M’Cheyne Bible Reading Plan
தாவீது தன் படையை கணக்கெடுக்க முடிவெடுக்கிறான்
24 இஸ்ரவேல் மீது மீண்டும் கர்த்தர் கோபம் அடைந்தார். இஸ்ரவேலருக்கு எதிராகக் திரும்பும்படி கர்த்தர் தாவீதை மாற்றினார். தாவீது, “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுங்கள்” என்றான்.
2 தாவீது அரசன் படைத் தலைவனாகிய யோவாபை நோக்கி, “தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிடமும் நீ போய் ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு. அப்போது நான் மொத்த ஜனங்கள் தொகையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள முடியும்” என்றான்.
3 ஆனால் யோவாப் அரசனிடம், “எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது முக்கிய மன்று. உன் தேவனாகிய கர்த்தர், உங்களுக்கு நூறு மடங்கு ஆட்களைத் தருவார், உங்கள் கண்கள் அவ்வாறு நடப்பதைப் பார்க்கும்! ஆனால் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டான்.
4 தாவீது அரசன் உறுதியாக யோவாபுக்கும் படைத் தலைவர்களுக்கும் ஜனங்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார். எனவே யோவாபும் படைத் தலைவர்களும் இஸ்ரவேலின் ஜனங்கள் தொகையைக் கணக்கெடுக்க அரசனிடமிருந்து சென்றனர். 5 அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் ஆரோவேரில் முகாமிட்டுத் தங்கினார்கள். நகரின் வலது புறத்தில் அவர்கள் முகாம் இருந்தது.
(காத் பள்ளத்தாக்கின் நடுவில் நகரம் இருந்தது. யாசேருக்குப் போகும் வழியில் அந்த நகரம் இருந்தது.)
6 பின்பு அவர்கள் கீலேயாத்திற்கும் தாதீம் ஓத்சிக்கும் போனார்கள். அங்கேயிருந்து தாண்யானுக்கும் சீதோனைச் சூழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார்கள். 7 அவர்கள் தீரு என்னும் கோட்டைக்கு போனார்கள். அவர்கள் கானானியர் மற்றும் ஏவியரின் நகரங்களுக்கெல்லாம் சென்றார்கள். அவர்கள் யூதாவின் தெற்கிலுள்ள பெயெர்செபாவிற்குப் போனார்கள். 8 ஒன்பது மாதங்களும் 20 நாட்களும் கழிந்த பிறகு அவர்கள் தேசம் முழுவதும் சுற்றிவந்திருந்தார்கள். 9 மாதங்கள் 20 நாட்களுக்குப் பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தனர்.
9 யோவாப் அரசனுக்குரிய ஜனங்களின் பட்டியலைக் கொடுத்தான். இஸ்ரவேலில் 8,00,000 ஆண்கள் வாளைப் பயன்படுத்தக் கூடியவர்கள். யூதாவிலும் 5,00,000 ஆண்கள் இருந்தனர்.
கர்த்தர் தாவீதைத் தண்டிக்கிறார்
10 ஜனங்கள் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது வெட்கமடைந்தான். தாவீது கர்த்தரை நோக்கி, “நான் செய்த இக்காரியத்தில் பெரும் பாவம் செய்தேன்! கர்த்தாவே! என் பாவத்தை மன்னிக்கும்படி நான் கெஞ்சுகிறேன். நான் மிகவும் மூடனாகிவிட்டேன்” என்றான்.
11 காலையில் தாவீது எழுந்தபோது, கர்த்தருடைய வார்த்தை தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்திற்கு வந்தது. 12 கர்த்தர் காத்தை நோக்கி, “போய் தாவீதிடம் கூறு, ‘இதுவே கர்த்தர் கூறுவது: நான் மூன்று காரியங்களை முன் வைக்கிறேன். நான் உனக்குச் செய்வதற்கு ஏதேனும் ஒன்றைத் தெரிந்துக்கொள் என்கிறார்’ என்று சொல்” என்றார்.
