M’Cheyne Bible Reading Plan
தாவீதும் அபிசாயும் சவுலின் முகாமிற்குள் நுழைகின்றனர்
26 சீப் ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றார்கள். அவர்கள் சவுலிடம், “தாவீது ஆகிலா மேட்டில் ஒளிந்திருக்கிறான். அந்த இடம் எஷிமோனை அடுத்துள்ளது” என்று சொன்னார்கள்.
2 சவுல் சீப் பாலைவனத்திற்கு இறங்கிப் போனான். சவுல் இஸ்ரவேல் முழுவதிலும் இருந்து 3,000 வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் பாலைவனத்தில் தாவீதைத் தேடினார்கள். 3 சவுல் ஆகிலா மேட்டில் தன் முகாமை அமைத்திருந்தான். இது எஷிமோனிலிருந்து வரும் சாலைக்கு அருகில் இருந்தது.
தாவீது அதே பாலைவனத்தில்தான் தங்கியிருந்தான். சவுல் தன்னைத் தேடி வந்திருப்பதை தாவீது அறிந்துகொண்டான். 4 அவன் ஒற்றர்களை அனுப்பி சவுல் ஆகிலாவிற்கு வந்துவிட்டதையும் தெரிந்துகொண்டான். 5 பிறகு தாவீது சவுலின் முகாமிற்குச் சென்றான். அங்கே சவுலும் அப்னேரும் தூங்குவதைக் கண்டான். (அப்னேர் சவுலின் படைத்தலைவனான நேரின் மகன்) சவுல் முகாமின் மையத்தில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் படைவீரர்கள் இருந்தனர்.
6 ஏத்தியனாகிய அகிமெலேக்கிடமும், செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயிடமும் தாவீது பேசினான். “நான் சவுலின் முகாமிற்குப் போகிறேன். என்னோடு யார் வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
அபிசாயோ, “நான் உங்களுடன் வருகிறேன்” என்று பதிலுரைத்தான்.
7 இரவில் அவர்கள் அங்குச் சென்றார்கள். முகாமின் மையத்தில் சவுல் தூங்க, அவனது தலைமாட்டில் அவனது ஈட்டி தரையில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரர்களும் சவுலைச் சுற்றிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். 8 அபிசாய் தாவீதிடம், “உங்கள் எதிரியைத் தோல்வியுறச் செய்ய தேவன் இன்று வாய்ப்பு அளித்துள்ளார். தரையோடு இவனை ஈட்டியால் ஒரே குத்தாக குத்திவிடட்டுமா? ஒரே தடவையில் அதைச் சாதிக்க என்னால் முடியும்!” என்றான்.
9 ஆனால் தாவீது அபிசாயிடம், “சவுலைக் கொல்லவேண்டாம்! கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு யார் கேடு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! 10 ஜீவிக்கின்ற கர்த்தர் தாமே இவரைத் தண்டிப்பார். இவர் இயற்கையாகவும் மரிக்கலாம், அல்லது போரில் கொல்லப்படலாம். 11 ஆனால், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு என்னால் மரணம் வரும்படி கர்த்தர் செய்யக் கூடாது! இப்போது ஈட்டியையும் தண்ணீர் செம்பையும் எடுத்துக்கொண்டுபோவோம்” என்றான்.
12 சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக் கொண்டு தாவீது கிளம்பினான். பிறகு தாவீதும், அபிசாயும் முகாமை விட்டு வெளியேறினார்கள். நடந்தது என்னதென்று யாருக்கும் தெரியவில்லை! யாரும் இதைப் பார்க்கவுமில்லை, எழும்பவுமில்லை. கர்த்தரால் சவுலும் மற்ற வீரர்களும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
மீண்டும் சவுலை தாவீது அவமானப்படுத்துகிறான்
13 பள்ளத்தாக்கின் மறு பக்கத்திற்கு தாவீது கடந்து போனான். மலையின் உச்சியில் நின்று கொண்டான். 14 அப்னேரிடமும், சவுலின் வீரர்களிடமும் சத்தமான குரலில், “அப்னேர்! எனக்குப் பதில் சொல்” என்றான்.
அப்னேரும், “நீ யார்? ஏன் அரசனை அழைக்கிறாய்?” என்று கேட்டான்.
