 5 அவன் எக்காளத்தைக் கேட்டான், ஆனால் எச்சரிக்கையைப் புறக்கணித்தான். எனவே அவனது மரணத்திற்கு அவனே காரணமாகிறான். அவன் எச்சரிக்கையில் கவனம் செலுத்தியிருந்தால், பிறகு அவன் தன் சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்க முடியும்.
6 “‘ஆனால் காவல்காரன் பகை வீரர்கள் வருவதைக் கண்டும் அவன் எக்காளம் ஊதவில்லை என்றால், அவன் ஜனங்களை எச்சரிக்கவில்லை, பகைவன் அவர்களைக் கைப்பற்றிச் சிறையெடுத்துச் செல்வான். அந்த மனிதன் கொல்லப்படலாம். ஏனென்றால், அவன் பாவம் செய்திருக்கிறான். ஆனால் காவல்காரனும் அந்த ஆளின் மரணத்திற்குப் பொறுப்பாளி ஆவான்.’
7 “இப்பொழுது, மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னைக் காவல்காரனாக நான் தேர்ந்தெடுக்கிறேன். எனது வாயிலிருந்து செய்தியை நீ கேட்டால், எனக்காக ஜனங்களை எச்சரிக்க வேண்டும். 8 நான் உனக்குச் சொல்லலாம்: ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்.’ பிறகு நீ எனக்காகப் போய் அவனை எச்சரிக்க வேண்டும். நீ அந்தப் பாவியை எச்சரிக்காமல் அவனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படி சொல்லாவிட்டால், பிறகு அவன் தான் செய்த பாவத்துக்காக மரிப்பான். ஆனால் அவனது மரணத்திற்கு நான் உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். 9 ஆனால் நீ அந்தப் பாவியைத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படியும், பாவம் செய்வதை நிறுத்தும்படியும் எச்சரிக்கை செய்தும் அவன் பாவம் செய்வதை நிறுத்த மறுத்துவிட்டால், பின் அவன் மரிப்பான். ஏனென்றால், அவன் பாவம் செய்தவன். ஆனால் நீ உன்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறாய்.
ஜனங்களை அழிக்க தேவன் விரும்புகிறதில்லை
10 “எனவே, மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் வம்சத்தாரிடம் பேசு. அந்த ஜனங்கள் சொல்லலாம்: ‘நாங்கள் பாவம் செய்து சட்டங்களை மீறினோம். எங்கள் பாவங்கள் தாங்கமுடியாத அளவிற்குப் பாரமானவை. அந்தப் பாவங்களால் நாங்கள் கெட்டுப்போனோம். நாங்கள் உயிர் வாழ என்ன செய்யவேண்டும்?’
11 “நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என் உயிரின் மேல் ஆணையிடுகிறேன், நான் ஜனங்கள் மரிப்பதை, பாவிகள் கூட மரிப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவதில்லை. அவர்கள் மரிப்பதை நான் விரும்புவதில்லை. அந்தப் பாவி ஜனங்களும் என்னிடம் திரும்பி வருவதையே நான் விரும்புகிறேன். நான், அவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டு உண்மையான வாழ்க்கை வாழ்வதை விரும்புகிறேன். எனவே என்னிடம் திரும்பி வா. தீமை செய்வதை நிறுத்து. இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?’
12 “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் சொல்: ‘ஒருவன் தீயவனாக மாறிப் பாவம் செய்யத் தொடங்குவானேயானால் அவன் முன்பு செய்த நன்மைகள் எல்லாம் அவனைக் காப்பாற்றாது. ஒருவன் தீமையிலிருந்து மாறிவிடுவானேயானால் அவன் முன்பு செய்த தீமைகள் அவனை அழிக்காது. எனவே, ஒருவன் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் முன்பு செய்த நன்மைகள் அவனைக் காப்பாற்றாது என்பதை நினைவில் வைத்துக்கொள்.’
