Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 14

யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான்

14 தாவீது அரசன் அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் மகனாகிய யோவாப் அறிந்தான். எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. அரசனிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான்.

பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் அரசனிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “அரசே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.

தாவீது அரசன் அவளிடம், “உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?” என்று கேட்டான்.

அப்பெண், “நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான். இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது மகனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது மகன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே மகன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.

அப்போது அரசன் அப்பெண்ணை நோக்கி, “வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்” என்றான்.

தெக்கோவாவின் பெண் அரசனை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய அரசனே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.

10 தாவீது அரசன், “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.

11 அந்தப் பெண், “தயவு செய்து, உமது தேவனாகிய கர்த்தருடைய பெயரால் ஆணையிட்டு நீங்கள் அந்த ஜனங்களைத் தடுப்பதாக எனக்கு வாக்களியுங்கள். தனது சகோதரனைக் கொலைச் செய்ததற்காக அவர்கள் எனது மகனைத் தண்டிக்க விரும்புகிறார்கள். அவர்கள் என் மகனை அழிக்காதபடி நீர் பாதுகாப்பீராக எனக்கு வாக்கு கொடும்” என்றாள்.

தாவீது, “கர்த்தர் உயிரோடிருப்பது போலவே, யாரும் உன் மகனைத் தாக்கமாட்டார்கள். உன் மகனின் தலையிலிருந்து ஒரு முடிகூட நிலத்தில் விழாது” என்றான்.

12 அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள்.

அரசன், “சொல்” என்றான்.

13 அப்போது அப்பெண், “தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் இவ்வாறு திட்டமிடுகிறீர்? இவ்வாறு சொல்லும்போது நீரே குற்றவாளியென்பதைக் காட்டிவிடுகிறீர். ஏனெனில் உமது வீட்டிலிருந்து போகும்படி செய்த உமது மகனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துவரவில்லை. 14 நாம் எல்லோரும் ஒரு நாள் மரிப்போம். நாம் நிலத்தில் சிந்திய தண்ணீரைப் போன்றவர்கள். யாரும் அத்தண்ணீரை நிலத்திலிருந்து மீண்டும் சேகரிக்க முடியாது. தேவன் மக்களை மன்னிப்பாரென்று உமக்குத் தெரியும். பாதுகாப்பான இடத்திற்கு விரட்டப்பட்ட ஜனங்களுக்காக தேவன் திட்டம் வகுத்திருக்கிறார். தேவன் தம்மிடமிருந்து ஓடிப் போகும்படி அவர்களை வற்புறுத்தமாட்டார். 15 எனது ஆண்டவராகிய அரசனே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, ‘நான் அரசனிடம் பேசுவேன். அரசன் ஒருவேளை எனக்கு உதவலாம். 16 அரசன் நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது மகனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’ 17 எனது அரசனாகிய ஆண்டவனின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் தேவனிடமிருந்து வந்த தூதனைப் போன்றவர். நல்லது எது, கெட்டது எது என்பது உமக்குத் தெரியும். தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார்” என்றாள்.

18 தாவீது அரசன் அந்த பெண்ணிற்கு உத்தரவாக, “நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்” என்றான். அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள்” என்றாள்.

19 அரசன், “இவற்றையெல்லாம் சொல்வதற்கு யோவாப் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டான்.

அப்பெண் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, நீங்கள் உயிரோடிருக்குமளவிற்கு நீங்கள் சரியானவர்! உங்கள் அதிகாரியாகிய யோவாப் என்னிடம் இவற்றையெல்லாம் கூறும்படிச் சொன்னார். 20 நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்” என்றாள்.

அப்சலோம் எருசலேம் திரும்புதல்

21 அரசன் யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.

22 யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது அரசனை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.

23 பின்பு யோவாப் எழுந்து கேசூருக்குப் போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24 ஆனால் தாவீது அரசன், “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் அரசனைப் பார்க்கபோக முடியவில்லை.