13 காத் தாவீதிடம், போய் அவ்வாறே கூறினான். அவன் தாவீதிடம், “இம்மூன்று காரியங்களிலும் ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் இத்தேசத்திற்கும் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதங்கள் உங்கள் பகைவர்கள் உங்களைத் துரத்தவேண்டுமா? அல்லது மூன்று நாட்கள் உங்கள் தேசத்தாரை நோய் பாதிக்கட்டுமா? இதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், இவற்றில் எதை முடிவு செய்கிறீர்கள் என்பதை நான் என்னை அனுப்பிய கர்த்தருக்குக் கூற வேண்டும்” என்றான்.
14 தாவீது காத்தை நோக்கி “உண்மையிலேயே நான் துன்பத்துக்குள்ளானேன்! ஆனால் கர்த்தர் இரக்கமுள்ளவர். எனவே கர்த்தர் நம்மைத் தண்டிக்கட்டும். ஜனங்களிடமிருந்து எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டாம்” என்றான்.
15 எனவே கர்த்தர் இஸ்ரவேலில் நோயை அனுப்பினார். அது, காலையில் ஆரம்பித்துக் குறிப்பிட்ட காலம் மட்டும் நீடித்தது. தாணிலிருந்து பெயெர் செபாவரைக்கும் 70,000 பேர் மடிந்தனர். 16 தேவ தூதன் எருசலேமை அழிக்கும்படி அதற்கு நேராக தன் கரங்களை உயர்த்தினான். ஆனால் நடந்த தீய காரியங்களுக்காக கர்த்தர் மனம் வருந்தினார். ஜனங்களை அழித்த தூதனை கர்த்தர் நோக்கி, “போதும்! உனது கரங்களைத் தாழ்த்து” என்றார். எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு அருகே கர்த்தருடைய தூதன் நின்றுக்கொண்டிருந்தான்.
அர்வனாவின் போரடிக்கிற களத்தைத் தாவீது வாங்குகிறான்
17 ஜனங்களைக் கொன்ற தூதனை தாவீது பார்த்தான். தாவீது கர்த்தரிடம் பேசினான். தாவீது, “நான் பாவம் செய்தேன்! நான் தவறிழைத்தேன். இந்த ஜனங்கள் ஆடுகளைப் போன்று என்னைப் பின் பற்றினார்கள். அவர்கள் தவறேதும் செய்யவில்லை. என்னையும் எனது தந்தையின் குடும்பத்தையும் நீங்கள் தண்டியுங்கள்” என்றான்.
18 அன்றைய தினம் காத் தாவீதிடம் வந்தான். காத் தாவீதைப் பர்ர்த்து, “எபூசியனாகிய அர்வனாவின் களத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பு” என்றான். 19 காத் கூறியபடியே தாவீது செய்தான். கர்த்தர் விரும்பியபடியே தாவீது செய்தான். அர்வனாவைப் பார்க்க தாவீது சென்றான். 20 அரசனான தாவீதும் அவனது அதிகாரிகளும் தன்னிடம் வருவதை அர்வனா பார்த்தார். அர்வனா நிலத்தில் தலைதாழ்த்தி வணங்கினார். 21 பின் அர்வனா, “எனது ஆண்டவனும் அரசருமாகிய நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
தாவீது அவனுக்கு, “உன்னிடமிருந்து போரடிக்கிற களத்தை வாங்குவதற்கு வந்தேன். அதில் கர்த்தருக்குப் பலிபீடம் அமைக்கமுடியும். அப்படி செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும்” என்றான்.
22 அர்வனா, தாவீதிடம், “எனது அரசனாகிய ஆண்டவன் தாங்கள் பலிகொடுக்க எதையும் என்னிடமிருந்து எடுக்கலாம். இந்தப் பசுக்களைத் தகனபலிக்காகவும், போரடிக்கிற உருளைகளையும், நுகத்தடிகளையும் விறகுக்காகவும் பயன்படுத்துங்கள். 23 அரசனே! நான் எல்லாவற்றையும் உங்களுக்கு தருவேன்!” என்றான் அர்வனா மீண்டும் அரசனுக்கு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் இதைக் கண்டு மகிழட்டும்” என்றான்.