15 தாவீது, “நீ ஒரு மனிதன் தானே? இஸ்ரவேலில் உள்ள பிற மனிதர்களைவிட நீ சிறந்தவன் அல்லவா? நான் சொல்வது சரி என்றால் பின் ஏன் உன் அரசனைக் காக்கவில்லை? உன் அரசனைக் கொல்ல ஒரு சாதாரண மனிதன் உன் கூடாரத்திற்கு வந்தான். 16 நீ பெரிய தவறுச் செய்துவிட்டாய்! நீயும் உன் ஆட்களும் மரித்திருக்க வேண்டும். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனைப் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். உன் அரசனின் தலைமாட்டில் உள்ள ஈட்டியும் தண்ணீர் செம்பும் எங்கே என்று பாருங்கள்?” என்றான். 17 சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்துகொண்டான். “என் மகனே! தாவீது, இது உனது குரலா?” என்று கேட்டான்.
அதற்கு தாவீது, “ஆமாம், என் அரசனாகிய எஜமானே, என் குரலேதான்” என்றான். 18 தாவீது மேலும், “ஐயா என்னை ஏன் தேடுகிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்? நான் என்ன குற்றவாளியா? 19 எனது எஜமானனாகிய அரசனே! நான் சொல்வதைக் கவனியும்! என் மீது உமக்கு கோபம் வரும்படி, கர்த்தர் செய்திருந்தால் அதற்கு தகுந்த காணிக்கையை அவர் ஏற்றுக்கொள்வாராக, மனிதர்கள் செய்திருந்தால், அதற்கு கர்த்தர் அவர்களுக்குத் தண்டனை அளிக்கட்டும். கர்த்தர் எனக்குக் கொடுத்த நாட்டைவிட்டுப் போகும்படி மனிதர்கள் செய்துவிட்டார்களே. ‘போய் அந்நியரோடு வாழு, அவர்களின் தெய்வங்களுக்கு சேவைசெய்’ என்று மனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள். 20 இப்போது கர்த்தருடைய சந்நிதிவிட்டு வெகு தூரத்தில் நான் மரிக்கும்படி நீர் செய்யவேண்டாம். மலையில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோன்று இஸ்ரவேலின் அரசன் ஒரு தெள்ளுப்பூச்சியை வேட்டையாட வந்தாரோ?” என்று கேட்டான்.
21 பிறகு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். திரும்பி வா மகனே, என் உயிர் உனக்கு முக்கியமானது என்பதை எனக்குக் காட்டிவிட்டாய். இனிமேல் உனக்குக் கேடுசெய்ய முயலமாட்டேன். நான் அறிவீனமாக நடந்துகொண்டேன். நான் பெருந்தவறு செய்துவிட்டேன்” என்றான்.
22 தாவீதோ, “இதோ, அரசனின் ஈட்டி என்னிடம் உள்ளது, யாராவது ஒரு இளைஞன் வந்து பெற்றுக்கொள்ளட்டும். 23 கர்த்தர் ஒவ்வொரு மனிதருக்கும், அவரவரின் செயலுக்குதக்க பலன் அளிக்கிறார். நீதியான காரியங்களை செய்பவர்களுக்கு நன்மை தருகிறார். தீமை செய்பவர்களுக்கு தண்டனையை தருகிறார். கர்த்தர் எனக்கு இன்று உங்களைத் தோற்கடிக்க வாய்பளித்தார். ஆனால் நான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு கேடு செய்யவில்லை. 24 இன்று உங்கள் வாழ்க்கை எனக்கு முக்கியமானது என்பதைக் காட்டினேன்! அதேபோல் கர்த்தரும் என் வாழ்க்கை அவருக்கு முக்கியமானது என்று காட்டுவார்! கர்த்தர் என்னை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பார்” என்றான்.
25 பின் சவுல் தாவீதிடம், “தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், என் மகனே, நீ பெரியக் காரியங்களைச் செய்து, வாழ்வில் பெரும் வெற்றியைப் பெறுவாய்” என்றான்.
தாவீது தன் வழியே போனான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான்.
திருமணம் குறித்த போதனைகள்
7 இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. 2 ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். 3 ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். 4 மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. 5 கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும். 6 நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல. 7 எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒரு வகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன.
8 திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது. 9 ஆனால் சுய கட்டுப்பாடு இல்லையெனில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பாலுறவு ஆசையினால் வெந்துபோவதைக் காட்டிலும் திருமணம் புரிந்துகொள்வது நல்லது.