25 அப்சலோமின் அழகைக்கண்ட ஜனங்கள் வியந்தனர். இஸ்ரவேலில் ஒருவனும் அப்சலோமைப்போல் அழகுடையவனாக இருக்கவில்லை. தலையிலிருந்து பாதம்வரைக்கும், அவனது உடம்பில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. 26 ஒவ்வோராண்டின் இறுதியிலும் அப்சலோம் தனது தலையைச் சிரைத்துக்கொண்டான். அவன் சிரைத்தப் பின் தலைமயிரை எடுத்து, நிறுத்துப்பார்த்தான். அது 5 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. 27 அப்சலோமுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இம்மகளின் பெயர் தாமார். தாமார் ஒரு அழகிய பெண்மணி.

யோவாபுக்கு அப்சலோம் தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தல்

28 அப்சலோம் இரண்டு ஆண்டுகள் வரை தாவீது அரசனைப் பார்க்க அனுமதியின்றி எருசலேமில் வாழ்ந்தான். 29 அப்சலோம் யோவாபிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவாபிடம் அப்சலோமை அரசனிடம் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யோவாப் அப்சலோமிடம் வரவில்லை. இரண்டாவது முறையும் அப்சலோம் ஒரு செய்தியை அனுப்பினான். ஆனால் யோவாப் இம்முறையும் மறுத்தான்.

30 அப்போது அப்சலோம் தனது வேலையாட்களிடம், “பாருங்கள், யோவாபின் வயல் எனது வயலுக்கு அருகிலுள்ளது. அவனது வயலில் பார்லியைப் பயிரிட்டிருக்கிறான். போய் அந்த பார்லி பயிரை எரித்துவிடுங்கள்” என்றான்.

எனவே அப்சலோமின் வேலையாட்கள் போய் யோவாபின் வயலுக்கு நெருப்புமூட்டினர். 31 யோவாப் புறப்பட்டு அப்சலோமின் வீட்டிற்கு வந்தான். யோவாப் அப்சலோமிடம், “உன் வேலையாட்கள் எதற்காக என் வயலைக் கொளுத்தினர்?” என்று கேட்டான்.

32 அப்சலோம் யோவாபிடம், “நான் உனக்குச் செய்தி சொல்லியனுப்பினேன். நான் உன்னை இங்கு வருமாறு அழைத்தேன். உன்னை அரசனிடம் அனுப்ப விரும்பினேன். கேசூரிலிருந்து என்னை இங்கு ஏன் வரவழைத்தார் என்று எனக்காக நீ அவரைக் கேட்க வேண்டும். நான் அவரை நேரில் பார்க்கமுடியாது, எனவே நான் கேசூரில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது நான் போய் அரசனைக் காணவிடுங்கள். நான் பாவம் செய்திருந்தால் அவர் என்னைக் கொல்லட்டும்!” என்றான்.

அப்சலோம் தாவீது அரசனை சந்தித்தல்

33 பின்பு யோவாப் அரசனிடம் வந்து அப்சலோமின் வார்த்தைகளைக் கூறினான். அரசன் அப்சலோமை வரவழைத்தான். அப்போது அப்சலோம் அரசனிடம் வந்தான். அப்சலோம் அரசனுக்கு முன்பு தரையில் விழுந்து வணங்கினான். அரசன் அப்சலோமை முத்தமிட்டான்.

2 கொரி 7

அன்புள்ள நண்பர்களே! தேவனிடமிருந்து இந்த வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம். எனவே, நாம் நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் அசுத்தப்படுத்தும் எதனிடமிருந்தும் முழுக்க முழுக்க விலகி நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது வாழ்க்கை முறையிலேயே மிகச் சரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் தேவனை மதிக்கிறோம்.

பவுலின் மகிழ்ச்சி

எங்களுக்காக உங்கள் இதயங்களைத் திறந்து வைத்திருங்கள். நாங்கள் யாருக்கும் தீமை செய்ததில்லை. நாங்கள் எவரது நம்பிக்கையையும் அழித்ததில்லை. எவரையும் ஏமாற்றியதில்லை. உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். நான் உங்களைப் பற்றி உறுதியாக உணர்கிறேன். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு மிகுந்த தைரியம் கொடுக்கிறீர்கள். அதனால் அனைத்து துன்பங்களுக்கு இடையிலும் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