24 ஆனால் அரசன் அர்வனாவுக்கு, “நான் உனக்கு உண்மையைச் சொல்வேன், உன் நிலத்தை ஒரு விலை கொடுத்துப் பெறுவேன். ஆனால் எனது தேவனாகிய கர்த்தருக்கு இலவசமாக கிடைத்த எந்த தகன பலியையும் செலுத்தமாட்டேன்” எனக் கூறினான்.
ஆகையால் தாவீது போரடிக்கிற களத்தையும் பசுக்களையும் 50 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினான். 25 பின்பு தாவீது ஒரு பலிபீடத்தை கர்த்தருக்காக கட்டினான். தாவீது அதில் தகனபலியையும் சமாதானபலியையும் அளித்தான். தேசத்திற்காகச் செய்யப்பட்ட தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலிலிருந்த நோய்களைப் பரவாமல் தடுத்தார்.
4 இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 2 ஏனென்றால் அவன் குழந்தை. அவன் தன் பாதுகாப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் தன் தந்தையின்படி குறித்த வயதை அடையும்போது அவன் சுதந்தரம் உள்ளவனாக விளங்குகிறான். 3 நாமும் இதைப் போலத்தான். நாம் எல்லாரும் குழந்தைகளைப் போன்றவர்கள். நாம் பயனற்ற சட்டங்களுக்கு அடிமையாய் இருந்தோம். 4 ஆனால் சரியான நேரம் வந்தபோது, தேவன் தன் மகனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார். 5 இதனைச் செய்ததன் மூலம், சட்டங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தேவன் விடுதலையை வழங்கினார். நம்மை அவரது பிள்ளைகளாக ஆக்கவேண்டும் என்பது தான் இவரது நோக்கம்.
6 நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அதனால் தான் தேவன் தம் மகனின் ஆவியை நமது இதயங்களுக்குள் அனுப்பினார். ஆவியானவரும் “பிதாவே, அன்பான பிதாவே” என்று கதறுகிறார். 7 ஆகையால் இப்பொழுது நீங்கள் முன்பு போல அடிமைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் வாக்குறுதிப்படி உங்களுக்குத் தருவார். ஏனென்றால் நீங்கள் அவரது பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
கலாத்திய கிறிஸ்தவர்கள் மீது பவுலின் அன்பு
8 முன்பு நீங்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. மெய்யாகவே தேவன் அல்லாத கடவுள்களுக்கு நீங்கள் அடிமைகளாகி இருந்தீர்கள். 9 ஆனால் இப்போது நீங்கள் உண்மையான தேவனை அறிந்துகொண்டீர்கள். உண்மையில் அவர் உங்களை அறிந்துகொண்ட தேவன். எனவே எதற்காக நீங்கள் மறுபடியும் அந்தப் பலவீனமான, மோசமான ஆவிகளுக்கு அடிமைகளாக விரும்புகிறீர்கள். 10 நீங்கள் இப்போதும் சிறப்பான நாட்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் பற்றிச் சட்டங்கள் கூறுவதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள். 11 நான் உங்களை எண்ணி அஞ்சுகிறேன். நான் உங்களுக்காக உழைத்ததெல்லாம் வீணாய்ப் போயிற்றோ என்று அஞ்சுகிறேன்.
12 சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள். 13 உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன். 14 எனது நோய் உங்களுக்குப் பாரமாயிற்று. எனினும் நீங்கள் என்னை வெறுக்கவில்லை. என்னை விலக்கவில்லை. என்னை தேவதூதனைப் போல வரவேற்றீர்கள். என்னை இயேசு கிறிஸ்துவைப் போன்று ஏற்றுக்கொண்டீர்கள். 15 அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போது அந்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? எனக்கு உதவுவதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்களால் முடியுமானால் உங்கள் கண்களையும் பிடுங்கி எடுத்து எனக்குத் தரத் தயாராக இருந்தீர்கள். 16 இப்பொழுது நான் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா?