10 திருமணம் புரிந்தவர்களுக்காக இப்போது இந்தக் கட்டளையை இடுகிறேன். (இந்த ஆணை என்னுடையதன்று, ஆனால் கர்த்தருடையது) மனைவி கணவனை விட்டுப் பிரியக் கூடாது. 11 ஆனால், மனைவி கணவனைப் பிரிந்தால் அவள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அல்லது, அவளுடைய கணவனோடேயே நல்லுறவுடன் மீண்டும் வாழவேண்டும். கணவனும் மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது.
12 மற்ற எல்லாருக்காகவும் இதனைக் கூறுகிறேன். (நானே இவற்றைக் கூறுகிறேன். கர்த்தர் அல்ல) கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரன் விசுவாசமற்ற ஒருத்தியை மணந்திருக்கக்கூடும். அவள் அவனோடு வாழ விரும்பினால் அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. 13 விசுவாசமற்ற கணவனோடு ஒரு பெண் வாழ்தல் கூடும். அவளோடு அவன் வாழ விரும்பினால், அவனை அவள் விவாகரத்து செய்யக் கூடாது. 14 விசுவாசமற்ற கணவன் விசுவாசம் உள்ள மனைவி மூலமாக பரிசுத்தமாக்கப்படுவான். விசுவாசமற்ற மனைவி விசுவாசமுள்ள கணவனால் பரிசுத்தமாக்கப்படுவாள். இது உண்மையில்லையெனில் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள்.
15 விசுவாசமற்ற ஒருவன் விலக எண்ணினால், அவன் விலகி வாழட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ அல்லது சகோதரியோ விடுதலை பெறுவார். அமைதி நிரம்பிய வாழ்க்கைக்காக தேவன் நம்மை அழைத்தார். 16 மனைவியே! நீ ஒருவேளை உன் கணவனை காப்பாற்றக் கூடும். கணவனே, நீ ஒருவேளை உன் மனைவியை காப்பாற்றக் கூடும். பிற்காலத்தில் நிகழப்போவதை நீங்கள் தற்சமயம் அறியமாட்டீர்கள்.
தேவன் அழைத்தபடியே வாழுங்கள்
17 தேவன் உங்களுக்குத் தந்த வாழ்வின்படியே ஒவ்வொருவனும் வாழ்ந்துகொண்டிருக்கட்டும். தேவன் உங்களை அழைத்தபோது நீங்கள் இருந்தபடியே வாழுங்கள். எல்லா சபைகளிலும் நான் உருவாக்கிய விதி இது தான். 18 அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனாக இருந்தால், பின்னர் அதன் அடையாளங்களை மாற்ற அவன் முயற்சி செய்யக் கூடாது. அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யப்படாதவனாக இருந்தால், பிறகு அவன் விருத்தசேதனம் செய்துகொள்ளக் கூடாது. 19 ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். 20 தேவன் அழைத்தபோது இருந்தபடியே ஒவ்வொருவனும் இருக்கட்டும். 21 தேவன் அழைத்தபோது நீ அடிமையாய் இருந்தால் நீ அதுபற்றிக் கவலைப்படாதே. ஆனால் நீ சுதந்தரமானவனாக இருந்தால், பிறகு எல்லாவகையிலும் வாய்ப்பைப் பயன்படுத்து. 22 கர்த்தர் அழைத்தபோது அடிமையாய் இருந்தவன் கர்த்தருக்குள் சுதந்தர மனிதனாக இருக்கிறான். அவன் கர்த்தருக்குரியவன். அழைக்கப்பட்டபோது சுதந்திர மனிதனாக இருந்தவனோ இப்போது கிறிஸ்துவுக்கு அடிமையாக இருக்கிறான். 23 நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமை ஆகாதீர்கள். 24 சகோதரர்களே, சகோதரிகளே! தேவனோடான உங்கள் புது வாழ்க்கையில், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் அழைக்கப்பட்டபோது இருந்தபடியே வாழ்க்கையைத் தொடரவேண்டும்.