நாங்கள் மக்கதோனியாவுக்கு வந்தபோது எங்களுக்கு ஓய்வு இல்லாமல் இருந்தது. எங்களைச் சுற்றிலும் நெருக்கடிகள் இருந்தன. நாங்கள் வெளியே போராடிக்கொண்டும் உள்ளுக்குள் பயந்துகொண்டும் இருந்தோம். ஆனால் தேவன் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார். தீத்து வந்தபோது தேவன் ஆறுதல் தந்தார். அவனது வருகையிலும், நீங்கள் அவனுக்குக் கொடுத்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதலடைந்தோம். என்னை நீங்கள் பார்க்க விரும்பியதைப் பற்றி தீத்து கூறினான். உங்களது தவறுகளுக்கு நீங்கள் வருந்தியது பற்றியும் கூறினான். என்மீது நீங்கள் கொண்ட அக்கறையைப் பற்றி அவன் சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் உங்களுக்கு எழுதிய நிருபம் ஏதேனும் வருத்தத்தை தந்திருக்குமானால் அதை எழுதியதற்காக நான் இப்பொழுது வருத்தப்படவில்லை. அந்நிருபம் உங்களுக்கு வருத்தத்தை தந்தது என அறிவேன். அதற்காக அப்பொழுது வருந்தினேன். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான் உங்களுக்குத் துயரத்தைத் தந்தது. இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நீங்கள் துயரப்படும்படி ஆனதால் அன்று. அத்துயரம் உங்கள் இதயங்களை மாற்றியதற்காக நான் மகிழ்கிறேன். தேவனுடைய விருப்பப்படியே நீங்கள் துக்கப்பட்டீர்கள். எனவே நீங்கள் எங்களால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. 10 தேவனுடைய விருப்பப்படி நேரும் வருத்தம் ஒருவனது இதயத்தை மாற்றி, வாழ்வையும் மாற்றுகிறது. அவனுக்கு இரட்சிப்பையும் தருகிறது. அதற்காக வருத்தப்படவேண்டாம். ஆனால் உலகரீதியிலான துயரங்களோ மரணத்தை வரவழைக்கின்றது. 11 தேவனின் விருப்பப்படியே நீங்கள் வருத்தம் அடைந்தீர்கள். இப்பொழுது அவ்வருத்தம் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தது என்று பாருங்கள். அது உங்களிடம் ஜாக்கிரதையை உருவாக்கியது. குற்றமற்றவர்கள் என உங்களை நிரூபிக்கத் தூண்டியது. அது கோபத்தையும், பயத்தையும் தந்தது. அது என்னைக் காணத் தூண்டியது. அது உங்களை அக்கறை கொள்ளச் செய்தது. அது நல்லவற்றைச் செய்ய ஒரு காரணமாயிற்று. இக்காரியத்தில் எவ்விதத்திலும் நீங்களும் குற்றம் இல்லாதவர்கள் என்று உங்களை நிரூபித்துக்கொண்டீர்கள். 12 நான் உங்களுக்கு நிருபம் எழுதியதின் காரணம் ஒருவன் தவறு இழைத்துவிட்டான் என்பதாலல்ல, அதேபோல ஒருவன் பாதிக்கப்பட்டுவிட்டான் என்பதாலும் உங்களுக்கு நிருபம் எழுதவில்லை. தேவனுக்கு முன்பாக உங்களுக்காக நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் காணும்பொருட்டே அப்படி எழுதினேன். இதனால்தான் நாங்கள் ஆறுதலடைந்தோம். 13 நாங்கள் மிகவும் ஆறுதலடைந்தோம்.

தீத்து மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம். அவன் நலமடைய நீங்கள் அனைவரும் உதவினீர்கள். 14 உங்களைப் பற்றி தீத்துவிடம் பெருமையாகச் சொன்னவை அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகும். 15 நீங்கள் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறீர்கள். இதை நினைத்து தீத்து உங்கள் மீது உறுதியான அன்பைக் கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைப் பயத்தோடும் மரியாதையோடும் ஏற்றுக்கொண்டீர்கள். 16 நான் உங்களை முழுமையாக நம்பலாம் என்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எசேக்கியேல் 21