13 “நான் ஒரு நல்லவனிடம் நீ வாழ வேண்டும் என்று சொல்லலாம். ஒருவேளை அவன் தான் முன்பு செய்த நன்மைகள் தன்னைக் காப்பாற்றும் என்று நினைக்கலாம். எனவே, அவன் தீமைகள் செய்யத் தொடங்கலாம். நான் அவன் முன்பு செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கமாட்டேன்! இல்லை, அவன் தான் செய்யத் தொடங்கிவிட்ட பாவத்தால் மரிப்பான்.
14 “அல்லது நான் ஒரு தீயவனிடம் அவன் மரிப்பான் என்று சொல்லலாம். ஆனால், அவன் தன் வாழ்க்கையை மாற்றலாம். அவன் பாவம் செய்வதை நிறுத்தி, சரியான வழியில் வாழத் தொடங்கலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 15 அவன் கடன் கொடுத்தபோது பெற்ற பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். அவன் திருடிய பொருளையும் திருப்பிக் கொடுக்கலாம். அவன் வாழ்வைத் தருகிற நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றத் தொடங்கலாம். அவன் தீமை செய்வதை நிறுத்திவிடுகிறான். பிறகு அவன் நிச்சயம் வாழ்வான். அவன் மரிக்கமாட்டான். 16 அவன் முன்பு செய்த தீமைகளை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன். ஏனென்றால், அவன் இப்பொழுது நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறான். எனவே அவன் வாழ்வான்!
17 “ஆனால் உங்கள் ஜனங்கள், ‘அது சரியன்று! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்க முடியாது!’ என்கிறார்கள்.
“ஆனால் அவர்களோ நேர்மையில்லாத ஜனங்களாய் இருக்கிறார்கள். அவர்களே மாறவேண்டிய ஜனங்களாக இருக்கிறார்கள். 18 ஒரு நல்லவன் தான் செய்யும் நன்மைகளை நிறுத்திப் பாவம் செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தன் பாவத்தாலேயே மரிப்பான். 19 ஒரு பாவி தான் செய்யும் தீமைகளை நிறுத்தி நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் வாழத்தொடங்கினால் பிறகு அவன் வாழ்வான். 20 ஆனாலும் நீங்கள் நான் நேர்மையாக இல்லை என்று இன்னும் சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இஸ்ரவேல் குடும்பத்தாரே, ஒவ்வொருவனும் தான் செய்த காரியங்களுக்காகவே நியாயந்தீர்க்கப்படுவான்!”
எருசலேம் எடுத்துக்கொள்ளப்பட்டது
21 எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டு பத்தாம் மாதம் (ஜனவரி) ஐந்தாம் நாளில் எருசலேமிலிருந்து ஒருவன் என்னிடம் வந்தான். அங்குள்ள போரிலிருந்து அவன் தப்பித்து வந்தான். அவன், “அந்நகரம் (எருசலேம்) எடுக்கப்பட்டது!” என்றான்.
22 இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவரின் வல்லமை, அந்த ஆள் என்னிடம் வருவதற்கு முன் மாலையில், என் மேல் வந்திருந்தது, தேவன் என்னை பேச முடியாதவாறு செய்திருந்தார். அந்த ஆள் என்னிடம் வந்தபோது, கர்த்தர் என் வாயைத் திறந்து மீண்டும் என்னைப் பேசும்படிச் செய்தார். 23 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார், 24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் அழிந்த நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்கின்றனர். அந்த ஜனங்கள், ‘ஆபிரகாம் ஒருவனாயிருந்தான். தேவன் அவனிடம் இந்த நாடு முழுவதையும் கொடுத்தார். இப்பொழுது நாங்கள் பலராக இருக்கிறோம். எனவே உறுதியாக இந்நாடு எங்களுக்குச் சொந்தம்! இது எங்கள் நாடு!’ என்கிறார்கள்.