17 அவர்கள் உங்களைத் தேடி கடுமையாய் உழைக்கிறார்கள். ஆனால், இது உங்கள் நன்மைக்காக அல்ல. அது எங்களுக்கு எதிராயிற்று. என்னைப் பிரிந்து நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்றே விரும்புகிறார்கள். 18 நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் உங்களிடம் ஆர்வம் காட்டுவது நல்லது. இது எப்பொழுதும் உண்மை. உங்களோடு நான் இருக்கும்போது மட்டுமல்ல, உங்களை விட்டுவிலகிய பிறகும் அவர்கள் உங்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். 19 என் சிறு பிள்ளைகளே| மீண்டும் நான் உங்களுக்காக வேதனைப்படுகிறேன். இது ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப் போன்றது. இயேசுவைப் போன்று நீங்கள் ஆகும்வரை நான் இவ்வேதனையை அடைவேன். 20 நான் இப்போது உங்களுடன் இருப்பதை விரும்புகிறேன். பின்னர் வேண்டுமானால் உங்களோடு பேசின விதத்தை மாற்றிக்கொள்ள முடியும். உங்களைக் குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.
ஆகார், சாராளின் சான்று
21 உங்களில் சிலர் இப்பொழுதும் மோசேயின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறீர்கள். எனக்குச் சொல்லுங்கள்.சட்டம் என்னச் சொல்லுகின்றது என கவனிக்கவில்லையா? 22 ஆபிரகாமுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஒருவனின் தாய் ஒரு அடிமைப் பெண். இன்னொருவனின் தாய் சுதந்தரமானவள். 23 அடிமைப் பெண்ணின் மகன் சாதாரண முறையில் பிறந்தான். அடுத்த பெண்ணின் மகனோ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி பிறந்தவன்.
24 இந்த உண்மையான சம்பவம் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுகிறது. இந்த இரண்டு பெண்களும் தேவன் மனிதனோடு செய்துகொண்ட இரண்டு உடன்படிக்கைகளைப் போன்றவர்கள். ஒன்று சீனாய் மலையில் தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்ட மக்கள் எல்லோரும் அடிமைகளைப் போன்றவர்கள். ஆகார் இந்த உடன்படிக்கைக்கு உரியவள். 25 ஆகையால் ஆகார் என்பவள் அரேபியாவின் சீனாய் மலையைப் போன்று விளங்கினாள். இவள் தற்போதுள்ள எருசலேம் நகரத்தின் படமாயிருக்கிறாள். இந்த நகரமும் அடிமைப்பட்டிருக்கிறது. அதிலுள்ள யூத மக்களும் அடிமைப்பட்டு இருக்கின்றனர். 26 ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய். 27 கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.
“பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு.
எப்போதும் நீ குழந்தை பெறாதவள்.
உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது.
அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு.
கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற
பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு.” (A)
வெளிப்படுத்துதல்
28-29 ஆபிரகாமின் ஒரு பிள்ளை சாதாரண முறையில் பிறந்தவன். அவரது இன்னொரு பிள்ளை தேவனுடைய வாக்குறுதிப்படி ஆவியானவரின் வல்லமையால் பிறந்தான். சகோதர சகோதரிகளே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியால் வந்த பிள்ளைகளே! சாதாரண முறையில் பிறந்தவன், ஈசாக்கை மிக மோசமாக நடத்தினான். அது போலவே இன்றும் நடைபெறுகிறது. 30 ஆனால் வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது? “அடிமைப் பெண்ணையும் அவளது மகனையும் தூக்கி எறியுங்கள். அடிமையாய் இல்லாதவளின் மகன் அவனது தந்தைக்குரியவற்றை எல்லாம் பெற்றுக்கொள்வான். ஆனால் அடிமைப் பெண்ணின் மகனோ எதையும் பெற்றுக்கெள்ளமாட்டான்.” [a] 31 ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல. நாம் சுதந்தரமான பெண்ணின் பிள்ளைகள்.