21 எனவே கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமை நோக்கிப் பார். அதன் பரிசுத்தமான இடங்களுக்கு எதிராகப் பேசு. எனக்காக இஸ்ரவேல் நாட்டிற்கு எதிராகப் பேசு. இஸ்ரவேல் நாட்டிடம் கூறு, ‘கர்த்தர் இவற்றைச் சொன்னார்; நான் உனக்கு எதிரானவன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து எடுப்பேன்! நல்லவர்கள் தீயவர்கள் ஆகிய எல்லா ஜனங்களையும் உன்னிடமிருந்து விலக்குவேன். நான் நல்ல ஜனங்களையும், தீய ஜனங்களையும் உன்னிடமிருந்து துண்டிப்பேன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து உருவி தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து ஜனங்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை எல்லா ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். நானே எனது வாளை உறையிலிருந்து உருவியிருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். எனது வாள் தன் வேலையை முடிக்கும்வரை தன் உறைக்குள் திரும்பப் போகாது.’”

தேவன் என்னிடம் சொன்னார், “மனுபுத்திரனே, துக்கமான மனிதனைப்போன்று உடைந்த உள்ளத்துடன் துக்க ஒலிகளை எழுப்பு. இத்துயர ஒலிகளை ஜனங்களுக்கு முன்னால் எழுப்பு. பிறகு அவர்கள் உன்னை ‘ஏன் இத்தகைய துக்க ஒலிகளை எழுப்புகிறாய்’ எனக் கேட்பார்கள். பிறகு நீ, ‘துக்கச்செய்தி வரப்போகிறது, ஒவ்வொரு இதயமும் பயத்தால் உருகப்போகிறது, எல்லா கைகளும் பலவீனமடையப் போகிறது. எல்லா ஆவியும் சோர்ந்துபோகும். எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போன்று ஆகும்’ என்று சொல்லவேண்டும். பார், கெட்ட செய்தி வந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் நிகழும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.

வாள் தயாராயிருக்கிறது

கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் பேசு. இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘பார், ஒரு வாள், கூர்மையான வாள்,
    அந்த வாள் தீட்டப்பட்டிருக்கிறது.
10 வாள் கொல்வதற்காகக் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
    இது மின்னலைப்போன்று பளிச்சிட கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
என் மகனே, நான் உன்னைத் தண்டிக்க வரும் பிரம்பிடமிருந்து ஓடிவிட்டாய்.
    அம்மரத்தடியால் தண்டிக்கப்படுவதற்கு நீ மறுக்கிறாய்.
11 எனவே, வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
    இப்போது இதனைப் பயன்படுத்த முடியும்.
வாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
    இப்போது இது கொலையாளியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

12 “‘கதறியழு, கத்து, மனுபுத்திரனே! ஏனென்றால், இந்த வாள் எனது ஜனங்களுக்கும் இஸ்ரவேலை ஆள்வோர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும்! அந்த ஆள்வோர்கள் போரை விரும்பினார்கள். எனவே, வாள் வரும்போது அவர்கள் எனது ஜனங்களோடு இருப்பார்கள்! எனவே உனது தொடையிலே அடித்துக்கொண்டு, உன் துக்கத்தைக் காட்ட ஒலி எழுப்பு! 13 எனென்றால், இது ஒரு சோதனை அன்று! மரத்தடியால் தண்டிக்கப்பட நீ மறுத்தாய் எனவே, நான் உன்னை வேறு எதனால் தண்டிக்க முடியும்? ஆம் வாளால்தான்’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

14 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் கைகளைத் தட்டு.
    எனக்காக ஜனங்களிடம் பேசு.
இந்த வாள் கீழே இரண்டு முறை வரட்டும்! மூன்று முறை வரட்டும்.
    இந்த வாள் ஜனங்களைக் கொல்வதற்குரியது!
இந்த வாள் பெருங் கொலைக்குரியது.
    இந்த வாள் ஜனங்களுக்குள் ஊடுருவுமாறு செருகப்பட்டிருக்கிறது.
15 அவர்களின் இதயங்கள் அச்சத்தால் உருகும்.
    மிகுதியான ஜனங்கள் கீழே விழுவார்கள்.
நகர வாசல்களில் இந்த வாள் பலரைக் கொல்லும்.
    ஆம் இந்த வாள் மின்னலைப்போன்று பளிச்சிடும்.
    இது ஜனங்களைக் கொல்லத் தீட்டப்பட்டிருக்கிறது!
16 வாளே, கூர்மையாக இரு!
    வலது பக்கத்தை வெட்டு.
    நேராக மேலே வெட்டு.
    இடது பக்கத்தை வெட்டு.
உனது முனை தேர்ந்தெடுத்த இடங்களில் எல்லாம் போ!