25 “கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும்: ‘நீ இன்னும் இரத்தம் நீக்கப்படாத இறைச்சியைத் தின்கிறாய். உதவிக்காக நீ விக்கிரகங்களை நோக்கிப் பார்க்கிறாய். நீ ஜனங்களைக் கொன்றாய். எனவே, நான் உனக்கு இந்நாட்டை ஏன் கொடுக்கவேண்டும்? 26 நீ உன் சொந்த வாளை நம்பியிருக்கிறாய். நீங்கள் ஒவ்வொருவரும் அருவருக்கத்தக்கச் செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியோடு பாலின உறவு பாவத்தைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு இந்நாடு கிடைக்காது!’
27 “‘கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: “என் உயிரின்மேல் ஆணை, அழிந்துபோன நகரங்களில் வாழும் அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள் என்று நான் வாக்களித்தேன். எவனாவது நாட்டைவிட்டு வெளியே இருந்தால்,நான் அவனை மிருகங்கள் கொன்று தின்னச் செய்வேன். ஜனங்கள் கோட்டைகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் மறைந்திருந்தால். அவர்கள் நோயால் மரிப்பார்கள். 28 நான் அந்நாட்டை வெறுமையானதாகவும் பயனற்றதாகவும் செய்வேன். அந்த நாடு தான் பெருமைப்பட்டுக் கொண்டவற்றையெல்லாம் இழக்கும். இஸ்ரவேல் மலைகள் எல்லாம் காலியாகும். அந்த இடத்தின் வாழியாக எவரும் கடந்து செல்லமாட்டார்கள். 29 அந்த ஜனங்கள் பல அருவருப்பானக் காரியங்களைச் செய்திருக்கின்றனர். எனவே நான் அந்நாட்டை வெறுமையான நாடாகச் செய்வேன். பிறகு இந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
30 “‘இப்பொழுது, மனுபுத்திரனே, உன்னைப்பற்றிக் கூறுகிறேன். உன் ஜனங்கள் சுவர் ஓரங்களிலும் வீட்டு வாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “வாருங்கள். கர்த்தரிடமிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம்” என்கிறார்கள். 31 எனவே அவர்கள் உன்னிடம் எனது ஜனங்களைப்போல வருகிறார்கள். அவர்கள் எனது ஜனங்களைப்போன்று உன் முன்னால் அமருகிறார்கள். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் நீ சொல்வதைச் செய்யமாட்டார்கள். அவர்கள் தாம் நல்லதென்று எதை உணருகின்றார்களோ அவற்றையே செய்கிறார்கள். அவர்கள் பிற ஜனங்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கமட்டுமே விரும்புகிறார்கள்.
32 “‘இந்த ஜனங்களுக்கு நீ ஒன்றுமில்லை. ஆனால் நீ அவர்களுக்கு இன்பப் பாட்டு பாடுகிற பாடகனாய் இருக்கிறாய். உன்னிடம் இனிய குரல் உள்ளது. நீ உனது கருவிகளை நன்றாக இசைக்கிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் நீ சொன்னபடி அவர்கள் நடக்கமாட்டார்கள். 33 ஆனால் நீ பாடுவதெல்லாம் உண்மையாக நடக்கும். பிறகு ஜனங்கள் உண்மையில் அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்தான் என்று அறிவார்கள்!’”
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று
81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
2 இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.
வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
3 மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.
முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள்.
அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
4 அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.
தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
5 தேவன் யோசேப்பை [a] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.
எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.
6 தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.
உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
7 நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.
நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன்.
புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன்.
மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”
8 “எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன்.
இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
9 வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை
நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
நான் உன்னைப் போஷிப்பேன்.
11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.
இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால்,
என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.
இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.
அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.
அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”.
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.
82 தேவன் தேவர்களின் சபையில் [b] நிற்கிறார்.
தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.
2 தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?
தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”
3 “ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.
அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
4 ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.
அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
5 “அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.
அவர்கள் புரிந்துகொள்ளார்கள்!
அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள்.
அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.
6 நான் (தேவன்),
“நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய மகன்கள்.
7 ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.
பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.
8 தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!
தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!
2008 by World Bible Translation Center