திருமணம் குறித்த கேள்விகள்
25 திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம். 26 இது சச்சரவுகளின் காலம். எனவே நீங்கள் இருக்கிறபடியே வாழ்வது உங்களுக்கு நல்லது என நினைக்கிறேன். 27 உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள். 28 ஆனால் நீங்கள் திருமணம் செய்ய முடிவுசெய்தால், அது பாவமல்ல திருமணமாகாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களுக்கோ இந்த வாழ்க்கையில் ஏராளமான தொல்லைகள். நீங்கள் அத்தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
29 சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். 30 துக்கம் உடையவர்கள் துக்கமில்லாதவர்களைப்போல வாழ்தல் வேண்டும். சந்தோஷம் உடையவர்கள் சந்தோஷம் அற்றவர்களைப் போல வாழவேண்டும். பொருள்களை வாங்கும் மனிதர்கள் ஏதுமற்றவர்கள்போல இருக்கவேண்டும். 31 இந்த உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருட்கள் முக்கியமானவை அல்ல என்பது போன்று வாழவேண்டும். இந்த உலகமும் இந்த உலகத்தின் வழிகளும் மறைந்துபோகும். எனவே, நீங்கள் இவ்வாறு வாழ வேண்டும்.
32 நீங்கள் கவலையினின்று விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். திருமணம்Ԕஆகாதவன் கர்த்தரின் வேலையில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறான். 33 ஆனால், திருமணமானவனோ உலகத்துப் பொருள்கள் தொடர்பான வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறான். 34 அவன் இரண்டு காரியங்களை நினைவில் கொள்ள வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதும், கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துவதும் ஆகியவை அவை. திருமணம் ஆகாத பெண்ணோ, ஒரு இளம்பெண்ணோ கர்த்தரின் வேலையில் முனைவாள். கர்த்தருக்கு சரீரத்தையும் ஆன்மாவையும் முழுக்க அர்ப்பணிக்க விரும்புகிறாள். ஆனால், திருமணமான பெண்ணோ உலகக் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுகிறாள். அவள் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறாள். 35 உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற பொருள்களுக்காகச் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
36 ஒருவனின் மகள் திருமணமாகும் வயதைக் கடந்துவிட்டபட்சத்தில், அப்பெண்ணின் தந்தை அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவில்லை என நினைக்கலாம். திருமணம் என்பது முக்கியமானது என அவன் நினைக்கலாம். தனக்கு விருப்பமானதைச் செய்யவேண்டும். திருமணம் செய்துகொள்ள அவளை அனுமதிக்க வேண்டும். அது பாவமல்ல. 37 ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான். 38 தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான். [a]
39 எவ்வளவு காலம் கணவன் உயிரோடு இருக்கிறானோ அதுவரைக்கும் ஒரு பெண் அவனோடு சேர்ந்து வாழ்தல் வேண்டும். ஆனால் அவள் கணவன் இறந்தால், அப்பெண் தான் விரும்புகிற யாரையேனும் மணந்துகொள்ளும் உரிமை பெறுகின்றாள். ஆனால், கர்த்தருக்குள் அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். 40 பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சந்தோஷமாய் இருக்கிறாள். இது எனது கருத்து. தேவனுடைய ஆவி எனக்குள் இருப்பதாக நான் நம்புகிறேன்.
5 “மனுபுத்திரனே, நகரத்தின்மேல் உனது தாக்குதலுக்குப் பிறகு, நீ இவற்றைச் செய்ய வேண்டும். நீ கூர்மையான ஒரு வாளை எடுத்துக்கொள். அதனை சவரகனின் கத்தியைப்போன்று பயன்படுத்தி உனது முடியையும் தாடியையும் மழித்துவிடு. மழித்த முடியைத் தராசில்போட்டு நிறுத்துப்பார். உனது முடியை சமமான மூன்று பாகங்களாகப் பிரி, அதில் மூன்றில் ஒரு பாகத்தை நகரத்தின் (செங்கல்) மேல் வை, அந்நகரத்தில் முடியை எரி. சில ஜனங்கள் நகரத்திற்குள் மரிப்பார்கள் என்பதை இது காட்டும். பிறகு வாளைப் பயன்படுத்தி மூன்றில் ஒரு பாகமுள்ள முடியைச் சிறு துண்டுகளாக வெட்டு. அவற்றை நகரைச் (செங்கல்) சுற்றிலும் போடு. இது, சில ஜனங்கள் நகரத்திற்கு வெளியே மரிப்பார்கள் என்பதைக் காட்டும். பிறகு மூன்றில் ஒரு பங்கு முடியைக் காற்றில் தூவு. காற்று அவற்றைப் பரவலாக்கட்டும். நான் என் வாளை வெளியிலெடுத்து அந்த ஜனங்களுள் சிலரைப் பிற தூர நாடுகளுக்குத் துரத்துவேன் என்பதை இது காட்டும். 3 ஆனால் பிறகு, நீ போய் சில முடிகளை எடுத்து வரவேண்டும். அவற்றை உன்மேல் சட்டையில் சுற்றிவைத்துப் பாதுகாக்கவேண்டும். நான் என் ஜனங்கள் சிலரைக் காப்பாற்றுவேன் என்பதை இது காட்டும். 4 பிறகு பறந்துபோன இன்னும் கொஞ்சம் முடியை எடுத்து வரவேண்டும். அவற்றை நெருப்பில் போடவேண்டும். அங்கு நெருப்பொன்று எரிய ஆரம்பித்து இஸ்ரவேல் வீடு முழுவதையும் அழிக்கும் என்பதை இது காட்டுகிறது.”