17 “பிறகு நானும் எனது கைகளைத் தட்டுவேன்.
    என் கோபத்தைக் காட்டுவதை நிறுத்துவேன்.
கர்த்தராகிய நான் பேசினேன்!”

எருசலேம் தண்டிக்கப்படுதல்

18 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 19 “மனுபுத்திரனே, பாபிலோனிய அரசனின் வாள் இஸ்ரவேலுக்கு வரத்தக்கதாக இரண்டு பாதைகளை வரைந்துக்கொள். இரண்டு சாலைகளும் ஒரே தேசத்திலிருந்து (பாபிலோன்) வர வேண்டும். சாலையின் ஆரம்பத்தில் ஒரு குறிப்பை எழுது. 20 அடையாளத்தைப் பயன்படுத்தி எந்த வழியில் வாள் வருமென்று காட்டு. ஒருவழி அம்மோனியரின் நகரமாகிய ரப்பாவுக்குக் கொண்டுபோகும். இன்னொரு வழி யூதாவில் இருக்கிற பாதுகாக்கப்பட்ட நகரம் எருசலேமிற்கு கொண்டுபோகும்! 21 பாபிலோனிய அரசன் தாக்குவதற்காகத் தான் போக விரும்பும் வழியைத் திட்டமிட்டிருக்கிறான் என்பதை இது காட்டும். பாபிலோன் அரசன் இரு வழிகளும் பிரிகிற இடத்திற்கு வந்திருக்கிறான். பாபிலோன் அரசன் எதிர்காலத்தை அறிய மந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அவன் சில அம்புகளை ஆட்டினான். அவன் குடும்ப விக்கிரகங்களிடம் கேள்விகள் கேட்டான். அவன் தான் கொன்ற விலங்கின் ஈரலைப் பார்த்தான்.

22 “அடையாளமானது வலது பக்கமாக எருசலேமிற்குப் போகும் வழியில் போகச் சொல்லும்! அவன் வாசலை இடிக்கும் எந்திரங்களைக் கொண்டுவர திட்டமிடுகிறான். அவன் கட்டளை இடுவான். அவனது வீரர்கள் கொல்லத் தொடங்குவார்கள். அவர்கள் போர் ஆரவாரத்தைச் செய்வார்கள். பிறகு அவர்கள் நகரத்தைச் சுற்றி சுவரைக் கட்டுவார்கள், மணசாலைகளை அமைப்பார்கள். நகரத்தைத் தாக்க அவர்கள் மரக்கோபுரங்களைக் கட்டுவார்கள். 23 அச்செயல்களை வெறும் பயனற்ற மந்திர வித்தைகளாக இஸ்ரவேல் ஜனங்கள் கருதினார்கள். அவர்கள் தங்களுக்குள் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஆனால் கர்த்தர் அவர்களது பாவங்களை நினைப்பார்! பிறகு இஸ்ரவேலர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள்.”

24 எனது கர்த்தராகிய ஆண்டவர், இதனைக் கூறுகிறார்: “நீ பல பாவங்களைச் செய்திருக்கிறாய். உன் பாவங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. நீ குற்றவாளி என்பதை அவை எனக்கு நினைப்பூட்டுகின்றன. எனவே எதிரி தன் கையில் உன்னைப் பிடித்துக்கொள்வான். 25 இஸ்ரவேலின் தீய தலைவனான நீ கொல்லப்படுவாய். உன் தண்டனைக் காலம் வந்திருக்கிறது. இங்கே முடிவு இருக்கிறது!”

26 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உன் தலைப்பாகையை எடு! உன் கிரீடத்தை எடுத்துவிடு. காலம் மாறி இருக்கிறது. முக்கியமான தலைவர்கள் தாழ்த்தப்படுவார்கள். முக்கியமற்றவர்கள் தலைவர்கள் ஆவார்கள். 27 நான் அந்த நகரத்தை முழுமையாக அழிப்பேன்! ஆனால் சரியான மனிதன் புதிய அரசன் ஆகும்வரை இது நிகழாது. பிறகு நான் அவனை (பாபிலோன் அரசனை) இந்நகரத்தை வைத்துக் கொள்ளவிடுவேன்.”

அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

28 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் கூறு, இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் அம்மோன் ஜனங்களிடமும் அவர்களின் அவமானத்திற்குரிய பொய்த் தேவனிடமும் இவற்றைச் சொல்கிறார்:

“‘பார், ஒரு வாள்!
    வாள் உறையிலிருந்து வெளியே உள்ளது.
    வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது!
வாள் கொலை செய்யத் தயாராக இருக்கிறது.
    இது மின்னலைப்போன்று ஒளிவிட கூர்மையாக்கப்பட்டுள்ளது!

29 “‘உங்கள் தரிசனங்கள் பயனற்றவை,
    உங்கள் மந்திரம் உங்களுக்கு உதவாது. இது பொய்களின் கொத்து மட்டுமே.
இவ்வாள் இப்பொழுது தீய மனிதர்களின் தொண்டையில் உள்ளது.
    அவர்கள் மரித்த உடல்களாக விரைவில் ஆவார்கள்.
அவர்களின் நேரம் வந்திருக்கிறது.
    அவர்களின் தீமை முடிவடையும் நேரம் வந்திருக்கிறது.

பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

30 “‘உனது வாளை (பாபிலோன்) உறையிலே போடு, பாபிலோனே, நீ எந்த இடத்தில் உருவாக்கப்பட்டாயோ, எந்த இடத்தில் பிறந்தாயோ அங்கே நான் உன்னை நியாயந்தீர்ப்பேன். 31 எனது கோபத்தை நான் உனக்கு எதிராகக் கொட்டுவேன். எனது கோபம் உன்னை ஒரு சூடான காற்றைப்போன்று அழிக்கும். நான் உன்னைத் தீய மனிதர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் ஜனங்களைக் கொல்வதில் திறமை உடையவர்கள். 32 நீங்கள் நெருப்புக்கான எண்ணெயைப் போன்றவர்கள். உங்கள் இரத்தம் பூமியின் ஆழம்வரை பாயும். ஜனங்கள் உன்னை மீண்டும் நினைக்கமாட்டார்கள். கர்த்தராகிய நான் பேசினேன்!’”

சங்கீதம் 68

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.

68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
    அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
    நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
    நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
    நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
தேவனை நோக்கிப் பாடுங்கள்.
    அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
    அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
    அவரது நாமத்தைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
    தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
    தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.
தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
    நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.
பூமி அதிர்ந்தது,
    இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
    மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
    தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.
11 தேவன் கட்டளையிட்டார்,
    பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர்.
12 “வல்லமையுள்ள அரசர்களின் படைகள் ஓடிப்போயின!
    வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர்.
    வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
13 அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.)
    புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள்.
    அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.”

14 சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார்.
    அவர்கள் விழும் பனியைப் போலானார்கள்.
15 பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை.
16 பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்?
    தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார்.
    என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார்.
17 பரிசுத்த சீயோன் மலைக்கு கர்த்தர் வருகிறார்.
    அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன.
18 உயர்ந்த மலையில் அவர் ஏறினார்.
    சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார்.
எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார்.
    தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார்.
19 கர்த்தரைத் துதியுங்கள்!
    ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
    தேவன் நம்மை மீட்கிறார்.

20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
    நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
21 தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
    அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார்.
22 என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
    மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
23 நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய்,
    உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார்.
24 வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள்.
    என் அரசராகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
25 பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள்.
    பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள்.
    இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள்.
26 சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்!
    இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
27 சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான்.
    அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது.
அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.

28 தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்!
    கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.
29 எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு,
    அரசர்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள்.
30 நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும்.
    அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
போரில் அத்தேசங்களை நீர் வென்றீர்.
    இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும்.
31 எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும்.
    தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும்.
32 பூமியிலுள்ள அரசர்களே, தேவனைப் பாடுங்கள்!
    நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!

33 தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார்.
    அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!
34 உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர்.
    இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
35 தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர்.
    இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார்.
தேவனைத் துதியுங்கள்!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center