அசீரியா கேதுரு மரத்தைப் போன்றது
31 சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் மூன்றாவது மாதத்து (ஜூன்) முதல் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, எகிப்திய அரசனான பார்வோனிடமும் அவனது ஜனங்களிடமும் இவற்றைக் கூறு:
“‘உனது மகத்துவத்தில்,
உன்னுடன் யாரை நான் ஒப்பிட முடியும்?
3 அசீரியா, அழகான கிளைகளுடன், காட்டு நிழலோடு உயரமாக உள்ள லீபனோனின் கேதுரு மரம்.
அதன் உச்சி மேகங்களுக்கிடையில் உள்ளது!
4 தண்ணீர் மரத்தை வளரச் செய்கிறது.
ஆழமான நதி மரத்தை உயரமாக்கியது.
நதிகள் நடப்பட்ட மரத்தை சுற்றி ஓடுகின்றன.
ஒரு மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு சிறு ஓடைகள் மட்டுமே பாய்கின்றன.
5 எனவே காட்டிலுள்ள மற்ற மரங்களைவிட அம்மரம் உயரமாக இருக்கின்றது.
இதில் பல கிளைகள் வளர்ந்துள்ளன.
அங்கே தண்ணீர் மிகுதியாக உள்ளது.
எனவே கிளைகள் பரந்து வளர்ந்துள்ளன.
6 அம்மரத்தின் கிளைகளில் வானத்துப் பறவைகள்
எல்லாம் தம் கூடுகளைக் கட்டிக்கொண்டன.
காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் அம்மரத்துக்
கிளைகளின் அடியிலேயே குட்டிபோட்டன.
அம்மரத்தின் அடியிலேயே
எல்லா பெருநாடுகளும் வாழ்ந்தன.
7 அந்த மரம் அழகாக இருந்தது.
அது பெரிதாக இருந்தது,
அதற்கு அவ்வளவு பெரிய கிளைகள் இருந்தன.
அதன் வேர்களுக்கு மிகுதியான நீர் இருந்தது!
8 தேவனுடைய தோட்டத்தில் உள்ள கேதுரு மரங்கள் கூட
இம்மரத்தைப்போன்று இவ்வளவு பெரிதாக இல்லை.
தேவதாரு மரங்களுக்கு இவ்வளவு கிளைகள் இல்லை.
அர்மோன் மரங்களுக்கு அதைப்போன்று கிளைகள் இல்லை.
இந்த மரத்தைப்போன்று தேவனுடைய தோட்டத்தில் உள்ள
எந்த மரமும் அழகானதாக இல்லை.
9 நான் இதற்குப் பல கிளைகளைக் கொடுத்தேன்,
அதனை அழகுடையதாக ஆக்கினேன்.
தேவன் தோட்டமான ஏதேனிலுள்ள
அனைத்து மரங்களும் பொறாமைப்பட்டன!’”
10 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “இம்மரம் உயரமாக வளர்ந்திருக்கிறது. இது தனது உச்சியை மேகங்களிடையே வைத்தது. இம்மரத்திற்குத் தான் வளர்ந்திருந்ததால் பெருமை இருந்தது! 11 எனவே ஒரு பலம் வாய்ந்த அரசன் அந்த மரத்தைக் கைப்பற்றும்படிச் செய்தேன். அந்த அரசன் மரம் செய்த தீமைகளுக்காக அதனைத் தண்டித்தான். நான் அந்த மரத்தை என் தோட்டத்தில் இருந்து வெளியேற்றினேன். 12 உலகிலேயே மிகக் கொடூரமான ஜனங்கள் அதனை வெட்டிப்போட்டார்கள். அந்த மரக்கிளைகள் மலைகளின் மீதும் பள்ளத்தாக்குகளின் மீதும் விழுந்தன. அதன் முறிந்த கிளைகள் ஆறுகளால் பல இடங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டன. இனி மேல் மரத்தின் கீழே நிழல் இருக்காது. எனவே எல்லா ஜனங்களும் வெளியேறினர். 13 இப்பொழுது விழுந்த மரத்தில் பறவைகள் வாழ்கின்றன. காட்டு மிருகங்கள் விழுந்த கிளைகளின் மேல் நடக்கின்றன.