5 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்; “அந்தச் செங்கல் எருசலேமைக் குறிக்கிறது. நான் எருசலேமை மற்ற தேசங்களுக்கு நடுவில் இருக்கச் செய்தேன். அவளைச் சுற்றிலும் மற்ற நாடுகள் உள்ளன. 6 எருசலேம் ஜனங்கள் எனது கட்டளைகளுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்கள் மற்ற நாடுகளைவிட மோசமாக இருக்கின்றனர்! அவர்களைச் சுற்றியுள்ள நாட்டிலுள்ளவர்களைவிட அவர்கள் எனது பெரும்பாலான சட்டங்களை மீறிவிட்டனர். எனது கட்டளைகளைக் கேட்கவும், சட்டங்களுக்கு அடிபணியவும் மறுத்துவிட்டனர்.”
7 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “நான் உனக்குப் பயங்கரமானவற்றைச் செய்வேன்; ஏனென்றால், நீ எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. நீ எனது கட்டளைகளுக்கு அடிபணியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள ஜனங்களை விட நீ எனது சட்டங்களை அதிகமாக மீறினாய்! உன்னைச் சுற்றியிருக்கும் நாடுகள் தவறு என கருதும் குற்றங்களையும் கூட நீ செய்தாய்!” 8 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எனவே இப்பொழுது, நானும்கூட உனக்கு எதிரானேன்! மற்ற ஜனங்கள் பார்க்கும்படி நான் உன்னைத் தண்டிப்பேன். 9 நான் இதற்கு முன்னால் செய்யாதவற்றை உனக்குச் செய்வேன். நான் பயங்கரமானவற்றை மீண்டும் செய்யமாட்டேன்! ஏனென்றால், நீ ஏராளமான கொடூரமானச் செயல்களைச் செய்தாய். 10 பெற்றோர் தம் குழந்தைகளைத் தின்பார்கள். அத்தகைய பசியில் எருசலேம் ஜனங்கள் இருப்பார்கள். பிள்ளைகளும் தம் சொந்த பெற்றோர்களைத் தின்பார்கள். நான் உன்னைப் பல வழிகளில் தண்டிப்பேன்! மீதி வாழ்கிற ஜனங்களை நான் காற்றிலே தூவுவேன்.”
11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எருசலேமே, நான் உன்னைத் தண்டிப்பேன் என்று என் உயிரின்மேல் சத்தியம் செய்கிறேன். ஏனென்றால், எனது பரிசுத்தமான இடத்தில் நீ கொடூரமான செயலைச் செய்தாய். அதனைத் தீட்டுப்படுத்துமாறு நீ அருவருப்பான செயல்களைச் செய்தாய்! நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னிடம் இரக்கம்கொள்ளமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். 12 உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்குள் பசியாலும், கொள்ளைநோயாலும் மரிப்பார்கள். உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்கு வெளியில் போரில் மரிப்பார்கள். உனது ஜனங்களில் பங்கினரை எனது வாளை வெளியிலெடுத்து அவர்களை தூரதேசங்களுக்கு விரட்டுவேன். 13 அதற்குப் பிறகுதான் நான் உங்கள் மீதுள்ள கோபத்தை நிறுத்துவேன். அவர்கள் எனக்குச் செய்த தீமைகளுக்காகத் தண்டிக்கப்பட்டனர் என்று அறிவேன். நான் கர்த்தர், அவர்கள் மேலுள்ள ஆழ்ந்த அன்பினால் நான் அவர்களிடம் பேசினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
14 கர்த்தர் கூறினார்; “எருசலேமே, நான் உன்னை அழிப்பேன். நீ ஒன்றுமில்லாமல் வெறும் கற்களின் குவியலாவாய். உன்னைக் கடந்து செல்லும் ஜனங்கள் கேலிசெய்வார்கள். 15 உன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் உன்னைக் கேலிசெய்வார்கள். ஆனால் அவர்களுக்கு நீ ஒரு பாடமாக இருப்பாய். நான் கோபங்கொண்டு உன்னைத் தண்டித்துவிட்டதை அவர்கள் காண்பார்கள். நான் மிகவும் கோபமாக இருந்தேன் உன்னை எச்சரித்தேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று கர்த்தராகிய நான் சொன்னேன்! 16 உனக்கு பயங்கரமான பஞ்சத்தை அனுப்புவேன் என்று சொன்னேன். உன்னை அழிக்கக் கூடியவற்றை அனுப்புவேன் என்று நான் சொன்னேன். அப்பஞ்ச காலம் மீண்டும் மீண்டும் வரும். நான் உனக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நிறுத்திவிடுவேன் என்று சொன்னேன். 17 நான் பஞ்சகாலத்தின்போது உங்கள் குழந்தைகளைக் கொல்லும் காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன் என்று சொன்னேன். நகரம் முழுவதும் நோயும் சாவுமாக இருக்கும். அந்தப் பகை படை வீரர்களை உங்களோடு சண்டையிட அழைப்பேன். கர்த்தராகிய நான் உனக்கு இவையெல்லாம் நிகழும் என்று சொன்னேன், அவையெல்லாம் நடக்கும்!”