14 “இப்பொழுது, தண்ணீர்க் கரையிலுள்ள எந்த மரமும் பெருமை கொள்ளமுடியாது. அவை மேகங்களைத் தொட முயற்சி செய்வதில்லை. தண்ணீரைக் குடித்துப் பலம் கொண்ட எந்த மரமும் தான் உயரமாக இருப்பதைப்பற்றி பெருமை கொள்வதில்லை. ஏனென்றால், அனைத்தும் மரிக்க ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் உலகத்திற்குக் கீழே சீயோல் என்னும் மரண இடத்திற்குப் போகும். அவை மரித்து ஆழமான குழிகளுக்குள் போன மற்ற ஜனங்களோடு போய் சேரும்.”
15 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அந்த மரம் சீயோலுக்குள் இறங்கும் நாளிலே எல்லோரையும் அதற்காகத் துக்கப்படும்படிச் செய்தேன். லீபனோன் அதற்காகத் துக்கப்பட்டது. வயல்வெளியிலுள்ள எல்லா மரங்களும் அதன் வீழ்ச்சியைக் கேட்டு துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தன. ஆழ்கடல் தன் தண்ணீர் ஓட்டத்தையும் அதன் ஆறுகளையும் நிறுத்தியது. 16 நான் அந்த மரத்தை விழச் செய்தேன். நாடுகள் அது விழும் சத்தத்தைக் கேட்டு பயத்தால் நடுங்கின. நான் அந்த மரத்தை மரண இடத்திற்குப் போகும்படிச் செய்தேன். அது ஏற்கெனவே மரித்தவர்கள் சென்ற ஆழமான இடத்திற்குப் போனது. கடந்த காலத்தில், ஏதேனில் உள்ள அனைத்து மரங்களும் லீபனோனின் சிறந்த மேன்மையான மரங்களும் அந்த தண்ணீரைக் குடித்தன. அம்மரங்கள் கீழ் உலகத்தில் ஆறுதல் அடைந்தன. 17 ஆம், அம்மரங்கள் கூட, பெரிய மரத்தோடு மரண இடத்திற்குச் சென்றன. போரில் கொல்லப்பட்டவர்களோடு அவை சேர்ந்தன. அந்தப் பெரிய மரம் மற்ற மரங்களைப் பலமடையச் செய்தது. அம்மரங்கள் அப்பெரிய மரத்தின் நிழலில் நாடுகளுக்கிடையில் வாழ்ந்தன.
18 “எனவே எகிப்தே, ஏதேனில் உள்ள பெரிய வல்லமையுள்ள மரங்களில் எதனோடு உன்னை ஒப்பிடவேண்டும்? ஏதேனின் மரங்களோடு நீயும் பூமியின் தாழ்விடங்களில் மரிக்கப்படுவாய்! அந்த அந்நிய மனிதர்களோடும் போரில் மரித்தவர்களோடும் மரணத்தின் இடத்தில் நீ படுத்திருப்பாய்.
“ஆம் அது பார்வோனுக்கும் அவனது அனைத்து ஜனங்களுக்கும் ஏற்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று
79 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள்.
அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள்.
அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
2 காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள்.
உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
3 தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான்.
மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
4 எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின.
எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
5 தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா?
உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
6 தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும்.
உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
7 அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன.
அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
8 தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும்.
விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்!
நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
9 எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்!
எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்!
உமது நாமத்துக்கு அது மகிமையை தரும்.
உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே?
அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும்.
தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும்.
உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்!
தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.
12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும்
ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும்.
உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள்.
நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம்.
தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
2008 by World Bible Translation Center