புத்தகம் 2
(சங்கீதம் 42-72)
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்
42 நீரூற்றின் தண்ணீருக்காக மானானது தாகங்கொள்ளுகிறது.
அவ்வாறே என் ஆத்துமா தேவனே உமக்காகத் தாகமடைகிறது.
2 என் ஆத்துமா ஜீவனுள்ள தேவனுக்காகத் தாகமடைகிறது.
அவரைச் சந்திக்க நான் எப்போது போவேன்?
3 என் பகைவன் எப்போதும் என்னைக் கேலி செய்து, “உன் தேவன் எங்கே?
உன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் இன்னமும் வரவில்லையா?” என்று கேட்கிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே என் உணவாயிற்று.
4 தேவனுடைய ஆலயத்திற்குக் கூட்டத்தினரை வழிநடத்தி நடந்ததையும்,
பலரோடு ஓய்வு நாளைக் கொண்டாடியதையும்,
துதித்துப் பாடல்களைப் பாடி மகிழ்ந்ததையும்,
நான் நினைவு கூரும்போது என் உள்ளம் உடைந்து போகிறது.
5 ஏன் நான் மிகவும் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் மிகவும் கலங்கிப்போக வேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்.
6 என் தேவனே, நான் மிகவும் துக்கமாயிருக்கிறேன்.
எனவே நான் உம்மைக் கூப்பிட்டேன்.
யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும்
பின் மிசார் மலை (சிறுமலை) வரைக்கும் போனேன்.
7 பூமியின் ஆழங்களிலிருந்து பொங்கியெழும் தண்ணீரைப் போன்றும், கடலிலிருந்து அலைகள் தொடர்ந்து எழும்புவதைப் போன்றும், மீண்டும் மீண்டும் தொல்லைகள் என்னைச் சூழ்ந்தன.
கர்த்தாவே, உமது அலைகள் என்னைச் சூழ்ந்து தாக்குகின்றன.
8 ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மை அன்பை வெளிப்படுத்துகிறதினால் ஒவ்வொரு இரவும் அவரது பாடல்களை நான் பாடுகிறேன்.
ஜீவனுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்.
9 என் பாறையான தேவனிடம் நான் பேசுவேன்.
நான், “கர்த்தாவே, ஏன் என்னை மறந்தீர்?
என் பகைவரிடமிருந்து தப்பும் வழியை எனக்கு நீர் ஏன் காட்டவில்லை” என்பேன்.
10 என் பகைவர்கள் என்னை இடைவிடாது கேலி செய்து, “உன் தேவன் எங்கே?
உன்னைக் காப்பாற்ற இன்னமும் அவர் வரவில்லையா?”
என்று என்னைக் கேட்டு அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறார்கள்.
11 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்!
43 தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான்.
அவன் வஞ்சகன், பொய்யன்.
தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும்.
அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும்.
2 தேவனே, நீர் என் பாதுகாப்பிடம்.
ஏன் என்னைக் கைவிட்டீர்?
பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை?
3 தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக.
உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும்.
உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும்.
4 நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன்.
என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன்.
தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன்.
5 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்.
2008 by World Bible Translation Center